KG Sami1937 — 2006

குரு அருளுக்கு நிகரேது?

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பர்களே!

குரு சிஷ்ய உறவு என்பது சத்சங்கம் அமைத்து, அதில் நம்மை இணைத்துக் கொண்டு நமது உயர்வை எளிதாக அடைவது. அதாவது, எது உண்மையான உயர்வோ அந்த உயர்வை அடைவதற்கு ஒரு குழுவோடு நம்மை இணைத்துக் கொள்வது. அந்த சங்கத்தில் இருக்கக் கூடியவர்களை மனித குல மேம்பாட்டையே சிந்தனை செய்து கொண்டிருக்கக் கூடிய அருளாளர்கள் என்று சொல்வார்கள். அருள் என்றால் மிகச்சிறந்த அன்பு. அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் என்று திருமூலர் சொல்வார்கள். எங்கே அன்பு என்றாலும் அது சிவம்தான், எங்கே சிவம் என்றாலும் அது அன்புதான். தான், தனது என்ற தன்மையில் அன்பு எழுமானால், அது தன்முனைப்பு. தன்னை மையமாக வைத்து தன்னை சார்ந்தவர்கள் மீது அன்பு எழுமானால், அது பாசம் அல்லது பற்று. அப்படியல்லாமல்  பிறர் துன்புறும்பொழுது அந்த துன்பத்தை நீக்க வேண்டும் என்று அன்பு எழுமானால், அதைக் கருணை என்று சொல்வார்கள். கருணையே மிகவும் உயர்வானது. ஏனென்றால் அதில்  சுயநலமில்லை, பிறருக்கு உதவி செய்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்பதெல்லாம் இல்லை. அவர்கள் துன்புறுகிறார்கள், அந்த துன்பத்தை நான் அனுபவித்தால் எப்படியிருக்கும்? ஐயோ! அந்த மாதிரிதானே அவருக்கும் இருக்கும். அவர்களது துன்பத்தைப் போக்க வேண்டும் என்று நினைப்பதுதான் கருணை. இன்றைய காலகட்டத்தில் பல இடங்களில் பலர் துன்புறுகிறார்கள். ஏன் துன்புறுகிறார்கள்? வாழத் தெரியாமல் வாழ்கிறார்கள், அதனால் துன்புறுகிறார்கள். ஏன் வாழத் தெரியவில்லை? சமுதாயத்தோடு ஒன்றி வாழும்பொழுது, மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் வாழ வேண்டும், தானும் துன்பம் அனுபவிக்காத அளவுக்கு வாழ வேண்டும் என்ற ஒரு முறை இருப்பதை அறியாமல் வாழ்வதினால் பலர் துன்புறுகிறார்கள். ஆகவே தமக்கும் துன்பத்தை உண்டு பண்ணி, பிறருக்கும் துன்பத்தை தோற்றுவித்து ஒவ்வொருவரும் துன்புறுகிறார்கள். உடலால் துன்பம், மனதால் துன்பம், புலன்களுக்கு துன்பம், அறிவுக்கு துன்பம், குறைவான துன்பம், அதிகமான துன்பம் என்று அனைவரும் துன்புற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

அன்பர்களே! இவ்வாறாக மனித குலம் தங்களுக்கு தாங்களே துன்பத்தை தோற்றுவித்துக் கொள்ளாமலிருக்கவும், பிறருக்கு துன்பம் உண்டு பண்ணாமலிருக்கவும் ஒரு மார்க்கத்தை அவர்களுக்கு போதிக்க வேண்டும். அதாவது துன்பம், துயரம், கஷ்டம், வறுமை, நோய், பகை, பிணக்கு, அமைதியின்மை, சிக்கல், குழப்பம் போன்றவை இந்த சமுதாயத்தில் இல்லாமல் பண்ண வேண்டும். இதற்கு யார், யார் தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவு தந்து அவர்களை வழி நடத்த வேண்டும் என்று தங்களது எண்ணம், சொல், செயல், பொருள், உடலாற்றல் மற்றும் உயிரைத் தருவதுதான் அருள் எனப்படுவது. துன்பம் தோன்றிய இடத்தில் அதைத் துடைப்பது கருணை. துன்பம் தோன்றமாலிருக்க ஒரு ஏற்பாட்டை செய்வது அருள். இத்தகைய நிலையில் இருப்பவர்கள்  ஒன்று சேர்ந்திருக்கக் கூடிய சங்கம்தான் சத்சங்கம்.

அந்த சத்சங்கம் முற்காலங்களில் மதங்களாக இருந்து வந்தது. ஆனால் மதங்களால் மனித குலத்தின் துன்பங்களைப் போக்கிட முடியவில்லை. ஆகவே அந்த மதத்தை சீர்திருத்தம் செய்து தன்முனைப்பு அறவே எழாத ஒரு ஏற்பாடு, அதற்கென்று ஒரு பயிற்சி, அதைப் போதிக்கும் தத்துவம், அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்தி மேன்மையை அடைதல், இறைவனே எங்கும் இருக்கிறான், நானாகவும் இருக்கிறான், எல்லாமாகவும் இருக்கிறான், எல்லா ஜீவராசியாகவும் இருக்கிறான் என்பதை உணர்ந்து அந்த உணர்வுநிலை பிறழாமல் வாழுதல் போன்றவற்றை கடைபிடித்து வாழும்பொழுதுதான் ஒருவருக்கொருவர்  துன்பம் உண்டு பண்ணிக் கொள்ளாமல் வாழ முடியுமே தவிர வேறு மார்க்கமில்லை. ஆகவே இறைவனுடைய இருப்பைப் பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதல், அந்த இறைவனுடைய இருப்பை உணர்ந்து அறிந்து கொள்ளுதல், அந்த இறைவனுடைய இருப்பை உணர்ந்து, அறிந்து கொண்டதை மறக்காமல் இருத்தல், அந்த அறிவின் மேம்பாட்டில் செயல்கள் செய்து, தானும் துன்புறாமலும், பிறருக்கும் துன்பம் இழைத்திடாமலும் வாழ வேண்டும் போன்ற கொள்கைகளை  உடையவர்கள் சேர்ந்து இருக்கக் கூடிய சங்கம்தான் சத்சங்கம்.

அன்பர்களே! சத்சங்கம் என்ற ஒன்று இருக்குமேயானால் அந்த சங்கத்தில் நடைமுறை விதிகள் இருக்கும். அந்த விதிகளை ஏற்படுத்தியவர் இருப்பார். அந்த விதிகளை கட்டி காக்கக் கூடியவர்கள் இருப்பார்கள். அந்த விதிகள் மீறப்படும் பொழுது தக்க நடவடிக்கை எடுக்கக்கூடியவர்கள் இருப்பார்கள்.
 அந்த சத்சங்கத்தில் இருக்கக்கூடியவர்கள்  பல்வேறுபட்ட அறிவு நிலையில் இருப்பார்கள். நன்கு உயர்ந்தவர்கள், உயர்ந்துக் கொண்டிருப்பவர்கள், உயரத் தொடங்குபவர்கள், உயராமலே கூட உயர வேண்டுமென்று நினைப்பவர்கள்... இப்படி பலதரப்பட்டவர்கள் அந்த சத்சங்கத்தில் இருப்பார்கள். அதில் ஒருவர் முதன்மையாக, முற்றறிவினராக இருப்பார், அவர்தான் குரு, மற்றவர்கள் சிஷ்யர்கள். யாருக்கு யார் குரு என்று கேட்டால் யாருக்கு ஒரு விஷயத்தை பற்றி நன்றாக தெரியுமோ, அந்த விஷயத்தை பொறுத்தவரை, அந்த விஷயம் தெரியாதவருக்கு அவர்தான் குரு. ஒருவர் குருவாகவே இருந்து கொண்டிருக்கலாம், ஆனால் சிஷ்யனாகவே இருந்து கொண்டிருக்கக் கூடாது. ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது தவறில்லை, அதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தாகம், வேகம் இல்லாமல் இருப்பதுதான் தவறு. அதை தெரிந்து கொண்ட பிறகு தெரியாதவருக்கு தெரிவிக்க வேண்டும். சத்சங்கங்களில் அதுதான் முக்கியம். சத்சங்கங்களில் பல நிலையில் உள்ளவர்கள் இருப்பார்கள், அவர்களுக்குள் மேல் கீழ் நிச்சயமாக இருக்கும். மேல் நிலையில் இருக்கக் கூடியவர்கள், கீழ் நிலையில் இருப்பவர்களை உதாசீனமாக நடத்தக் கூடாது. அவர்களை அசட்டையாக நினைக்கக் கூடாது. ஏனென்றால், சத் என்ற ஒரு பொருளை, அதாவது இறைவனை தம்மிடத்திலும், அனைத்திலும்  காணக்கூடியவர்கள் தம்மிலும் இறை அறிவில் குறைபாடு உடையவர்களிடத்தும், அதாவது அறிவு வளர்முகமாக இருக்கின்றவர்களிடத்தும் இறைவனைக் காண வேண்டும், அவர்களை கைதூக்கி விட வேண்டும். அவர்களும் தமக்கு மேல் நிலையில் உள்ளவர்களை மதிக்க வேண்டும், வணங்க வேண்டும், போற்ற வேண்டும், பாராட்ட வேண்டும். அவர்களது உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். இதுதான் குரு சிஷ்ய உறவு. சத்சங்கங்ககளில் ஒருவர் தான் குரு, மற்றவரெல்லாம் சிஷ்யன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் உச்சபட்சமாக ஒருவர் இருப்பார், நமது வேதாத்திரி மஹரிஷியைப் போல. அவருடைய வழிகாட்டுதலை பின்பற்றி அனைவரும் நடக்க வேண்டும்.

அன்பர்களே! பிறக்கும் போது ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் ஒரு பெரும் இருப்பை உள்ளடக்கமாக வைத்துக் கொண்டுதான் பிறக்கிறான். அதாவது ஒருவன் பணக்காரானாக பிறக்கிறான், ஒருவன் ஏழையாக பிறக்கிறான். ஆனால் அறிவு, ஞானம் என்ற அளவில் எல்லோரும் சமம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கூற்றின்படி ஞானம் இங்கு அனைவருக்கும் சமம். இங்கு யார் பிறந்திருக்கிறார் தெரியுமா? இறைவனே பிறந்திருக்கிறார். அனைவரும் பிறவி என்ற நிலையில் இறைவன்தான். காலங்காலமாக  திரண்டு வந்திருக்கக் கூடிய அறிவு அனைவருக்கும் ஒன்றுதான். ஆதியில் தோன்றிய ஜீவராசி தொடங்கி தாவரங்கள், அவற்றினுடைய அனுபவ பதிவுகளெல்லாம் வித்தின் வழியாக அடுத்த தலைமுறைக்கு, அடுத்த தலைமுறைக்கு, அடுத்த தலைமுறைக்கு என்று வந்து கொண்டே இருக்கின்றன. ஆதியில் தோன்றிய ஜீவராசியின் வாரிசுகள்தான் நாம். பரிணாம வளர்ச்சி ரீதியாக பார்த்தாலும் தாவரங்கள் புழுக்களாகி, புழுக்கள் பூச்சிகளாகி, பூச்சிகள் ஊர்வனவாகி, ஊர்வன மிருகங்களாகி, பறவைகளாகி, மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆதிமனிதனாகி, அந்த ஆதிமனிதனுடைய வாரிசுகள்தான் தற்போது நாமாக இருக்கின்றோம். பரம்பரை பரம்பரையாக சந்ததி, சந்ததியாக வரக் கூடிய அந்த அனுபவங்கள் அனைவரிடத்திலும் இருக்கின்றன. எல்லா வித்திலும் தாயார், தகப்பனாருடைய அனுபவப் பதிவு இருக்கின்றது. பிறந்த குழந்தை பிறந்த அன்றே தாய்பால் குடிக்கும்.  அதற்கு யார் போதித்தது?  அந்த பதிவெல்லாம் நமது முன்னோர்களுடையது. அனைத்து பதிவுகளும் நம்மிடத்தில் இருக்கும் போது எல்லோருக்கும் சம அறிவுதான். அதை பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை, வாய்ப்பு, ஆர்வம், முயற்சி சற்று வேறுபடும். எனவேதான் வெவ்வேறு அறிவினர்களாக நாம் இருக்கின்றோம். ஆனால் உண்மையில் இந்தப் பிரபஞ்சம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் நாம்தான். நம்முடைய அவயங்களே கோடானுகோடி நட்சத்திரங்களாக இருக்கின்றன, நம்முடைய உள்ளுறுப்புகள்தான் மனிதர்களாக, ஜீவராசிகளாக இருக்கின்றார்கள் என்ற ஒரு அறிவை மறக்காமல் இருக்க வேண்டும். இந்த அறிவை மறக்காமல் செயலாற்றவும், யாருக்கும் துன்பம் எழாத அளவுக்கு தன்னுடைய எண்ணம், சொல், செயல்களை வடிவமைத்துக் கொள்ளவும், யாருக்கும் துன்பம் வராத அளவுக்கான வாழ்க்கை நெறியை உபதேசிக்கவும் கூடிய ஒரு நிலைதான் முற்றறிவு எனப்படுவது. இந்த முற்றறிவை அடைவதற்கான பக்குவம், அதற்கான அடிப்படை அனைவரிடத்திலும் இருக்கின்றது. அதனை பயன்படுத்தும் அளவில் சற்று முன், பின் இருக்கும். முன் இருப்பவர்கள் குருவாகவும், பின் இருப்பவர்கள் சிஷ்யர்களாகவும் இருப்பார்கள்.

அன்பர்களே! இதில் தாரதம் என்ற அடிப்படையில் பார்த்தால் உயர்வு, தாழ்வு இல்லை. ஆனால் செயல் முறையில் பார்த்தால் மேல், கீழ் இருக்கத்தான் செய்யும். ஒரு சாதாரண குடிமகன் தன்னை இறைவனோடு இறைவனாக இணைத்துக் கொண்டு இறைவனாகவே ஆகி முற்றறிவனாக வேண்டும் என்று நினைப்பானேயானால் அவன்தான் சிஷ்யன். அந்த சிஷ்யனுக்கு சரியான வழிமுறையைக் காட்டி, அந்த பயிற்சியில் அவனை ஈடுபடுத்தி, அவ்வாறு ஈடுபட்டு செல்லும் பொழுது கூடவே இருந்து திருத்தி, வழிகாட்டி, உதவுவதற்கு ஒருவர் கட்டாயம் வேண்டும். அவர் அறிவிலே மேல்நிலையில் இருக்கக் கூடியவராக இருக்க வேண்டும். முற்றறிவு பெற்றிருந்தால் மகிழ்ச்சி அல்லது ஒரு மேன்மையான அறிவு பெற்றிருந்தால் கூட சரி அல்லது  தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிஷ்யனை விட சற்று கூடுதலான அறிவு இருந்தால் கூட போதும். இரண்டு பேரும் சேர்ந்து தம்மை உயர்த்திக் கொள்ளலாம். ஒரு குருவினுடைய தொடர்பும், உறவும் இல்லாமல் தனியாக ஒருவர் மேம்படுவது சுலபமன்று. உலகிலுள்ள மக்கள் எவர் ஒருவரையும் இந்தத் துறையில் மேம்பட விடமாட்டார்கள். ஓரிரண்டு பேராவது நான் ஒரு சங்கத்தில் சேர வேண்டும், சத்சங்கத்தில் சேர்ந்து என்னுடைய அறிவை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் கூட ஐயையோ! அதெல்லாம் நாற்பது வயதிற்கு மேல் ஆக வேண்டிய காரியம் என்று சொல்லி தடுத்து விடுவார்கள்.  நாற்பது வயதிற்கு பிறகு சரி, நான் சங்கத்தில் சேர்கிறேன் என்று சொன்னால் அதெல்லாம் அறுபது வயதிற்கு மேல் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி அவரது ஆன்மீக மேம்பாட்டைத் தடுத்து விடுவார்களே தவிர, சரி, நானும் வருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து போகலாம் என்றோ என்னால்தான் வர முடியவில்லை,  நீங்கள் செல்லும் பாதை மிகவும் சரியானது, வாழ்த்துக்கள் என்றோ யாரும் சொல்ல மாட்டார்கள்.

அன்பர்களே! எந்த ஒரு காரியமா இருந்தாலும் ஒரு குழுவா சேர்ந்து செய்யும் போது அந்த வேலை  குறைவான நேரத்தில் முடிஞ்சுரும். உதாரணமா எனக்கு சாப்பாடு வேணும்னு வைச்சுக்கங்க, அதுக்கு நெல்லு வேணும். நெல்லு வேணும்னா உழுகணும், பயிரிடணும், களை எடுக்கணும், தண்ணீர் பாய்ச்சணும், அறுக்கணும்... இதையெல்லாம் நானே செய்ய முடியுமா? எனக்கு மட்டுமில்லை பல பேருக்கும் சாப்பாடு வேணும். அதனால் எல்லோருடைய சாப்பாட்டிற்கும் எல்லோரும் கூடி, அதாவது ஒருத்தர் உழறது, ஒருத்தர் கலப்பை செய்யறது, ஒருத்தர் வேலி கட்டறது, ஒருத்தர் அடித்து கொடுப்பது, ஒருத்தர் சாப்பாட்டிற்கு வேண்டிய மற்ற பண்டங்களை உற்பத்தி செய்யறது, ஒருத்தர் விநியோகம் பண்ணறது, ஒருத்தர் சமைக்கிறது என்று கூடி செய்யும் போது எல்லோருக்கும் சாப்பாடு சுலபமாக கிடைத்து விடும். இப்பக் கூட ஒரு கடைக்கு போய் பத்து ரூபாயை தூக்கி போட்டால் சாப்பாடு கிடைச்சுரும். ஆனா, அதே பத்து ரூபாயை நிலத்துல தூக்கி போட்டால் சாப்பாடு கிடைக்காது. எந்த ஒரு செயலையும் கூட்டாக செய்யும் போது, கூடிய அனைவருக்கும் ஆயிரம் மடங்கு இலகுவாக அந்த காரியம் முடிந்து விடும். அவ்விதமாக ஆன்மீகத்திலும் இரண்டு பேராக, நான்கு பேராக, குடும்பத்தில் உள்ள அனைவருமாக ஈடுபட்டு சேர்ந்து செய்தால் மிகவும் இலகுவாக இருக்கும். ஏனென்றால், சேர்ந்து செய்யும் போது, நான்கு பேரையும் சேர்த்து யாரும் தடுக்க மாட்டார்கள். நான்கு பேரில் ஒருவர் விலகி சென்றாலும் எஞ்சிய மூவரும் சேர்ந்து அவரை தடுத்து விடுவார்கள். இது முக்கியம் ஆன்மீகத்தில். எனவே சத்சங்கத்தில் ஒரு குழுவாக இணைந்து கொண்டு செயல்பட்டால் ஆன்மீக முன்னேற்றம் இலகுவாக இருக்கும். அதில் உயர்ந்த நிலையில்  இருக்கக் கூடியவர்கள், குரு பதவியை வகிப்பார்கள். குருவினுடைய தொடர்பு இல்லாமல்  ஆன்மீகத்தில் உயர்வு வரவே முடியாது என்று அனைத்து நூல்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

நீ கனிந்து பக்குவப்பட்டு இருந்தால் உன்னை உயர்வடையச் செய்வதற்கு குரு வந்து உன்னிடத்தில் சேர்வார். நீ குரு எங்கே, குரு எங்கே? என்று தேடிக் கொண்டு அலைந்தால் யாரோ குருவாக இருக்க முடியாதவர்கள், குரு என்று வேஷம் போட்டுக் கொண்டு இருப்பவர்கள்தான் உனக்கு மாட்டுவார்களே தவிர, சரியான  குரு உனக்குக் கிடைக்க மாட்டார். எனவே ஆரம்பகட்ட உயர்நிலையில் இருந்து கொண்டு ஆர்வமாக இரு, தயாராக இரு. எப்போது குரு வருவார்? என்று காத்துக் கொண்டிரு. சரியான குரு உன்னிடத்தில் வந்து சேர்வார், உன்னை ஆட்கொள்வார் என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன. இதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. சிக்காகோவில் இருக்கும் வயதான இந்தியத் தம்பதியர் நாம் தயாராக இருக்கிறோம், ஆன்மீக உயர்வு பெற ஆவலாக இருக்கிறோம், ஆனால் இந்த ஊரில் எங்கிருந்து ஒரு குரு வந்து நம்மை ஆட்கொள்ளப் போகிறார்? வந்தால் இந்தியாவிலிருந்து தான் வர வேண்டும். யார் வருவார், எப்போது வருவார்?  என்று புலம்பிக் கொண்டிருந்தார்களாம். அந்த சமயம் அங்கே சரியாக போய் சேர்ந்தார் வேதாத்திரி மஹரிஷி அவர்கள். அந்த தம்பதிகளுக்கு தீட்சையெல்லாம் கொடுத்து, உபதேசமெல்லாம் செய்தாராம். அந்தத் தம்பதி மஹரிஷியிடம் நீ கனிந்து தயாராய் இருந்தால் உன்னை தேடி குரு வருவாருங்கற கூற்று மேல் எங்களுக்கு அவநம்பிக்கையே ஏற்பட்டு விட்டது. ஆனால் அந்த கூற்றுப்படி  இந்தியாவிலிருந்து நீங்கள் எங்களை தேடி வந்து சேர்ந்தீர்கள்  என்று நெகிழ்ந்து போய் சொன்னார்களாம்.

அன்பர்களே! நாமாக சரியான குருவைக் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால் மஹரிஷி, சரியான சிஷ்யனைக் கண்டு பிடிப்பதுதான் சிரமம் என்று சொல்வார்கள். ஏன்னா, ஆயிரம் பேர் வருவாங்க நானும் சிஷ்யன், நானும் சிஷ்யன்னு சொல்லிட்டு. என்ன கொடுக்கப் போறாங்க, நமக்கு என்ன வேணும், எதுக்கு வேணுங்கறது கூட தெரியாம வருவாங்க. என்னமோ மூலாதாரத்தில் இருக்கறதை எடுத்து நெத்தியில் விடறாங்களாமே, அது எப்படி இருக்கும்?ன்னு பார்க்க வருவாங்க. இன்னும் சில பேர் தங்களுக்கு இருக்கும் குறை சத்சங்கத்தில் சேர்ந்தால் தீர்ந்து போகும் என்று யாரோ சொன்னதை கேட்டு சங்கத்தில் சேர்ந்துட்டு  இங்க சேர்ந்ததுனால அப்படி ஒண்ணும் நடக்கலைன்னு திரும்பி போயிருவாங்க. இந்த மாதிரி பல தரப்பட்ட சிஷ்யர்கள் இருப்பார்கள், எனவே சிஷ்யனை கண்டுபிடிப்பதுதான் சிரமம் என்று மஹரிஷி சொல்வார். ஆனால் என்னை கேட்டால் குருவை கண்டு பிடிப்பதுதான் கஷ்டம் என்று சொல்லுவேன், ஏனென்றால் இந்த உலகில் போலித்தனமான குரு நிறைய பேர் இருக்கிறார்கள்.

திருமந்திரத்தில் கூட

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கா குருவினை கொள்வார்

குருடும் குருடும் குருட்டாட்டாம் ஆடி

குருடும் குருடும் குழி விழுமாறே  என்று ஒரு பாட்டு இருக்கின்றது.

இது மாதிரி இல்லாமல் நல்ல குருவைக் கொள்ள வேண்டும். நல்ல குருவை எப்படி கண்டுபிடிப்பது? அவர் முகத்தில் ஒளி இருக்கும், அருள் இருக்கும். அவரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும். அவருடைய அண்மை, நெருக்கத்தில் ஒரு சுகம் இருக்கும். அவரைப் பார்த்து விட்டு வந்த பிறகும் மீண்டும் மீண்டும் அவரைப் பார்க்க வேண்டும் போல் இருக்கும். ஆரம்பத்தில் அதாவது 1968-ல் மஹரிஷி காரைக்காலுக்கு மாதா மாதம் வருவார், மூன்று நாள் இருப்பார். பாக்கி இருபத்தி ஏழு நாளும் எப்படா கழியும், அவரை எப்படா பார்க்கலாம்னு ஆர்வமா இருக்கும். அவர் எந்த வண்டில வர்றார்னு தெரிஞ்சுட்டு இரண்டு ஸ்டாப் முன்னாடியே போய் சைக்கிளில் நிற்பேன். என்ன இங்கேயே இறங்கணுமா?ன்னு அவர் கேட்பார். இல்லை. நான் உங்களை பார்க்க வந்தேன்ன்னு சொல்லுவேன். அதுக்கு அவர் நான்தான் பஸ் ஸ்டாண்ட் வந்துருவேனேன்னு சொல்லுவார். இல்லை அதுக்கு முன்னாடி உங்களை பார்த்துகிறேன் சாமின்னு சொல்லிட்டு பஸ்சை துரத்திக்கிட்டே சைக்கிளில் போவேன். அப்படி ஒரு ஆர்வம் குருவை பார்க்கறதுல. நிறைய இடங்களுக்கு மஹரிஷி வகுப்பு எடுக்க போக ஆரம்பிச்ச பிறகு இரண்டு மாசத்துக்கு ஒரு முறைதான் காரைகாலுக்கு வருவாரு. இருபத்தி ஏழு நாளே தாங்காது,  அறுபது நாளை எப்படி தாங்கறது? அதனால நடுவுல ஒரு தடவை பாண்டிச்சேரி போய் பார்க்கறது, கடலூர் போய் பார்க்கறது, கூடுவாஞ்சேரி போய் பார்க்கறதுன்னு  அவரை அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் துடிப்பும் உள்ளே இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையை உருவாக்கக் கூடியவர் யாரோ அவர்தான் நல்ல குரு.

அன்பர்களே! ஒரு குரு அவருடைய உயிரை நம்மிடத்தில் பாய்ச்சுகிறார். நம் ஒவ்வொருவரின் உடலிலும் அம்மாவோட உயிரும், அப்பாவோட உயிரும் மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அம்மா உயிரும், அப்பா உயிரும்  மட்டுமே நமது உடலில் இருக்கும் போது ஆன்மீகத்தில் உயர்வு இருக்காது. ஏன்னா, அம்மாவும் அப்பாவும் நம்மிடத்தில் உயிரை எந்த நேரத்தில் கொடுத்தார்கள்? இறைவா! நான் உன்னை அடையணும்என்று நினைத்துக் கொண்டா கொடுத்தார்கள்? இல்லை, ஆகா, என்ன சுகம்! என்ன சுகம்! என்று சுகத்தில் சொக்கிப் போய்தான் இந்த உயிரைக் கொடுத்தார்கள். எனவே அம்மா உயிரானாலும் சரி, அப்பா உயிரானாலும் சரி இறைவனை அடைவதற்கு அவை உதவாது. அந்த வேகம் அதுக்கு வரவே வராது. ஆனால் குரு இறைவனோடு இறைவனாக இருந்து கொண்டிருக்கக் கூடிய நிலையிலிருந்து அவருடை அறிவு, மனம், உயிர் அனைத்தும் இந்த ஜீவன் உய்ய வேண்டும் என்ற கருணையோடு அவரது உயிரை  நமக்குள் பாய்ச்சி நமக்கு தீட்சை கொடுப்பார். அவர் அகண்டாகாரத்தில் இருந்து கொண்டு தீட்சை அளிப்பதால் அந்த மூன்றாவது உயிர் நமக்குள்ளேயே இருந்துக் கொண்டு நம்மை உயர்த்திக் கொண்டிருக்கும். ஆனால் அப்பாவோட நினைவோ, அம்மாவோட நினைவோ நம்மை உயர்த்தாது. குருவினுடைய நினைவு வரும் போது, அவர் நிலையை நாமும் எட்ட வேண்டும் என்ற எண்ணம் வரும்.  அவரும் தயாராக இருப்பார். தீட்சை கொடுத்த அன்றைக்கு மட்டுமல்ல, தொடர்ந்து தன்னுடைய சிஷ்யகோடிகள் அனைவரும் தனது நிலைக்கு வர வேண்டும் என்று குரு நினைத்துக் கொண்டிருப்பார், வாழ்த்திக் கொண்டிருப்பார். குருவை நினைப்பது ஒரு சுகம். நீங்கள் அதை செய்து பாருங்கள். தினமும் காலையில் கண் முழித்தவுடன், அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மஹரிஷி  அவர்கள் வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்று சொல்லிப் பாருங்கள். சொல்லச் சொல்ல ஒரு ஊக்கம், உற்சாகம் பிறக்கும். குருவை நினைக்கும் போது, குருவினுடைய உயர்வு தானாக சிஷ்யனுக்கு மாற்றல் ஆகும். இந்த தன்மை ஞானமுறையில் உபதேசம் செய்பவர்களிடத்திலும் உண்டு.  ஒரு சின்ன வித்தியாசம், அவர்கள் அறிவால் மட்டும் தொடர்பு கொள்வார்கள். நாம் அறிவு மற்றும் உயிர் என்ற அளவில் தொடர்பு கொள்வோம். எனவே பெரும்பாலான நேரங்களில் குருவினுடைய நினைவு இருந்து கொண்டே இருக்கும். குருவே துணை என்று போற்றி எழுதுபவர்கள் கூட உண்டு. எந்த ஒரு காரியத்தையும் குருவை நினைத்து செய்ய வேண்டும். தவம் தொடங்கும் போது ஆசானுக்கு வணக்கம் என்று ஆசானை நினைத்துதான் தவம் தொடங்க வேண்டும். குரு நல்லவர், அந்த குருவை நினைக்க, நினைக்க நல்லாரை காண்பதுவும் நன்றே, நல்லார் குணங்கள் உரைப்பதுவும்  நன்றே என்ற கூற்றின்படி அவரை நினைக்கும் போது நமது மனம் நல்ல தன்மையடையும். ஏனென்றால் சிரேஷ்டமான குணங்கள், மேன்மையான தகுதிகள் பெற்றிருக்கக் கூடிய குருவை நினைக்கும் போது அந்த தன்மைகள் நினைப்போரது மனதிலும் உருவாகும்.

அன்பர்களே! மனதினுடைய தன்மை என்ன தெரியுமா? எந்தப் பொருளையோ, நபரையோ நினைத்தாலும் அந்தப் பொருளுடைய, அந்த நபருடைய வடிவத்தை எடுக்காமல் நினைக்க முடியாது. குருவை நினைக்கும்போது நமது மனதில் அவருடைய வடிவமும் வரும், குணமும் வந்து போகும். மிகுந்த அன்போடும், மதிப்போடும் அவரை நினைக்கும் போது அவருடைய தன்மைகள், மேன்மைகள் எல்லாம் நமக்குள் மாற்றலாகும். அவரை அடிக்கடி நினைக்கின்றோமா, எப்போதாவது நினைக்கின்றோமா, தொடர்ந்து நினைக்கின்றோமா அல்லது மறக்காமல் இருக்கின்றோமா என்பதை பொறுத்துதான் குரு - சிஷ்ய தொடர்பு இருக்கும். ஏகலவைன் கதை உங்களுக்கு தெரியும் இல்லையா? வில்வித்தைன்னா என்னவென்று சரியாக தெரியாமலேயே வில்வித்தையில் தேர்ந்தவரான துரோணாச்சாரியரை குருவாக மனதில் நினைத்துக் கொண்டு வில்வித்தை பழகினான். அதனால் குருவினது வில்வித்தையினுடைய உயர்வு அவனுக்கு வந்து சேர்ந்து விட்டது. எனவே குருவை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த நினைவே சிஷ்யனை உயர்த்தும். வெறும் நினைவாக இல்லாமல் அவர் சொல்லிக் கொடுத்ததையும் சேர்த்து நினைக்க வேண்டும், நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மஹரிஷி கற்றுத் தந்தது போல், தவம் செய்யும் போது அவருடைய உயிரை மனதில் வைத்து அவருடைய உயிரையே கவனிக்க வேண்டும். அவருடைய சொற்பொழிவுகளை நூல்களில் படிக்க வேண்டும், அவரது பேச்சுக்களை ஒலிநாடாக்களில் கேட்க வேண்டும். அதோடு நின்று விடாமல் அவரது கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இப்படியாக குருவின் தொடர்பிலேயே இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் முக்கியமானது, அவர்  ஒரு தனி மனிதராக, ஒரு கணவராக / மனைவியாக, ஒரு குடும்பஸ்தனாக, ஒரு சமுதாய பிரஜையாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாரோ அவற்றையெல்லாம் நாம் செயல்முறையில் கொண்டு வர வேண்டும்.  அவ்வாறு நடந்து கொள்ளளும் போதுதான் நாம் குருவை நிகர்த்துக்கொண்டே இருக்கின்றோம், அவருடைய உயர்வுக்கு சமானமாகிக் கொண்டிருக்கின்றோம் என்று பொருள்.

அன்பர்களே! நான் முன்னமே சொன்ன மாதிரி, குருதான் சிஷ்யனை தேடிக் கண்டுபிடிப்பார். நான் எங்கேயோ கடாமுடான்னு ஓடிக்கிட்டு இருந்தேன். நான் போய் வேதாத்திரி மகரிஷியை கூடுவாஞ்சேரியில் பார்க்கவில்லை. அவர் தான் காரைக்கால் வந்து என்னை கண்டு பிடித்து ஆட்கொண்டார். அதுதான் தடுத்தாட்கொள்ளல். ஒரு போக்குல போயிட்டு இருப்பவங்களை, குருதான் என் பக்கம் வாப்பா என்று  தடுத்தாட்கொள்ளணுமே தவிர ஒருவன் நம்மை யார் தடுப்பாங்க, யார் ஆட்கொள்ளுவாங்க? என்று தேடினால் சரியான குரு அவனுக்கு கிடைக்க மாட்டார். குரு சிஷ்ய உறவு இல்லாமல் ஆன்மீகத்தில் மேம்பட முடியாது. குண்டலினி யோகம் செய்யும் போது தலை பாரம் வரும், அப்படி வந்தால் என்ன செய்யறதுன்னு தெரியாது. யார் தணிப்பாங்க அதை?  ஒரு குருதான், வாங்க சாந்தி யோகம் தர்றேன், இனிமேல் நீங்க தலை பாரம் இல்லாமல் தவம் செய்யலாம் என்று சொல்லிக் கொடுப்பார். பிறகு அடுத்த நிலையை, அதாவது துரியத்தை சிஷ்யனுக்கு கொடுப்பார். துரியம் வந்திருப்பது சிஷ்யனுக்கு தெரியாது.  ஒரு மாதிரி மண்டையை குடையற மாதிரி, உழற மாதிரி, சுத்துற மாதிரி தான் தெரியும். பயப்பட வேண்டாம் அதுதான் துரியம் என்று சொல்லி  சிஷ்யனுக்கு வரக் கூடிய பிரமைகள், வினோதங்கள், கஷ்டங்கள், குழப்பங்கள் எல்லாவற்றையும் குரு தீர்த்து வைப்பார். கொஞ்சம் தவறாகப் போகும் போது, நீங்க ரொம்ப வேகமா போறீங்க, அடிக்கடி சாந்தி தவம் பண்ணுங்க, முதுகு வலிக்குதா? அது ஒண்ணுமில்லை ஆற்றல் எங்கேயாவது தடைப்பட்டிருக்கும், நான் தண்டு வட சுத்தி தர்றேன் சரியாயிடும் என்று சொல்லி கடைசி வரைக்கும் வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ஒரு தொடர்பு இல்லாமல் ஆன்மீகத்தில், யோக மார்கத்தை உள்ளடக்கிய வழியில் மேன்மை அடையவே முடியாது. இதுதான் குரு சிஷ்ய உறவின் சிறப்பு.

ஞானத்தை வேணும்னா ஏகலைவன் மாதிரி யாரோ ஒருத்தர் அடைந்து விடலாம். ஆனால் யோகம் மட்டும் கட்டாயம் ஒரு குருவினுடைய அனுசரணையில், கண்காணிப்பில், ஆதரவில் தான் நடைபெற வேண்டும். நமது  மாதா, பிதா, முன்னோர்கள் செய்த பூர்வ புண்ணிய பலன்களால்  சுயநலம் இல்லாத, தனக்கு புகழ் கிடைக்குமா, பாராட்டு கிடைக்குமா, மாலை போடுவார்களா? என்றெல்லாம் கணக்கு போடாத ஒரு நல்ல குருவான, வேதாத்திரி மஹரிஷி அவர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அவருக்கு புகழ் கிடைச்சாலும் சரி, இகழ் கிடைச்சாலும் சரி, எத்தனையோ பேர் இகழவும் செய்யறாங்க அவர் பாட்டுக்கு தன் வேலையை பார்த்துட்டு இருப்பார். தான் சார்ந்திருந்த ஒரு ஸ்தாபனத்துல கட்டடம் கட்டறதுக்காக தன்னுடைய மனைவியோட நகைகளை வித்து பணம் கொடுத்தவர் அவர். வழிச்செலவுக்கு அவரே காசு செலவு பண்ணிட்டுதான் காரைக்கால் வகுப்புக்கு வருவார். அவரோட புஸ்தகத்தையெல்லாம் இனாமாக கொடுத்துட்டு போவார். அவர் ஒரு மருத்துவர் என்பதால் யார் யாருக்கு என்னென்ன நோய் என்று பார்த்து சித்தா, ஹோமியோ மருந்தை வாங்கி வந்து கொடுப்பார். வற்புறுத்தி கொடுத்தால்தான் காசு வாங்குவாரே தவிர, அவராக எதுவும் கேட்க மாட்டார். அவருக்கு புகழ் நோக்கமில்லை, பொருள் நோக்கமில்லை. நன்மை பிறர்களித்து, நட்டத்தை தானேற்று இன்பம் அடைவார்கள், ஈசன் நிலை உணர்ந்தோர். ஈசன் நிலை உணர்ந்ததற்கு இது தான் அடையாளம். ஈசன் நிலையை மஹரிஷி உண்மையிலேயே உணர்ந்திட்ட காரணத்தினால் தனக்கு புகழ் கிடைக்குமா, பொருள் கிடைக்குமா? என்ற நோக்கங்கள் அவருக்கு கிடையாது, புலனின்பங்கள் கிடையாது, அதிகாரப் பற்று கிடையாது. எல்லோருமே ஈசனாக இருக்கும் போது ஒரு ஈசன் இன்னொரு ஈசன் மீது எவ்வாறு அதிகாரம் செலுத்த முடியும்? ஆகவே குருவாக ஒருவர் உயர்ந்துவிட்டார் என்றால் அவருக்கு புகழில் மோகம் இருக்காது, பொருளில் மோகம் இருக்காது, புலனிபத்திலும், அதிகாரத்திலும் மோகமிருக்காது. இவ்வாறான குருவைக் கொள்வது என்பதும் கூட அறிவின் சிறப்பே!

குருவைக் காண்போம்... குருவினைக் கொள்வோம்!

குரு வழி நடப்போம்!

நன்மை பிறர்களிப்போம் என்றும்!.. எப்போதும்!

Keep reading

More from the archive

Granthaalayam

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…

Puthiya Bharathi

சைவமும், அசைவமும்

சென்ற இதழில் வெளியான சைவமும், அசைவமும் என்ற விளக்கங்களைத் தொடர்ந்துமுட்டை சைவமா? அசைவமா?பால் சைவமா? அசைவமா?என்ற கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கான…

KG Sami

தவம் – 22

எப்படியோ பூமியை விட்டு விடுவது இல்லை என்ற நிலையில் சந்திரன் இருப்பதால் வளைத்துப் போட்டு அதுவரைக்கும் பூமி என்று சொல்லுங்கள்.சந்திரன் வரைக்கும்…

KG Sami

தவம்-14

புதுப் பொண்ணு மாப்பிள்ளை வந்தா ஆரத்தி எடுக்கறாங்க பாருங்க, மஞ்சள் தண்ணீர் கலந்து தாம்பாளத்தில் அதை எப்படி சுத்துவது. மெதுவாக தந்திரமாக தண்ணீர்…

Arulnithi Muthappan

சினமும், செந்தன்மையும்

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும்,…

KG Sami

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…