ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஐயோ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட வில்லையா ? நீங்கள் தவம் செய்யவில்லை போலிருக்கிறது.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலாம் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
-குறள் : 265
உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் தவம் செய்தால் கிடைக்கும் என்று வள்ளுவர் சொல்கிறார். அப்போ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிடவில்லை என்றால் தவம் செய்யவில்லை.
ஆவக்காய் ஊறுகாய் என்றால் என்ன? எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன். கேரளாவில் தான் கிடைக்கும். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் தான் கிடைக்கும். நீங்கள் எந்தக் கடையில் கேட்டாலும் ஆவக்காய் ஊறுகாய் கிடைக்கும். அதில் ஆவக்காய் ஊறுகாய் என்று தான் போட்டிருக்கும் ஆனால் அது மாங்காய் தான். நம்பாதீர்கள். முழு மாங்காயை நாலாக வெட்டிப் போடுவார்கள். அப்போ ஒரு துண்டு ரொம்ப பெரிசாக இருக்கும் என நினைக்காதீர்கள். சின்ன சைஸ் தான். சின்ன மாங்காய் நம்ப ஊரில் ‘வடு’ என்று சொல்வதையே அவர்கள் மாங்காய் என்று சொல்கிறார்கள். அது தான் ஆவக்காய்.
அது எங்க பாண்டிச்சேரிக்கு வரும். நான் சொல்வது 25 வருடத்துக்கு முந்தைய கதை. அப்போ நான் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தேன். பல பேருக்கு பல நன்மைகளைச் செய்திருக்கிறேன். லஞ்சம் வாங்க மாட்டேன். அதனால்’ ஆவக்காய் ஊறுகாய்’ கொண்டு வந்து கொடுப்பார்கள் ‘ஏனத்துக்காரர்கள்’. பாண்டிச்சேரிக்கு சொந்தமாக ‘ஏனம்’ என்று ஒரு ஊர் கோதாவரியில் இருக்குது. அது கேரளாவில் இருக்குது. சரி என்று வாங்கி விட்டேன்.
நான் தான் தவம் செய்கிறேனே, ஊறுகாய் சாப்பிட முடியாது. ஆவக்காய் ஊறுகாயோட Special என்ன என்றால் காரம். அப்படி காரம். வாயில் வைக்க முடியாது. அந்த ‘சாந்தை’ எடுத்து நீங்கள் வாயில் வைத்தீர்கள் என்றால் துரியாதீதம் வந்து விடும். கிர்ரென்று துரியாதீதம் வந்து விடும். அதை நான் என்ன செய்வது. அது சும்மா இருக்கிறதே என்று என் மனைவி சாப்பிடும் போது ஒரு துண்டு எடுத்து தட்டில் வைத்து விடுவார்கள். அதை நான் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விடுவேன். அவ்வளவு அழகாக இருக்கும் பார்ப்பதற்கு.
அப்போ கொடுத்தவருக்கு என்ன மரியாதை, சாப்பிட்டு எழுந்து போகும் போது அந்தத் ‘துண்டை’ கையில் எடுத்துக் கொண்டு எழுந்து விடுவேன். கை கழுவும் போது அதையும் கழுவி விடுவேன். அதை அபிஷேகம் பண்ணி அந்த சாந்தை சுத்தமாக எடுத்து விடுவேன்.
அப்புறம் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டு T.V. முன்னால் T.V. பார்த்துக் கொண்டு, அதன் மூலையில் ஒரு முனையை கடித்துக் கொண்டு விடுவேன். குண்டூசி முனை குண்டு அளவு கடித்து நாக்கில் பல்லில் படும்படியாக கடித்து கடித்து சுவைக்க காரமாக இருக்கும். ஆனால் நல்ல ருசியாக இருக்கும். அதை நன்றாக நைத்து சாப்பிட வேண்டியது. அப்புறம் இன்னும் கொஞ்சமாக கடித்து சாப்பிட வேண்டும். கொஞ்ச கொஞ்சமாக கடித்து மேல் மண்டலத்தில் தடவி தொண்டை பக்கமாக பூசி கீழ் நாக்கு பக்கமாக நூலாக ஓடும். பல்லில் ஒட்டிக்கும். அதை நாக்கால் இழுத்துச் சாப்பிடுவேன். எதை? ஆவக்காய் ஊறுகாயை. யார்? தவம் செய்பவர். அப்படியென்றால் என்ன ருசியாக இருக்கும் பாருங்கள்.
இப்ப நான் ஒன்று சொல்கிறேன். நீங்கள் செய்ய வேண்டும். தலையைக் குனியுங்கள். நன்றாகக் குனிய வேண்டும். ஒழுகுதா? வாயை மூடிக்கொண்டு குனிவீர்கள். வாயை மூடாமல் குனிய வேண்டும் எச்சில் ஒழுகுகிறது ? ஊறுகாய் சாப்பிட்டால் தானே எச்சில் ஊறும். நான் என்ன ஊறுகாயா கொடுத்தேன். மனம் எதை நினைக்குதோ அதுவாக மாறும்.
உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு வெவ்வேறு வழிகள். தமாசாக இருந்தால் என்ன. Comics ஆக இருந்தால் என்ன? மனம் எதை நினைக்கிறதோ அதுவாகவே மாறுகிறது. வேதாந்தத்தில் ஒரு கதை சொல்வார்கள்.
ஒருவனுக்கு பொண்டாட்டி பிள்ளை மேல் கோபம் வந்து விட்டது. அதனால் காட்டுக்கு போனான். ஒரு சாமியாரை ஆசிரமத்தில் பார்த்து எனக்கு தீட்சை கொடுங்க சாமி நான் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்து விட்டேன் என்று தன்னுடைய வரலாறை எல்லாம் சொன்னான்.
சாமியார் சரி என்று அவனை உட்கார வைத்து ‘எல்லாத்தையும் விட்டுட்டாயா. பழசை எல்லாம் நினைக்கக் கூடாது என்று சொல்லி தீட்சை கொடுக்கிறார். பின் அவனை ஒரு புறம் உட்கார்ந்து தவம் செய்யச் சொல்கிறார். அவனும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து தவம் செய்கிறான். தவம் செய்கிறான். செய்கிறான். தவம் வரவில்லை. அவனுக்கும் நல்லா தெரிகிறது.
குரு தவம் செய்யச் சொல்லி பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டிருக்கும் போது அவருக்கும் இவனுக்குத் தவம் வரவில்லை என்று நல்லா தெரியுது.
மகரிஷிகள் துரியம் கொடுப்பார்கள். ஆறு, ஏழு பேர் கூட்டி வைத்து தீட்சை கொடுத்துக் கொண்டிருக்கும் போது குறிப்பாக ஒருவருக்கு மட்டும் இன்னும் நாலு சுத்திக் கொண்டே இருப்பார். ஏன் சாமி அவருக்கு மட்டும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டால் “அவருக்குத் துரியம் வரவில்லை அப்பா” என்று சொல்வார்கள். எப்படி சாமி கண்டு பிடித்தீர்கள் என்றால் அவர் தலையைப் பார். ‘கிர் கிர்னு’ கத்துதா. நல்லா கவனி. நுணுக்கமா கவனி – தலை சுத்துதா சுத்தும்.