இயற்கை உட்பாதத்தை அனுப்பி நமக்கெல்லாம் தண்டனை கொடுத்து கடமையைச் செய்யும் விதமாக இறைவன் வருகிறான். இந்த மாதிரி வேலையை அவனுக்கு வைக்கக் கூடாது. இந்த மாதிரி கஷ்டத்தைச் சமுதாயமும் படக் கூடாது. அதற்கு என்ன வழி? அது தான் ஆன்மீகம்.
நல்ல ஆன்மீகத்தைக் கொடுக்க வேண்டும். அது தான் நமது அருள் தந்தை அவர்களின் நோக்கம். அதை ஒருவரால் செய்து விட முடியுமா? எதிரி நாட்டு ராஜா சண்டைக்கு வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். ராஜா என்ன செய்வார்? வீட்டுக்கு ஒரு ஆள் புறப்படுங்கள். நான் ஆயுதம் தருகிறேன். நாமெல்லாம் சேர்ந்து போருக்குப் போவோம். வீட்டுக்கு ஒரு ஆள் recruit பண்ணுவார். அந்த மாதிரி நம்மை ஆள் சேர்க்கிறார்.
அவருடைய வேலைக்கு, அவருடைய குறிக்கோள் நிறைவேற, நம்மை recruit பண்ணி ஆள் சேர்க்கிறார். என்ன நோக்கம். நாம் இந்தப் படையில் சேர்ந்ததன் நோக்கம் என்ன? சண்டைக்கு போனா 2 இலாபம். செத்துப் போனான் பாருங்க எதிரி நாட்டு படை வீரன் அவன் மோதிரத்தை உருவிவிட்டு வந்து விடலாம். அப்புறம் மாதமாதம் சம்பளம் கிடைக்கும். இந்த இரண்டு இலாபத்துக்காக அந்தக் காலத்தில் சண்டைக்குப் போனார்கள். இப்ப நாம் எதற்கு போகிறோம்? என்ன இலாபம் கருதி?
இந்த உலகம் அநாதையாகக் கிடக்கிறது. உலகத்தைக் கண்டு கொள்ள ஆள் இல்லை. உலகம் துன்பப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளவில்லை. உலகம் துன்பப்படுகிற போது நாம் யாரையோ நொந்து கொண்டு இருக்கிறோம். அரசாங்கத்தை நொந்து கொண்டு இருக்கிறோம். Gas விலை ஏறிப்போய் விட்டது அப்படி ஏறி விட்டது என்று கூறி அரசாங்கத்தை நிபந்தனை செய்கிறோம். சமுதாயத்தைக் குறை கூறுகிறோம்.
ஈரோட்டில் வாய்க்கால் இருக்கிறது. மீன் மார்க்கெட் பக்கத்தில் பெரியார் நகர் ஆர்ச்க்கு பக்கம் ஒரு ஓடை இருக்கிறது. அது தேங்கி, தேங்கி நாறுகிறது. அது ஏன் தேங்குகிறது என்று நேற்று தான் கண்டுபிடித்தேன். அந்த நால் ரோடு ஜங்சனிலிருந்து சாக்கடை கொஞ்சம் வேகமாக வருகிறது. அந்த area ஜனங்க வீட்டில் இருக்கிற குப்பையைக் கூட்டிக் கொண்டு வந்து விருந்து சாப்பிட்ட எச்சில் இலையை கொண்டு வந்து வாய்க்காலில் போட்டு விடுகிறார்கள். வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி வந்து பார்த்தால் காணோம். ஒர் இலையைக் கூட காணோம். எங்கே போச்சு. அது தான் அங்கே போடுகிற குப்பை எல்லாம் ஓடைக்கு வந்து விடுகிறது. ஓடை தேங்கி நாறுகிறது.
தாங்கள் செய்கின்ற செயலின் விளைவு தன்னை எப்படி பாதிக்கும். சமுதாயத்தைப் எப்படி பாதிக்கும். சமுதாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் நம்முடைய செயலைச் செய்ய வேண்டும், என்று தெரியாததால் தான் இன்றைக்கு உலக சமாதானம் இல்லை. உலகத்தில் அமைதி இல்லை. இன்பம் இல்லை. அதனால் மனிதகுலம் எதற்காகத் தோன்றியதோ அந்தத் திசையை விட்டு விலகி, வேறு திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மனிதன் சொர்க்கத்துக்குப் போவதற்காக பிறந்தான். அவன் நரகத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறான். மனிதனாகப் பட்டவன் தேவனாவதற்காக பிறந்தான். இறை உணர்ந்து, பிரம்ம ஞானம் பெற வேண்டும். இதை நாம் இப்படிச் சொல்கிறோம். மனிதன் தேவனாக பிறந்தான். ஆனால் மனிதன் மிருகமாகிக் கொண்டிருக்கிறான். மனிதனாக யார் ஆனது? மிருகம். மிருகம் promotion வாங்கிக் கொண்டு மனிதனாகி விட்டது. மனிதன் promotion வாங்கினால் தேவனாகலாம். ஆனால் அவன் என்ன செய்கிறான்? depromotion வாங்கிக் கொண்டு, எனக்கு promotion எல்லாம் ஒன்றும் வேண்டாம் நான் மிருகமாகவே போகிறேன் என்று போய்க் கொண்டிருக்கும் பொழுது இந்த நிலை யாருக்காவது புரிகிறதா?
மனித குலத்துக்கு இந்த நிலை புரிகிறதா? இந்த நிலை உலகத்தில் உள்ள அறிவாளிகளுக்குப் புரிகிறதா? அப்படியே புரிந்தாலும் பேப்பரில் எழுதுவார்கள் கட்டுரையில் எழுதுவார்கள். மேடையில் பேசுவார்கள். இதை சரிபண்ணுவதற்கு ஏதாவது வழிமுறைகள் தெரிகிறதா?
ஒருவருக்குத் தான் புரிகிறது. அவர் தான் வேதாத்திரி மகரிஷி. இப்போ நாம் யார் பக்கம் நிற்பது சொல்லுங்கள் ஆகவே உலகம் படுகின்ற துன்பத்திலிருந்து உலகத்தை விடுவிக்க நாம் ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் ஏதோ அவசரத்தில் ஓடிப் போய் எடுத்துக் கொண்டோம். முக்காலுக்கு அரை பேப்பரைக் கொண்டு வந்து விட்டோம். இனி மேல் நம்மை அருள்நிதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். உயர்த்திக் கொள்ள வேண்டும். இது தான் ஆசிரியரின் இலக்கும், இலட்சணமும் என்று கூறி நிறைவு செய்யலாம்.