KG Sami1937 — 2006

அன்பும் சிவமும்

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு

எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

- திருமூலர்

அன்பர்களே!

மேலே சொன்ன கவியில “அமர்தல், அமர்” என்ற வார்த்தைகளுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. “அமர்” என்றால் தேவலோகம். தேவேந்திரனுடைய பட்டணத்திற்கு “அமராவதி” என்று பேரு. “அமர்” என்ற வார்த்தைக்கு அமைதி என்றும் ஒரு அர்த்தம் உண்டு. அதனாலதான் ஆட்ட ஓட்டமில்லாமல் அமைதியாக இருப்பதை அமர்தல் என்று சொன்னாங்க. சும்மா வெறுமனே ஒக்கார்றத சொல்லலை. சேட்டைகள் அடங்கி நிட்டையில் இருப்பதை “அமர்தல்”னு சொன்னாங்க. அந்த காலத்துல சோறு பொங்கும்போது  கொஞ்சம் தண்ணியத் தெளிப்பாங்க. இந்தக் குக்கர் எல்லாம் வந்ததுனால அதெல்லாம் உங்களுக்கு விட்டுப் போயிருக்கும். தண்ணி தெளிச்சா பொங்கி வர்ற சோறு ஒக்காந்துரும். அத “அமர்ந்திடும்”ன்னு சொல்லுவாங்க. “அமர்தல்” என்றால் அமைதியாக இருத்தல்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

- திருக்குறள்-அதிகாரம்-13-121

“அமரருள்”ன்னா (அமர்+அருள்) தேவலோகத்துல கொண்டு போய் சேர்த்துடும்ன்னு ஒரு அர்த்தம் சொல்லுவாங்க. அது இல்ல அதுக்கு அர்த்தம், அமைதியான அருளை தருங்கறது தான் அதுக்கு அர்த்தம். அப்படின்னா அமைதியாகி விடுவார்கள் என்று அர்த்தம்.

அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

- திருமூலர்

அன்பர்களே!

“சிவம்” என்ற வார்த்தைக்கு “அமைதி” என்ற ஒரு பொருளும் உண்டு. “சிவனேன்னு இரு” அப்படீன்னா பரமசிவம் மாதிரி ஆடணும் அல்லது சிவலிங்கம் மாதிரி கல்லாப் போயிடணும்னு அர்த்தமா? இல்ல, “சிவனேன்னு இரு” என்றால் “அமைதியாக இரு, சிவன் எப்படி இருப்பானோ அப்படி இரு”ன்னு அர்த்தம். சிவனே என்று இருத்தல்ன்னா அமைதியாக இருத்தல். ஒருவருடைய அமைதி கெட்டால் கெடுதல் செய்யலாம், ஆனா அமைதியாக இருந்தால் என்ன செய்யலாம்? அன்பு செய்யலாம். உதாரணத்துக்கு ஒரு  வீட்டுல ஒரு கணவன் மனைவி. கணவன் திட்டறாரு. மனைவி அமைதியாக இல்லாமல் எதிர்த்து பேசுனாங்கன்னா என்ன விளைவு ஏற்படும்? அமைதியாக இருந்து விட்டால் என்ன விளைவு  ஏற்படும்? அமைதியாக இருந்தால் அங்க அன்பு விளையும். ஏன்னா “சிவம்” என்கிற அமைதி அன்பு விளைவிக்கக் கூடியது. “அன்பே சிவம், அன்பே கடவுள்” என்றெல்லாம் நீங்கள் கேள்விப் பட்டிருப்பீங்கல்ல, அதுக்கு இது தான் அர்த்தம். மனதை இறைவனோடு இணைத்து தவம் செய்யும் போது இதை உணர முடியும். அந்த சமயத்துல மனம் கெட்ட எண்ணமோ, ஆசையோ, ஏக்கமோ, கோப தாபமோ இல்லாம அமைதியாக இருக்கும். ஆமா! நல்ல தத்துவம் ஒரு மாதிரி அறிவையும் மனதையும் இணைக்கிறது. தவம் ஒரு மாதிரி அறிவையும் மனதையும் இணைக்கிறது. ரெண்டும் வேறு வேறு இல்லை என்ற உணர்வு கிடைக்கிறது. எங்குமே வேறில்லை, எல்லாமே இறைமயம். தெய்வநிலையே சுழன்ற நிலையில் விண்துகளாக மாறிற்று. அறிவியல்ல இத particle என்று சொல்லுவாங்க. அந்த விண்துகளே காற்று, நெருப்பு, நீர், நிலமாக தனது இறுக்கத்துல, நெருக்கத்துல மாறி இருக்கிறது. விண்துகளோ தெய்வம். அப்ப விண்துகளால் ஆன மற்ற பொருட்கள்? அவையும் தெய்வம். இவற்றிலே உணர்ச்சி என்ற ஒன்று தோன்றும் போது பஞ்சபூதங்களே ஜீவனாகிறது.

அன்பர்களே! இந்த ஜீவராசிகள் அனைத்தும் பூதங்களிலிருந்து வந்தன. பூதமோ விண்துகளிலிருந்து வந்தது. விண்ணோ தெய்வநிலையிலிருந்து வந்தது. அப்படின்னா ஜீவராசிகள் எங்கிருந்து வந்தன? இறைநிலையிலிருந்து வந்தன. அதுல ஒரு  சிறந்த ஜீவன்தான் மனிதன். மனிதன் எங்கிருந்து வந்தான்? எல்லா மனிதனும் இறைநிலையிலிருந்து வந்தவன்தான். நானும் எனது பக்கத்து வீட்டுக்காரரும் ஒரே இறைநிலையிலிருந்து வந்தவங்கதான். அப்ப எங்களுக்குள்ள என்ன பேதம்? நானும் எங்க அம்மா வயிற்றிலிருந்து வந்தவன், எனது உடன் பிறந்தவரும் எங்க அம்மா வயிற்றிலிருந்து வந்தவர் அப்போ அவருக்கும் எனக்கும் என்ன உறவு? சக உதரர்கள். உதரம்னா வயிறு. அதே மாதிரி நானும் இறைநிலையிலிருந்து வந்தவன், என் பக்கத்து வீட்டுக்காரரும் இறைநிலையிலிருந்து வந்தவர். அப்போ எனக்கும் என் பக்கத்து வீட்டுக்காரருக்கும் என்ன உறவு? நாங்க ரெண்டு பேரும் சக உதரர்கள் அல்லவா? அவர் என்ன வேற ஆளா? எனக்கு எதிரியா? வயதுல மூத்தவர்னா எனக்கு அண்ணன், இளையன்னா எனக்கு தம்பி. ஆங்கிலத்துல ஒரு வார்த்தை உண்டு, universal brotherhoodன்னு சொல்லுவாங்க. அப்படின்னா அகில உலக சகோதரத்துவம்ன்னு அர்த்தம். அது இங்க தான் விளையுது. ஆன்மீகத்துல தான் அது  யதார்த்தமாகவும், பிரத்யட்சமாகவும் விளங்குகிறது. ஆகவே ஒருவருக்கொருவர் என்ன செய்து கொள்ளணும்? கெடுதல் செய்து கொள்ளணுமா? அன்பு செய்து கொள்ளணுமா? கெடுதல் செய்தால் என் அண்ணன், என் தம்பிதான் கெடுகிறான். அது எனக்கு சிறப்பா? அது எனக்கு நன்மை தருமா?. அண்ணன் தம்பி என்று சொல்லக்கூடியவர்கள் ஒருவொருக்கொருவர் அன்புதான் செலுத்த வேண்டும், அதுதான் அண்ணந்தம்பி. ஜீவ லோகத்துல வேற மாதிரியும் இருப்பாங்க. சில பேர் பகையாளியாவும் இருப்பாங்க, பங்காளியாவும் இருப்பாங்க. சொத்து வந்து போச்சுன்னா பங்காளி. சொத்து இல்லைன்னா ? உதாரணத்துக்கு அண்ணந்தம்பி அஞ்சு பேரும் அண்ணாடங்காய்ச்சின்னு வெச்சுக்கங்க, அஞ்சு பேரும் ஒத்துமையா இருப்பாங்க. இதிலேருந்து என்ன தெரியுது? இறைநிலை உணர்ந்த தெளிவானது அன்பு செலுத்த சொல்கிறது. ஏன்? யார் ஒருவர் இடத்திலும் இறைவனைக் காண வேண்டும். அதாவது இரத்தமும் சதையுமாக, எலும்பும் தோலுமாக, ஆணும் பெண்ணுமாக, பேரும் உறவுமாக பார்க்கக் கூடாது. இறைவனாகவே எல்லாப் பொருளையும் பார்க்கும் போது, அவர்களுக்கும் நமக்கும் பேதமில்லைன்னு சொல்லும் போது, அவர்கள் ஏதோ சங்கடப்பட்டா, நாம் சங்கடப்படுவதாக ஒரு உணர்வு வரும். அவர்களுக்கு ஏதோ குறைபாடு இருந்தா, எனக்கு குறைபாடு இருப்பதாக உணரப்படும். எனக்கு குறைபாடு வந்தா நான் போக்கிக்கொள்வேன், ஆனா அதே மாதிரி அவர்களுக்கு ஏதாவது குறைபாடு வந்தா அதை எனது குறைபாடா உணர்ந்து, அந்த குறைபாட்டை போக்க உதவுணும் இல்லைன்னா போக்கணும். இதுக்கு தான் அன்பு செய்யறதுன்னு பேரு. மனசுல ஒரு தயாள குணம், ஒரு பரிவு, எல்லாரும் நல்லா இருக்கணுங்கற நெனப்பு, எல்லோரையும் இறைவனாகப் பார்க்கக்கூடிய ஒரு ஆற்றல், வெறுப்பின்மை, பகையின்மை இதெல்லாம் தான் அன்பு. “நான் யார்?” போன்ற பல தத்துவ விளக்கங்கள் கேட்ட பிற்பாடு எல்லோரையும் இறைவனாகப் பார்த்தால்தான் அது வெற்றி. இல்லேன்னா படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், என்று சொல்ற மாதிரி நமது படிப்பெல்லாம் செயலுக்கு வராமல் போயிடும். செயலுக்கு வரணும்னா, யார் ஒருவரையும் தானாகப் பாவிக்கணும். தான் என்றால் யார்? தான் தான். யார் ஒருவரையும் நானாகப் பாவிக்கணும்னு சொல்லலை, தானாகப் பாவிக்கணும். தான் என்றால் என்ன? தான் என்றால் தெய்வம். இதத்தான்,

நான் என்றும் தான் என்றும் நாடினேன்

ஆராய்ச்சி பண்ணினேன் நாடலும்

நான் என்றும் தான் என்றும் இரண்டில்லைன்னு

பாடியிருக்காங்க. இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்? “நான் யாரு, தெய்வம் யாருன்னு ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தேன், ஆராய்ச்சி பண்ணிப் பார்த்த பிற்பாடு நான் என்று தனியா ஒன்றும், தான் என்ற தெய்வம் என்று தனியா ஒன்றுமாக இரண்டு இல்லை என்பதை தான் என்ற ஞானமுதல்வனே நல்கினான், நான் என்ற நானும் நினைப்பொழிந்தேனே”ன்னு சொல்றாங்க. இறைவன் வேறு நாம் வேறு  என்று எண்ணிக்கொண்டிருந்த இடம் போயி, இறைவனும் நாமும் ஒண்ணுன்னு நெனைக்கும் போது, இறைவன் அரூபம் ஆகையால  அவரிடத்துல ஒண்ணுமில்லாதது போல, நம்ம மனமும் ஒண்ணுமில்லாம போயிருது. இந்த மாதிரி மனதை இறைநிலையோடு  பழக்கி வைத்திருக்க கூடியவர்கள், எல்லோரிடத்திலும் இறைவனைக் காணக்கூடியவர்கள் யாரையும் எதிரியாக நினைக்க மாட்டார்கள். இதைப் போல இறைநிலை உணர்ந்து எங்கும் இறைவனைக் காணக் கூடிய ஆற்றல் பெற்ற நாம் நமக்கு தெனமும் கெடுதல் பண்ணறானே அவனிடத்திலும் இறைவனைக் காண வேண்டும். அவனிடத்தில் இறைவனைக் காணலேன்னா, அவன் செய்த கெடுதல் நமக்கு தெரிய வரும். அவனிடத்தில் இறைவனைக் கண்டால் அவன் செய்த கெடுதல் நமக்கு தோன்றாது. பொதுவா  யாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது. ஆனா எதிரிக்கு மட்டும் கெடுதல் செய்யலாம்ன்னு ஒரு நியாயம் சொல்லுவாங்க. ஆனா, எதிரிக்கும் கெடுதல் செய்யக் கூடாது.

அன்பர்களே! “பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே! பகைவனுக்கு அருள்வாய்”ன்னு பாரதியார் ஒரு பாட்டுல பாடியிருக்காரு. ‘அருள்வாய்’ என்றால் ‘நல்லது செய், கொடு... எல்லாம் கொடு’ என்று அர்த்தம். “பகைவனுக்கு அருள்வாய்”ன்னா, “பகைவனுக்கு நல்லது செய்”ன்னு அர்த்தம். யாரை கூப்பிட்டு சொல்றாரு? நன்நெஞ்சே... வன்நெஞ்சேன்னு சொல்லல, ஏன்னா கொடூரமான உள்ளம் கொண்ட வன்நெஞ்சவர்களால இது முடியாது. ஆகவே அவங்களை கூப்பிடலை. “நல்ல நெஞ்சு உடைய நன்நெஞ்சவர்களே வாங்க, பகைவர்களுக்கு அருளுங்கள்”ன்னு பாடுறாரு. அதுக்கு பின்னால

“புகை நடுவினில் தீ இருப்பதை புவியில் கண்டோமே பகை நடுவினில் அன்புருவாய் பரமன் வாழுகின்றான்” ன்னு

சொல்றாரு. இதுக்கு அர்த்தம் புரியுதா? புகை இருக்குது, கண்ணெல்லாம் எரியுது, அந்தாண்ட இருக்கறது மறைக்குது, இருமல் வருது, தும்மல் வருது, இதுக்கெல்லாம் மத்தியில தூய்மையான நெருப்பு இருக்குது. நெருப்பு இல்லாமல் புகையாது. அது போல பகை நடுவினில் பரமன் - தெய்வம் இருக்கிறார். ஆகவே பகைவனுக்கு அருள்வாய் என்கிறார். பகைவனுக்கு அருள்வாய்னா அந்த அருளை யார் வாங்கிக்கறா? அங்கே இருக்கக் கூடிய பரமன் இறைவன் வாங்கிக்கறாரு. அப்போ யாருக்கு நன்மை செய்தாலும், அந்த நன்மை யாருக்கு போய் சேரும்? பகைவனுக்கு நன்மை செய்தாலே இறைவனுக்கு போய் சேரும் போது யாருக்கு நன்மை செய்தாலும் அதுவும் அந்த இறைவனுக்குதான் போய் சேரும்.

அன்பர்களே! இறைவனிடத்திலிருந்து தான் நாம் எல்லாம் பெற்றிருக்கிறோம். கை, கால், கண், மூக்கு, அறிவு, குணம், சொத்து பத்து எல்லாமே இறைவனிடத்திலிருந்து தான் பெற்றிருக்கிறோம். எல்லாவற்றையும் இறைவன் நமக்கு தருகிறான்... தருகிறான்... தருகிறான்... தந்து கொண்டே இருக்கிறான் இல்லையா? ஆகவே இறைவனுக்கு திருப்பி செலுத்த நாம கடமைப்பட்டிருக்கோம். இப்போ, பெண்கள் கொழந்தை பெத்துக்கறாங்க. கொழந்தை பெத்தா பால் கொடுக்கணும். மார்பகத்துலிருந்து பால் வரணும். மார்பகத்தில பால் எப்ப ஏற்படுது? கொழந்தை பெத்து ஒரு வாரம் கழிச்சா? ஒரு மாசம் கழிச்சா? இல்ல கொழந்தை பொறக்கறதுக்கு முன்னாலேயே ஏற்படுது. அப்ப பாருங்க, எவ்வளவு முன் யோசனை! அந்த மாதிரி எல்லாவற்றையும் முன் யோசனையோடு செய்யக்கூடிய இறைவன் நமக்கு வேண்டிய சோறு, தண்ணி, துணிமணி எல்லாவற்றையும் படைத்து வைத்து விட்டு நம்மை படைக்கிறான்.

அன்பர்களே! “அன்பே சிவம், அன்புருவாம் பரசிவம், அன்புருவம் சிவமே, அன்பே கடவுள்” என்றெல்லாம் சொல்லப்பட்டிருப்பது போல் கடவுளுடைய தன்மையே அன்புதான். அன்புள்ள தாய் தன் குழந்தைக்கு மிட்டாய், ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கி கொடுப்பாளா? சொல்லுங்க, அறிவை பயன்படுத்தி சொல்லுங்க. அன்பு என்ன செய்யும்? காக்கும், ஆதரிக்கும், மேம்படுத்தும், புசிக்கும், ஊட்டும். அப்படியிருக்கும் போது மிட்டாய், ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்தா குழந்தையோட குடல் கெட்டுப் போகும், பல்லு கெட்டுப் போகும் இரத்தம் கெட்டுப் போகும், குழந்தைக்கு காய்ச்சல் வரும்னு தான் அன்பு நினைக்கும். ஆகவே அன்பு எப்போதும் ஆதரிக்கும். அப்படியிருக்கும்போது அன்புடைய இறைவன் நாம் கெட்டு போவதற்கு ஒத்துக் கொள்வானா? நாம தவறுகள் செய்தால் தண்டிக்காமல் விட்டு விடுவானா? தன் மகன் நல்வழிப்பட வேண்டும் என்றுதானே எல்லாத் தாயும் நினைக்கணும். ஆனா இந்தக் காலத்துல கொஞ்சம் மாறுபடுது. ஏன்னா நல்வழின்னா எதுன்னு தெரியலை. உதாரணத்துக்கு பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போறாங்கன்னு வைச்சுக்கங்க. மாப்பிள்ளை கோட்டு, பூட்ஸ் எல்லாம் போட்டுட்டு, டை கட்டியிருந்தாக்க குடிகாரனா இருந்தாலும் பரவாயில்லைன்னு நெனக்கறாங்க. வெளித் தோற்றத்துல மயங்கி அகத்தை பார்க்க மாட்டேங்கறாங்க. ஒருவன் அகத்தில் அன்புடையவனா என்று பார்க்க வேண்டும். அன்புடயவன் என்று எப்படி தெரியும்? கோயிலுக்கு போறானா? சாமி  கும்பிடறானா? அப்பா அம்மாவுக்கு மதிப்பு கொடுக்கறானா?அவன் நல்ல கணவனாக இருப்பான். ஆகவே நற்குணங்கள் என்பது தெய்வத் தன்மையாக இருக்கிறது. தெய்வம் நற்குணங்கள் எல்லாம் உடையது. அப்படிப்பட்ட தெய்வம் கெடுக்கணும்ன்னு நெனைக்குமா? நெனைக்காது. ஏன்னா கெடுத்து அதுக்கு ஆகப்போவது ஒண்ணுமில்லை. ஆகவே இறைத்தன்மை என்பது அன்பு கொடுக்கணும் என்கிற தன்மை, கெடுக்கக்கூடாது என்கிற தன்மை, தவறு செய்தால் பின்னால கெட்டுப் போவாங்க என்பதனால தவறு செய்யாமல் காக்கின்ற தன்மை அப்புறம் தவறு செய்தால் தண்டிக்கின்ற தன்மை. ஏன் தண்டிக்கணும்? அப்பத்தான் ரெண்டாவது தப்பு பண்ண மாட்டான் என்ற நிலையிலே இறைவன் நமக்காகவே எப்போதும் இருக்கின்றான். இறைவன் நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தருகிறான் என்பதை ஆங்கிலத்துல “providence”ன்னு சொல்லுவாங்க. “providence”ன்னா நமக்காக எல்லாவற்றையும் முன்னேற்பாடாக ஏற்படுத்தி வைத்திருப்பவன்னு அர்த்தம். இங்கே இந்துக்கள் கலாச்சாரத்துல சைவம்,  வைணவம்னு ரெண்டு மதம் வருது. ரெண்டு கடவுள் வருது பரமசிவன் ஒண்ணு, மகாவிஷ்ணு ஒண்ணு. பரமசிவன வந்து “படியளக்கும் பரமசிவன்” என்று சொல்லுவாங்க. படியளக்கறதுன்னா படியால அளந்து அளந்து கொட்டறதுன்னு நேரடியான அர்த்தம். அதுக்கு ஊடாக உள்ள அர்த்தம் வேண்டியவங்களுக்கு, வேண்டியதை, வேண்டிய பொழுது, வேண்டிய அளவுல, வேண்டிய இடத்தில் கொடுப்பதுன்னு அர்த்தம். படி என்றால் சம்பளம், கூலி, நெல்லு, அரிசி என்று அதைக் கொண்டு, இதைக் கொண்டு ஜீவிதம் நடத்த முடியுமோ, வாழ முடியுமோ அதுக்கெல்லாம் படின்னு பேரு. படி என்ற வார்த்தைக்கு stepன்னு ஒரு அர்த்தம் இருக்குது. படி என்ற வார்த்தைக்கு obey- ‘படிந்து நட’ன்னு ஒரு அர்த்தம் இருக்குது. படி என்ற வார்த்தைக்கு litreன்னு ஒரு அர்த்தம் இருக்குது. படி என்ற வார்த்தைக்கு learn, study என்ற அர்த்தம் இருக்குது. படி என்ற வார்த்தைக்கு மூங்கில்னு ஒரு அர்த்தம் இருக்குது. அந்தக் காலத்துல மூங்கில வைச்சுதான் steps வைச்சாங்க. மூங்கிலால செய்த படிக்கு படின்னு பேரு. கிட்டத்தட்ட மூங்கிலால செய்த ஏணின்னு வெச்சுக்குங்க. ஒரு மூங்கிலை எடுத்து ஒரு கணுவோட வெட்டி, அந்தக் கணுவுக்கு முன்னால வெட்டினா ஒரு படி வந்து போச்சு. மேலே திறந்து இருக்கும். கீழே கணுவிருக்கும். இதனால அளந்து கொட்டினா ஒரு படி. இவ்வளவு இருக்கு தமிழ்ல. ஆகவே படி அளப்பவன் என்றால் measurement கணக்குல, unit கணக்குல, litre கணக்குல, மறக்கால் கணக்குல அளந்து கொட்டித் தருபவன் என்று அர்த்தம். யாருக்கு தருவான்? சகல ஜீவராசிகளுக்கும். எதை? அரிசி, சோறு எல்லாம்னு நெனச்சுக்கக் கூடாது, வேண்டியதை  தருபவன். ஆகவேதான் “படியளக்கும் பரமசிவன், வேண்டியவர்களுக்கு வேண்டியதை கொடுக்கக் கூடிய பரமசிவன்” என்று சொல்லறாங்க. அவனுக்கு வேறென்ன வேலை சொல்லுங்க? அதே வேலைதான். தூங்கற வேலையெல்லாம் கிடையாது. கடவுளெல்லாம் தூங்க மாட்டாரு. மகாவிஷ்ணு? அவரும் தூங்க மாட்டார். நீங்க ஸ்ரீரங்கத்துல போய் பார்த்தீங்கன்னா கோவிந்த ராஜ பெருமாள்னு ஒருத்தரு, யோக நித்திரையில இருப்பாரு. தலையணை என்ன தெரியுமா? ஜீவராசிகளுக்கு எல்லாம் படியளந்துட்டு, அந்த அளந்து கொட்டிய காலி படியை தலைக்கு வெச்சு கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு இருப்பாரு. தூங்கறதில்லை, அதுக்கு யோக நித்திரைன்னு பேரு. ஆகவே கடவுளையே படியளக்க வைத்திருக்கிறார்கள் நமது தத்துவ ஞானிகள். வேண்டியதெல்லாம் கொடுப்பவன் இறைவன்.அப்படின்னா, அது அன்பினுடைய அடையாளம் அல்லவா? அன்பே சிவம். நாம் இறைநிலையை உணர்ந்தால் இறைவனுடைய தன்மையெல்லாம் நமக்கு வரும். பல்வேறு தன்மைகள். விசாலமான தன்மை, உறுதியான தன்மை, அன்பான தன்மை எல்லாம். அந்த அன்பு என்பதை பிறருக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அன்பை கையால செஞ்சா உதவி, வாயால செஞ்சா இன்சொல், மனதால செஞ்சா வாழ்க வாழ்கன்னு வாழ்த்தறது. பாராட்டுவது, போற்றுவது, ஆலோசனை சொல்வது, தவறு செய்த இடத்துல தெளிந்து கொள்ள உதவுறது இதெல்லாம் வாயால செய்யக் கூடிய அன்பு. மனதால  செய்யக்கூடிய அன்பு எல்லாரும் நல்லாயிருக்கணும், எல்லாரும் நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கிறது. நமது அருளன்னை லோகாம்பாள் கடைசி மூச்சுவிடக் கூடிய நேரத்துல கூட எல்லாரும் நல்லாயிருக்கணும், எல்லாரும் நல்லாயிருக்கணும், எல்லாரும் நல்லாயிருக்கணும்ன்னு சொல்லிட்டே மூச்சை விட்டாங்களாம்.

அன்பர்களே! பிறரை சந்தோசப்படுத்தி பார்க்கறதுல ஒரு சந்தோசம் இருக்குது. பிறரை வருத்தப்படுத்தி பார்த்தோம்னா என்னாவாயிருக்குது? அதுவும் சந்தோசமாயிருக்குது. யாருக்கு? இறைநிலை உணராதவங்களுக்கு. இப்போ பிறர் வருந்துகிறார்கள்னா உண்மையிலே வருந்துவது யாரு? இறைவன். யார் வருந்துவது? நான். ஏன்னா நான் தான் இறைவனாச்சே! எங்கிட்ட இருக்கற அதே இறைவன் தானே அங்கயும் இருக்கறான்? ஆகவே எந்த நேரத்திலும் மனதை அமைதியான நிலையில் வைத்து கொள்ள வேண்டும். சிவம் என்றல் அமைதி என்று ஒரு அர்த்தம் உண்டு. “சிவனேன்னு இரு”ன்னு சொல்றாங்க பாருங்க, அதுமாதிரி ஆடாமல் மனதை அமைதி நிலையிலேயே வைத்துக் காத்து வந்தால் வெறுப்பு வராது, கோபம் வராது, சுடுசொல் வராது. மனதை அமைதி நிலையிலேயே வைத்திருப்பவர் முகம் எப்படி இருக்கும்? இன்முகமாக, கருணை வழியும் முகமாக, அன்பு வழியும் முகமாக, அருள் வழியும் முகமாக, தெய்வீக முகமாக இருக்கும். அதப்பார்க்கறவங்களுக்கு எப்படி இருக்கும்? சந்தோசமா இருக்கும். உங்களிடத்தில் இறைத்தன்மை இருந்து, அது முகத்திலும் வெளிப்படுமானால் உங்களை பார்ப்பவர்களுக்கு உங்களை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கும். உங்களை வந்து அடிக்கடி பார்க்கணும் போல இருக்கும். அதை தெய்வீகக்களைன்னு சொல்லுவாங்க. அருட்களை என்பது முகத்தில் தெரியுமானால் அதைப் பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சந்தோசமா இருக்கும். பிறரை சந்தோசப்படுத்தி பார்க்கறதுதானே உண்மையான சந்தோசம்? அதுக்கு நீங்க அருள் முகமாக இருந்தால் தானே முடியும்? அன்பர்களே! அன்புருவாக இறைவன் இருக்கின்றான். நீங்களும் அன்புருவாக இருங்கள். நாம் அன்புருவாக இருந்தால் எல்லோரும் நம்மை மதிப்பார்கள், போற்றுவார்கள், நமக்கு கெடுதல் செய்ய மாட்டார்கள். நமக்கு நன்மை செய்வார்கள். பிறருடைய நன்மை நமக்கு வேண்டாமா? வேண்டும். ஏன்னா பிறருடைய அன்பும், ஆதரவும் இல்லாமல் நாம் சுயமாக எதுவும் பண்ண முடியாது. அது மனைவி மக்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, சமுதாயத்துல யாரோ ஒரு  அங்கமாக இருந்தாலும் சரி. ஆகவே பிறரிடத்தில் நமக்கு எவ்வளவு பெறுவதற்கு உரிமை இருக்கிறதோ, அதே மாதிரி நாம்  கொடுப்பதற்கும் உரிமை இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்ல முடியாத அளவுல இருந்து கொண்டே இருக்கிறது. பிறருக்கு நீங்க தருவதற்கு தயார்னா ரெண்டு சட்டை இருந்தா, ஒரு சட்டை கொடுக்கலாம். ரெண்டு படி அரிசி இருந்தா, ஒரு படி அரிசி கொடுக்கலாம். ஆனா உங்ககிட்ட ஒரு படி அரிசி தான் இருக்குது இல்ல உங்ககிட்ட அரிசியே இல்லை, உங்ககிட்ட சட்டையே இல்லை. அப்ப என்ன செய்யறது? இந்த மாதிரி இருக்கிற நிலை, இல்லாத நிலைன்னு ஒண்ணு இருக்கில்ல? அவ்வாறான ஒரு இருக்கின்ற, இல்லாத நிலையே இல்லாத ஒன்று இருந்து கொண்டு இருக்கக் கூடியது ஒன்று இருக்கின்றது. அது என்ன? அதுதான் தெய்வாம்சம் ஆகிய அன்பு. சிவமாகிய அன்பு. அதுக்கு பஞ்சம் கிடையாது. ஆகவே அன்பை செலுத்துங்கள், அன்பை கொடுங்கள். வெறும் மனதால, மன உணர்வாக, மன உணர்வான அன்பை கொடுங்கள். இன்முகத்தை கொடுங்கள். வாழ்த்தை கொடுங்கள். இறைக்கின்ற ஊற்றே சுரக்கும். இந்த மாதிரி நீங்க அன்பை செலுத்த, செலுத்த அன்பு உருவாகிக் கொண்டே இருக்கும். நீங்களே   அன்புருவாக மாறி விடுவீர்கள். நமக்கு ஏதாவது குறை இருந்தா, அந்த குறையும் தெரிய வராது, ஏதோ கஷ்டம் இருந்தா அந்தக் கஷ்டமும் தெரிய வராது. ஏதாவது நோய் இருந்தா, வலி இருந்தா அதுவும் கூட நமக்கு தெரிய வராது. ஆகவே இன்முகமாய் இருப்போம், அன்பை பகிர்வோம். அன்பினை செலுத்துவதோ, கொடுப்பதோ யாருக்கும் குறைவைத் தராது.

“அன்புருவாம் பரசிவமே” “அன்பே சிவம்” “அன்பாய் மலர்வோம்”

- நினைவில் உங்களோடு kgs.

 

Keep reading

More from the archive

KG Sami

தவம் - 3

மிகப் பழங்காலத்தில் பிராணாயாமத்தில் மூலம் அவரவர்களும் தாங்கள் மூலாதாரத்திலிருந்து உயிர்ச் சக்தியை ஆக்கினைச் சக்கரத்துக்குக் கொண்டு வருவார்கள்.…

Arulnithi Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும்…

KG Sami

தவம் – 30

எண்ணெய் எங்க வீட்டில் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. பெரும்பாலும் வீட்டில் எள் எண்ணெய் தான் இருக்கும். அதை நல்லெண்ணெய் என்று சொல்வார்கள். அந்த…

KG Sami

தவம்-10

துரியாதீதம் பற்றிய விவரம் பரஞ்சோதி மகானுக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியெல்லாம் ஒரு யோக நிலை கிடையாது என்று சொல்லி வந்தார். துரியாதீத நிலையைப்…

KG Sami

தவம் – 23

தவம் செய்வதற்கு ஒரே தெய்வத்தை (பிரம்மாவை) வேண்டி தவம் செய்தார்கள். அவன் என்ன கேட்டான் என்றால், ‘நித்திய தத்துவம்’ தத்துவம் என்றால் இந்த இடத்தில்…