KG Sami1937 — 2006

நட்பு நலம்

Signed KG Sami

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)

 இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் ஒரு உதவி செஞ்சதினாலே நண்பர்கள் ஆயிடறாங்க, ஒரு உதவியை ஏற்றுக் கொண்டதினால நண்பர்கள் ஆயிடறாங்க, நன்றிக்  கடனுக்காக  நண்பர்கள் ஆயிடறாங்க, கொஞ்ச நாள் சேர்ந்து போவாங்க,  சேர்ந்து வருவாங்க, அதனால நண்பர்களாயிடறாங்க. சண்டையில் ஆரம்பிச்சு அப்புறம் ராசியாகி நண்பராயிடறாங்க. ஒண்ணும் சம்பந்தம் இல்லாதவங்க  நண்பர்கள்  ஆயிடறாயிங்க, எந்த சம்பந்தமும் இல்லாம அனுமார் நட்பு மாதிரி, குகன் நட்பு மாதிரி. அந்த மாதிரி நமது வாழ்கையில எவ்வளவு நட்பு தேடிப் பெற்றுக் கொள்கிறோமோ  அந்த அளவுக்கு நமது வாழ்கையும் உயரும்.

      எனக்கு தெரிஞ்ச பெரியவர் ஒருத்தருக்கு  ஒரு சமயம்  பண நெருக்கடி ஏற்பட்டுடுச்சு. அத தெரிஞ்ச அவரோட சேட் நண்பர் ஒருவர் அவர பேங்க்குக்கு அழைச்சிட்டுப் போனாரு, அது ஸ்டோர் ரூம். அங்கே நிறைய இரும்புப் பெட்டியிருந்துச்சு. அதுலே நிறைய கட்டு கட்டா பணம் இருந்துச்சு.  தங்க நாணயங்கள், நகைகள் இருந்துச்சு. இரும்பு பெட்டிய திறந்து விட்டாரு  எது வேணும்னாலும் எடுத்துங்கங்க, இல்ல அள்ளி எடுத்துக்கங்க. எப்ப வேணும்னாலும் கொடுங்க இல்ல கொடுக்காமலே  போங்க என்று நண்பர் சொன்னார். ஒரு சேட், வட்டிக்கு வாங்கறவரு, காசே குறியாக உள்ளவரு அப்படி சொன்னார் என்றால், அவர் எவ்வளவு  நட்பு, அன்பு, அபிமானம் அந்த பெரியவர் மேல வைத்திருப்பார்? என்று பாருங்கள்.

      அந்த பெரியவர்  பணத்தை வாங்கி  தொழில் செய்து ஜீவனம் நடத்தியிருக்கலாம் என்று நீங்க நினைக்கலாம். அதுதான்  இல்ல, ஒத்த காசு கூட எடுக்கல.  எல்லாத்தையும் நீங்களே  வெச்சுக்குங்க. எனக்குத்  தேவையில்லை நான் வேணும்னா வந்து கேட்டு வாங்கிக்கிறேன்ன்னு  சொல்லிட்டாரு. ஆனா வாங்கியிருந்தா என்ன மேன்மை அந்தப் பணத்தைக்  கொண்டு  வந்திருக்குமோ, அதைவிட கடன் வாங்காமலேயே மேன்மை வந்தது. எதனால வந்தது?  அந்த சேட்டு  பணத்தால வல்லையே, அவரோட நல்ல  மனசால வந்தது. அவர், அந்த பெரியவரு  நல்லாயிருக்கனும்,  நல்லாயிருக்கனும் என்று எப்பவும் நெனைச்சுக்கிட்டே இருப்பார். அதே போல நம்மை நினைக்கும்படி நிறைய பேர் வேண்டும்.

      அவ்வாறு நம்மை நினைக்கும்படி நிறைய பேர்ல ஒருத்தர்தான் மனைவி, மனைவி தான்  முதல் நண்பன். இத நீங்க லேசாவே நினைக்க கூடாது.  ஒவ்வொரு ஆணினுடைய வெற்றிக்கு பின்னாலேயும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அதுல மொதல்ல தாயா இருக்கலாம் . ஆனா, ஒரு சின்ன சிக்கல் அதுல இருக்கலாம். ஒரே தாய், ஒரே மகன்னா சரி.  நாலு பேருன்னா, பங்கு போட்டு குடுத்தாகணும்.

      மனைவி அப்படியில்லையே! ஒரே கணவன், ஒரே மனைவி எனும் பொழுது தங்களுடைய மனோபலத்தை, ஆத்ம சக்தியை, அன்பை, ஆதரவை ஒருத்தருக்கே கொடுக்கற போது எந்தக் காலத்திலேயும் மனைவி கணவனை மறக்கிறதில்லே. கணவன் மனைவியை  நினைக்கிறது இல்லையே? அப்படீன்னு நீங்க கேட்கலாம்.   ஏன்னா அவங்க  பிசுனஸ், தொழில், உத்யோகம், வேலைன்னு மனம் வேறு விசயத்தில்  சென்று விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனா மனைவியோ இன்னிக்கு சுண்டைக்காய் குழம்பு வெக்கலாம் அவருக்கு நல்லது, இன்று சுக்கு குழம்பு வெப்போம் வயிறு பொறுமல் என்று சொன்னாரு என்று சமையல் செய்தாலும் கணவனையே நினைத்து  கொண்டிருப்பாள்.ஆனாலும் கணவன் மனைவி மீது  சமமான அன்பு   வெச்சிருப்பாங்க. ஆமா, மனைவியிடம் நமது அன்பு வேரோடி இருக்கிறது.

      அன்பர்களே! எல்லார் வீட்டிலும் உள்ளது தான். எங்க வீட்டு சேதி சொன்னா உங்க வீட்டு சேதி மொத்தம் வெலகிப் போயிடும். நாம சாப்பிடும் போது பொறை ஏறும் இல்லையா? அப்போ யாரோ நம்ம  நெனைச்சுக்கறாங்க அப்படீன்னு சொல்வாங்க.. யாரு நெனைச்சுக்கறா, யாரு நெனைச்சுக்கறா  அப்படீன்னு தலையில் அடிச்சுக்குவாங்க.  இதுல ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அதுல உண்மை இருக்கு பாருங்க.  நம்ம உடம்புல  உணவுக்கு  ஒரு வழி, காற்றுக்கு ஒரு வழின்னு இருக்கு. இதில, உணவு  போற வழியில உணவு தான் போகணும், காற்று  போற வழியில காற்று தான் போகணும். மாறி போயிடக்கூடாது. இத சரி பண்ணுவதற்கு சாலை போக்குவரத்து  போலீஸ்காரர் மாதிரி ஒரு வால்வு இருக்கு. இந்த பக்கம் அடைச்சா, அது போகும். அந்த பக்கம் அடைச்சா, இது போகும்.  இதை நீங்க  படிச்சிருக்கலாம். இதை யார் நடத்தறா? அதுதான் மனம். உள்மனம் அந்த வேலையை செய்யுது. உள்மனதுக்கு தொந்தரவு இருந்துச்சுன்னு  வெச்சுகங்க ... என்ன  தொந்தரவு? பிறருடைய எண்ணத் தாக்குதல்...  இந்த வேலையை தடுமாறச்  செய்கிறது. ஆகவே தான் பொறை ஏறுது. உதாரணத்துக்கு  நான் எப்ப  வெளியூர்  சென்று  சாப்பிடும்  போதும் எனக்கு பொறை  ஏறும். நான் ஊர்ல இருந்து வந்த பிறகு என் மனைவி கிட்ட ஏம்மா, நான் சாப்பிடும் போது நீ நெனச்சியா?ன்னு கேட்டா, நான் எப்ப மறந்தேன் நெனக்கறதுக்கு?ன்னு கேப்பாங்க. ஆகவே மனைவிதான் கணவனோட முதல் நண்பன்.

      நட்பு பற்றி வள்ளுவர் குறள் ஒண்ணு சொல்றேன் பாருங்க,

      உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே

      இடுக்கண் களைவதாம் நட்பு.

      ஆடை கீழே வந்திருச்சுன்னா, கையே, கையே ஆடை கீழே வந்திருச்சு, எடுத்துக் கட்டி விடு அப்படின்னு இடுப்பு சொல்லுதா ? சொல்லாமலே செய்யுது பாருங்க. அந்த மாதிரி ஒருவன் ஒரு கஷ்டத்தில இருக்கும்போது சொல்லாமலே வந்து உதவி செய்யக்கூடிய நண்பர்கள் இருக்க வேண்டும். அன்பர்களே! இந்தக் குறளுக்கு திருத்தம் சொல்லுவாங்க பண்டிதர்கள்.  உடுக்கை இழந்தவனில்லை, உடுக்கை விரித்தன் என்று சொன்னார்கள். ஆடை விழும் முன்னே கை சென்று சரி செய்யுது பாருங்க , அது போல கஷ்டம் வரும் முன்னே அதைப் புரிந்து, சென்று சரி  செய்யுமாம் நண்பர்கள் நட்பு.  குறள் எப்படியோ, அதில சொல்லற கருத்து  நன்றாக இருக்கிறது.

      நண்பர்கள்   நமக்கு எவ்வளவு உதவி செஞ்சுருக்காங்க! அந்த உதவிகளை நாம சற்று நெனச்சுப்பார்க்கணும். வாழ்கையில இக்கட்டான நிலையில  எனக்கு எவ்வளவோ நண்பர்கள் எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்கள். அந்த நேரத்தில, தலை போகுதா,  கால் போகுதாங்கற நேரத்தில  ஆபத்தான நிலையிலிருந்து  தப்பிக்க  நண்பர்கள் எனக்கு உதவி செய்ததினாலதான் நான் வாழ்கையில மேன்மையான நிலைக்கு வந்திருக்கிறேன்.  அன்பர்களே!  இந்த தவ வாழ்க்கைக்கு  நான் வரதுக்கு காரணம் ஒரு நண்பர்தான். நான் வேற ஒரு போக்கில போய்ட்டிருந்தேன்.  அப்ப அவர் ஒரு நோட்டிஸ் கொடுத்தாரு, பழைய நண்பர், பள்ளியில, தொழில்ல பக்கத்தில் இருந்த நண்பர். அவர் மட்டும் அந்த நோட்டிஸ் கொடுக்காம  இருந்திருந்தா நான் போன பாதைக்குப்  அகண்ட பாதாளத்துக்கு போயிருப்பேன். இப்படி நாம் உற்று கவனித்துப் பார்த்தால், நம் வாழ்கையில் நல்ல திருப்பம் அமைவதற்கோ, வேறு மாறான நல்ல பாதைக்கு  செல்வதற்கோ, வாழ்கையில் சில, பல  நல்ல உசிதமான நிலை, சௌகரியங்கள்  பெற்றுக் கொண்டிருப்பதற்கோ நண்பர்களே காரணம். அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்னா, நல்ல நண்பர்களைத் தேட  வேண்டும். அவர்களுடைய  நட்பை பெற்றுக் கொள்ள வேண்டும்,  உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் அவருக்கு நண்பராக இருந்து சில, பல நன்மைகளைச்   செய்ய  வேண்டும். அவர்களும் நன்றிக் கடன் காரணமாக,  திருப்பிக் கொடுத்தல் காரணமாக அல்லது இயல்பாகவே நன்மைகளைச் செய்து  நண்பர்களாக இருப்பார்கள்.

      நண்பர்கள் ஒரே மாதிரியான போக்கிலே உள்ளவர்களாக இருப்பது  நல்லது. உதாரணமாக, ஒரு போலீஸ்காரருக்கும்   கேமரா மேனுக்கும் நட்பு  வருமா? ஒரு சினிமா நடிகருக்கும் , கேமரா மேனுக்கும்தான் நட்பு  வரும். சப்- இன்ஸ்பெக்டருக்கும், வக்கீலுக்கும்  நட்பும் வரும், போட்டியும் வரும். ஆகவே நம்ம துறைல நட்பை தேடிக்கொள்வது நல்லது. அப்படிப் பார்க்கும்போது தவ வாழ்க்கையில இருக்கும் அன்பர்கள் அந்த வட்டத்திலேயே நட்பை தேடிக்கொள்வது நல்லது. ஏன்னா அங்க தீய நட்பு, கூடா நட்பெல்லாம் வராது. நல்லவர்கள், தூயவர்கள் இருப்பார்கள். அன்புடனும், கருணையுடனும் இருப்பார்கள். யாருக்கு என்ன நன்மை செய்யலாம்ன்னு காத்துட்டு இருப்பாங்க மற்ற ஃபீல்டு-ல்ல பார்க்கும் போது கொஞ்சம்  செக்  பண்ணணும். வந்து, வந்து ஒட்டுவாரு , நமது நட்பை மகிழ்வார். அவர் வந்து நல்லவரா இல்லையான்னு நம்மால கண்டு பிடிக்க முடியாது. ஒரு தப்பு செஞ்சு கிரிமினலா ஆயிடுவாரு. ஒரு பைனான்ஸ் கம்பெனி  வெச்சு நடத்தி  க்ளோஸ் பண்ணிட்டு போயிருவாங்கன்னு வெச்சுக்கோங்களேன்.  அவர் கொண்டு  போன பணத்தையெல்லாம் எங்கோ வெச்சுருப்பாருல்லையா? அத உங்க வீட்ல  கொடுத்துப்போக, உங்களைத்தான் போலீஸ் தேடுவாங்க. இந்தக் காலத்தில, இந்த சமுதாயத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அதனால  நண்பர்களைத் தேடும் முன்னால் அவர்கள் நல்லவர்தானா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

      ஆகவே நல்ல நண்பர்களைத் தேடுங்கள், நல்ல நண்பர்களாக இருங்கள். அந்த அளவுக்குத்தான் நம்ம வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் அமையும்.

            - நினைவில் உங்களோடு kgs

Keep reading

More from the archive

KG Sami

தவம்-14

புதுப் பொண்ணு மாப்பிள்ளை வந்தா ஆரத்தி எடுக்கறாங்க பாருங்க, மஞ்சள் தண்ணீர் கலந்து தாம்பாளத்தில் அதை எப்படி சுத்துவது. மெதுவாக தந்திரமாக தண்ணீர்…

Arulnithi Muthappan

நயத்தக்க நாகரீகம்

பணத்தைப் பரிகொடுத்த சிலர் மகரிஷிகளிடம் புகார் சொல்வார்கள். மகரிஷிகள் சொல்கின்ற பதில்: ‘எனக்குத் தெரிந்து நான் பாவம் செய்ததில்லை. எனது பெற்றோரும்…

KG Sami

தவம் – 33

ஆகவே ஜீவகாந்தம் ஒரு minimum critical level ஐ விட குறைந்து விடக் கூடாது. குறைந்து போனால் conversion ஏற்பட்டு சூடு உண்டாகும். அப்படியெல்லாம் நமக்கு…

KG Sami

மாயையும் ஞானமும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! வாழ்வின் நோக்கம் இன்பமா?, துன்பமா?. வாழ்வின் நோக்கம் இன்பம்.…

KG Sami

Thalattu Vethathri - 60

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !அருட் தந்தையின் அருள் வாரிசாம் உலகநலத் தொண்டர் , மூத்த பேராசிரியர் திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களின் அருட்கவிகள் அடங்கிய…

KG Sami

தவம் – 22

எப்படியோ பூமியை விட்டு விடுவது இல்லை என்ற நிலையில் சந்திரன் இருப்பதால் வளைத்துப் போட்டு அதுவரைக்கும் பூமி என்று சொல்லுங்கள்.சந்திரன் வரைக்கும்…