நான் தீட்சை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு சில விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தீட்சை எடுத்துக் கொண்ட அன்று என்னையும் சேர்த்து 11 பேர் எடுத்துக் கொண்டார்கள். தீட்சை கொடுக்கின்ற சம்பிரதாயங்களுக்கிடையே ஒவ்வொருவரிடமும் மகரிஷிகள் ‘தெரிகிறதா’, ’தெரிகிறதா’ என்று கேட்டார்கள். என்னைத் தவிர அனேகமாக எல்லோரும் ‘தெரிகிறதா’, ‘தெரிகிறதா’ என்று சொன்னார்கள். எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.
எனது குறையை வெளிப்படுத்திக் கொள்ளாமல், நானும் ‘தெரிகிறது’ என்று தலையாட்டி விட்டேன். எனக்கோ ஆச்சர்யம். ‘எல்லோருக்கும் தெரிவது எனக்கேன் தெரிவதில்லை!’ வீட்டிற்குச் சைக்கிளில் செல்லும் பொழுது (3 மைல்) நெற்றியில் படுகின்ற காற்று ஆக்கினைச் சக்கரத்தில் ‘ஜிலு ஜிலு’ என்று ஓர் உணர்வை ஏற்படுத்தியது. அது எனக்கு விநோதமாக இருந்தது. மறு நாள் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு தவம் செய்தேன்.
எவ்வளவு நேரம் கவனித்தும் ஒன்றும் தெரியவில்லை. எனக்கு ஏமாற்றமும் சலிப்பும் ஏற்பட்டன. கடைசியாக லேசாக முணு முணுவென்று ஏதோ தோன்ற ஆரம்பித்த பிறகு வேலைக்கார மூதாட்டி வந்து குரல் கொடுத்துவிட்டார். ஆக்கினையில் லேசாக வந்திருந்ததும் போய் விட்டது. பிறகு எவ்வளவு முயன்றும் வரவில்லை.
தீட்சை முடிந்து விடை கொடுத்து அனுப்புகையில் மகரிஷிகள், “நாளைக்கு சனிக்கிழமை உங்களுக்கெல்லாம் அலுவலகம் அரைநாள் போலிருக்கிறதே. நான் பக்கத்தில் அரசு விருந்தினர் விடுதியில் தானே தங்கியிருக்கிறேன். ஓய்வாகத் தான் இருப்பேன். யார் வேண்டுமானாலும் வாருங்கள், பேசிக் கொண்டிருக்கலாம்” என்றார்கள்.
அதன்படி மாலை 4 மணிக்கெல்லாம் நான் சென்றேன். ஏற்கெனவே பல பேர் வந்து மகரிஷிகளின் கட்டிலிலும், கீழே ஜமுக்காலம் விரித்தும் உட்கார்ந்து மகரிஷிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு இடமில்லை. மகரிஷிகள் கொஞ்சம் அன்பர்களிடம் நெருங்கி உட்கார்ந்து கொண்டு தனக்கும், அவருக்கும் இடையில் எனக்கு இடம் கொடுத்தார். (இது பற்றி வேறோரு சந்தர்ப்பத்தில் விவரமாக எழுதி இருக்கிறேன்).
மகரிஷிகள் என்னைப் பார்த்தார்கள். உற்றுப் பார்த்தார்கள். “ஊஹீம், இனிமேல் உங்களுக்குத் தாங்காது. இன்று இரவு வீட்டிற்க்கு போகும் போது சாந்தி யோகம் வாங்கிக் கொண்டு போய் விடுங்கள்” என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
விடுதியில் இருந்து மன்றத்திற்குச் செல்லும் வழியில் நண்பர்கள் சொன்னார்கள்: “சாந்தி யோகம்” என்பது சாதாரணமாகத் தீட்சை எடுத்து ஒரு வாரம் கழுத்துத் தான் கொடுக்கப்படும். எங்கோ ஒருவருக்கு ஏழு நாளைக்கு முந்தியே தலைபாரம் வந்து விடும். அப்படிப்பட்டவர்களுக்கு ஐந்தாம் நாளோ, ஆறாம் நாளோ சாந்தி கொடுக்கப்படும். உங்களுக்கென்னாடாவென்றால் இரண்டாம் நாளே சாந்தி கொடுக்க வேண்டும் என்று சாமி சொல்கிறார். இது எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது”.
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் ‘இன்று இரண்டாம் நாளாக இருந்தும் தலைபாரமோ எதுவுமோ வரவில்லையே’ என்பது தான். இதைப் பற்றி பின்னால் ஒரு சமயம் மகரிஷிகளிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டது என்ன வென்றால்,
“ஆக்கினைச் சக்கரத்துக்கு குண்டலினி சக்தி விட்டது என்றால் இது ஒரு பழக்கமில்லாத பழக்கம் என்பதால் உடலுக்கு ஒரு பொருந்தா உணர்வு தோன்றும். ஏற்கெனவே பலமுறை தலைவலி வந்திருக்குமாதலால் இதை அதனோடு குழப்பிக் கொள்வார்கள் (confusion) அதைத் தான் தலைவலி, தலைப்பாரம் என்று நாம் நமது மன்றத்தில் சொல்கிறோம். தோன்றிய உடனே இதை தணித்து விடக் கூடாது. தாங்கள் கூடியவரை தாங்க வைக்க வேண்டும். காலையில் மாலையில் ஆக்கினைத் தவம் செய்ய வேண்டும்.
”தாங்க முடியாத நிலை சுமார் ஏழு நாளில் தோன்றும். சிலருக்கு இந்த மாதரியான பொருந்தா உணர்வு தோன்றாமலேயும் போய்விடலாம். தலை பாரம் தொந்தரவாகப் போகும் பொழுது அதை வைத்துக் கொண்டு தவமும் செய்ய முடியாது. வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. அதனால் ஆக்கினையில் இருந்து குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் கொண்டு போய் இறக்கி விடுகிறோம். அக்கணமே சுவிட்ச்சில் கை வைத்தவுடன் மின் விளக்கு நின்று விடுவது போல் தலைப்பாரம் உடனடியாக இறங்கி விடும். தலைபாரம் தோன்றும் முன்னால் சாந்தி யோகம் (இறங்கு படி) கொடுத்து விட்டால் உலை கொதிக்கு முன்னாலே (சோறு கொதிக்கு முன்) மூடியை அகற்றிய மாதிரி தவ அழுத்தம் குறைந்து போகும். இது பொது நிலை. உங்கள் நிலை விட்டகுறை, தொட்டகுறை காரணமாக இருக்க வேண்டும். அதாவது உங்கள் முன்னோர்களில் யாரோ யோகம் ஞானத்திலே சிறந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் உங்களுக்கு இரண்டாம் நாளே சாந்தி கொடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது”. “எனக்குத் தலைப்பாரம் வராத நிலையில் ஏன் சாந்தி கொடுத்தீர்கள்” எனக் கேட்டதற்கு மகரிஷிகளின் பதில்:1
”சில பேருக்கு குண்டலினி சக்தி தலைக்கு நன்கு ஏறி விட்டாலும் அவர்களுடைய தாங்கும் தன்மையைப் பொறுத்து தலை பாரம் வரவே வராது. அல்லது தாமதமாக வரும். உங்களுக்கு அப்படித்தான் போலிருக்கிறது. குண்டலினி சக்தி நெற்றியில் ஏறிப் பொங்கித் ததும்பிக் கொண்டிருப்பதை நான் கண்டு பிடித்தேன். அதனால் தான் சாந்தி யோகம் வாங்கிக் கொண்டு போங்கள் என்றேன். இல்லையென்றால் மறுநாள் மறுநாள் தலைப் பாரம் ஏற்பட்டு அதிகரித்துத் தாங்க முடியாத நிலைக்குப் போய், தவித்துப் போயிருப்பீர்கள்”.
”சரி. எனக்கு அந்த உயர்ந்த நிலை ஏற்ப்பட்டிருப்பதை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள்” என்று கேட்டேன். அதற்கு மகரிஷிகள் “ஓ ! அதுவா? குண்டலினி சக்தி மேலேறி நன்கு ஆக்கினைச் சக்கரத்தில் நிரம்பி இருந்தால், ஓர் அடையாளம் நெற்றியில் தோன்றும். அதாவது இரண்டு கண் புருவங்களுக்கும் மேலாகச் சருமத்தின் நிறம் சற்றே வெளுத்துப் போய் விடும். சிறிது வீங்கிப் போன மாதிரி தோன்றும். இதை அடையாளமாக வைத்துக் கொண்டு இனி மேல் இந்தப் பேர் வழியால் குண்டலினி சக்தியின் ஏற்றத்தை தாங்க முடியுமா, முடியாதா என்பதை தெரிந்து கொள்ளலாம். தாங்க முடியாதென்றால் ஏழு நாட்கள் ஆகாவிட்டாலும் சாந்தி கொடுத்து விட வேண்டும்”.
பிறகு நானும் மற்றோரும் பொறுப்பாசிரியர்களாக விளங்கிய போது, இந்தயுக்தியை அவசியம் அனுசரித்து வந்தோம். சாந்தி யோகம் வாங்கும் வரை அன்பர்கள் தினந்தோறும் பொறுப்பாசிரியர்களைச் சந்தித்து விட்டுச் செல்ல வேண்டும் என்று தீட்சை கொடுத்த அன்று சொல்லி அனுப்பி விடுவோம்.
கண் புருவ பூட்டு என்றும் நெற்றிக்கண் என்றும் முன்னோர்களால் மகிமையாகப் பேசப்பட்ட அந்த ஆக்கினைச் சக்கரத்துக்கு மற்ற மதங்களில் கூட, (அவர்கள் குண்டலினி யோகம் செய்யாவிட்டாலும்) கூட முக்கியத்துவம் உண்டு என்பது சிந்தித்தால் தெரிய வரும்.
இஸ்லாமியர்கள் தங்கள் தொழுகையில் மண்டியிட்டு குனிந்து, குனிந்து நெற்றியால் தரையை இடித்துக் கொள்வார்கள். ஆக்கினைச் சக்கரத்தில் உறுத்தல் காரணமாகவும், வஜ்ராசனம் போட்டு போட்டு எழுவதன் காரணமாகவும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி ஆக்கினைச் சக்கரத்துக்கு வந்து விடும் என்று கணக்கு போலும்.
கிறிஸ்த்துவ மதத்தில் முதியோர் முன் இளைஞர்கள் மண்டியிருவார்கள். பெரியவர்கள் இளைஞர்களுடைய ஆக்கினைச் சக்கரத்தில் கட்டை விரலால் சிலுவை மாதிரி கோடு போடுவார்கள். இந்த மாதிரியான சடங்குகளில் குண்டலினி சக்தியை உயர்த்தி விட முடியுமா? என்பது வேறு கேள்வி. ஆனால் பல பேர் பயிற்சி செய்யும் போது எங்கோ ஒருவருக்கு ‘குண்டலினி சக்தி’ ஏற்றம் பெற்று விடலாம். ஆனால் அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்றும் தெரியாது. எப்படி சரி செய்து கொள்வது என்பதும் தெரியாது. கஷ்டம் தான்.
சில நேரங்களில் விபத்து போன்ற காரணங்களால் உடலுக்கு ஏற்படுகின்ற அதிர்ச்சி கூட குண்டலினி சக்தியை விட்டு விடும். அதன் விளைவாக தலைவலி, மயக்கம், சித்தப்பிரமை போன்ற கஷ்டங்கள் ஏற்படும். அதையெல்லாம் சரி செய்து விட நம்மால் முடியும். அப்படிப் பட்டவர்களைக் கண்டால் உட்கார வைத்து ‘இறங்கு படி’ கொடுத்த் விட வேண்டும். உடனே அல்லது இரண்டு மூன்று முறை வந்து போன பிறகோ அந்தத் தொந்தரவுகள் குறையும். நீங்கும். கூடவே ‘தண்டு வட சுத்தியும்’ கொடுத்து விட வேண்டும்.
இதற்காக அவர்களை மன்றத்தில் உறுப்பினராக்க வேண்டியதில்லை. ஆக்கினை தீட்சை கொடுக்கத் தேவையுமில்லை. நலமடைந்த பிறகு அவர்களாக விரும்பினால் வந்து தீட்சை எடுத்துக் கொள்ளலாம்.
உடலுக்கு ஏற்படுகின்ற அதிர்ச்சி மாதிரியே மனதுக்கும் அதிர்ச்சி ஏற்ப்பட்டால் இதே போன்ற நிலைகள் தோன்றும். அப்படிப் பட்டவர்களையும் இதே போல் தான் நடத்த வேண்டும். திடீர் பயம், பேய் பிசாசு கற்பனை, பிறருடைய எண்ணத் தாக்குதல் கூட அவ்வாறு குண்டலினி சக்தியை ஏற்றி விடும் அளவுக்கு மீறிய சினமும் இதே நிலையை உண்டு பன்னும்.