KG Sami1937 — 2006

விதி

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு

எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பர்களே!

விதி என்றால் என்ன? நம்ம நாடு விதிகார நாடு. மேல்நாட்டில் இப்படி இருக்க மாட்டாங்க, குறிப்பா ஜப்பான்காரங்க. அவங்க உழைப்பைதான் நம்புவாங்க, நம்மாளுங்க கொஞ்சம் வாழ்க்கையில தேக்கம் வந்ததுன்னு வைச்சுக்கங்க, உடனே நோட்டு புக்கை எடுத்துட்டு போயிருவாங்க. நோட்டு புக்னா என்ன தெரியுமா? ஜாதக நோட்டு. ஜாதக நோட்டை எடுத்துட்டுப்போயி ஜோசியர்கிட்ட காட்டினா, அவரு கிரகம் சரியில்லை, நேரம் சரியில்லைன்னுதான் சொல்லுவாரு. இதுக்கு போயா நோட்டை எடுத்துட்டுப் போறது? அதுதான் ஏற்கெனவே சரியில்லைனு தெரியுதே, அதை அவரு உறுதி படுத்தும்போது மனதுக்கு என்னவாயிருக்கும்? அவ்வாறு ஜோதிட சாஸ்திர ரீதியாக நமக்கு இன்ன நேரத்தில் இன்னது நடக்கும் என்று இருக்குதே, அதை விதி என்று ஓரளவுக்கு கொள்ளலாம். வேற ஒன்றை விதி என்று சொல்லுவார்கள், அது என்னன்னு தெரியுமா? “நான் பொறக்கறதுக்கு முந்தியே பிரம்மதேவன் எம் மண்டை ஓட்டுல எழுதி வைச்சுட்டான்... சரியான ஏடு, தொலைக்க முடியாது பாருங்க... ஆகவே மண்டை ஓட்டுக்குள்ள இந்த நேரத்துல, இந்த நாள்ல இவனுக்கு கல்யாணம் ஆகும், இந்த நேரத்தில இந்த நாள்ல குழந்தை பிறக்கும், இந்த நாள்ல இந்த நேரத்தில லாட்டரிசீட்டு அடிக்கும், இந்த நாள்ல இந்த நேரத்துல குதிரை மேல போய் எல்லாத்தையும் விட்டுடுவான் அப்படீன்னு எழுதிருக்கும்”பாங்க. இதை நம்புகின்ற நாடு நமது நாடு. அப்படியென்றால் நமது அறிவுக்கோ, உழைப்புக்கோ இன்றைய தேதியில எந்த மதிப்பும் கிடையாதா? நம்ம சொந்த முயற்சிக்கோ, அறிவுக்கோ எந்த மதிப்பும் கிடையாதா? பிரம்மதேவன் அன்னிக்கு எழுதியதுதான் நடக்கும்னா, அப்ப ஒருத்தன் தூக்கு மாட்டிட்டு செத்து போயிட்டான்னு வைச்சுக்கங்க, ஏன் அவன் செத்துபோனான்? பிரம்மதேவன் எழுதிட்டான் இந்த தேதி, இந்த மணிக்கு தூக்கு மாட்டி விழுந்திருவான்னு சொன்னா சரியா இருக்குமா? உதாரணத்துக்கு ஒரு சோம்பேறி இருக்கிறான், வேலைக்கே போறதில்லை அவன் தலையில “இவன் சோம்பேறியாவே இருப்பான்” அப்படின்னு பிரம்மதேவன் எழுதியிருக்கான்னா ஒத்துக்க முடியுமா? ஒருத்தன் திருடிட்டு வர்றான்... ஏன் திருடினேன்னு கேட்டா, “இத்தனாந்தேதி இத்தனை மணிக்கு நான் இன்ன இடத்துல திருடிட்டு மாட்டிக்கணும்னு எழுதிட்டான் இறைவன்”னு சொன்னா, கேட்க நல்லாவா இருக்குது? என்ன கஷ்டம் வந்தாலும் விதியே என்று முயற்சி இல்லாமல், ஊக்கமில்லாமல், இருக்கக்கூடிய ஒரு மனப்பான்மையை “கருமம்... கருமம்” என்று சொல்லுவார்கள். இந்த தத்துவத்துக்கு மேல்நாட்டுக்காராங்க நமக்கு வைச்சபேரு “கர்மாத்தியறி”. கர்மா என்றால் வினை என்று அர்த்தம். கர்மாத்தியறின்னா இந்த கருத்துதான் அதாவது விதின்னு வைச்சுகங்களேன். அதாவது அவரவர்கள் செய்த செயலுக்குத் தக்கவாறுதான் விளைவு வருமே தவிர வேறில்லை. “இன்னைக்கு எனக்கு கஷ்டம் வருதுன்னா, முன்னொரு காலத்துல நான் செய்த செயல் இத்தகு விளைவாக இருக்கிறது, ஆகவே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்பது கர்மாத்தியறி. யாரையும் நொந்து பயனில்லை, இன்னைக்கு வரக்கூடிய கஷ்டம் என்னாலயும் வந்திருக்கலாம், அதற்காக இவ்வாறு செய்து விட்டேனே... செய்து விட்டேனே என்று வருந்துவதிலும் லாபமில்லை, எனக்கு வரக்கூடிய துன்பங்கள் பிறராலயும் வந்திருக்கலாம், இந்த மாதிரி செய்தார்களே... செய்தார்களே என்று வருந்துவதிலும் லாபமில்லை. இந்த மாதிரி எனக்கு நன்மைகள் வரக்கூடாது என்கிற அளவுக்கு நானோ, எனது முன்னோர்களோ வழி வழியாக சில பல தலைமுறைகளில் தூய்மையான செயல்களை ஆற்றவில்லை. அதனால் இயற்கை இன்பம் எனக்குத் தடுக்கப்படுகின்றது, இயற்கை இன்பம் எனக்குக் குறைந்து போயிற்று, அதை நான் துன்பம் என்று மதிக்கிறேன் என்ற விளக்கம் வந்து போச்சுன்னா கர்மாத்தியறி என்ற கருத்து சரி. ஆனா, யாரும் இப்படி எடுக்கலையே? “இறைவன் அன்று எழுதிய எழுத்தை அழித்து எழுத முடியுமா? இன்னார் தலையில இன்னப்படி எழுதிட்டாங்க”ன்னு தானே சொல்லுறாங்க? இதைக்கூட ஔவையார் சொன்னதா சொல்லுவாங்க, “விட்டமுடன் என் தலையில் இன்னபடி என்று எழுதி விட்ட சிவன் சென்று விட்டானோ?” என்று ஒரு பாட்டு வரும். அந்த மாதிரி சிவனோ எவனோ எழுதிய எழுத்துக்கு நாம ஆடறோம், பாடறோம், கஷ்டப்படறோம் என்ற கருத்தை நாம வேறு வழியில் எடுக்கக்கூடாது. விதி என்பது அதில்லை, கர்மா என்பது அதில்லை. விதி என்ற வார்த்தையை எடுத்துப் பார்த்தீங்கன்னா, விதித்தது, நிர்ணயித்தது என்று அர்த்தம். அதையே கொஞ்சம் நீட்டுனா வீதின்னு வரும். மேப் வெச்சுக்கிட்டு கோடு கோடா கிழிச்சு இதெல்லாம் ரோடு, இதெல்லாம் வீதி, இதெல்லாம் தெரு, இதெல்லாம் சந்து என்று சில இடங்கள்ல செய்வாங்க பாருங்க அவ்வாறு விதிக்கப்பட்டது வீதி. சரியான விதத்தில் நீட்டாமல் சொன்னால் விதி. விதின்னா இது... இவ்வாறு என்று விதித்தல். ஆங்கிலத்தில் விதிக்கு law என்றும் rule என்றும் சொல்வார்கள். எப்படி அரசாங்கம் law, rule எல்லாம் ஏற்படுத்தி வைச்சிருக்குதோ அவ்வறு விதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது, யார் ஏற்படுத்தியதுன்னு கேட்டா, பிரம்மதேவன் அல்லது ஈஸ்வரன்ம்பாங்க. இந்தக் கருத்து நமது நாட்டில ஜனரஞ்சகமாக எல்லோர் மத்தியிலும் வேறூன்றி நிலைத்து நிற்கிறது. இதுவே செய்யற தப்புக்கெல்லாம் சமாதானமாகப் போயிடுது. செய்யற தப்பெல்லாம் செஞ்சுட்டு கடைசில இறைவன் மேல குற்றம் சொல்லி தப்பிச்சுக்குவாங்க.

அன்பர்களே!

பிறர் மேலே குற்றம் சொல்வதில் மனிதனுக்கு ஒரு சுவாரஸ்யம், ஒரு சமாதானம், ஒரு சந்தோசம் என்ற முறையில் இறைவன் மேல் குற்றம் சொல்வதற்கு எழுந்த முனைப்புதான் விதி என்ற தத்துவம். ஆனால் விதி என்ற வார்த்தை நல்ல கருத்தைதான் சொல்லுதுங்கறதை நீங்க சிந்தனை பண்ணிப் பார்த்தா தெரியும். எப்படி? இப்போ, முன் நிர்ணயம் உண்டா இல்லையா? உண்டு. ஒருவனுக்கு இதுதான் உள்ளது என்று விதிக்கப்பட்டுவிட்டது உண்மை. யார் விதித்தது? வேறு யாரோ இல்லை அவரவர்களே. செயல் விளைவுத் தத்துவத்தின் கீழே அவரவர்கள் முன்னால் செய்த வினைக்குத் தக்கவாறு இன்றைய தேதிக்கு, இன்னார்க்கு இன்னதுதான் வரும் என்று ஒரு நிர்ணயம் இருக்கிறது, அது வேறு யாருக்கும் தெரியாது, அவனுக்கு மறந்து போய் இருக்கும் அல்லது முன் தலைமுறையில நடந்திருந்தா சேதியே தெரியாது, ஆனாலும் பதிவு இருந்து கொண்டே இருக்கும். தத்துவ ஞானிங்கெல்லாம் பாவப்பதிவுன்னு சொன்னாங்க, நமது அருட்தந்தைதான் அது எவ்வாறு ஏற்படுகிறது? எத்தனை இடத்தில ஏற்படுகிறது? எவ்வாறு பின்னால் செயலாக வருகிறது? என்பதையெல்லாம் காந்தத் தத்துவத்தின் மூலம் விளக்கி அதனை “கருமையக் களங்கம்” என்று சொன்னாரு. ஒருவன் கருமையக் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டு தனக்கு நல்லது நடக்கணும்னா நடக்கவே நடக்காது என்ற ஒரு செட்டப்பை இறைவன் செய்து வைச்சுட்டான். அவரவர்கள் செய்ததை அவரவர்கள் அனுபவித்து தான் ஆகணும்னு ஒரு விதி போட்டாரு பாருங்க அதோட இறைவனோட பொறுப்பு தீர்ந்தது. அதற்காக அவரை நாம் வைது பிரயோஜனம் இல்லியே? அவங்கவங்க செய்ததைத்தானே அனுபவிக்க சொல்றாரு, செய்யாததை அனுபவிக்க சொல்லலையே! ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விதமாக இன்பமோ, துன்பமோ கணக்கு வழக்கு இல்லாமல் ஏற்படட்டும் என்று முன் நிர்ணயம் ஏற்படுத்தவில்லை. அவரவர்கள் செய்ததை அவரவர்கள் அனுபவிச்சுதான் ஆகணும் என்ற ஒரு நிலைதான் விதி. இப்படி ஒரு விதி இருக்கும்போது, நம்மிடத்தில் பாவப்பதிவுகள் கூட்டம் கூட்டமா இருந்து, கருமையம் களங்கமுற்று இருந்தா நமக்கு இன்பம் வருமா? இன்பம் வருவதற்கில்லை, துன்பம்தான் வரும். இன்பம்தான் மனிதனுடைய குறிக்கோளா இருக்கிறதுனால இன்பம் வரலைன்னா வெற்றி இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். இப்போது நமக்கு இன்பத்தை, நாம் விரும்புவதை அடையச் செய்யும் விதமாக வெற்றியை நிர்ணியிப்பது எது? விதி அதாவது கருமையத்தூய்மை அல்லது களங்கம். அதாவது நாம் முன்வினை என்ற அளவுல துன்பம் விளையற செயலை எவ்வளவு செய்திருக்கிறோம் என்ற ஒரு கணக்கு துல்லியமாக maintain ஆகுது. பிசகோ, தாமதமோ இல்லாமல் சரியாக உடனுக்குடன் எழுதப்பட்டு வந்து கொண்டிருக்கிறது, கருமையத்தில் அது பதிவாகிக் கொண்டேயிருக்கின்றது. அது நல்ல செயலாக இருந்தால் தூய்மை, தீய செயலாக இருந்தால் களங்கம்னு வைச்சுக்கங்க. இதில் யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. இதிலிருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, செயல் செய்யும் கணமே பதிவு வந்து விடுகிறது, எந்த செயலாக இருந்தாலும் பதிவு உண்டு, இன்பம் விளைவிக்கக் கூடிய நல்ல செயலாக இருந்தாலும் பதிவு உண்டு. ஆனால் அந்தப் பதிவு களங்கமாக கருதப்படாது. இறை தன் நிலையிலிருந்து என்ன செய்யுமோ அதே மாதிரி நாம் நடந்து கொள்ளும்போதுதான் நமக்கு இன்பம் விளைவிக்கக் கூடிய செயல்கள் செய்யத் தோன்றும், அதுவே மேலும் மேலும் அத்தகு நல்ல செயல்களை செய்வதற்கு ஊக்கமாக அமையும். துன்பம் விளையக்கூடிய செயலை நாம் செய்திருந்தால் அந்த செயலுக்கும் நல்ல செயல் மாதிரியே பதிவு உண்டு ஆனால் அந்த செயல் மட்டும் களங்கமாகக் கருதப்படும். இந்த களங்கமாகிய தீய பதிவுக்கு இரண்டு விதமான விளைவுகள் உண்டு. ஒன்று, மேலும் மேலும் அதே மாதிரியான தீய காரியத்தை செய்ய தூண்டும் வழக்கமாகவும், சுபாவமாகவும், இயற்கை குணமாகவும் மாறி, திருத்திக் கொள்ளவே முடியாத அளவிற்கு மேலும், மேலும் கெட்ட செயல்களையே அதாவது துன்பம் விளையக் கூடிய செயல்களையே தனக்கும் பிறருக்கும் செய்யக்கூடிய ஒரு தூண்டுதலை அந்தப் பதிவு (கருமையக் களங்கம்) ஏற்படுத்தும். இரண்டு, இயற்கையில் உள்ள ஒரு நிர்ணயப்படி அந்தக் களங்கம் தீர வேண்டும் என்பதற்காக களங்கத்திற்குத் தக்கவாறு துன்பம் வந்து வந்து சேரும். துன்பம் விளைவிக்க கூடிய செயலை செய்திருப்போமேயானால் செய்த செயலுக்குத் தக்கவாறு அந்த அளவுக்குத் துன்பம் வந்து சேரும் என்பதுதான் விதி என்று ஒப்புக்கொள்ளலாமா? இது இறைவன் செய்த ஏற்பாடு. இப்போ துன்பம் வருமானால், தோல்வி வருமானால், வெற்றி வரவில்லையானால் யாரை நோவது? தன்னைத்தான் நொந்து கொள்ளணும். “தான் துன்பம் செய்திருக்கிறோம்” என்ற அளவில் தன்னை தானே நொந்து கொண்டு நாட்களை கடத்தலாமா? அதனால் ஏதும் பயன் உண்டா? தற்போது துன்பமாக உள்ளதே, இந்த துன்பத்தை மீட்டுக் கொள்வதற்கு வழியில்லையா?

ஒரு குறிப்பிட்ட நல்ல செயல், முன்னமே செய்து விட்ட தீய செயலுக்கு முறிவாக ஒரு விளைவைத் தரும். உதாரணமாக எங்கேயோ நினைச்சுட்டு நாம சின்ன உருண்டை சாப்பாட்டை விழுங்கறோம்ன்னு வைச்சுக்கங்க, புரையேறிடும். அப்ப என்ன செய்யறோம்? கொஞ்சம் தண்ணி குடிக்கறோம், உடனே சரியா போயிடுது. அதே ஒரு பெரிய உருண்டையாப் போட்டு முழுங்கிட்டோம்ன்னு வைச்சுக்கங்க, அது போய் தொண்டையில நின்னுரும் சரிதானே? அந்தத் தவறான செயலுக்கு சரியான செயல் என்ன? தண்ணியை நிறைய வாயில ஊத்தி முழுங்கினோம்னா அந்த உருண்டை கரைஞ்சுரும். தண்ணி குடிக்கிறதுங்கற செயல், மெல்லாமல் முழுங்கின செயலுக்கு மாற்றாக அமைந்து அதை சரி பண்ணிவிட்டது. அதே மாதிரி விருந்துக்கு போய் அளவுக்கு அதிகமா சாப்பிட்டா என்ன ஆகுது? சாப்பிட்ட உணவு ஜீரணமாகாம உடம்பை சிரமப்படுத்துது. அப்ப என்ன செய்யணும்? அடுத்த வேளை உணவை தவிர்த்து வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கும்போது, உணவு மெதுவாக ஜீரணமாகி ஏப்பம் வந்து உடல் உபாதை சரியாயிடுது.

இவ்வாறு சில தீயச்செயல்களுக்கு அதற்கு மாற்றான செயல் செய்து முறித்து அந்த செயல்களுக்குண்டான விளைவு துன்பமாக வருவதை தவிர்க்கக்கூடிய ஒரு சட்டம் இயற்கையிலேயே இருக்குது. செய்ததை அனுபவிச்சுத்தான் ஆகணும், அது விதி. விதி என்றால் விலக்கு இல்லாத விதியே கிடையாது. விதிவிலக்கு என்னவென்று நாம் உணர வேண்டும். மகரிஷி சொல்லுவாரு பாருங்க “பஞ்சமகா பாதகங்கள் புரிபவரேனும், பகுத்தறிவால் விளைவு அறிந்து எண்ணி எண்ணி சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருகி நின்றால் தூய்மை”ன்னு, அது போல செய்த செயலை நினைத்து வருந்தி, திருந்தி அதற்கு மாறாக ஒரு எதிரிடையான ஒரு புது செயல் செய்து, பழைய தீீயச்செயலினுடைய பதிவை வராமல் தடுத்துக் கொள்ள முடியும் என்று ஒரு விதி அல்லது கிளைவிதி என்ற ஒன்றும் இயற்கையில் உள்ளது.

- நினைவில் உங்களோடு kgs.

Keep reading

More from the archive

KG Sami

அருள்நிதியர் திறனூக்கப் பயிற்சி – 1

இறைநிலை தெய்வம் உண்டு. அதற்கு உருவம் இல்லை என்ற தெளிவிலே அறநெறியைப் பற்றி வாழ முடிகிறது. முடியும் என்று நமது அருட்தந்தை அவர்கள் கொடுத்துள்ள…

KG Sami

Thalattu Vethathri - 60

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !அருட் தந்தையின் அருள் வாரிசாம் உலகநலத் தொண்டர் , மூத்த பேராசிரியர் திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களின் அருட்கவிகள் அடங்கிய…

Granthaalayam

மும்மலம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!பொதுவாக மனிதர்களிடத்தில் மூன்று…

KG Sami

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத்…

KG Sami

தவம் – 2

முற்காலத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த முறை பிராணாயாமம். பிராணன் என்றால் இரண்டு பொருள். ஒன்று காற்று. இரண்டு உயிர். (தமிழிலும் அப்படி ஒரு வார்த்தை…