குரு வீட்டிற்கு விருந்துக்காகச் சென்ற சிஷ்யனாகிய நான் சினிமா பார்த்து விட்டு பாதி ராத்திரியில் மகரிஷிகள் படுத்திருந்த சங்கக் கொட்டகைக்கு வந்து சேர்ந்தேன். அவருடைய அன்புக் கட்டளைப்படி உடனடியாக படுத்துத் தூங்கி விட்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது.
பருக், பருக் என்று சத்தம் கேட்டது. நான் எழுந்து உட்காரவில்லை. அரைத்தூக்கம். இது என்ன சத்தமாயிருக்கும்? பரூக், பரூக், பரூக். ஆ! இந்த பாதி ராத்திரியில் ஏதோ ஒரு மாடு ஆசிரமக் கூரைத் தொங்கலைக் கடித்து, இழுத்துத் தின்கிறது. எழுந்து சென்று அடித்து விரட்டலாமா? கண்ணைத் திறந்தேன். விளக்கு எரிகிறது. மகரிஷிகள் உட்கார்ந்து இருக்கிறார். மேசையில் இருந்து தான் பரூக், பரூக், பரூக் என்று சத்தம் வந்து கொண்டிருக்கிறது. ஆ! மாடு கூரையைக் கடிக்கவில்லை. இது என்ன சத்தம் பின்னே?
தலையைத் தூக்கிப் பார்க்கிறேன் நூறு தபால் தலை கொண்ட ஏடுகள் சில மகரிஷிகள் முன்னே இருக்கின்றன. தனித் தனித் தலையாகக் கிழித்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த மாத அன்பொளிக்கு ஒட்டி அனுப்புவதற்க்காகத்தான் இருக்க வேண்டும். (அன்பொளி பத்திரிகை அந்தக் கால கட்டதில்தான் வெளி வரத் தொடங்கி இருந்தது).
அந்த வேலைகளுக்குத்தான் ஒர் ஆள் வைத்திருந்தாரே நமது ஆசான். ஏன் தபால் தலையை இவர் கிழிக்க வேண்டும்? தூக்கச் சுமை தாளாமலும், சிந்தனைச் சுமை தாளாமலும் என் கண்கள் மூடி கொண்டன. மறுபடியும் கண் விழிக்கிறேன். மகரிஷிகள் எழுதிக் கொண்டிருந்தார். எழுந்து சென்று பார்க்கிறேன். அன்பொளி இதழ்களைச் சுற்றி அனுப்புவதற்காக உள்ள ஸ்லில்ப்பில் முகவரிகளை எழுதிக் கொண்டிருக்கிறார். நான் பக்கத்தில் உட்கார்ந்தேன். ‘சாமி! இதற்குத்தான் ஓர் ஆள் வைத்திருக்கிறோமே?’ என்றேன் நான். அதற்கு ‘அதோ பாருங்கள்’ என்று நமது ஆசான் அவர்கள் கையைக் காட்டினார். அங்கே ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார், ஈர வேட்டி, ஈரத்துண்டு. அவர் உடல் முன்னும் பின்னுமாக லேசாக ஆடிக் கொண்டிருந்தது.
அவர் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் என்று தெரிந்தது. காலை மணி 4. நான் மீண்டும் சென்று படுத்துக் கொண்டேன். மறுபடியும் கண் விழித்த போது மணி 6. இயற்கை வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. மகரிஷிகளைக் காணோம். அந்த அன்பர் இன்னும் தவம் செய்து கொண்டே இருந்தார். 2 மணி நேரமாகத் தவமா? அடடடா! இதுவல்லவா தவம்! ஈர உடையோடே தவம்! இவரை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். ஊருக்குப் போய் நாமும் அதிகாலையில் எழுந்து தவம் போட ஆரம்பித்து விடலாம்.
குளியல் எல்லாம் முடிந்து, மகரிஷிகளின் வீட்டிற்குச் சென்றேன். ‘நாஷ்தா சாப்பிடலாம் வாருங்கள்’ என்றார்கள், பெரியயம்மா. செங்கல்பட்டுத் தமிழ் எனக்குப் புரியவில்லை. நான் மகரிஷிகளைப் பார்த்தேன். ‘டிபன் சாப்பிடக் கூப்பிடுகிறாளப்பா’ என்றார்கள், நம் அருள்தந்தை அவர்கள். போய் உட்கார்ந்தேன். மகரிஷிகளும் வந்து உட்கார்ந்தார்.
ஆசிரமத்தில் விடிகாலையில் பார்த்த தவ ஸ்ரேஷ்டரும் வந்து சேர்ந்தார். அவரைப் பற்றி மகரிஷிகளிடம் புகழ்ந்து தீர்த்தேன். மகரிஷிகள் புன்முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் புன் முறுவலில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பது போல் எனக்குத் தோன்றியது.
தவ ஸ்ரேஷ்டரைப் பற்றி நான் மகரிஷிகளிடம் விசாரித்தேன். ‘இவர் பெயர் ரத்னம். பல வருடங்களாக நமது குண்டலினி யோகத்தைச் செய்து வருகிறார். நமது அன்பொளியைக் கவனித்துக் கொள்வதற்காகச் சம்பளத்திற்கு வைத்திருக்கிறேன். இவர் சென்னைக்காரர். கூடுவாஞ்சேரி வந்து மேட்டரை வாங்கிக் கொண்டு போய்ப் பிரஸ்ஸில் கொடுப்பது, பிரஸ்ஸிலிருந்து Proofஐ வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுப்பது. இதுதான் இவருடைய வேலை’ என்று என்னிடம் சொல்லிவிட்டு ரத்தினத்தைப் பார்த்து மகரிஷிகள் ஏதோ கேட்டார். எனக்கு அது விஷயம் இப்போது விபரமாக நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது. முதல் நாள் செய்யச் சொல்லி ஒப்படைத்த அன்பொளி சம்பந்தமான ஏதோ காரியத்தை ரத்தினம் சரியாகச் செய்யவில்லை என்பதனால், அதற்கு மகரிஷிகள் விளக்கம் கேட்டார்கள் என்பதை மட்டும் நினைவுபடுத்திச் சொல்ல முடியும்.
மகரிஷிகள் சாதாரணமாகத்தான் கேட்டார்கள்; சாந்தமாகத்தான் கேட்டார்கள்; காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டும் அவருடைய விசாரணையில் இருந்தது. கடிந்து கொள்ளும் தோரணை அதில் இல்லை. காரணம் தெரிந்து, அது சரியில்லை என்று தெரிந்தால் தானே கடிந்து கொள்ள! தவ ஸ்ரேஷ்டர் மகரிஷிகள் செய்யச் சொன்ன காரியத்தைச் செய்யாமல் போனதற்கு ஏதோ சரியான காரணம் இருக்கும் என்ற நான் எதிர்பார்த்தேன். ஆனால்….?
நமது தவ ஸ்ரேஷ்டர் பிடித்தார் பாருங்கள் சாட்டையை! அது எப்படி இருந்தது என்றால், அவர் தான் எஜமான் போலவும், மகரிஷிகள் வேலைக்காரன் போலவும், எஜமானாகிய ரத்தினம் கொடுத்த வேலையை வேலைக்காரராகிய மகரிஷிகள் சரியாகச் செய்யாதது போலவும், சரியாகச் செய்யாததோடு பழியை எஜமானாகிய ரத்தினத்தின் தலையில் போட்டு விட்டுச் சினங்கொண்டு ஒரு பாவமும் அறியாத அந்த எஜமானாகிய ரத்தினத்தை இந்த அநியாயக்கார வேலைக்காரராகிய மகரிஷிகள் அபாண்டமாகத் துன்புறுத்துவது போலவும் வைத்துக் கொண்டு, கனமான வார்த்தைகளைக் கொண்டு வேகமாகவும், சத்தமாகவும் 5 நிமிடம் திட்டிக் கொண்டிருந்தார்.
அவர் மூச்சுவிடாமல் மகரிஷிகளைத் தூஷணமாகச் சினந்து ஏசிக் கொண்டிருந்த அவ்வளவு நேரமும் மகரிஷிகள் இலையையே பார்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்துக் கைகழுவி விட்டு, ஏதோ ஒரு வேலையை ஆரம்பித்து அதைச் செய்யவும் தொடங்கி விட்டார். நானும், ரத்தினமும் அருகருகே அமர்ந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சாப்பிட்டு முடித்ததும் ரத்தினம் புறப்பட்டுச் சென்று விட்டார்.
‘ஒரு குண்டலினி யோகி நீண்ட காலமாகத் தவம் செய்து கொண்டு வந்தால் மட்டும் போதாது. சரியாகவும் அதைச் செய்ய வேண்டும். சினம் வராத அளவிற்குத் தவம் செய்ய வேண்டும். எனக்குச் சினம் வருகிறதா என்று நானே தெரிந்து கொள்வதற்கும், நானும் அவரும் உங்களுக்கெல்லாம் தக்க பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவும், அவருக்குச் சம்பளம் தந்து (40 ரூபாய் என்று எனக்கு ஞாபகம்) வேலையில் வைத்திருக்கிறேன்’. இது மகரிஷிகள் நான் கேட்காமலேயே எனக்குக் கொடுத்த விளக்கம்.
இது மாதிரி நமது அன்பர்கள் தவறு செய்கின்ற போதெல்லாம் பதிலுக்கு நமது அருள் தந்தையவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பலமுறை நான் கவனித்து இருக்கிறேன். முகத்தில் எந்தச் சுருக்கமும் தோன்றாது. மனத்தில் சினம் என்ற சுருக்கம் வந்தால் அல்லவா, முகத்தில் சுருக்கம் தோன்றுவதற்கு? ஒரு குண்டலினி யோகியின் முகம் ‘உம்’ என்றும் இருக்கக் கூடாது. ‘உர்’ என்றும் இருக்கக் கூடாது என்று அவர் தான் அடிக்கடிச் சொல்லுபவர் ஆயிற்றே!