KG Sami1937 — 2006

செய்க தவம்

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு

எழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பர்களே!

தவம் செய்ய வேண்டியது என்பது மனிதர்களுக்கு என்றோ விதிக்கப்பட்டிருக்கிறது. விதித்தவர் வள்ளுவர். நாம் தவம் செய்ய தவறலாமா? நாம் வள்ளுவர் சொன்ன சொல்லை மீறலாமா? தவம் என்று ஒரு அதிகாரத்தையே அவர் நமக்காக வெச்சிருக்கிறாரே!

எனக்கு தெரியாதுங்க அப்படீன்னு சொல்லுவீங்க.. இப்ப தெரிஞ்சிக்கிட்டீங்க இல்லையா? ஆகவே நாளைக்கு காலையிலிருந்து தவம் செய்யுங்க. வள்ளுவர் வகுத்துக் கொடுத்த எல்லாவற்றையும் நாம் செய்யறமா? பொய் சொல்லக்கூடாதுங்கறாரு, பொறாமை படக்கூடாதுங்கறாரு, பேராசை படக்கூடாதுங்கறாரு... இது மாதிரி நெறைய விஷயங்களைத் தவிர்க்க சொல்றாரு. நாம தவிர்த்திடலை, ஆனா தவிர்க்கணும்னு நெனைக்கணும். அதுல ஒண்ணு புலால் மறுத்தல். மீனு, கோழி, ஆடு போன்ற மாமிச வகைகளை சாப்பிடக்கூடாதுன்னு வள்ளுவர் சொல்றாரு.

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்கனம் ஆளும் அருள்

என்று கேள்வி கேக்கறாரு. தன் தசை பெரிசாகணுங்கறதுக்காக பிற ஜீவராசிகளின் சதையை திங்கறானே, இவனுக்கு எப்படி அருள் ஆளும்? என்ற கேள்வியே இந்த திருக்குறள். அருள் வேண்டுவோர் புலால் மறுப்பதற்கு பிரயத்தனம்பட்டுக் கொண்டிருக்கிறோம். சிலபேருக்கு இயல்பாகவே கிடையாது. சில பேரு மறுத்துட்டாங்க, சில பேரு குறைச்சுட்டாங்க, சில பேரு விட்டுடுவாங்க. புலால் மறுத்தலுக்கு அடுத்த அதிகாரம் தவம். அதுல வள்ளுவர் சொல்றாரு,

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்

ஏதோ ஆசை காட்டற மாதிரி இருக்குது, எதச் சொன்னா சுவாரஸ்யமா இருக்குமோ, அதச் சொல்லி காரியத்தை சாதிச்சுக்கறது மாதிரி வள்ளுவர் நமக்கு ஆசை காட்டறார் பாருங்க. கல்யாணம் வேணுமா? கெடைக்கும், குழந்தை வேணுமா? கெடைக்கும், வீடு வேணுமா? கெடைக்கும், உத்யோகம் வேணுமா? கெடைக்கும், பதவி உயர்வு வேணுமா? கெடைக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு வேணும். ஆனா அதுக்கு என்ன செய்யணுங்கற ஆர்வத்தை தூண்டறாரு. இத சுருக்கமா அவரு எப்படி சொல்லறாருன்னா வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் என்று சொல்றாரு. என்ன வேணும்னு நெனைக்கிறீங்களோ, அத எப்படி வேணும்னு நெனக்கிறீங்களோ அத, இப்பவா, அப்பவா? இங்கயா, அங்கயா? கொஞ்சமா, கூடவா? இப்படியா, அப்படியா? அதா, இதா? ங்கறதுத்தான் வேண்டிய வேண்டியாங்குங்கறது. எய்தலால்னா கிடைக்குமாகையால். அதுக்கு என்ன செய்யணும் சொல்லுங்க? செய்தவம் ஈண்டு முயலப்படும். தவம் செய்யுங்கன்னு சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாரு, நம்ம தமிழ்நாட்டுலதான் சொன்னாரு. தமிழ்லதான் சொன்னாரு. நாம திருக்குறளை அப்படி இப்படின்னு படிச்சிருக்கிறோம்.. சில பேரு மொதல்லருந்து கடைசிவரைக்கும் கடகடன்னு ஒப்பிக்கறாங்க, சில பேரு தலைகீழா ஒப்பிக்கறாங்க, சில பேரு குறள் சொன்னா நம்பர் சொல்றாங்க, சில பேரு நம்பர் சொன்னா குறள் சொல்றாங்க, ஆனால் தவம் செய்தாங்களா?

“தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்”

அதற்கு என்ன அர்த்தம்னா, தன்கிட்ட உயிர் இருக்கறத தீர்மானமா ஒருத்தங்க தெரிஞ்சிட்டாங்கன்னா, அவங்களை எல்லாரும் வந்து தொழுவாங்க. ஆமா... அவனுக்கு வீடு பேறு பெறுவதற்குள்ள தகுதியெல்லாம் கெடச்சுடும். வீடுபேறு அடைஞ்சவங்க தானே மகான்?. அதனாலே எல்லோரும் பாராட்டுவாங்க, போற்றுவாங்க, புகழ்வாங்க. எப்போ போற்றுவாங்க?

“தன்னுயிர் தான்அறப் பெற்றானை” - தன்னிடம் உயிர் ஒன்று இருப்பதை தெள்ளத்தெளிவாய் தெரிந்து கொண்டால் போற்றுவாங்க. உயிரை ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இறைவன் நம்மிடம் கொடுத்திருக்கிறான். பேச்சு வாக்குல யாரும் உயிரைப் பயன்படுத்தி இதை செய்து முடிப்பேன் என்று சொல்ல மாட்டாங்க, உயிரைக் கொடுத்து செய்வேன்ம்பாங்க. அவங்களுக்கு உயிரைக் கொடுக்கத் தெரியாது. ஒரு பொய் மாதிரி அவங்க வாயிலிருந்து வந்து போகும். உயிர் என்றால் என்ன, அது எங்கு இருக்கிறது என்று தெரிந்தால்தானே எடுத்துக் கொடுக்கறதுக்கு. இரத்தம் கொடுக்கணுமா?... கொடுக்கலாம், ஒரு சிறுநீரகம் கொடுக்கணுமா? கொடுக்கலாம். அவ்வாறு நம்மிடத்தில இருக்கறதை பிறருக்கு கொடுக்கறதால என்ன ஒரு நன்மையப் பெற முடியுமோ அதைப் பெறலாம். ஆனால் இருக்கறதே தெரியலைன்னா அதை எவ்வாறு பயன்படுத்துவது?

அன்பர்களே! நீங்களே நல்லா சிந்தனைக்கு எடுத்து கொள்ளுங்க. இது ஒண்ணும் பெரிய கடாமுடா சமாச்சாரமில்ல, சாதாரண சமாச்சாரம், நம்மைப் பற்றிய சமாச்சாரம். நம்மைப் பற்றி, நம் உயிரைப் பற்றி வள்ளுவர் சொல்லிட்டுப் போயிருக்கிறார் தன்னுயிர் தான்அறப் பெற்றானைன்னு. அற என்ற வார்த்தைக்கு தீர்க்கமாக, சந்தேகமில்லாமல் என்று அர்த்தம்.

“தன்னுயிர் தான்அறப் பெற்றானை”ன்னா, தன்னிடத்தில் உயிர் இருக்கிறது என்று தீர்க்கமாகத் தெரிந்து கொண்டவனை என்று அர்த்தம். உயிர் இருக்கிறதுன்னு எல்லார்க்கும் தெரியும். எப்படி? நாம் இன்னும் செத்துப் போகலையே, செத்துப் போயிட்ட பிற்பாடு எல்லாரும் சொல்றாங்க உயிர் போயிடுச்சுன்னு. அப்படின்னா இப்ப எனக்கு உயிர் இருக்குது. இருக்கிறது என்றால் தீர்மானமாக, குழப்பமில்லாமல் தெரிய வேண்டும். இல்லையென்றால் அது இல்லை மாதிரிதான். அனுமானமாக இல்லை, அனுபவமாகத் தெரிய வேண்டும், உயிர் இவ்வாறு இருக்கிறதுன்னு கண்ணுக்கு தெரியணும்னு அவசியமில்லை. நம் உடம்பில இருக்கிறது, நம்ம கண்ணுக்குத் தெரியாட்டியும் தீர்மானமாகத் தெரியுது பாருங்க! ஏன்னா உடம்புக்குள்ள இருக்கறது காயம்பட்டா வெளியில வந்துரும். நம் உடம்பில் குடல் இருக்குதா? இருக்குதே!அத பார்த்திருக்கீங்களா நீங்க? சமயத்துல இரைச்சல் போடுதே! சமயத்தில வலிக்குதே! பார்க்க முடியாட்டியும் இருப்பதை உணர முடியுதுதானே? அது போல உயிரும் இருக்கத்தான் செய்யுது.  இந்த மாதிரி உயிர் இருக்கிறதுக்கு ஏதாவது நிரூபணம் கொடுக்க முடியுமா? செத்துப்போனா போச்சுன்னு சொல்றாங்களே! அத பத்தி கேக்கறதுக்கு எந்த ஆளுக்கும் முடியாது. அத கேட்டுட்டு வந்துகூட சொல்லமுடியாது. அதனால்தான் தன்னிடத்தில் உயிர் இருப்பதை தான் தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொண்டால் அதுதான் தவம். அந்த தவத்தை செய்தால் மற்றவர்கள் போற்றும்படியாக வாழலாம். பெரிய ஞானி என்று எல்லோரும் உங்களை மதிப்பார்கள், போற்றுவார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

இப்போ நம்ம உடம்புல இருக்கற பஞ்ச பூதங்கள்ல மண் என்பது வாசனையாய் தெரியும், நீர் என்பது சுவையாய் தெரியும், நெருப்பு என்பது வெளிச்சமாய் தெரியும், காற்று என்பது ஓசையாய் தெரியும், ஆனா ஆகாசம் அதாவது விண், ஊருணர்வாகத்தான் தெரியும். இந்த ஆகாசம் என்கிற தத்துவம்தான் உயிர் என்பது. இந்த ஊருணர்வு தவம் செய்யும் போது நெற்றியில தெரியும். தவம் செய்யும் போது கண்ணை மூடிக்கிட்டு இருப்பீங்களே அப்ப எப்படி தெரியும்? ஒரு தொடு உணர்வா தெரியும். எதுவும் தொடாமால் இருக்கும் போதே தொடு உணர்வா தெரியும்.

சில பேருக்கு தங்களுக்கு தலைவலி இருந்தா தெரியாது, உடம்புல எங்கியாவது வலி இருந்தா தெரியாது, ரத்தக்கொதிப்பு இருந்தா தெரியாது, பெண்களுக்கு மாத விடாய் பிரச்சனை இருந்தா தெரியாது. அவங்களுக்கு தெரியலங்கறதுக்காக அதெல்லாம் இல்லைன்னு அர்த்தமில்லை. அதே மாதிரி பல பேருக்கு இந்த உயிர்ச்சக்தி நெற்றியில ஊருணர்வா தெரியாது. இந்த நெற்றியின் மையத்தை புருவ மையம் என்கின்றோம். அதிலே உயிர் உணர்வை குரு வழியில் பின்பற்றி மனதை ஊன்றி செலுத்தப் பழக வேண்டும். சிலருக்கு தவம் செய்யும்போது

உடம்பு உட்கார்ந்திருக்கும், மனசு எங்கேயாவது ஓடிப்போய் விடும். ஓடிப்போன மனசை அவங்க கொண்டு வந்து உட்கார வைக்க வேண்டும். இப்படியே குரு வழிகாட்டுதலின்படிப் பழகிட.. பழகிட... உயிரின் தன்மை புலப்படும்.

அன்பர்களே! ஒழுங்கா உட்காந்து குரு வழிகாட்டுதலின்படி தவம் செய்துகொண்டே இருந்தால், இறைவன் எல்லாமாக இருக்கிறான், எல்லாருமாக இருக்கிறான், நானுமாக இருக்கிறான், ஆகவே நானே எல்லாமாக இருக்கிறேன், எல்லோரிடத்திலும் இருக்கிறேன், அவன் என்னிடத்தில் இருக்கிறதுனால நானும் எங்கும் இருக்கிறேன் என்ற ஒரு பெரிய விஷயத்தை தெரிந்து கொள்லலாம். இறைவனைத் தெரிந்து கொண்டு வாழ்பவர்களைதான் எல்லாரும் பாராட்டுவார்கள். ஆகவே நாம் தவம் செய்வோம். தவம் செய்து இறைவனை அகக் காட்சியாய் காண்போம். அதுவே தெய்வ தரிசனமாக மாறி விடும். தெய்வத்தை பார்ப்பதுதான உண்மையான திருப்தி, அமைதி எல்லாம். அதுக்கு மேல  என்ன வேணும்? ஒண்ணும் வேண்டாம். அடாவடிக்கு போக வேண்டிய அவசியமில்லை, போக தெரியாது, போகவும் முடியாது. யாரையும் வருத்த மாட்டோம், யாரையும் கெடுக்க மாட்டோம், நாமும் துன்புற்றுக் கொண்டிருக்க மாட்டோம். இப்படி நாமும் துன்புறாமல், பிறரையும் துன்புறுத்தாமல் வாழ்வதற்கு ஒரே வழி இந்த தவம் ஒன்றுதான். எனவே

தவம் செய்வோம்.

செய்க தவம்! செய்க தவம்!! செய்க தவம்!!!

- நினைவில் உங்களோடு kgs.

Keep reading

More from the archive

Granthaalayam

எல்லோரிடமும் இணக்கம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)அன்பர்களே! இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம்.…

Granthaalayam

சீர்திருத்தமும் முன்னேற்றமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!நமது வாழ்க்கையை சீராகவும்,…

KG Sami

தவம் – 26

என்ன வேண்டும் உங்களுக்கு? சள்ளை இல்லாமல் வாழ வேண்டும். அவ்வளவு தான். சரி அப்புறம் பரவச நிலைக்கு வாங்க. அங்கே ஒரு சள்ளையும் கிடையாது. மனதை மட்டும்…

KG Sami

நீங்களும் சித்தராகலாம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) நம்ம நாட்டிலே இப்ப எல்லாம் சித்து, சித்து என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறாங்க. எந்த…

KG Sami

தவம் – 23

தவம் செய்வதற்கு ஒரே தெய்வத்தை (பிரம்மாவை) வேண்டி தவம் செய்தார்கள். அவன் என்ன கேட்டான் என்றால், ‘நித்திய தத்துவம்’ தத்துவம் என்றால் இந்த இடத்தில்…

KG Sami

வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா

15 – 0 8 - 1 971 அன்று தங்க சாலையில் நடைபெற்ற யோகிராஜ் வேதாத்ரி சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது திரு. கே. ஜி. சாமி ஐயா அவர்களால்…