(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)
அன்பர்களே!
வாழ்வின் நோக்கம் இன்பமா?, துன்பமா?. வாழ்வின் நோக்கம் இன்பம். இன்பம் என்றால் என்ன?. இப்ப மல்லியப்பூ வெச்சுக்கிட்டா இன்பம்னு நினைக்கிறீங்க, நாளைக்கு காலையில அது இன்பமா?. எந்த இன்பமா இருந்தாலும் தொடர்ச்சியா இருக்காது. எந்த இன்பமா இருந்தாலும் ஒரு stage(கட்டத்து)ல சலிப்பைத் தரும். உதாரணமா குளிருதுன்னு போத்திக்கிட்டீங்கன்னா, இன்பமா இருக்கும். பிறகு அதுவே புழுக்கமாயிடும். புழுக்கமாயிருக்குதுன்னு fan(மின்விசிறி) போட்டீங்கன்னா இன்பமா இருக்கும். பிறகு அதுவே குளிரும். Fan(மின்விசிறி)லயும் இன்பம் இல்ல, போர்வையிலயும் இன்பம் இல்ல. பசிக்குதுன்னு சாப்பிட்டா இன்பமா இருக்கும். சாப்பிட்டுட்டே இருந்தீங்கன்னா, எழுந்திருக்க முடியாது. துன்பம் வந்துரும். செரிக்கறப்ப கஷ்டமா இருக்கும். ஆகவே இன்பம் தொடர்ச்சியா இல்ல. இன்பம் வந்து ஒரு stage(கட்டத்து)க்கு அப்புறம் துன்பமா போயிடுது. அதே சமயம் இந்த இன்பத்தை அனுபவிக்காம இருக்க முடியாது. உதாரணமா நேத்து ஒரு ஊருக்கு போயிருந்தேன். எங்க கடைய வந்து பார்த்துட்டு போங்கன்னார் ஒருத்தர். அது ஒரு கிராமத்து கடை. புளி, ஹார்லிக்ஸ், லக்ஸ் சோப் எல்லாம் கிடைக்கும். சின்னக் கடைதான். எல்லாம் வெச்சிருந்தாங்க. நான் போய் உள்ளே நின்ன உடனே ஒரு அம்மா வந்து ரெண்டு ரூபாய் என் கையில கொடுத்தாங்க. நான் கடைக்காரன்னு நெனச்சுட்டாங்க. என்னம்மா வேணும்?ன்னேன். பொகையிலன்னாங்க. இந்தாம்மா, புடி காசை!. அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன்னேன். வாய் புகையிலை போட்டா சொகமா இருக்குதுன்னுதானே அத நெனைக்குது. ஆனா போடாம இருக்க முடியாது. ஏதோ ஒண்ணை இன்பமா நெனச்சா அத தொடர்ச்சியா செய்யத் தோணும், அடிமையாக்கிடும். பதினொரு மணிக்கு டீ குடிக்கறது நல்லாயிருக்குதுல்ல?. சாயந்திரம் நாலு மணிக்கு காப்பி குடிக்கறது?. அதுவும் தூங்கி எழுந்து உட்கார்ந்துட்டு குடிச்சா ரொம்ப நல்லாயிருக்கும். இது என்ன ஆகுதுன்னா பதினொரு மணி அடிச்சாக்க கடிகாரத்தைப் பார்க்கறது, நாலு மணி அடிச்சாக்க கடிகாரத்தைப் பார்க்கறதுன்னு அடிமையாக்கி விடும். ஆனா இந்த இன்பம் தொடர்ச்சியா இருக்காது, விட்டு விட்டுப் போகும். அப்புறம் துன்பமா மாறிடும். இந்த இன்பத்தைத்தான் உலகியல் இன்பம்னு சொல்லுவாங்க. அருளியல் இன்பம்னு ஒண்ணு இருக்குது. அது தொடர்ச்சியா இருக்கும். நம்மால தான் சாத்தியப்படாது, நாம அத புடிச்சக்கணும். இறைவன் மேல் மனம் வைத்து தவம் செய்தப்ப நல்லாயிருந்ததுல்ல?, அதை அப்படியே maintain(தக்க வைச்சுக்க) பண்ண முடியுமா?. கால் வலி, இடுப்பு வலின்னு மனம் கொஞ்சம் அசந்து போய் எண்ணம் வந்துடும். தொடர்ச்சியா இறைநிலையோடு கூடியிருக்கிற தவத்தை நாம செஞ்சு பழகிக்கணும். அவ்வாறு பழகிக் கொண்டோமானால் அதுக்கு சகஜ நிஷ்டைன்னு பேரு. நிஷ்டைன்னா தவம். சகஜம்னா ஒரு பிரயாசை இல்லாத, இயல்பான, இடையில்லாதன்னு அர்த்தம். யோகிகள் அந்தக் காலத்துல அப்படியே வருஷக்கணக்குல சகஜ நிஷ்டையில இருந்ததா சொல்லுவாங்க. காக்கா கலர்ல வாந்தியெடுத்தான்னா காக்கா காக்கையா வாந்தியெடுத்தான்னு மிகைப்படுத்தி சொல்லுவாங்கல்ல?, அது மாதிரி. அப்படி ரிஷிகள் எல்லாம் முற்காலத்தில் தொடர்ச்சியா ஆயிரக்கணக்கான வருஷமா தவம் செஞ்சாங்களாம். ஆயிரக்கணக்கான வருஷம் வாழறதே கஷ்டம். நேற்று போன ஊரிலே ஒரு சேதி சொன்னாங்க. அங்கே ஒரு அன்பருடைய தகப்பனார் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி செத்துப் போயிட்டாராம். சாகும் போது வயசு என்னான்னா நூறு. நூறு வயசுலயும் முறுக்கு தின்பாராம். இன்னும் என்ன செய்வார்ன்னா மாடு ஓட்டுவாராம். எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தாராம். இன்னொரு செய்தி கண்ணாடி போடாம படிப்பாராம். 100 வயசு! நல்லாத்தான் இருக்கும்... ஆனா, எல்லோராலும் முடியாதே. அவர் ஏன் செத்துப் போயிட்டாரு?ன்னு கேட்டேன். வீட்டு வாசல்ல வந்தாரு. பத்து பசங்க ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருந்தாங்களா, ரெண்டு பசங்க வந்து அவர் மேல விழுந்தாங்களா, கீழே விழுந்திட்டார். இடுப்பு எலும்பு முறிஞ்சு போச்சு, எலும்பு முறிஞ்சு போச்சுன்னா ஆஸ்பத்திரி போய் மாவு கட்டெல்லாம் போடணும், நான் மாட்டேன் கட்டெல்லாம் போடாதீங்கன்னுட்டாராம். அவரால Toilet(கழிவறை)ல உட்கார முடியல. காயமெல்லாம் ஒண்ணும் கெடையாது, ரெண்டு மூணு நாள் அப்படியே உக்காந்துட்டு இருந்திருக்காரு. அப்புறம் toilet(கழிவறை)ல உட்காரத் தேவையில்லாத வேலை பண்ணிட்டாரு. என்ன வேலை சொல்லுங்க? சாப்பிடறதில்ல. ஆனா சந்தோசமா இருந்தாராம். அட போங்க, நான் நூறு வருஷமா தின்னுட்டேன் போதும். நீ என்ன கொடுத்தாலும் நான் செய்யாதது இல்ல. அதனால என்னை விடு, எழுந்து உட்கார என்னால முடியலைங்கும் போது நான் ஏன் இருக்கணும்?ன்னுட்டாராம். எப்படியிருந்தாலும் ஒரு நேரம் சாகப்போறோம். சந்தோசமா இருந்தாலும் சாகப்போறோம், சலிப்பா இருந்தாலும் சாகப்போறோம். சந்தோசமா இருக்குன்னு பார்த்தா அது சலிப்பா போயிடுது. இப்ப இந்த உலகியல் இன்பங்கள் என்பதை நம்பிக் கொண்டு இருந்து என்ன பயன்? ஆயிரம் வருஷங்கள் வாழவே முடியலையே, இதுல ஆயிரம் வருஷங்கள் தவம் செய்வது எங்கே? நல்லா புத்திய அனுசரிச்சு யோசனை பண்ணுங்க. பொதுவாவே கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்னாங்கன்னா கேட்பதற்கு சுவாரஸ்யமா இருக்கும். மிகைப்படுத்தி சொல்வது என்பது ஒரு பழக்கம்.
நீண்ட காலம் உட்கார்ந்து தொடர்ச்சியா தவம் செய்தார் என்பதை ஆயிரம் வருஷங்கறாங்க. ஆயிரம் காலம்னு சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. ஏன்னா காலம் என்றால் அளவு கிடையாது. ரெண்டு வருஷமும் காலம்தான், அஞ்சு வருஷமும் காலம்தான். ஆயிரம் என்றால் பத்து, நூறு, ஆயிரம் இல்ல. ஆயிரம்னா பல, எண்ணிக்கை கடந்த, அளவில்லாதன்னு அர்த்தம் இருக்கு தமிழ்ல. ஆகவே நீண்ட காலம் நாம் தவம் செய்ய பழகிக்கணும். வேற வேலை வெட்டி இல்லையான்னு கேட்டா, கண்ணை முழிச்சுட்டும் தவம் செய்யலாம்,வேலை வெட்டி பார்த்துட்டும் தவம் செய்யலாம். இதத்தான் நீங்க மனசுல தெளிவுப்படுத்திக் கொள்ளணும். அந்த மாதிரி தவம் செய்யறதுக்கு காலை, மாலை கொஞ்ச நேரம் ஒதுக்கறீங்க இல்ல, அது training(பயிற்சி). Type writer(தட்டச்சு)ல வெரல வெக்கறாரு. வெரல வெச்சா நாற்பது வார்த்தை வருது ஒரு நிமிஷத்துல. பட பட படன்னு அடிக்கறாரு. இதுக்கு எவ்வளவு காலம் type writer(தட்டச்சு)ல கைய வெச்சுட்டு இருந்தாரு a,s,d,f, a,s,d,f,ன்னு?. தினமும் காலையில போயி போயி type writing institute(தட்டச்சு நிலையம்)ல கையவெச்சுட்டு இருந்தாரில்லையா?.. எதுக்காக?. எப்ப நெனச்சாலும் நாற்பது வார்த்தை வர்றதுக்கு. அது மாதிரி எப்ப நெனச்சாலும் மனதை இறைவனோடு ஒன்றிய நிலையில் பராமரித்துக் கொண்டேயிருக்க வேண்டும், அதுவும் தொடர்ச்சியாக காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போற வரைக்கும் எல்லா வேலையையும் பார்த்துக்கொண்டு.
அன்பர்களே! தெளிவாக நீங்க எந்தக் கருத்தையும் எடுத்துக்கணும்ங்கிறது என்னோட கருத்து. இந்தக் கருத்தையும் தெளிவா எடுத்துக் கொள்ளணும். இறைவன் மேல மனத வெச்சுட்டே... வெச்சுட்டே... வெச்சுட்டே.. வெச்சுட்டே எல்லாக் காரியத்தையும் எப்படி பண்றது? அப்படினு கேப்பீங்க. ஓரிடத்தில மனசு வெச்சிட்டு வேறொரு காரியம் நீங்க பண்றதில்ல? பல் வலி வந்ததில்ல? பல் மேல மனசு வெச்சுக்கிட்டுதானே சமையலெல்லாம் செய்தீங்க? உப்பு எடுத்துப் போட்டீங்களே, உப்பு மேல மனசு வெச்சிருந்தீங்களா? பல்லு மேல மனசு வெச்சிருந்தீங்களா?. ரெண்டும் நடக்கும். மகரிஷி சொல்வாங்க, தூளியில தூங்கற கொழந்தைய நெனச்சுக்கிட்டே சமைப்பாங்களாம். நான் வேறொரு உதாரணம் சொல்வேன். எங்க ஊர் பக்கமெல்லாம் பெரும்பாலும் விவசாயம், நெல்லு விவசாயம்னு வெச்சுகிடுங்களேன். காரைக்கால், தஞ்சாவூர்ப் பக்கம். நடவு என்ற வேலைக்கு பெண்கள்தான் போவாங்க. அதோட அவங்க வேலை சரி, அப்புறம் வயல் வெளிப்பக்கம் போக மாட்டாங்க. நடவு மட்டும் பெண்கள்தான், கும்பலா 50, 100 பேர் கிராமத்திலிருந்து வந்து வேலை செய்வாங்க. 10 மணிக்கு எறங்குனாங்கன்னா 2 மணி, 3 மணிக்கு கரை ஏறிடுவாங்க. கைக்கொழந்தைய கொண்டு வந்து புளிய மரத்தில தூளி கட்டி அதுல போட்டுடுவாங்க. நடவு வேலை வந்து கூப்பிடும் தூரம்தான், கூப்புட்டா வந்துடுவாங்க. இங்க குழந்தை அழவும் அங்க அவங்க கரையேறி வரவும் சரியா இருக்கும், போட்டுட்டு வந்துருவாங்க. எப்படி தெரிஞ்சது?. இங்க ஒருத்தி நின்னுக்கிட்டு இருப்பா, கரையோரம் பார்த்துட்டு சொல்றதுக்கு. ஆத்தா கரையேறி வா, கொழந்தை அழுகுது அப்படீன்னு சத்தம் போடுவா. கொழந்தை மேல மனசு வச்சிட்டே வேலை செய்வாங்க. சமைய- லறையிலயும் அப்படித்தான். கொழந்தை க்கும்.. க்கும்.. அப்படீங்கும், தூளியில படுத்துட்டு. இவங்க அடுப்படியில இருந்து வந்துடுவாங்க, காதுல விழுந்து இல்ல... மனசுல விழுந்து. கொழந்தை மேலேயே மனசு இருக்கிறதுனால எல்லாம் தெரிஞ்சு போகும். கொழந்தை மேல மனசு வெச்சுட்டு சமையல் செஞ்சதால, ஐயா வந்து மத்தியானம் கோபமா என்ன இவ்வளவு காரம் போட்டுட்டே?, உப்பே போடலைன்னு திட்டுவாரு. சில சமயம் இரண்டு வேலை என்பது மனதுக்கு சர்வ சாதாரணம். ஒரு வேலை உலகியல் காரணத்தைப் பார்க்கிறது, இன்னொரு வேலை இறைவன் மீது மனதை வைத்துக் கொள்வது. அது கஷ்டமாச்சேன்னா, அதுக்குதான் பயிற்சி. இப்ப தவம் செய்தீங்களே, அதென்ன?. அதுதான் பயிற்சி. சகஜநிஷ்டைக்கான பயிற்சிதான் நாம் செய்யறோம். இன்னிக்கு தவம் ரொம்ப நல்லாயிருந்தது. ரொம்ப நல்லாயிருந்ததுன்னா நேரா உக்காந்திருந்தோமா, கோணலா உக்காந்திருந்தோமான்னு தெரியல. உடல் உணர்வு அற்றுப் போயிடுச்சு. தவம் ஆரம்பிச்சவுடனேயே இறைநிலை உணர்வு வந்துருச்சு. மனம் ஒன்றி இருக்கும் போது சந்திரன், சூரியன், அப்புறம் சக்திக்களம் என்னை அங்கேயே தூக்கிப் போட்டுருச்சு. ஏன்? ஏன்னா நான் ஆரம்பத்திலிருந்தே அங்கேயே இருக்கிறேன். ரொம்ப நல்லாயிருந்தது ரொம்ப, நல்லாயிருந்தது, ஆகா! அந்த அற்புதத்த என்னன்னு சொல்ல?. எனக்கு முடிக்க மனசே இல்ல. அப்புறமா முழிச்சுப் பார்த்தா நீங்கெல்லாம் என்னப் பார்த்துட்டு இருக்கீங்க. என்ன இன்னும் lecture(வகுப்பு) ஆரம்பிக்கலையேன்னு. மழை வருது, எப்ப வீட்டுக்குப் போறது?ங்கற உங்களோட அந்த உணர்வு என்னை எழுப்பிவுட்டிருச்சு. நீங்க Enjoy(அனுபவிச்சு) பண்ணிப்பாருங்க. கொஞ்சம் காலம் பிடிக்கும். அதுக்கு காலம் பிடிக்கும்னு நாமபாட்டுக்கு மத்த வேலையப் பார்த்துட்டு இருக்கக்கூடாது. தவம் செய்யணும். காலை, மாலை தவம் செய்து வந்தாலே சில வருடங்கள் பிடிக்கும். அப்ப அது என்ன மாதிரி இன்பமா இருக்கும்? சலிப்பில்லாத, தொடர்ச்சியான, அறிவை மயக்கிடாத, புகையிலை மயக்குச்சு பாருங்க, அதுமாதிரி இல்லாம மயக்கத்தைத் தராத ஒரு இன்பமா, பேரின்பமா இருக்கும்.
அன்பர்களே! இட்லிக்கு மொளகாப்பொடி வெச்சு சாப்பிடறாங்களே, அந்த மொளகாப்பொடி எப்படி அரைக்கறதுன்னு தெரியுமா?. இப்பெல்லாம் கிர்ர்ர்ன்னு மிக்ஸில அரைக்கறாங்களே அப்படியெல்லாம் அரைக்கக் கூடாது. பட்டை மொளகாய வெச்சு, பூண்டு வெச்சு அரைச்சுக்கணும். நல்லெண்ணய நல்லா ஊத்தி கொழப்பிட்டு, எண்ணெய கிண்ணத்துல வெச்சக்கணும். இட்லிக்கு அந்த எண்ணெய மட்டும் தொட்டுத் திங்கணும். மொளகாய் அதிலேயே இருக்கும். எனக்கு ரொம்பப் புடிச்சது, இப்ப கொடலுக்கு ஒத்துக்க மாட்டேங்குது. வெறும் எண்ணெயத் தின்னாலும் அதோட காரம்கூட ஒத்துக்க மாட்டேங்குது. என்னமா நல்லாயிருக்கும் தெரியுமா? ஆனா தொடர்ச்சியா இருக்காது. அதுவும் தீங்கு தரக்கூடியதே. ஆகவே உலகியல் இன்பங்களில் பிரியம் கொள்வது மாயை. இதுதான் சரி, இதுதான் சந்தோசம்னு இப்படி உலகியல் இன்பங்களில் பிரியம் கொள்வது மாயை. அது தொடர்ச்சியானது அல்ல. ஒரு கால கட்டத்துக்கு பிறகு அது துன்பமாக மாறிடும், மயக்கத்தைத் தரும், Habit (பழக்கம்)ஆக மாறிடும் என்பதனால உலகியல் இன்பங்கள்ல பிடிப்பு கொள்வது தப்பு. அதனாலதான் வள்ளுவர் ஒரு வார்த்தைய அழகாப் போட்டிருக்கார் பாருங்க பற்று, பற்றுக் கொள்ளக் கூடாது. அது இல்லாம இருக்க முடியாது என்பதுதான் அந்த வார்த்தையோட விளக்கம். அது மேல தீவிரமா பிடிப்பு கொள்ளக் கூடாது.
அன்பர்களே! அதுக்கெல்லாம் நெறைய உதாரணம் இருக்கு, யாருக்காவது அம்மியில மொளகாய் அரைத்துப் பழக்கம் உண்டா? அவ்வாறு அம்மி அரைக்கும் போது அப்படி கொளவி Rotate ஆகணும்(சுத்தணும்). புடிக்கணும், அதே சமயம் புடிக்காமயும் இருக்கணும். அந்த level (நிலை) தெரிஞ்சுக்கணும். நாம பேனாப் பிடிச்சு எழுதறோம் இல்லையா? மொதல்ல எப்படி எழுதனோம்?. ஏர் உழுகிற மாதிரி, கொஞ்சம் மட்டப் பென்சிலா இருந்தா ஒடைச்சுக்குவாங்க. அதே இப்ப எப்படி எழுதறோம்?. அந்த மாதிரி புடிக்கவும் செய்யணும், புடிக்காமையும் இருக்கணும். அதனால காய்ப்பு வராது. அந்தக் காலத்தில ஒலக்கை போடுவாங்க, அப்போ ரெட்டை ஒலக்கை போடுவாங்க. நம்மகிட்ட குடுத்தா ரெண்டு கையிலயும் புடிச்சுட்டு ணங்குன்னு போடுவோம். பழக்கமில்லைன்னா கை எரியும், காய்ச்சுப் போயிடும். வேலையும் நடக்கணும், கையும் எரியக் கூடாது, கொப்பளமும் வரக்கூடாது, காய்ப்பும் வரக்கூடாதுன்னா என்ன செய்யணும்? புடிக்காமல் புடிக்கணும். வீட்டில தட்டி இருக்கும், தேங்கா வாங்கிப் போடுவாங்க. மட்டைத் தேங்கா, அத உரிக்கணும். இத மாதிரி தான் கெட்டியாப் புடிக்கக் கூடாது. அவ்வாறு உலகியல் இன்பங்களையும் மனம் கெட்டியாகப் புடிக்கக் கூடாது. ஏனென்றால் இயற்கையில் இருக்கக் கூடியது இன்பம். அந்த இன்பம் தெரியணும்ங்கிறதுக்காக இறைவன் கொஞ்சம் துன்பத்தை வெச்சிருக்கான். அந்தத் துன்பத்தையும் வெச்சிட்டு, அந்தத் துன்பத்தைப் போக்கிக் கொள்ளப் வழி முறைகளையும் வெச்சிருக்க்கான். இயற்கையில் இருக்கக் கூடியது இன்பம்... இன்பம்... இன்பம்... இன்பம்... இன்பம் மட்டும் தான். அந்த இன்பத்தை உணர்வதற்காக கொஞ்சம் துன்பத்தை வெச்சிருக்கான். இந்தப் பாயாசம் சாப்பிடறாங்க பாருங்க, பாயாசம் சாப்பிட்டுட்டே இருந்தா, வயிறு கொள்ளாது. அதற்கு ஒரு தந்திரம் இருக்கு. ஒரு கிண்ணம் பாயாசம் எடுத்துக்கங்க. அத ஒரு spoon (தேக்கரண்டி) நுனியால கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுட்டே இருங்க, அதுதான் உண்மையான இன்பம். சாப்பிட்டுட்டே இருந்தா போதும்னு இருக்கும். அதுக்கு என்ன செய்வாங்க தெரியுமா?, இந்தாங்க அப்பளம்ன்னு அப்பளத்தைக் கொடுப்பாங்க. அப்பளத்தைக் கொஞ்சம் கடிச்சுட்டு சாப்பிட்டுப் பார்த்தா தித்திப்பா இருக்கும். போக போக தித்திப்பு கொறஞ்சிட்டே இருக்கும். ஆனா அப்பளம் கொஞ்சம் சாப்பிட்டோம்னா தித்திப்பு அதிகமா தெரியும். அந்த மாதிரி இயற்கையிலேயே இறைவன் கொடுத்திருக்கக் கூடியது இன்பம். ஆனா 24 மணி நேரமும், 360 நாளும் இன்பமாகவே இருந்தா தெகட்டிடும். அது மேல ஒரு பிரியம் கொள்ளாது. ஆகவே இறைவன் கொஞ்சம் அப்பளம் மாதிரி துன்பம் வெச்சிருக்கான். மூன்று விதமான துன்பத்தை வெச்சிருக்கான். பசி, வெப்பதட்ப ஏற்ற இறக்கம், உடல் கழிவுப் பொருட்களின் உந்து வேகம் என்று மூன்று துன்பங்களை கொடுத்திருக்கிறான். ஐயையோ! இறைவன் துன்பத்தை வெச்சுட்டானேன்னு நெனைக்காதீங்க, அதப் போக்கிக்கறதுக்கு இன்பத்தை வெச்சிருக்கான். என்ன அது? சாப்பாடு, உடை, மண்ணு, தண்ணி, காத்து... இதெல்லாம் யார் கொண்டு வந்தது?. நீங்க சீதனமா கொண்டு வந்தீங்களா?, இதெல்லாம் இறைவன் கொடுத்தது. இவ்வளவும் வெச்சிட்டு துன்பத்தை கொடுத்தானா? இல்ல, துன்பத்தைக் கொடுத்துட்டு இதெல்லாம் கொண்டு வந்தானா?. நல்லா ஆராய்ச்சியில கொண்டாரணும். என்னதாயிருந்தாலும் எப்படி இறைவன் துன்பத்தை வெக்கலாம்? அப்படீன்னு இறைவன் மேலேயே புகார் சொல்லாதீங்க. நிழலின் அருமை வெயிலில் தெரியும். ஆகவே ஜீவராசிகளுக்கு பின்னால துன்பம் கொடுக்கப் போறோமேன்னு அந்த ஜீவராசிகள் தோன்றுவதற்கு முன்னாலேயே எல்லாத்தையும் படைச்சு வெச்சிட்டான். எதை? பஞ்சபூதங்களைத்தான், மண்ணு, நீரு, நெருப்பு, காத்து, விண்ணு. வேற நீங்க எத எடுத்து என்ன செய்யறீங்க?. இன்பம் ஒரு கோடி எடுத்துக்கங்க, துன்பம் ஒரு கோடி எடுத்துக்கங்க. எதுக்கோ, யாருக்கோ, கெடுதல் பண்றதுக்கோ, உபகாரம் பண்றதுக்கோ நீங்க இந்த அஞ்சு பூதத்தை எடுக்காம என்ன எடுக்கப் போறீங்க?. ஆகவே இறைவன் ரொம்ப புத்திசாலி, இன்பத்தை ஏற்படுத்தினான். ஆனா அந்த இன்பம் கண்ணதாசன் சொன்ன மாதிரி காற்றினில் எரிந்த நிலவு யாருக்கு பிரயோஜனம்?, கடலில் பெய்த மழை, யாருக்கு பிரயோஜனம்? அந்த மாதிரி ஜீவராசிகள் தோன்றுவதற்கு முன்னாடி இயற்கையில இன்பம் இருக்குதுன்னு யாருக்கும் தெரியாது. ஆகவே அவன் படைத்த அந்த இன்பத்தை அனுபவிப்பதற்காக ஜீவராசிகளை இறைவன் படைத்தான். ஜீவராசிகள் இன்பத்தைக் கண்டு, இன்பத்திலேயே, இன்பத்திலேயே, இன்பத்திலேயே இருந்தா... தண்ணீரிலே மீன் அழுதால் அதன் கண்ணீரை யார் அறிவார்?ங்கற மாதிரி, அப்பளம் மாதிரி, ஊறுகாய் மாதிரி கொஞ்சம் துன்பத்தைப் படைச்சான். அதுதான் பசி, தாகம். பசி வந்திருச்சா, உடனே துன்பம் வந்திருச்சுன்னு சொல்லக் கூடாது. உடனே சோறு சாப்பிடுங்க, சோறுன்னா என்ன? மண்ணு. தண்ணி யார் கொடுத்தா? இறைவன் ஏற்கெனவே படைச்சு வெச்சுருக்கான். அந்த மண்ணையும், தண்ணியும் சோறாக்கக் கூடிய வித்தைய சொல்லிக் கொடுத்து வெச்சுருக்கான். அப்பறமென்ன?, இன்பம் தான். நடுவுல துன்பம் வரும், அத நீக்கிட்டாக்கா இன்பந்தான் மிச்சமிருப்பது. இறைவன் கொடுத்த இன்பத்தை, இறைவன் கொடுத்த materials and commodities என்று சொல்வாங்க ஆங்கிலத்தில ஒரு வார்த்தை. இறைவன் கொடுத்த துன்பத்தை இறைவன் கொடுத்த உபகரணங்களைக் கொண்டு நீங்கள் போக்கிக் கொண்டால் இன்பம் இருந்து கொண்டு இருப்பது தெரியும். இதுதான் இயற்கையில் உள்ளது. இறைவன் தந்தது இதுதான். நடுவுல கொஞ்சம் துன்பத்தைக் கொடுத்து, அத மாத்திக்கிறதுக்கு இன்பத்தைக் கொடுத்து சமன் படுத்திட்டான். இந்த இன்பத்தை மகரிஷி வேறொரு வார்த்தையில சொல்வாங்க, திருப்திம்பாங்க. பசிக்கும் சாப்பாட்டுக்கும் நடுவுல, சாப்பாட்டுக்கும் பசிக்கும் நடுவுல இருக்கக் கூடியது திருப்தி. சாப்பிட்டீங்கில்ல? அடுத்த பசி எப்ப வரும்? மூணு மணி நேரம் கழிச்சு. அது வரைக்கும் எப்படியிருக்கும்? இத யாராவது Enjoy பண்றாங்களா(அனுபவிக்கறாங்களா)?. வயித்து வலி வந்துரட்டும், ஒரு வேளை சாப்பாட்டுக்கும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கும் நடுவுல வயித்து வலி வந்துரட்டும், வயித்த வலிக்குது, வயித்த வலிக்குதுன்னு சொல்லிட்டே இருப்பாங்க. வயிறு வலிக்கலைன்னு வெச்சுக்கோங்க, வயித்த வலிக்கலை, வயித்த வலிக்கலைன்னு சொல்றாங்களா?, சொல்லணுமா? வேண்டாமா? வயித்த வலிக்கல, சந்தோசமா இருக்குது, சந்தோசமா இருக்குது, இனிமையா இருக்குது, அமைதியா இருக்குது அப்படீன்னு சொல்லணுமா? வேண்டாமா?. இதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று பாரதியார் நினைத்தது வியந்தது இதுதான். இயற்கைத் துன்பத்தை தீர்த்துக் கொள்ளும் போது ஏற்படக்கூடியதை இன்பம்னு பேரு வெச்சா, அதில்லை இன்பம். அது போன பிற்பாடு இருக்கிறது பாருங்க அது தான் இன்பம். சாப்பாடு 8 மணிக்கு சாப்பிட்டீங்கன்னா, 9 மணிக்கு, 10 மணிக்கெல்லாம் இருக்குது பாருங்க அது இன்பம். சாப்பிட்டுட்டே இருக்கும்போது இருக்குது பாருங்க, பசி போயிட்டே இருக்குது பாருங்க, சாப்பிட, சாப்பிட பசி போயிட்டே இருக்குது பாருங்க அத இன்பம்னு நெனைச்சு சாப்பாட்டுலேதான் இன்பம் இருக்கிறதுன்னு நெனச்சா அதுதான் மாயை. அந்த மாயையிலதான் எல்லாரும் இருக்கிறாங்க. ஆகவே சாப்பாடு முக்கியம். சாப்பாடு எனக்கேதான், உனக்கு கொடுக்க மாட்டேன். என் சாப்பாடு நீ எடுத்தா அடிப்பேன், ஆனா உன் சாப்பாடையும் புடுங்கிக்குவேன் ன்னுதான் உலகம் இருக்கு. உலகம் இப்படித்தான் உள்ளது.
அன்பர்களே! இயற்கையில இருக்கக்கூடியதை அனுபவிச்சு குறைச்சிட உங்களால முடியாது. உலகம் ஓடிக் கொண்டு இருக்கிறதுனால இறைவன் வகுத்த ஏற்பாட்டின்படி அடிக்கடி துன்பம் வரும். அந்த துன்பத்தை நீக்கிக் கொள்வதற்கு பொருட்கள் வேண்டும். அந்தப் பொருள் தீர்ந்திடுமோங்கிற பயம் தான் மாயை. இறைவன் என்ன தூங்கிட்டா இருக்கிறான்?. ஒரு வேளை அப்படியே தூங்கறதா காட்டினாலும் யோக நித்திரைதான் அது. சகல ஜீவராசிகளுக்கும் தேவையானதெல்லாம் படைச்சு சகல ஜீவராசிகளுக்கும் தேவையான நேரத்தில கொடுக்கிறதுதான் இறைவனோட வேலை. இந்த உணர்வு வந்து போச்சுன்னா அது தியானம். ஆகவே, உங்களுக்கு நடுவுல நடுவுல வரக்கூடிய துன்பத்தை நீக்கிக் கொள்ளும் போது நடுவுல நடுவுல ஏற்படுது பாருங்க இன்பம், இதை நீங்கள் நினைத்து, ஏங்கி, தேடி, ஒடி, பெற்று, காத்து, அடித்து, பிடித்துக் கொண்டிருப்பதுதான் மாயை. அது இருக்குது என்பது, கிடைக்கும் என்பது, தருவான் என்பது ஞானம். நாம உழைக்கணும், நல்லவங்களா இருக்கணும். உழைச்சுட்டு நல்லவங்களா இருந்தா இறைவன் குறைக்காமத் தருவான். உழைக்கலைன்னா குறைச்சுடுவான், ஆனா அடியோட குறைச்சுடமாட்டான், ஏன்னா செத்துப் போயிடுவாங்க. அதனால வெச்சுக்குவான், ஆனா குறைச்சு, குறைச்சு கொடுப்பான். அதனால அங்க வலிக்கும், இங்க வலிக்கும். 12 மணிக்கு கிடைக்கிற சாப்பாடு 2 மணிக்கு கிடைக்கும். 2 மணிக்கு கிடைச்சாலும் முக்கால் வயித்துக்கு கிடைக்கும், அதாவது மோர் இல்லாம போயிடும். இதெல்லாம் நமது பாவத்துக்கு தக்கவாறும், நல்லவங்களா இல்லாத தன்மைக்குத் தக்கவாறும், உழைக்காததற்குத் தக்கவாறும் அமையும். உழைப்பு என்றால் உடலாலும், அறிவாலும் உழைக்கணும். அந்த மாதிரி உழைப்பு என்பது இல்லாம போனதுனால, நாமே நமது இன்பத்தைத் தேடிக் கொள்ளணும் என்ற ஒரு நிலை இல்லாததுனால, உணவு முதலிய அனுபவப் பொருட்கள்ல இன்பம் இருக்குதுன்னு நினைப்பதனால, அதைப் பெற வேண்டும், சுகித்துக் கொள்ள வேண்டும், யாரிடமிருந்தாவது எப்படியாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நிலை மாயை. இது தேவையே இல்லை.
நான் ஒரு உதாரணம் சொல்றேன். மேட்டூர்ல வந்து மே மாசம் என்னவோ மாதேஸ்வரன் திருவிழான்னு ஒண்ணு நடக்கும். மேட்டூர்ல இல்ல, அது எங்கேயோ நடக்குது, மேட்டூர்ல கூட்டம் வருது. நான் போய் அதுல மாட்டிக்கிட்டேன், போகும்போது வழி தெரியாம மாட்டிக்கிட்டேன். வரும்போது பஸ்செல்லாம் நிறைய விட்டுட்டாங்க. விழா முடிஞ்சு போச்சு, திரும்பிட்டு இருக்கிறோம். மேட்டூர் பஸ் ஸ்டாண்டு முழுக்க ஜனங்க நின்னுட்டு இருந்தாங்க. 2 பஸ் நிக்குது. 1 பஸ் ஓடியாருது, நிக்கற பஸ்ல போங்கன்னா, அது டைம் ஆகுங்கிறாங்க. இன்னொரு பஸ் வந்து நிறுத்தறான். ஜனங்க திமு திமுன்னு அந்த பஸ்சுக்கும் போறாங்க. எத்தனை பேர் போறாங்க?, 50 பேர். பஸ்ஸோட Capacity(கொள்ளளவு) எவ்வளவு? 60 பேர். ஏதோ ஒரு சினிமா படத்துல, படத்தோட ஹீரோ traffic constable(சாலை போக்குவரத்து காவலர்)ஆக இருக்காரு. மாறி, மாறி வருவாரு, காதல் சீனோ என்னவோ தெரியல. சும்மா தக்கடா, புக்கடான்னு டி.வி யில பார்க்கிறது. அந்த ஆட்டோகாரங்க எல்லாம் வந்து இந்த நடைப்பாதைக்காக பட்ட பட்டையா கோடு போட்டுருக்காங்க பாருங்க, அதைக் தாண்டி வந்து நின்னுக்கிறாங்க. ஹீரோ ஒரு மொற மொறைக்கிறாரு, எல்லாரும் பின்னாலேயே போயிடறாங்க. எம்.ஜி.ஆர். சிகரெட் குடிக்காமலேயே புகை விடறாரு பாருங்க, இது ஒரு நல்ல காட்சி. ரஜினியோ, கமலோ இந்த மாதிரி 10 படம் எடுத்தா யாராவது நடைப்பாதையில வந்து நிப்பாட்டுவாங்களா? யார் கொடுத்த கருத்து இது?. அப்புறம் அதே பாடல் காட்சியில conductor(நடத்துனரா)ஆக இருக்காரு, அதுவும் School bus conductor (பள்ளிப் பேருந்து நடத்துனரா)ஆக இருக்கறாரு. Uniform(சீருடை)-ல பசங்க வரும். இவர் ஏறும் வழியில நிற்பாரு, பஸ்ஸஸுக்கு எதிர்ல இருந்து அந்த Students(மாணவர்கள்) வருவாங்க. இந்தப் பசங்கதான் வந்து ஏறப்போறாங்க, வேற யாரும் ஏறப் போறதில்ல. எறங்கும் வழியா பாதிப்பேரும், ஏறும் வழியா பாதிப்பேரும் ஏறி உட்கார்ந்திருக்கலாம் இல்லையா? இல்ல. இவர் நிக்கக்கூடிய ஏறும் வழிக்கு எல்லாப் பசங்களும் வந்து ஏறி உட்கார்ந்துகிட்டாங்க. இப்படி கமலஹாசன், விஜய் எல்லாம் 10 படத்துல காட்டினாக்கா, ஜனங்க திருந்துவாங்களா?, மாட்டாங்களா?.
மேட்டூர்ல என்ன நடந்ததுன்னா, conductor(நடத்துனர்) நீங்க மெதுவா ஏறினீங்கன்னா, நான் சீக்கிரமா வண்டி எடுக்கலாம். நீங்க இப்படி அடிச்சு புடிச்சுக்கிட்டு ஏறினீங்கன்னா ஏறி முடிக்க 10 நிமிஷம் ஆகும், அதுக்குள்ள இன்னொரு பஸ்ஸு வந்ததுரும்னு கத்தறாரு. அப்படித்தான்10 பேர், 20 பேர் ஏறிக்கிட்டு இருக்கறதுக்குள்ள, இன்னொரு பஸ்ஸு வந்துருச்சு. யாரெல்லாம் திமுதிமுன்னு ஏறினாங்களோ அவங்கள்ளாம் அந்த பஸ்சுக்கு ஓடறாங்க. இந்த பஸ் Driver(ஓட்டுனர்) பஸ்ஸ விட்டு எறங்கி போயிட்டாரு. அந்த பஸ் Driver(ஓட்டுனர்) வண்டியிலேயே இருக்கிறாரு. இதில ஏறினவங்கெல்லாம் எறங்கி அந்த பஸ்ஸுக்கு போயிட்டாங்க. அந்த வண்டி நெறஞ்சவுடனே அந்த Driver(ஓட்டுனர்) எறங்கறாரு, இந்த Driver(ஓட்டுனர்) ஏர்றாரு. உடனே அந்த பஸ்சில இருந்து எறங்கி இந்த பஸ்சுக்கு ஒடியாறாங்க. இப்படி தமாஷா இருந்தது. நான் கூட்டமில்லாத ஒரு பஸ்ஸா தான் பாத்து உட்கார்ந்திட்டுப் போவேன்.
இதே தான் உலகத்துல நடக்குது. உலகத்துல இருக்கறது வந்து எல்லோருக்கும் போதுமானதாக இருக்கறது. ரெண்டே Condition(நிபந்தனை). ஒண்ணு உழைக்கணும், ரெண்டு பாவப் பதிவுகள் இல்லாமல் நல்லவர்களாக இருக்க வேண்டும். இந்த கருத்தில்லாமல் ஒவ்வொருவரும் துன்புற்றுக் கொண்டு இருக்கிறார்கள். எல்லோரையும் துன்புறுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். நம்பிக்கை வேணும். எதிர்காலத்துக்கு சேர்த்து வெச்சுக்கணுமா? உங்களுக்கு தைரியம் இருந்தால் சேர்த்து வெக்காதீங்க. இறைவன் கொடுப்பான். பொண்ணுக்குக் கல்யாணம் வரும்போது என்ன பண்றது? கல்யாணம் வரும் போது கொடுப்பான். இப்பவே கொடுத்தா நீங்க வட்டிக்கு விட்டுருவீங்க அல்லது சூதாடித் தோத்துருவீங்க, அல்லது Chitfund (நிதி நிறுவனம்)-ல போட்டு அவன் ஏப்பம் விட்டுட்டுப் போயிருவான். அதனால இறைவனுக்கு உனக்குப் பொண்ணு இருக்குதுன்னு தெரியும். அது உன்னோட பொண்ணுல்ல, அவன் பொண்ணு, அவந்தான் தக்க மாப்பிள்ளையாப் பார்த்து வைக்கிறான்.
அன்பர்களே! நான் இப்ப கொஞ்சம் நல்லாயிருக்கிறேன். என்னன்னு தெரியல, பொருளாதாரத் தட்டுப்பாடே கெடையாது. நான் பாண்டிச்சேரியில இருந்த காலத்துல எல்லாம் பணத் தட்டுப்பாடு... அதுவும் 20 வருஷத்துக்கு முந்திய காலம்1976-1980, கடன் வாங்கித்தான் காலத்த ஓட்டணும். மாசா, மாசம் கடனை அடைச்சுடுவேன். 1-ம் தேதியிலிருந்து அரிசி புளியெல்லாம் கூட கடன் வாங்கிட்டேயிருப்பேன், 31-ந் தேதி எல்லா கடனையும் அடைச்சுடுவேன். இந்த level(நிலை)ல திடீர்ன்னு என் தங்கச்சி வரும். அண்ணே, பொண்ணுக்குக் கல்யாணம் அண்ணே. நீங்க வந்திருந்து நடத்திக் குடுங்கன்னு சொல்லும். நான் வந்திருந்து நடத்தறதெல்லாம் அப்பறம், மொய் போட வேண்டாமா?, மாமன் சீர் செய்ய வேண்டாமா?. ஏன்னா கடன் வாங்கிட்டு இருக்கிற அந்தக் காலத்துல என்னோட Level (நிலை)-க்கு 300 ரூபா வேணும். இப்ப கணக்குக்கு 3000 ரூபாய், 4000 ரூபாய்ன்னு வெச்சுக்- கங்களேன். எங்க வூட்டுக்கார அம்மா என் தங்கச்சிகிட்ட பேசவே மாட்டா. இதையே நெனைச்சுக்கிட்டு 300 ரூபாய் வேணுமே, 300 ரூபாய் வேணுமே, இது வேற வந்து பத்திரிக்கை வெச்சுட்டுப் போகுதே என்ற கவலையிலேயே அவகிட்ட மொகம் கொடுக்கமாட்டா. அது அழுதுட்டுப் போகும். நான் சிரிச்சிட்டே இருப்பேன். நீங்க பாட்டுக்கு சும்மா இருக்கிறீங்களே!, அது பத்திரிக்கை வெச்சிட்டுப் போச்சே தெரியலையா?. எங்கேயாச்சும் போய் யாராவதுகிட்ட கேட்டு வாங்கிட்டு வாங்களேன்ம்பாங்க எங்க வூட்டுக்கார அம்மா. நான் போய் கேக்கவும் மாட்டேன், வாங்கவும் மாட்டேன். கரெக்டா கல்யாணத்துக்கு நாலு நாள், அஞ்சு நாள் இருக்கும் போது ஒரு Arrears(நிலுவைத்தொகை) வரும். இப்ப ஆறு மாதத்துக்கு ஒரு தடவை D A Arrear(அகவிலைப்படி நிலுவை) டாண், டாண்னு வருது இல்லைங்களா?. அந்தக் காலத்துல சேர்த்து வெச்சுட்டே இருப்பாங்க, இவங்க போராட்டமெல்லாம் முடிச்சதுக்கு அப்பறமா அவங்க கொடுப்பாங்க. அந்த மாதிரி ஒரு வருஷம், இரண்டு வருஷம் தேங்கியிருந்து, தேங்கியிருந்து சுளையா Arrears(நிலுவைத்தொகை) வரும். அதுல 300 ரூபாய் வரும். ஒரு பொண்ணயில்ல நாலு பொண்ண கட்டிக் கொடுத்துடலாம். சில சமயத்துல பார்த்தா Arrear(நிலுவைத்தொகை) முன்னால வந்துடும், தங்கச்சி பின்னால வரும். இத கண்டுபுடிக்கணும். ஆகவே கவலைப்படுவது மாயை. இல்லாம போயிட்டா என்ன செய்வது? என்பது மாயை, போதாதோ? என்பது மாயை, கிடைக்காதோ? என்பது மாயை. எல்லாம் ஏற்கெனவே இருக்கிறது. அதனால் கிடைக்கும். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்னு பாடினாரு பாருங்க பாரதியார். நமக்கு கிடைக்கும். நிச்சயம் கிடைக்கும். நமது மகரிஷிக்கு நடந்த ஒரு சம்பவம். 1980-ல காரைக்கால்ல ஒரு சிறப்புப் பயிற்சி மகரிஷிய வெச்சு ஏழு நாள் நடத்தினோம். நாங்க ஒரு தப்பு பண்ணிட்டோம், நாலு வருஷத்துக்கு முன்னால ஒரு பயிற்சி நடந்தது. இந்த பயிற்சிக் கட்டணம் போட்டோம் பாருங்க, அத ரொம்ப குறைச்சுப் போட்டுட்டோம். அதனால முன்னால நின்னு நடத்துனவங்க கைய கடிக்கற மாதிரி ஆயிடுச்சு. அதனால 1980-ல ரொம்ப புத்திசாலித்தனமா ரொம்ப பெரிய கட்டணமா போட்டுட்டோம். அந்தப் பயிற்சிக்கு 35 ரூபாய் போட்டோம், இப்ப 80 ரூபாய் போட்டுட்டோம். அது என்னாச்சு, செலவு போக மிச்சம் இருக்குது. அந்தக் காலத்ததுல மிச்சம் இருந்தா சபையில சேர்க்கிற பழக்கம் இல்ல. மிச்சம் இருக்கறதை மகரிஷி கையில கொடுத்ததுருவோம். ஆகவே மிச்சம் இருந்த 2000 ரூபாயை மகரிஷி கையில கொடுத்துட்டு, கணக்கெல்லாம் பாருங்க சாமி, சில பேர் பணம் கொடுக்காம இருக்கிறாங்க, சில பேருக்கு நாம கொடுக்க வேண்டியிருக்கிறது. கணக்கை சுத்தமா போட்டுட்டு, இன்னொரு instalment (தவணை)ல கொண்டு வந்து கொடுக்கறோம் சாமின்னோம். அவரு கொடுத்தா கொடு, இல்லாட்டி போன்னு போயிட்டார். இப்படி ஒரு மாசம் ஆயிட்டது. நான் அப்ப பாண்டிச்சேரியில இருக்கிறேன். கணக்கெல்லாம் முடிச்சுட்டு கொண்டு வந்து 3000 ரூபாய் கொடுத்துட்டாங்க. அத நான் பாண்டிச்சேரியில வெச்சிருந்து அடுத்த ஞாயிற்றுக்கிழமை பார்த்து அப்படியே மெட்ராசுல இருக்கற மகரிஷி கிட்ட போனா, வாங்க, உட்காருங்க, சாப்பிடுங்கன்னு சொல்லி, எங்க வந்தீங்க திடீர்னு? ஒரு வேலையும் இல்ல, ஒரு பயிற்சியும் இல்ல திடீர்னு வந்துருக்கீங்களே?ன்னு கேட்டாரு. இல்ல சாமி உங்களப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். பணம் கொஞ்சம் மிச்சப்பட்டது, அத கொடுத்திட்டுப் போலாம்னு வந்தேன்னேன். ஆ... பணமா! எவ்வளவு?. ஒரு 2000 ரூபாய் இருக்குது சாமி. கொண்டா, கொண்டான்னாரு. என்ன மகரிஷி இப்படி சொல்றாங்களே, சந்தோஷமா? அப்படீன்னு நெனச்சேன், அது நாளன்னிக்கு நான் டெல்லியில இருக்கணும், அதுக்கு நாளைக்கு டிக்கெட் வாங்கணும். 300 ரூபாய் வேணும்,1 பைசா கையில இல்ல. என்ன பண்றது?. நான் போறது அருட்பணி அங்க நூறுபேர் எனக்காக காத்திருப்பாங்க. என் வேலையாப் போகலை, என் சந்தோஷத்துக்குப் போகலை, இறைவனுடைய வேலையாப் போறேன். ஆகவே என்னை அழைச்சிட்டுப் போக வேண்டியது இறைவனுடைய பொறுப்பு. எவன் தலையில கட்டறதுன்னு பார்த்துட்டு இருந்தேன். ஐயையோ! போகணுமே, காசில்லையே. என்ன பண்றது? அவங்கிட்ட கேப்பமா?, இவங்கிட்ட கேப்பமா?, இல்ல Programme-ம (நிகழ்ச்சியை) ஒரு வாரம் தள்ளி வெச்சுடுவோமா? இல்ல தந்தி, கிந்தி கொடுப்பமா?ன்னு மகரிஷிக்கு மனம் கவலைப்பட்டிருந்தது, கொழம்பியிருந்ததுன்னு வெச்சுக்கங்க. நான் அடுத்த வாரம் போலாம்னு உட்கார்ந்துருப்பேன். அந்தத் தேவை இருக்கிறதுனால நான் யதேச்சையா அங்க போயி குடுத்துட்டு வந்திருக்கேன். ஆகவே தேவையை ஏற்படுத்துபவனே உங்களுக்குத் தெரியாம அதைப் பூர்த்தியும் செய்வான். இந்த ஞானம்தான் பெரிய ஞானம். ஒருத்தருக்கு தேவைக்கு மேல வருது பாருங்க தேவைக்கு மேல வர்றத தட்டிவிட்டுட்டே இருந்தா வந்துக்கிட்டே இருக்கும் பாருங்க. காவேரியில நீரோட்டம் இருக்கணுமா? தேங்கணுமா?. தேங்கினா என்னாகும்?, தேங்கினா தஞ்சாவூர் ஜில்லாவுக்குப் போகாது, அங்கிருந்து மண்வெட்டிய தூக்கிட்டு வந்துருவாங்க. ஒருத்தருக்கு லட்சக்கணக்ககுல போதும், ஒருத்தருக்கு ஆயிரக் கணக்குல போதும், ஒருத்தருக்கு நூற்றுக் கணக்குல போதும். என்ன இருந்தாலும் அப்படியே அத வெச்சு சமாளிச்சுட்டு பராமரித்துக் கொண்டிருந்தால் அதுதான் இன்பம். பசிக்குதுங்கறதுக்காக 25 இட்லி திங்கலாமா?, கொள்ளாது. 5 இட்லி வெச்சுக்கங்க போதும், அதுதான் ஞானம். பொதினா சட்னி நல்லாயிருக்குதே, இன்னும் ரெண்டு இட்லி நான் திங்கறேன். வேணும்னா, மத்தியானம் கொஞ்சம் குறைச்சுக்கலாம்னு சமாதானம் சொல்லிக்குவாங்க. அதுதான் மாயை. அது என்ன பண்ணும்? ஏப்பமா, மந்தமா, அப்படியே போனால் அல்சராக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகுது பாருங்க. இதையெல்லாம் நீங்க சிந்தனைக்கு எடுத்துக்கணும். போதும் என்ற மனநிலையில் வாழ வேண்டுமானால் இறைநிலையோடு இருந்தால் தான் போதும் என்று சொல்லுவோம். எந்த நேரமும் மனம் இறைநிலையோடு இருந்து கொண்டு இருக்க வேண்டும். அந்த நிலை பெறுவதற்கு தவறாமல் காலை, மாலை தவம் செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின், தவத்த கலைச்சாலும் கலையாது. நீங்க மூணு மாசம், ஆறு மாசம் தவப்பயிற்சி பண்ணியிருந்தா கண்டுபிடிச்சுருக்கலாம். தவம் முடிஞ்சதுக்கப்பறமும் தவத்துல இருக்கிற மாதிரியே இருக்கும். முக்கியமா துரியம் வேலை பண்ணும், சும்மா இருக்கும் போது ஆக்கினை வேலை பண்ணும். சில பேரு பயந்துடுவாங்க, சில பேரு பயமுறுத்துவாங்க ஐயையோ! நீ சாந்தி செய்யணும்ம்பாங்க. குழப்பிக்கறதுக்கு ஒண்ணுமில்ல. எந்த நேரமும் நம்மைக் கேக்காம, நம்ம முயற்சி இல்லாம, நெற்றியிலும், உச்சியிலும் ஞாபகமாக இருப்பதும், முடிஞ்சா சதா சர்வ காலமும் இறைவனைப் பற்றியே சிந்திக்கக் கூடிய நிலையில் இருப்பதும் கைவர வேண்டும். அது தானா வரும். நீங்க கொஞ்சம் விழிப்பா இருந்தா சீக்கிரமே வரும். அந்த நிலையில மனம் வெச்சிட்டா கடலும் தெரியாது, தண்ணியும் தெரியாது, வலியும் தெரியாது, உபத்திரவம் வரதும் தெரியாது, போறதும் தெரியாது. நல்லாயிருக்கலாம், அதுதான் ஞானம். அந்த ஞானத்தை நீங்களெல்லாம் பெற வேண்டும் என்று வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.
- நினைவில் உங்களோடு KGS