ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து
வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.
அன்பர்களே!
இறைநிலையை புலன்களால் உணர்ந்து கொள்ளமுடியாது. புலன்கள் எத்தனை? ஐந்து. அவையாவன, பார்வை, ஓசை, வாசனை, சுவை மற்றும் ஊருணர்வு. இந்த ஐந்து உணர்வுகளால் இறைவனை உணர்ந்து கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தப் புலன்களால் உருவம் இல்லாததை தெரிந்து கொள்ளமுடியாது. ஐம்புலன்களாலும் அம்மாவை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் நம் மேல் வைத்திருக்கும் அன்பை நமது உள்ளுணர்வால்தான் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஆறாம் அறிவைக்கொண்டுதான் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக ஆப்பிள் ஏன் கீழே விழுகுதுன்னு நியூட்டன் கண்டுபிடிச்சாரே கண்ணால் கண்டுபிடிச்சாரா? காதால் கண்டுபிடிச்சாரா? அறிவால்தான் கண்டுபிடிச்சார். அப்படி அறிவுக்கு மட்டும் அகப்படக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன. அம்மாதிரியான விஷயங்களில் தலையாய விஷயம் தெய்வம். அந்த தெய்வம் என்பது செயல் விளைவுத் தத்துவமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லது செய்தால் சந்தோஷம் கிடைக்கும், கெடுதல் செய்தால் துன்பம் கிடைக்கும். இப்படியொரு விஷயத்தைப் பரிபாலனம் செய்து கொண்டிருப்பது தெய்வம். நமது அறிவிற்கும் ஒரு இலட்சியம், ஒரு இலக்கு இருக்கிறது, அதுதான் தெய்வத்தை அறிதல்.
அன்பர்களே!
மழை பெஞ்சா நமக்கு துன்பமா இருக்குது, வீட்டுக்கு போய் ஈரத்துணிய கழட்டிப் போட்டுட்டு வேற துணி கட்டிக்கிறோம், தலையைத் துவட்டிக்கிறோம். ஆனா, குரங்கு கூட்டங்களுக்கு நம்மளை மாதிரி வீடு கிடையாது, அதுகளுக்கு எவ்வளவு துன்பமா இருக்கும்னு நீங்க நினைச்சுப் பாருங்க. ஏதோ மர இடுக்கு, சந்து இப்படி பூந்துக்கலாமே தவிர மழை வந்தா நனைஞ்சுக்க வேண்டியதுதான், குடையெல்லாம் பிடிக்க முடியாது, கூரையெல்லாம் கிடையாது. மிருக வாழ்க்கையெல்லாம் துன்பமுள்ள வாழ்வாகத்தான் இருக்கிறது. பாம்பை எடுத்துக்குங்க, அதுக்கும் துன்பம் இருக்குது, கழுகை கண்டால் பயம், மயிலை கண்டால் பயம், அது பயந்துகிட்டே வாழும். மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வாழ்க்கையில் இப்படிபட்ட துன்பம் வரும் பொழுது அந்த துன்பத்தை தடுத்து கொள்ளவும் தெரியாது, துன்பம் வராத முன் ஏற்பாட்டை செய்து கொள்ளவும் தெரியாது. நாம என்ன செய்யறோம்? முன்னெச்சரிக்கையாகவே சில காரியங்களை செஞ்சுக்கறோம். உதாரணத்துக்கு கடுமையான மழை, புயல் வரப்போகுது என்று ரேடியோல சொல்றாங்கன்னு வைச்சுக்கங்க, நாம எச்சரிக்கையா இருந்துக்கறோம். ஆனா, மிருகங்களால அது முடியாது. துன்பம் வருமானால் அதைத் தவிர்த்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்று மனிதர்கள் முயலுகிறார்கள். வாழ்க்கை இன்பமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த இன்பம், துன்பம் உடலில் மட்டுமல்ல, மனதிலும் இருக்கிறது.
அன்பர்களே!
ஏதோ தலையை இடிச்சுக்கிட்டோம், குட்டிக்கிட்டோம் அதனால வலி, நோய்... இப்படி உடல் சம்பந்தப்பட்டதுதான் துன்பம் என்று நினைக்கக் கூடாது. உதாரணத்துக்கு பஸ்சுல வந்து நீங்க டிக்கெட் கேட்டீங்க, கண்டக்டர் எட்டணா கொடுங்கங்கறாரு, உங்ககிட்ட எட்டணா இல்லை உடனே அவர் எட்டணாக்கு விதி இல்லாதவங்க எல்லாம் ஏன் பஸ்சுல வரீங்கன்னு கேக்கறாரு. உங்களுக்கு துன்பமா இருக்கா இல்லையா? எங்க துன்பமா இருக்குது? மனசுல துன்பமா இருக்குது. மனதுக்கும் துன்பமில்லாமல், உடலுக்கும் துன்பமில்லாமல் இன்பமாக வாழ வேண்டும் என்று மனிதர்கள் அதிகமாக முயற்சி எடுத்து வருகிறார்கள். இப்ப உங்களை ஒண்ணு கேக்கறேன், எது இன்பம்? நமக்குத் தெரியாத விஷயமும் இருக்கு என்று அதைத் தெரிந்து கொள்வது ஒரு இன்பம். இன்பத்தைத் தேடிக்கொண்டே இருக்கக்கூடியது மனிதகுலம். நிரந்தரமான இன்பம் கிடைப்பதில்லை, இன்பம் என்பது வருவதும், போவதுமாக இருக்கிறது. உதாரணமாக பசிக்கும்போது சாப்பிட்டால் அது இன்பம், அதுவே வயிறு நிறைஞ்சப்பறம் சாப்பிட்டால் துன்பம். ஒரு வாய் இன்பம், இரண்டு வாய் இன்பம், மூணு வாய் இன்பம், பத்து வாய் இன்பம், இருபது வாய் இன்பம்... அப்பறம்? இன்பமே துன்பமாக மாறுகிறது. இந்த உடம்பு மண்ணாலானது, அதாவது பஞ்ச பூதங்களாலானது. இந்த உடம்புக்கு கெடுதல் வரக்கூடும். உதாரணத்துக்கு நீங்க திடீரென்று பெய்யக்கூடிய மழையில் நனைந்தீர்களானால் சளி பிடிக்கும். இந்த மாதிரி இந்த உடம்பைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். மூணு இட்லி தின்னா செரிக்கும், அதுக்கு மேல தின்னா செரிக்காது, ஏன்னா இட்லி பெருசு அதுக்கு மேல திங்க முடியாது. முதலில் ஒன்றை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், பிறகு தெரிந்துக்கொண்டதை கடைபிடிக்க வேண்டும். உணவு விஷயத்தில் தன் வயிற்றுக்கு எவ்வளவு உணவு தேவை என்று தெரிந்தவர்கள் உண்டா? நாம் இந்த உடம்பை வைத்துக்கொண்டு திருத்தமாக வாழ்கிறோமா? நமது வாழ்க்கை முறையெல்லாம் உடம்பை கெடுக்கக் கூடியதாகவே இருக்கிறது. குடி, சிகரெட், புகையிலை, பான் பராக், சாராயம், அதிகமாக தூங்கறது அல்லது கொஞ்சமா உழைக்கிறது... இந்த மாதிரி எத்தனை எத்தனை விதமாக நாம் இந்த உடம்பை கெடுத்துக் கொண்டிருக்கிறோம்!. அதன் காரணமாக நமக்குத் துன்பம் வருகிறது. இந்த உடம்பை ஒழுங்காக வைத்துக்கொண்டு இந்த வாழ்க்கையை இன்பமாக வாழ ஜனங்களுக்கு தெரியலை. இந்த உலகத்துல வாழவே முடியலை, இலையில உட்கார்ந்தா சாப்பிடமுடியலை, பாயில படுத்தா தூங்க முடியலைன்னு சொல்றவங்களுக்கு உடம்பு, மனசு ரெண்டும் கெட்டுப்போச்சுன்னு அர்த்தம்.
அன்பர்களே!
ஒரு சலிப்புள்ள இன்பமாகவும், குறைபாடுள்ள இன்பமாகவும் இந்த உலகத்தில் புலன்களால் அடையக்கூடிய இன்பம் இருக்கிறது. நிரந்தரமான இன்பம், நீடித்த இன்பம், சலிப்பைத் தராத இன்பம் கிடையாதா? என்று மனிதனுடைய உள் மனம் ஏங்குகிறது. இது சாதரணமாக அனைவருக்கும் தெரியாது. மனித குலம் வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இன்பம் நிறைவாக இல்லை. ஏனென்றால் அந்த இன்பத்தில் குறைகள் இருக்கின்றன. புலன்களால் அடையக்கூடிய இன்பத்தை நம்மால் சேமிச்சு வைக்கவும் முடியாது, நல்லாயிருக்கிறது என்று வைத்து நாளைக்கு அனுபவிக்கவும் முடியாது, அது அதோட தீர்ந்து போய்விடுகிறது. இந்த மாதிரி புலன்களால் அனுபவிக்கக் கூடியது அல்லாமல் வேறு இன்பம் இருக்காதா என்று முன்னோர்கள் தேடினார்கள். இந்த இன்பத்தை ஒன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறதே அது என்ன என்று ஆராய்ச்சி செய்தார்கள். இந்த இன்பத்தைத் அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடியது எது? மனம். மனம்னா என்ன அப்படீன்னு ஒரு ஆராய்ச்சிக்கு வந்தாங்க. கண்ணுன்னா என்ன, காதுன்னா என்ன, மூக்கு, நாக்கு, சருமம், புலன்கள் என்றால் என்ன, உடம்பு என்றால் என்ன என்பதற்கெல்லாம் தெளிவான பதில் இருக்கிறது. ஆனால் மனம் என்றால் என்ன, அது கறுப்பா, சிகப்பா, நீளமா, குட்டையா, லேசா, கனமா எதுவுமே தெரியாது. ஆனால் அந்த மனதை வைத்துக் கொண்டுதான் ஐந்து புலன்களால் வரக்கூடிய இன்பத்தை அனுபவிக்கிறோம். அப்ப அந்த அனுபவத்தில் தப்பு வருமா, வராதா? உதாரணத்துக்கு ஒரு பாத்திரம் பொன் பாத்திரமா இல்லை மண் பாத்திரமான்னு தெரிஞ்சாதான், அதை கெட்டுப்போகாம பார்த்துக்க முடியும். பொன்னுன்னா நசுங்கிரும், மண்ணுன்னா உடைஞ்சுரும். அதுமாதிரி இந்த மனசுன்னா என்ன, அது எதனாலானதுன்னு தெரியாம கன்னா பின்னான்னு உபயோகப்படுத்தி அதைக் கெடுத்துடறோம். ஒரு அலுமினியப் பாத்திரம் இருக்குதுன்னு வைச்சுக்கங்க, ஒரு அஞ்சாறு வருசம் ஆயிட்டாக்கா அது கறுத்து, நெளிஞ்சு, உள்ளே பள்ளம் பள்ளமா, பொக்கை பொக்கையாப் போயிரும். ஒரு அலுமினியப் பாத்திரம் இந்த மாதிரியெல்லாம் ஆகுங்கிற ஒரு சிரத்தை இல்லாமல் அதை அழுக்குப் பிடிக்க வைச்சர்றோம். எதனால? அந்தப் பொருள் எதனாலானது, அதன் தன்மையென்ன என்பதெல்லாம் தெரியாததால. அதே மாதிரி மனதைப் பற்றியும் சரியாகத் தெரிந்து கொள்ளாததுனால அதை கெடுத்து விடுகிறோம். கெட்டுப் போன மனதினால் புலன்களால் வரக்கூடிய இன்பத்தையும் அனுபவிக்க முடியாது, தன்னிடத்திலிருந்து உருவாகக் கூடிய இன்பத்தையும் அனுபவிக்க முடியாது. அதனால் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. உடலால் துன்பம், மனதால் துன்பம், உடலால் உடலுக்கு துன்பம், மனதால் உடலுக்கு துன்பம், உடலால் மனதுக்கு துன்பம், மனதால் மனதுக்குத் துன்பம். ரொம்ப கஷ்டம் இந்த வாழ்க்கை, எந்த வாழ்க்கை? ஜனனம் முதல் மரணம் வரை இருக்கக்கூடிய ஒரு காலப்பொழுது இருக்கு பாருங்க, அந்தக் காலப்பொழுதானது கஷ்டமாக இருக்கிறது.
அன்பர்களே!
இவ்வளவுதானா வாழ்க்கை? இவ்வளவு தானா உலகம்? இதற்கு மேல ஒண்ணும் கிடையாதா? நான் ஒரு கேள்வி கேட்டேன் பாருங்க மனம் என்றால் என்னன்னு, மனம் என்றால் என்ன என்று சரியாக ஆராய்ந்தால் உயிரே மனமாக இருக்கிறது என்று தெரிய வரும். மனதினுடைய மூலம் உயிர். உயிரினுடைய மூலம் என்ன? தெய்வம் அதாவது இறைநிலை. அதைத் தெரிந்து கொள்ளாமல் வாழலாமா? அதைத் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்தால் வாழ்க்கை திறமையானதாக, முழுமையானதாக, மகிழ்ச்சியானதாக இருக்காது. ஆகவே தெய்வத்தை அறிய வேண்டும். பாரதியார் சொல்லுவார் தெய்வம் நீ என்றுணர்ன்னு. இதனையே வேத வாக்கியத்தில் அகம் பிரம்மாஸ்மி, தத்வமசி என்றெல்லாம் சொல்வார்கள். இறைவனைப்பற்றி ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது நானே இறைவன் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். தெய்வம் நீ என்றுணர்ன்னு சொன்னாரே, அதை உணரும் போது அதற்கு மேல ஒரு பெரிய விஷயம் கிடையாது பெறுவதற்கு என்ற ஒரு நிறைவு வரும். அவ்வளவு பெரிய ஒரு பேற்றை நாம் பெற்றிருக்கிறோம் என்று எண்ணும் பொழுது அது எவ்வாறு இருக்கும்? இன்பமாக இருக்கும். இந்த இன்பம் எத்தனை நாளுக்கு இருக்கும்? இந்த இன்பம் எத்தனை நாளைக்கு ஒரு முறை வரும், போகும்? இந்த இன்பம் குறையுமா? கிடையாது. இது குறைவு படாத, நீடித்த, முழுமையான, நிச்சயமான ஒரு பேரின்பம். இந்த மண்ணில் வாழ வந்து விட்ட நாம் இதைப் பற்றி தெரிந்து கொள்ளணும் இல்லையா? இந்த பேரின்ப நிலையை அடையணும் இல்லையா? இல்லையென்றால் அது நம்ம வாழ்க்கையில் ஒரு குறைதானே? எத்தனை பேருக்கு இந்த சங்கதி தெரியும்? எனவே தெய்வத்தை அறிய வேண்டும், தெய்வம் என்று ஒன்றிருக்கிறது அதை அறிய வேண்டும், அதை அறிந்தால் தான் வாழ்க்கை முழுமையாக இருக்கும். அதை அறிந்தால்தான் நமது உடலுக்கோ மனதுக்கோ துன்பம் எழாமலும், பிறருக்குத் துன்பம் கொடுக்காமலும் வாழலாம். அதற்கு மனதை அறிய வேண்டும். மனதை அறிவதற்கு உயிரை அறிய வேண்டும். உயிரை அறிவதற்கு தெய்வத்தை அறிய வேண்டும். தெய்வத்தை அறிந்தால், இறைவனை அறிந்தால், மனதை அறிந்தால், உயிரை அறிந்தால், குறைவு படாத ஒரு பெரிய்ய்ய்ய்ய இன்பம் இருக்கிறது தெரியுமா? அந்த இன்பத்தை பெற வேண்டாமா? நமக்கு இந்த உலகத்திலும் இன்பமாக வாழ தெரியவில்லை, அந்த உலகத்திற்கு போவதற்குரிய வழியிலும் நாம் வாழவில்லை. அந்த உலகம்னா, சொர்க்கம்னு சொல்லுவாங்க அந்தக் காலத்துல. அப்படி ஒரு உலகம் கிடையாது, ஆனால் அப்படி ஒரு நிலை இருக்கிறது. எந்த நேரமும் சந்தோசமா இருக்கக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. எந்த நேரமும் சந்தோசமா இருக்கக்கூடிய ஒரு நிலைதான் சொர்க்கம். இதைதான் சொர்க்கத்துக்கு போறதுன்னு சொல்லுவாங்க.
அன்பர்களே!
இந்த உலகத்துல சந்தோசமா வாழணுமா? இந்த உலக வாழ்க்கை நிறைவுறும் போது சொர்க்கத்துக்கு போகணுமா? அதுக்கு ஒரே வழி தவம் செய்யறதுதான். தவம் ஒண்ணுதான் உடலுக்கு கஷ்டம் வந்தாலும் தீர்க்குது, மனசுக்கு கஷ்டம் வந்தாலும் தீர்க்குது. ரெண்டு பயிற்சிகள் இல்லை, ஒரே பயிற்சிதான். இதைதான்ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ன்னு சொல்லுவாங்க. இங்கே கல் என்பது தவம், மாங்காய் என்பது உடல் நலம் மற்றும் மனவளம். தவத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்ட நாம அதை சரியா பயன்படுத்தணும். தவப்பயிற்சியை கையில வைச்சுட்டு இருக்கற நமக்கு உடல்லயும் வருத்தம் இருக்கக் கூடாது, மனசுலயும் வருத்தம் இருக்கக் கூடாது. சில சமயம் உடல்ல வருத்தம் வரத்தான் செய்யும். நம்ம அப்பா, அம்மா அவங்க உடம்பை நல்லா வைச்சுக்கலை. அவங்களோட குறைபாடுடைய வித்தை கொடுத்து நம்மை பெத்ததுனால நம்ம உடம்புக்கு சில வருத்தம் வரத்தான் செய்யும். அதுக்கு ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா உடற்பயிற்சி செய்யுங்க. அதே மாதிரிதான் மனசுக்கும். ஏழு தலைமுறைகளாக செய்த பாவம் நமக்கு கவலையாக வருகின்றது. நாம நினைச்சது நடக்கலை, ஏதோ கஷ்டம் வருதுன்னா அதுக்கு காரணம் நாம செஞ்ச பாவம்தான். நமது முன்னோர்கள் செய்த பாவமும், நாம் செய்த பாவமும் சேர்ந்துகொண்டு இப்பொழுது நமக்கு துன்பமாக வருகின்றது. அதை தவம் செய்துதான் நீக்கிக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் பாவம் மட்டும் பண்ணலை, புண்ணியமும் பண்ணியிருக்காங்க, அதுவும் கொஞ்சம் இல்லை, நிறையவே பண்ணியிருக்காங்க, இல்லைனா நமக்கு இந்த தவப்பயிற்சி கிடைத்திருக்காது. எனவே நமக்கு கிடைத்த தவப்பயிற்சியை விடாமல் முயன்று பயிற்சி செய்து வெற்றி பெற்று உடலிலும் மனதிலும் இன்பம் அனுபவிப்போமாக!
- நினைவில் உங்களோடு kgs.