KG Sami1937 — 2006

தவம் - 3

Signed KG Sami

மிகப் பழங்காலத்தில் பிராணாயாமத்தில் மூலம் அவரவர்களும் தாங்கள் மூலாதாரத்திலிருந்து உயிர்ச் சக்தியை ஆக்கினைச் சக்கரத்துக்குக் கொண்டு வருவார்கள். இப்பொழுது நமது அருள் தந்தையவர்கள் மனவளக்கலை மன்றத்தில் கற்றுத் தருகின்ற தொடுமுறையானது (touch method) அனாதி காலம் தொட்டு (எந்தக் காலத்தில் தொடங்கியது என்று தெரியாத காலந் தொட்டு) இருந்து வருகிறது. ஆனால் இம் முறையை இலைமறையு காய் மறைவாகவும் ரகசியார்த்தமாகவும் வைத்திருந்தார்கள்.

தெரிந்தவர்கள் யாருக்கும் அவ்வளவு சுலபத்தில் தெரிவித்து விடுவதில்லை. பக்குவம் பார்ப்பார்கள். பொறுமையும், ஆன்மீக நாட்டமும் முழுமையாக இருக்கின்றதா என்று பார்ப்பார்கள். இழுத்தடிப்பார்கள். தனக்கும், ஆசிரமத்துக்கும் தொண்டு செய்யச் சொல்வார்கள். சீடன் பக்குவப்படுவதற்கு முன் சீடன் அலுத்துப் போய் உலகியலுக்குத் திரும்பி விடுவதுமுண்டு. குரு உயிர் துறந்து விடுவதும் உண்டு. இந்தக் காரணங்களாலெல்லாம் குரு சிஷ்ய பாரம்பர்யம் என்ற தொடர் விட்டுப் போய் தொடு முறை குண்டலினி யோகம் மறைந்தே போய் விட்டது.

ஆனால், எப்படியோ, அருகம் புல்லின் வேர் மண்ணுக்குள்ளாகவே போய் வேறோரிடத்தில் முளைப்பது போல், மறைந்து விட்டது, என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த குண்டலினி யோகம், பர்மாவில் போய் முளை விட்டுப் பரவலாயிற்று அங்கே தான் பரஞ்சோதி மகான் என்பவர் அதைக் கற்றுக் கொண்டு இந்தியாவுக்கு வந்து பரப்பத் தொடங்கினார்.

இது இப்படி இருக்க, நமது அருள் தந்தையவர்கள் “வைத்திய பூபதி கிருஷ்ணாராவ்” அவர்களிடம் பல வருடங்களாக அணுக்கத் தொண்டராக இருந்து (கிட்டேயே இருந்து) ஆன்மீக வேதாந்த பாடங்கள் படித்து வந்தார்கள் அல்லவா? அப்பொழுது குண்டலினி யோகத்தைப் பற்றியும், தொடுமுறை பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. நமது அந்த ஆக்கினைச் சக்கரத் தீட்சையைத் தொட்டுக் காட்டி எனக்குக் கொடுங்கள் என்று மகரிஷிகள் கேட்டார்கள். அதற்கு ‘அந்த முறையை பற்றி நான் கேளிவிப்படிருக்கிறேனே தவிர, அதை தெரிந்து கொள்ளவுமில்லை, செய்து வரவுமில்லை, என்றாலும் நீயே உட்கார்ந்து ஆக்கினைச் சக்கரத்தில் மனதை பொறுத்திக் கவனி உயிர் உணர்வு கிட்டும்’ என்றார், கிருஷ்ணராவ்.

மகரிஷி அவர்களும் அதே மாதிரி கவனிக்க, உட்கார்ந்து தவம் செய்யச் செய்ய, ஆக்கினையில் ஒரு அழுத்தம், கனம் தெரிய ஆரம்பித்தது. ஆனால் இது இன்னது என்று தெளிவு இல்லை. ஆனாலும் நெற்றியில் ஏற்பட்டிருக்ககூடிய வித்தியாசமான உணர்வு சில நேரங்களில் அதிகரித்து பெரிய தொந்திரவாகவும் போய் விட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணம் செய்தால் என்ஜின் பக்கத்தில் உட்கார முடியாது. என்ஜின் சத்தம் நெற்றியில் அடிக்கும். கல்யாண வீட்டுக்கோ, இழவு வீட்டுக்கொ போனால் மேளம் அடிக்கும் இடத்தில் உட்கார முடியாது. மேள சத்தம் நெற்றியில் அடிக்கும். பொறுக்கவே முடியாது என்ற நிலையும், தாங்கமுயாத தலை பாரமும் பல சமயம் வந்துள்ளன. இதைப் பற்றி தனது குருவிடம் குறிப்பிட்ட பொழுது அவர் சொன்னார் : ‘அது தான் குண்டலினி சக்தி. தலைக்கு ஏறிவிட்டது; வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டது; உனது ஞான மோட்சத்துக்கு வழி திறந்து விட்டது. ஆனாலும் நமது அறாட வேலைகளைக் கவனிக்க முடியாமற் போகுமளவுக்குத் தொந்திரவாக அது மாறிவிடக் கூடாது. இதற்கு எனக்கு வழி தெரியவில்லை. ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் என்பவர் “இறங்குபடி” என்ற பெயரில் இதற்கு மாற்று வைத்திருக்கிறாராம் அவரிடம் போய் குண்டலினி யோகத்தை முறைப்படுத்திக் கொள்” என்று சொன்னாராம்.

மகரிஷிகளும் அதே போல் “உலக சமாதான ஆலயம்” என்ற பரஞ்சோதி மகானின் சபைக்குச் சென்றிருக்கிறார். சிறிது நேர விசாரணைக்குப்பின் பரஞ்சோதி மகான் அவர்கள் மகரிஷிகளை உட்கார வைத்து இறக்கு படி கொடுத்து விட்டார். நெற்றியிலே கை வைத்து மேலே இருக்கின்ற குண்டலினி சக்தியை முதுகந்தண்டு வழியாக மூலாதாரத்தில் கொண்டு வந்து அமர்த்தி விட்டார். என்ன ஆச்சர்யம்! ஸ்விட்சில் கை வைத்த உடன் விளக்கு அணைந்து போவது போல், தலை வலி, தலை பாரம் என்ற தொந்தரவெல்லாம் ஒரு நொடியில் தீர்ந்து விட்டன. அப்பொழுது ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் சொன்ன விளக்கம் இது:

”குண்டலினி சக்தியைக் குரு நிலையில் இருக்கக் கூடிய ஒருவர் தான் மேலே கொண்டு வர வேண்டுமே தவிர சீடன் தனக்குத் தானே செய்யக் கூடிய பயிற்சி இல்லை அது. தனக்குத் தானே உயர்த்தித் உயர்த்திக் கொள்ளக் கூடிய பயிற்சியின் மூலம் ஆக்கினைக்கு கொண்டு வரக் கூடாது. அவ்வாறெல்லாம் செய்தால், இந்த மாதிரியான தொந்தரவுகள் ஏற்படும். அந்தத் தொந்தரவுகள் எல்லாம் இந்தப் பயிற்சியினால் தான் ஏற்படுகிறது என்பதும் தெரியாது. சரிப்படுத்திக்கொள்ள வழிமுறைகளும் தெரியாமற் போய்விடும். அதனால் தலைவலி வரும், மயக்கம் வரும், பைத்தியம் பிடிக்கும், மரணமும் ஏற்படும். எனவே குரு தான் தனது கையால் தீட்சை கொடுக்க வேண்டும். குண்டலினி சக்தி நெற்றியில் வேலை செய்வதையும் அது சீடனால் தாங்க முடியாமற் போகின்ற நிலை வருவதையிம் கண்காணிக்க குரு சீடனைத் தன் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். தக்க நேரம் வரும் போது உடனே இறக்கி விடவும் வேண்டும்”.

பரஞ்சோதி மகான் சபையில் குண்டலினி சக்தியை ஆக்கினைச் சக்கரத்துக்கு கொண்டு வருவதை “ஏறுபடி தவம்” என்று சொல்வார்கள். அதை மூலாதாரத்தில் மீண்டும் கொண்டு சென்று அமர்த்துவதை “இறங்குபடி தவம்” என்று சொல்வார்கள்.

பரஞ்சோதி மகானைச் சந்திப்பதற்கு முன்னமே நமது அருள் தந்தை அவர்களுக்கு சுய பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தி ஆக்கினைச் சக்கரத்துக்கு வந்து விட்டது. அதன் காரணமாகத் தான் அறிவு மேன்மையும், ஞான நிலையும் கிடைத்திருக்கும். அல்லது அதற்கு முன்னாலேயே அவருக்கு உயிர் உணர்வு கிடைத்திருக்க கூடுமோ! அதனால் தான் அவருக்கு வைத்தியத்திலும், தத்துவத்திலும், கிருஷ்ணாராவிடமும் ஈடுபாடு கிடைத்திருக்குமோ! என்று ஓர் எண்ணம் எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. எனது யூகம் சரியானது தான் என்பது சந்தர்ப்பவசமாக வெளிப்பட்டது.

ஒரு நாள் மகரிஷிகள் அருகில் உட்கார்ந்து நான் பேசிக் கொண்டிருந்த போது, அவர் நெற்றியில் சரியாக ஆக்கினைச் சக்கரத்தில் ஒரு மச்சம் இருப்பதாகத் தோன்றியது. நான் வியந்து போனேன். கிருஷ்ணாராவோ, பஞ்சசோதி மகானோ தீட்சை கொடுப்பதற்கு முன்னரே இறைவனே அருள் தந்தை அவர்களுக்குத் தீட்சை கொடுத்து விட்டான் போலிருக்கிறதே, சரியாக ஆக்கினை சக்கரத்தில் ஒரு மச்சத்தை உண்டு பண்ணி!

நெருங்கிப் பார்க்கின்ற சந்தர்ப்பம் வந்த பொழுது அது மச்சமில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. அது “ஒரு பச்சைக் குத்திக் கொண்ட அடையாளம்” என்று தோன்றியது. ஆக்கினைச் சக்கரத்தில் பச்சைக் குத்திக் கொண்டதால் தான் யாரும் தீட்சை கொடுக்காமலே குண்டலினி சக்தி மகரிஷிகளுக்கு மேலே வந்திருக்கிறது போலும் என்று நான் நினைத்துக் கொண்டேன். என்றாலும், மகரிஷிகளிடம் நேரிடையாக விளக்கம் கேட்கின்ற சந்தர்ப்பம் வந்த பின்னர் தான் உண்மை தெரிந்தது.

”அப்பா! அது மச்சமும் இல்லை, பச்சையும் இல்லை. நான் 16 நாள் குழந்தையாக இருந்தபொழுது பழுக்கக் காய்ச்சிய ஊசி முனையால் சுட்டு விட்டார்கள். அப்பொழுது ஏற்ப்பட்ட தீப்புண்ணின் வடு தான் இது” என்று விளக்கினார்கள்.

இப்பொழுது எல்லாம் தடுப்பூசி (Vaccine) போடுகிறார்கள் அல்லவா ! அது போல் அந்தக் காலத்தில் பச்சைக் குழந்தையாக இருந்தபோதே பழுக்கக் காய்ச்சிய ஊசி முனையால் தொட்டு விட்டார்களாம். கர்ரென்று வலியும், எரிச்சலும் எடுக்கவே, குழந்தை வேதாத்திரி வீல் என்று கத்தினார்களாம். கண்ணையும், முகத்தையும் கழித்துக் கொண்டு கையையும், காலையும் உதறிக் கொண்டு நீண்ட நேரம் கத்திக் கொண்டு இருந்தாராம் குழந்தை வேதாத்திரி. இந்த இடத்தில் மகரிஷிகள் தொடர்ந்து அளித்த விளக்கமானது:

”முற்காலங்களில் இப்படியும் ஒரு முறை வைத்திருந்தார்கள். “உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பழுக்கக் காய்ச்சிய உலோகத்தால் தழும்பு ஏற்படும் விதமாக சங்கு, சக்கர முத்திரைகள் போடுவார்கள்” அம்மாதிரியான தழும்புகளைப் பாண்டிச்சேரியில் நான் வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு அன்பரிடம் பார்த்து இருக்கிறேன். குண்டலினி யோகத் தீட்சை என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுது “நான் கூட தீட்சை வாங்கி இருக்கிறேனே ! “ என்றார் அவர். புதுச்சேரி மன்றம் தோன்றியது 1969 இல். இது நடந்தது 1976. 1969 முதலே பாண்டிச்சேரியில் மன்றம் இயங்கிக் கொண்டிருந்த பொழுது நான் காரைக்காலில் இருந்தேன். ஆகையால் இந்த அன்பரைச் சந்திக்கவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டேன். பாண்டிச்சேரி மன்றத்துக்கு வந்து போக இருந்ததால், பாண்டிச்சேரி அன்பர்களை எனக்குத் தெரியும். ஆதலால் இவரைப் பற்றி விசாரித்தேன்.

அதற்கு அவர் சொன்னார்: ‘உங்கள் மன்றத்தில் இணைந்து கொண்டு குண்டலினி தீட்சை பெறவில்லை. நான் பிராம்மண சமுதாயத்தைச் சேர்ந்தவன். அதிலும் அய்யங்கார் பிரிவைச் சேர்ந்தவன். நாங்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுது சங்கு போலும் சக்கரம் போலும் இருக்கும் உலோக அச்சினை எடுத்து பழுக்கச் சூடுபடுத்தி வலது புஜத்திலும் இடது புஜத்திலும் தொட்டு விடுவார்கள். தீப்புண் ஆறிய பிறகு தழும்புகள் சங்கு மாதிரியும் சக்கரம் மாதிரியும் இருக்கும். இதைச் சங்கு, சக்கர தீட்சை என்று சொல்வார்கள். அதைத் தான் நான் குறிப்பிட்டேன் என்று சொன்னார். இந்த வலலாற்றை மகரிஷிகளிடம் எடுத்துச் சொன்னேன்.

அதற்கு அவர்கள் சொன்ன விளக்கம் வருமாறு: திடீரென்ற வேகமான வலி உணர்வு கூட குண்டலினி சக்தியைத் தூக்கிவிட்டு விடும். இந்த மாதிரி சூடு நெற்றியிலும், தலையிலும் போட்டுக் கொள்வது அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்தது என்றாலும் குண்டலினி சக்தி இந்த மாதிரியான முறைகளில் எல்லாம் மேலே ஏறிவிடாது. அதற்கு ஆசான் தனது தவ ஆற்றலையும், தொடு முறையையும் பயன்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தத் தான் “தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது” என்று ஒரு பழமொழி உருவாயிற்று.

மகரிஷிகள் மேலும் ஒரு விளக்கம் சொன்னார்கள் “திபெத்தில் ஒரு விநோதமான பழக்கம் வைத்திருந்தார்களாம். ஒரு சிறிய பூமுள்ளை எடுத்து ஆக்கினைச் சக்கரத்தில் அடித்து பதித்து விடுவார்கள் (Plug). அது உடம்புக்கு எந்தத் தீங்கும் செய்யாமல், ஒரு விதக் கட்டாயமான ஊறுணர்வை ஏற்படுத்தும். குண்டலினி சக்தி மேலே ஏறுவதற்க்கும், நினைப்பதற்கும் வாய்ப்பாகும். காலவோட்டத்தில் அந்த முள் உடலால் கிரகிக்கப்பட்டு விடும் (absorb)’. இவ்வாறெல்லாம் முற்காலத்தில் நமது முன்னோர்கள் பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள். படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

தலைகீழ் நின்றால் கீழே இருக்கக் கூடிய மூலாதாரம் மேலே போய், மேலே இருக்கிற ஆக்கினைச் சக்கரம் கீழே வந்து விடும் அல்லவா, அதனால் குண்டலினி சக்தி ‘கிடு கிடு’ வென்று ஆக்கினைச் சக்கரத்துக்கு இறங்கி (!) விடும் என்று ஒரு நினைப்பு. அதனால் தான் பல விதமான முயற்சிகளுக்கப்புறமும் ஒரு கார்யத்தைச் சாதிக்க முடியவில்லை என்றால் “நானும் தலை கீழாக நின்று பார்த்து விட்டேன் ஒன்றும் நடக்க வில்லை” என்ற வார்த்தை ஏற்பட்டது.

Keep reading

More from the archive

Arulnithi Muthappan

தியாகச் செம்மல் வேதாத்திரி

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதோ, எழுபத்தொன்றோ, சரியாக நினைவிலில்லை. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி. கூடுவாஞ்சேரியில் மகரிஷிகளுடைய இல்லத்தின் எதிர்புறத்தில்…

KG Sami

தவம் - 35

வான் காந்தம் வரவு இயற்கையாக வருவதைவிட விளக்கிலும், கண்ணாடியிலும் வருவது அதிகம். இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் நீங்கள் பயிற்சி…

KG Sami

தவம் – 29

இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்து சிந்தித்துப் பார்த்தோமென்றால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆஹா, இப்படிப்பட்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த உலகத்தை…

Granthaalayam

மதி

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!மதின்னா என்ன? மதியென்றால் சந்திரன்…

KG Sami

தவம் - 38 A

ஏனென்றால் அப்புறம் கல்யாணம் ஆகாது. வயசு அதிகமாகும். படிப்பு அதிகமாகும். அதற்குத் தக்க பையனைத் தேட வேண்டும். அதன்பின் படிப்பு அதிகமாக அதிகமாக சம்பளம்…

Meena Kumaran

’வாழ்க வளமுடன்!’ என்று கூறுவது தவறா? இலக்கணம் என்ன சொல்கிறது?

நமது இயக்கத்தில் வாழ்க வளமுடன் என்கின்ற ஒரு தாரக மந்திரத்தை நமது அருள் தந்தை அவர்கள் உருவாக்கிச் சேர்த்திருக்கிறார். இது மனவளக்கலைஞர்களாகிய நம்மால்…