துவாத சாங்கம் என்று நாம் செய்கின்ற தவம் துரியாதீத தவத்தில் வருகிறது. துவாத சாங்கம் போய் சென்று பின் துரியம் போய் இறங்கி வந்து வாழ்த்துவதும் உண்டு. இப்படிச் செய்வதால் அதிக நேரம் துவாத சாங்கத்தில் நிற்க முடியும். துரியாதீத தவத்தில் 2 நிமிடம் அல்லது அதற்க்குக் கம்மியாகத் தான் நிற்க முடியும்.
இப்படி ஒரு தவம் எங்கும் யாரும் செய்ததாக நடத்தியதாக தகவல் இல்லை. குறிப்பும் இல்லை. நமது அருள் தந்தையவர்கள்தான் இந்த ‘துவாத சாங்க தவம்’ என்னும் என்னும் தவத்தில் ஒரு நிலையாக ஒரு கட்டமாக ‘துவாத சாங்கம்’ என்றும் வைத்திருக்கிறார்கள். “துவாத சாங்கம்” என்ற வார்த்தை மட்டும் பழைய ஆன்மீக நூல்களில் ஆங்காங்கு காணக்கிடக்கின்றன.
அது என்ன? எதை துவாத சாங்கம் என்று சொல்கிறார்கள்? அது ஒரு தத்துவமா? அல்லது ஒரு தவமா? என்று தெரியவில்லை. இந்த துவாத சாங்கத் தவத்தை வடிவமைத்தது நமது அருள் தந்தையவர்கள் தான், தெரிந்து கொள்ளுங்கள்.
“துரியாதீத தவம்” என்று ஒரு தவம் கிடையாது. ‘துரியாதீத தவம்’ என்று ஒரு வார்த்தை உண்டு. மனதினுடைய அறிவினுடைய அவஸ்தைகள் ஐந்து உண்டு. அவஸ்தை என்றால் துன்பம் என்று அர்த்தமில்லை. அது இயங்குகின்ற நிலை.
ஐந்து அவஸ்தை நிலை உண்டு. நனவு, கனவு, தூக்கம், ஜாக்கிரதாவஸ்தை என்று ஒரு நிலை உண்டு. அதாவது செய்வன திருந்தச் செய், செய்வன தெரிந்து செய் என்ற முறையில் செய்வது. Conscious ஆக எந்தக் காரியமும் செய்வது, இப்பொழுது நாம் பென்சில் சீவுகிறோம். இது கொஞ்சம் கட்டையாக இருக்கிறது. ‘சர சர’ வென சீவ வரமாட்டேன்கிறது. இன்று தான் வாங்கின புது பிளேடு. ரொம்ப எச்சரிக்கையாக சிவனும். இல்லையெனில் எப்படியும் கையில் பாய்ந்து விடும். இதுதான் ஜாக்கிரதை. எந்தச் செயல் செய்கிறோமோ அந்தச் செயலிலே அறிவு ஒன்றி தவறேதும் நேர்ந்து விடாமல் முழு வெற்றியும் வரக்கூடிய நிலை தான் ஜாக்ரதாவஸ்தை. இது நனவு.
அப்படியில்லாமல் வேறு நிலைகளும் உண்டு. ஜாக்ரதாவஸ்தை நனவு, கனவு என்று ஒன்று உண்டு. கனவில் சில காரியங்கள் செய்கிறோம் என்பது கிடையாது. அந்தக் காரியங்கள் எல்லாம் நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது இல்லை. அதுவாக காரியங்கள் வந்து நிற்கும். அந்தக் காரியங்கள் எல்லாம் செய்வதால் விளைவு ஏதும் ஏற்படாது. நீங்கள் கனவில் எத்தனை பாம்புகள் அடித்தாலும் ஒரு பாம்பு கூட சாகாது. அது தான் கனவு.
இன்னொன்று தூக்கம். இருக்கிறோமோ இல்லையா என்பது தெரிவது இல்லை. வள்ளுவர் சொன்னார். துஞ்சினார் செத்தாரில் வேறில்லை. தூங்கிப் போனவனும் செத்துப் போனவனும் ஒன்று தான். அவ்வாறு தூங்கி விட்டால் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியாது. நமக்கு என்ன நடக்கிறது என்பதும் தெரியாது. இன்னொரு அதிசயம். நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாது.
அந்தக் காலத்தில் இவற்றைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி பண்ணி வைத்திருக்கிறார்கள். வேதாந்தத்தில் இது பற்றி நிறைய வரும். கனவு, நனவு, தூக்கம், தூக்கம் என்பதை ‘ஸுஷுப்தி’ என்று குறிப்பிடுவார்கள். இது சமஸ்கிருத வார்த்தை. நான்காவது நிலை துரியம். துரியம் என்ற வார்த்தைக்கு ‘The fourth state’ என்று அர்த்தம். நான்காவது நிலை துரியம். அதாவது அது தவம். ஐந்து அவஸ்தை நிலைகளில் இது ஒன்று தான் தவத்தில் சேர்த்தி. ஐந்தில் துரியம்தான் தவ List-ல் இருக்கக் கூடியது.
ஐந்தாவது நிலை ‘துரியாதீதம்’. வார்த்தை இருக்கிறது. இந்த வரிசையில் இல்லாமல் வேறு நூல்களிலும், வேறு இடங்களிலும் ‘துரியாதீதம்’ என்ற வார்த்தை இருக்கிறது. வள்ளலார் நூல்களில் ‘துரியாதீதம்’ என்ற வார்த்தை வருகிறது.
எனக்கு தெரிந்து ‘துரியாதீதம்’ என்ற தவத்தை யாரும் செய்ததாக தெரியவில்லை. மகரிஷிகளும் அவ்வாறுதான் சொல்வார்கள். வள்ளலாரும் இத்தவத்தை செய்ததாகக் குறிப்பில்லை. அவர் எழுதிய நூல்களில் துரியாதீத தவத்தை அவர் செய்ததாக எழுதப்படவில்லை. Mention பண்ணுகிறாரே தவிர, இத்தவத்தை அவர் செய்ததாகத் தெரியவில்லை.
வள்ளலார் தவம் செய்தாரா? செய்துதான் இருப்பார். என்ன தவம் செய்தார்? அதை யாரிடம் கற்றுக் கொண்டார்? அத்தவத்தினை எத்தனை பேருக்குச் சொல்லி கொடுத்தார்? எத்தனை பேர் செய்தார்கள்? என்ன வெற்றி கண்டார்கள்? இதற்கு எல்லாம் பதில் இல்லை.
செயல் நடைபெறாமல் வார்த்தை மட்டும் வருமா? செயல் நடைபெறாமல் அதற்கு ஒரு பெயர் வந்திருக்குமா? எனவே வள்ளலாரும் துரியாதீத தவத்தைச் செய்து இருக்கலாம். துரியாதீத தவத்தை யாரோ ஒரு சிலர் ஏதோ ஒரு கால கட்டத்தில் செய்து இருக்கிறார்கள்.
கொஞ்சம் நல்ல விஷயத்தை எல்லாம் நம் நாட்டில் ‘ரகசியார்த்தம்’ என்று வைத்திருக்கிறார்கள். பலருக்குத் தெரிவிப்பதில்லை. சாதாராமாகத் தெரிவிப்பதில்லை. ‘ரகசியார்த்தம்’ காரணமாகப் பல விஷயங்கள் அழிந்துப் போய் விட்டது. ரொம்ப உயர்வான விஷயம் மட்டமான ஆள் கையில் கிடைத்தால் அது சுய நலனுக்கோ அல்லது உலக கெடுதலுக்கோ பயன்படுத்தி விடுவார்கள், என்று கருதி இருக்கலாம்.
‘இலை மறைவு காய் மறைவாக’ இருக்கட்டும் தெரிவிப்போம் சமுதாயத்திற்கு. காலம் வரட்டும் என்று விட்டு விடுவார்கள். அது தான் ‘ரகசியார்த்தம்’.