KG Sami1937 — 2006

வீடு பேறு

Signed KG Sami

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய  உரை - பேச்சு நடையில்)

       அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே தேடுகிறோம். அடையாளம் தெரிஞ்சால்ல தேடறதுக்கு?. எதையும் தேடுவதாய் இருந்தால் அதே மாதிரியான அடையாளம் வேண்டுமல்லவா? அப்படின்னா இறைவனுக்கு என்ன அடையாளம்?. இன்னொரு கேள்வி வருது,  இறைவன்னா மொத்தம் எத்தனை பேரு?. இதற்கு பாரதியார் ஒரு பாட்டு பாடியிருக்கிறார். அந்தப் பாட்ட சினிமாவில எடுத்து போட்டாங்க. என்ன படம்னா பராசக்தி. பராசக்தி படம் எப்பவாச்சும் வந்தா பாருங்க, இல்லே டி.வி.யில போட்டா பாருங்க. அதுல வருது அந்தப் பாட்டு. ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று கூறி அலையும் அறிவிலிகாள்! பல்லாயிரம் தெய்வம், பல்லாயிரம் வேதம், அறிவொன்றே தெய்வம் கேளீரோ! என்று பாரதியார் பாடியிருக்கிறார், தெரியுமா?.

      அன்பர்களே! பாரதியார் ஒரு கவிஞர். மகாகவி என்றும் தேசியகவி என்றும் பேர் வாங்கியவர்.  இதுதான் பல பேருக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு ஞானக்கவி, யோகி என்பது அநேகம் பேருக்கு தெரியாது, அவர் ஒரு பக்திமானும் கூட, பராசக்தியை வழிபட்டவர். தேவிதாசன் என்றும் சக்திதாசன்  என்றும் புனைப்பெயர் வைத்துக் கொண்டு பல கட்டுரைகளை எழுதியவர். அறிவு ஒன்றே தெய்வம் என்று ஆணித்தரமாக சொன்னவர்.                

      அன்பர்களே! தெய்வம், ஒன்றா, பலவா?. பலவற்றையும் குறைச்சு ரெண்டுன்னு வெச்சுக்குவோம், ஒரு பேச்சுக்கு. ரெண்டுன்னா சின்னதெது? பெருசெது? முந்தையது எது? பிந்தையது எது?. முந்தையது  ஒண்ணு இருக்கும் போது பிந்தையது ஏன் வந்தது?. முந்தையதால எதுவும் ஆகல, அத முடிக்கிறதுக்கு பிந்தையது வந்ததா?. பல பிரச்சனை வருது பாருங்க. ஆனால் உள்ளத உள்ளபடி அறிந்து, வணங்கி, போற்றி, மதித்து பயன் பெறணும். நெருடலான விஷயமா இருக்குதா? இல்லையா?. ரெண்டாவது கேள்வி ஒன்றா இரண்டா?, இரண்டா பலவா?.

      அன்பர்களே! பர தெய்வ வழிபாடு என்று ஒன்று இருக்கிறது, சிறு தெய்வ வழிபாடு என்று ஒன்று இருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுன்னா  அது சாராயம்  கேக்கும், சுருட்டு கேக்கும், கோழி கேக்கும் நம்மைப் போல. பெருந் தெய்வம் 500 ரூபாய் நோட்டு கட்டு, கட்டா கேக்கும். இதுதான் சிறு தெய்வம், பெருந்-தெய்வங்கறது. இப்ப என்ன தோணுது?, வேண்டாம்ப்பா இந்த விவகாரம்ன்னு தோணுது. ஆனா, அது இல்லாம முடியாது. தெய்வம் இல்லாம வாழ்க்கையே கிடையாது. வாழ்க்கையில ஒரு நிர்ணயம், ஒழுங்கு, இதுதான் சரி, இதுதான் தப்பு, சரிங்கிறதத்தான் செய்யணும், தப்பு செய்யக்கூடாது, தப்பு செய்தால் துன்பம் வரும் என்ற ஒரு நியதி இருக்குது பாருங்க, அது தெய்வம் இருப்பதன் காரணமாகத்தான் ஏற்பட்டுச்சு. நாம எவ்வாறு வாழறோம்?. என்னமோ வாழறோம், காத்துல அகப்பட்ட நூலறுந்த பட்டம் மாதிரி. அது காத்தடிக்கற திசையில போயிட்டே இருக்கும், காத்து நின்னு போச்சுன்னா பொத்துன்னு விழும். அவ்வாறு நாம ஏதோ வாழ்ந்து கொண்டுருக்கோம். இந்த செய்திய ஏதோ சின்ன விஷயம்னு எடுத்துக்கக் கூடாது. நீங்களே ஆழமா சிந்தனை பண்ணிப் பாருங்க. ஆமா, நாம ஏன் வாழணும்?. வாழறது ஒரு வேலை, கஷ்டமான வேலை. அப்படி வாழ்வோம், இப்படி வாழ்வோம்னு பல பேரோட கூட்டுறவுல, பல பேரோட வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டு நமது வாழ்க்கையை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம ஒருவர் மட்டும்னா பிரச்சனையில்ல. ஒருவர் வாழறதே கஷ்டம். இதோ பாருங்க Bus Stand (பேருந்து நிலையத்து)-ல வந்து Bus (பேருந்து) எல்லாம் நிக்குது. மழை புடிச்சுருச்சு. சொல்லாம, கொள்ளாம வந்த மழைய என்ன பண்றது?. ஜனங்க எல்லாம் நனைஞ்சு போயி அங்கேயும், இங்கேயும் ஓடி... எத்தனை கஷ்டம்!...  இதாவது பரவாயில்ல... மேல வந்து இடிச்சர்றாங்க, எச்சி துப்பிர்றாங்க, திட்டறாங்க, குறுக்கால வர்றாங்க, பிடிங்கறாங்க, வாங்கிட்டு குடுக்க மாட்டேங்கறாங்க... எத்தனை விதமான கஷ்டம் வருது பாருங்க நமக்கு?. ஆமா, இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?. தேவையில்லாத மாதிரி தோணுது.

      தற்கொலை பண்ணிக்கலாமா? தற்கொலை பண்ணிக்காத வரைக்கும் நமக்கு பிரச்சனை. தற்கொலை பண்ணிக்கிட்டா அடுத்தவங்களுக்கு பிரச்சனை. அதுதான் பேய். இத உலகத்துல விடவும் முடியாது. ஆட்டு, ஆட்டுன்னு ஆட்டும். உயிரோடு இருக்கும்போதும் ஆடறோம், மாமியார் ஆகட்டும், மருமகள் ஆகட்டும், பார்ட்னர் ஆகட்டும்... குழந்தைங்களையெல்லாம் போட்டு ஆட்டறோம். செத்தாலும் ஆட்டறோம். ஆகவே, மனித இனத்துல மரணம் என்பது ஒரு தீர்வு இல்ல. மிருகம் செத்துப் போனா உடனே தெய்வம், தெரியுமா உங்களுக்கு?. பாமர பாஷையில சொல்லப்போனா, அப்படியே சொர்க்கலோகத்துக்குப் போயிடும்னு வெச்சுக்கங்களேன். ஏன்னா, அது பாவமே பண்றதில்ல. ஆனால் மனிதன் செத்தா உடனே பேய். ஏன்னா, அவன் அவ்வளவு பாவம் பண்றான். தெரிஞ்சு செய்யறது, தெரியாம செய்யறது, தான் செய்தது, தனது முன்னோர்கள் செய்ததுன்னு... இப்படி இருக்கக் கூடிய உலகத்துல எல்லோரும் ஏதோ ஓரளவுனாலும் பயந்தோ, மதித்தோ, நரகத்திற்கு பயந்தோ, நல்லதை மதித்தோ, தெய்வத்தை மதித்தோ, நல்லவர்களாக வாழ வேண்டுங்கறதுக்காக ஒரு நீதி ஒண்ணு இயற்கையில இருக்குது. அப்படி மட்டும் இல்லேன்னு வெச்சுக்கங்களேன், அகப்பட்டதெல்லாம் சுருட்டிக்கலாம், சுருட்டிக்கிட்டு கெடச்சதெல்லாம் தின்னுக்கலாம்னு வெச்சுக்கங்க...  நாம செய்யறத யாரும் ஒண்ணும் கேக்க முடியாதுன்னா... நாம பஸ்சுல வந்து இறங்கி கிடுகிடுன்னு ஓட்டலுக்கு போய், அல்வா வை, குலோப் ஜாமூன் வை, தோசை வை, இட்லி வைன்னு தின்னுட்டு, காசு கெடையாது போன்னா யார் கேக்கறது ?. இப்படி இருக்க முடியுமா?. எதற்கும் ஒரு நியதி இருக்கறது.  இந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது என்று சமுதாயம் சேர்ந்து ஒரு நியதி  ஏற்படுத்துகிறது. ஆமா, சமுதாயம் ஏன் இப்படி ஒரு நியதிய செய்து வெச்சுருக்குது?. தனக்கு கெடுதலாகவோ, பிறருக்கு கெடுத- லாகவோ  வாழக்கூடாதுங்கறதுக்காக. அதுதான் தெய்வ நீதி.

      அன்பர்களே! இப்ப அந்த தெய்வநீதி இருக்குது பாருங்க இறைவனுடைய சட்டம், அதுல  சின்னதா ஒண்ணு இருக்குது. அது என்னென்னா... மகரிஷி சொல்லக்கூடிய உதாரணம் நமக்கு இவ்வளவு நாள் தெரியாம இருந்தது... தெரிஞ்சுக்காம இருந்ததுதான் மூடத்தனம். என்ன அது? சாப்பிட்டா என்ன ஆகுது ? செரிமானம் ஆகுது. சில நேரம் செரிமானம் ஆகுது, சில நேரம் செரிமானம் ஆக மாட்டேங்குது. ஏன்? அதிகமா சாப்பிட்டதனால. அதிகமா சாப்பிட்டா என்ன? என் வாய், என் கை, என் வயிறு யார் என்னைக் கேக்கறது?ன்னு சாப்பிட்டா செரிமானம் ஆக மாட்டேங்குது. இது யார் கொடுக்கறது?ன்னு கேப்பாங்க மகரிஷி. ரொம்ப சின்ன விஷயம். எவ்வளவு சின்ன விஷயம்னு மனசுலே பிடிபடவே மாட்டேங்குது. கயிறுனா கையில பிடிபடும், நூலுன்னா கொஞ்சம் கஷ்டமா பிடிபடும், சிலந்தி நூலுன்னா கையில எப்படி பிடிபடும்? அந்த மாதிரி இருக்குது இந்த விஷயம், அவ்வளவு சின்ன விஷயம். நம்ம சாப்பாடு, நான் காசு குடுத்து வாங்கினேன். தின்னு பாப்பமேன்னு நெனச்சா,   இறைவன் இது என் உடம்பு, இதைக் கெடுப்பதற்கு உனக்கு அதிகாரமில்லை, அதனால் உன்னைத் தண்டிக்கிறேன், என்று அஜீரணத்தைக் கொடுக்கிறார். தெய்வ நீதி இது. இதிலிருந்து தப்பவே முடியாது.

      அன்பர்களே! நாமெல்லாம் கஷ்டப்படறோம், ஏன் கஷ்டப்படறோம்?. சொல்லப்போனா நாம ஓரளவுக்கு தப்பு பண்ணியிருப்போம், கஷ்டப்படலாம். நாம செய்து இருக்கக் கூடிய தப்பினுடைய அளவுக்கு அதிகமாக கஷ்டப்படறோமா, இல்லையா?. ஒவ்வொருத்தரும்  அப்படித்தான் நினைக்கிறோம். இல்லே, நீங்க கம்மியா  தப்பு செஞ்சு கம்மியா கஷ்டப்படறீங்களா? கூடத்தான் கஷ்டப்படறீங்க. இதுதான் மாதா, பிதா செய்தது எல்லாம் மக்கள் தலை மேலேன்னு சொல்றது. முன்னோர்கள் தவறு செய்தால், அவர்கள் அதை அனுபவிக்காம போயிட்டாங்கன்னா நமக்கு வரும். ஆமா அவங்க தப்பு செஞ்சாங்கங்கறதுக்கு என்ன அத்தாட்சி? ஏதாவது Record, Document (பதிவேடு) இருக்குதா? கையெழுத்துப் போட்டு குடுத்துருக்கறாங்களா? ஆமாங்க. நான் தப்பு செஞ்சேன், இந்தத் தப்பு இந்தக் காலத்துல என்று ஏதாவது உண்டா? ஒண்ணும் இல்லையே!, அப்புறம் எப்படி எனக்கு இந்த கஷ்டம் வருது? இங்கதான் விஞ்ஞானிகளுக்குத் தெரியாத ரகசியம் ஒண்ணு இருக்குது. என்னன்னா,  விஞ்ஞானிகளுக்குத் தெரியாதது மூணு. ஒண்ணு, மனம், ஒண்ணு தெய்வம், இன்னொண்ணு உயிர். அது Test tube (சோதனை குழாய்)-ல வராது, Microscope (மைக்ராஸ்கோப்)-ல, Telescope (டெலஸ்கோப்)-ல வராது. மறைபொருள்னு பேரு. இந்த மூணும் தெரியாம வேற எதையோ தெரிஞ்சுக்கிட்டு, எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன், எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்ங்க வேண்டியது. தெரிஞ்சுக்க வேண்டியது  ஜீவகாந்தம்தான். ஜீவகாந்தந்தான் மனமா இருக்குது. காந்தம், காந்தம் என்று இந்தப் பிரபஞ்சம் முழுவதும்  ஒரு சக்தி நிரம்பி இருக்கிறது. அதைத்தான் ஒரு இரும்பில அடைச்சிட்டு இந்தப் பசங்க வெச்சு வெளையாடறாங்க. காந்தக் கட்டிங்கிறது பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கக்கூடிய காந்த ஆற்றலை ஒரு சின்ன இடத்துல திணிச்சுக்கறது, மின்சாரத்தை Battery cell (பேட்டரி செல்)-ல திணிச்சுக்கறாங்க பாருங்க, அது மாதிரி. அந்தக் காந்தக் கட்டியில இருக்கக்கூடிய காந்தம் அரூபமான காந்தம், அது கைய நீட்டாம குண்டூசிய இழுக்குதே, அது எத நீட்டி அப்படி எடுக்குதுன்னு தெரியலையே?. அந்த அரூபமான காந்தம் அண்டவெளி முழுவதும் நிறைந்திருக்கிறது. அதை வான்காந்தம்னு சொல்வாங்க. அதே காந்தம் நம் ஒடம்புலயும் அகப்பட்டுக்கிட்டு, நம் உடம்புலயும் இருக்குது. உயிரு இருக்குது பாருங்க அந்த மாதிரி காந்தமும் நமது உடம்புல இருக்குது, அதுக்கு  ஜீவகாந்தம்னு பேரு.  காந்தம் வெளியில பெரிய அளவில இருந்தா அதுக்குப் பேரு வான்காந்தம், உடம்பில சிறிய அளவில இருந்தா அதுக்குப் பேரு ஜீவகாந்தம். புலன் இயக்கமாக, வெளிச்சமாக, சப்தமாக, சுவையாக, மணமாக, ஒவ்வொரு உணர்வாக நமக்கு ஏற்படறதெல்லாம் அந்த காந்ததுக்கு ஏற்படக்கூடிய அனுபவம்தான். நம் அனுபவம் இல்லை, காந்தத்துக்கு ஏற்படக்கூடிய அனுபவத்தைதான் நாம நம்ம அனுபவமா வெச்சுக்கிறோம். அப்புறம் இன்னொன்னு இருக்குது இந்த காந்தத்துல. நம்மிடத்தில்  என்னென்ன பதிவுகள் இருக்குதுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?.  நம்மிடத்தில் இந்த எண்ணம், சொல், செயல் என்று மூன்று விதமான நடவடிக்கைகள்   இருக்குது பாருங்க, அத செய்யறது எது?. எது எண்ணுது? எது பேசுது? எது செய்யுது? என்றால் மனம்னு சொல்லுவாங்க. மனம் என்று  சொல்லும்போது பெரும்பாலும் எண்ணத்தை மனம் என்று சொல்லுவாங்க. மூளையிலுள்ள பதிவுக்கு தக்கவாறு எண்ணம் வரும். உதாரணமா இன்னிக்கு மழை பெய்ஞ்சுதே தெரியுமா?, தெரியாதா?. எல்லார்க்கும் தெரியுமா? ஈரோட்டிலிருந்து இப்பத்தான் ஒருத்தர் வர்றார்னு வெச்சுக்கோங்க. என்னங்க அந்தியூருல மழை பெய்ஞ்சுதே தெரியுமா?ன்னா, தெரியாதும்பார். நமக்கு தெரியுதே எப்படி? மழை பெஞ்சுதில்லையா, நேற்று சாயந்திரம் ஐந்தரை மணிக்கு அந்த பதிவு நம்மிடத்தில இருக்குது. ஈரோட்டிலிருந்து இப்பதான் வந்தவருக்கு அந்த பதிவு அவர்கிட்டயில்ல. ஆகவே, நமது எண்ணம், சொல், செயல், புலன்களால பெறக்கூடிய அனுபவம் எல்லாம் மூளையில பதிவாகிடுது. அதனாலதான் மூளைய computer (கணினி), தலைமைச் செயலகம்னு விஞ்ஞானிங்க சொல்லுவாங்க. அதுல ஒண்ணு பாருங்க... computer (கணினி)  செயல்படுவதற்கு current (மின்சாரம்) வேணுமே...  current (மின்சாரம்) நின்னு போனா, computer (கணினி) வேலை செய்யாது. ரொம்ப ஜாக்கிரதையா Battery (பேட்டரி) எல்லாம்  வெச்சுக்கணும். current (மின்சாரம்)  ரெண்டு, மூணு நாளைக்கு நின்னாலும் கவலையில்ல என்றளவுக்கு current Supply (மின்சார இணைப்பு) பண்ணக்கூடிய Battery (பேட்டரி)  வேணும். current (மின்சாரம்) நின்னு போச்சுன்னா உடனே computer (கணினி), Battery (பேட்டரி)   மூலமா on (ஆன்) ஆயிடும். அவ்வாறு மின்சாரம் வந்தால்தான் Computer (கணினி) செயலாகும்னா, எது வந்தா மூளை செயலாகும்?. அதுதான் ஜீவகாந்தம். அந்த ஜீவகாந்தம் நம் உடலிலேயே உற்பத்தி ஆகி சுழன்று வருகிறது. உடல் முழுவதும் சுழலும். மூளையிலேயும் சேர்ந்து சுழலும். ஆகவே மூளையிலுள்ள பதிவு எல்லாம் நாம செய்யறது, நமக்கு வரக்கூடியது.  நமது எண்ணம், சொல், செயல், நமக்கு வந்த இன்பம், துன்பம் இந்த அஞ்சும் மூளையில பதிவாயிட்டே இருக்கும். இந்த ஜீவகாந்தம் சுழன்று வருவதுனால, அந்தப் பதிவு மூளைக்கும் transfer (மாற்றம்) ஆயிடும். மூளை வந்து  பருப்பொருள். ஜீவகாந்தம் நுட்பமானது அது ஒரு அலை, காற்றைவிட மென்மையானது. இன்னும் சொல்லப் போனால் உயிரைவிட மென்மையானது. இந்த அலையில பதிவு வருதுன்னா இங்கதான் அதிசயம், இங்கதான் இறைவன் ஒளிஞ்சிட்டி-ருப்பார்ங்கறார் வேதாத்திரி மகரிஷி.

      அன்பர்களே! ஜீவகாந்தமே விஞ்ஞானிக்குத் தெரியாது, ஜீவகாந்தத்தில் ஏற்படக்கூடிய பதிவை எப்படி மாத்துவாரு அவரு?. பாவம் பண்ணினாரு தாத்தா, அதனால இவன் ஒரு கையோட பொறந்து அவஸ்தைப் படணும்னு நிலைமை இருக்குது. ஆகவே கர்ப்பத்தில இருக்கும் போதே தன் உடலை கொழந்தை நிர்ணயம் பண்ணிக்குங்கறாங்க. ஓ!... இப்படிப்பட்ட தாத்தா, இப்படிப்பட்ட அப்பா, இப்படிப்பட்ட அம்மா, அவங்களுக்கு நாம கொழந்தையா வர்றோம். அவங்க இவ்வளவு பாவம் பண்ணிருக்காங்க, இவ்வளவு புண்ணியம் பண்ணிருக்காங்க, அந்தப் பாவத்தையும், புண்ணியத்தையும் நான் பொறந்துதான் அனுபவிக்கணும்னா எப்படிப்பட்ட உடல் இருந்தா என்னால் அனுபவிக்க முடியும்?ன்னு அந்த computer (கணினி)ல நடக்குது. ஆகவே என் உடலை இப்படி நிறை உள்ளதாகவோ, குறை உள்ளதாகவோ கட்டிக் கொள்கிறேன்ன்னு கட்டிக்குது.  விஞ்ஞானியா கட்டறாரு?. அடுத்து  மற்றொன்று சூழினும் தான் முந்துரும். மேன்மையோ, கஷ்டமோ உடலால மட்டும் கிடையாது தெரியுமா?. மனம், அறிவு, பண்பு, உணர்வுகள், பழக்க வழக்கம், பாவம்  எல்லாம் உடல்ல இல்ல. ஒருத்தர் நல்லவரா இருப்பாரு, ஆனா குள்ளமா இருப்பாரு. கெட்டவரா இருப்பாரு, நெட்டையா இருப்பாரு. ஆகவே குணாதிசயம் என்பது வேறு, உடல் உறுப்புகள் வேறு. இறைவன் எங்க ஒளிஞ்சிட்டிருக்கான்? ஜீவகாந்தத்துல ஒளிஞ்சிட்டிருக்கான். ஜீவகாந்தத்தை வேறு வார்த்தையில சொல்லபோனா மனம் என்று சொல்லுவோம். ஆகவே இறைவன்  மனமாக இருக்கக்கூடியவன். இறைவனை விஞ்ஞானியால ஒண்ணும் பண்ண முடியாது. ஏதாவது பண்ணினாலும் தான் முந்துரும். ரொம்ப படிச்சவங்க.., Doctor (மருத்துவர்) எல்லாம் என்ன செய்வாங்க தெரியுமா?. அவரு  Doctor (மருத்துவர்) ஆக இருப்பாங்க, பொண்டாட்டியும் Doctor (மருத்துவர்) ஆக இருப்பாங்க, மாமன், மச்சான் எல்லாம் Doctor (மருத்துவர்) ஆக இருப்பாங்க. உதாரணமா ஒரு பொண்ணு புள்ளதாச்சியா இருப்பா. அவங்க குடும்பத்துல ஜாதகம், ஜோசியத்துலயெல்லாம் நம்பிக்கை இருக்கும். சனி உச்சத்தில் இருக்கிறான், குரு சொச்சத்தில் இருக்கிறான், இந்த நேரத்தில் புள்ள பொறந்தா சரியா வராது, அத தள்ளி போட்டுடுவோம். அல்லது முன்கூட்டியே பண்ணிருவோம், அப்படின்னு பார்ப்பாங்க. அதென்னவோ பொறக்கற நேரத்திலதான் பொறக்கும். ஆகவே நல்ல நேரம் ஒண்ணு நிர்ணயம் பண்ணிருவாங்க, நிர்ணயம் பண்ணிட்டு அந்த நேரத்தில குவா, குவா வரலைன்னா கத்தி வெச்சு கிழிப்பாங்க, சிசேரியன் பண்ணி குழந்தைய வெளியில எடுத்துருவாங்க. நான் மொதல்ல சொன்னேன் பாருங்க, கொழந்தை தன்னுடைய உடலைத் தானே கட்டிக் கொள்கிறது என்று, தனக்கு எந்த அளவுல பாவப்பதிவு கெடைச்சது, புண்ணியப் பதிவு கெடைச்சது, பிறந்து வாழ்ந்து உலகத்துல என்ன அனுபவிக்கப் போறோம், அதற்கு எத்தகு உடல் வாட்டம் வேண்டும்? என்பதற்கேற்ப தன்னைத் தானே கட்டிக்கொள்கிறது. அது ஏன் இந்த மாதிரி செய்யுது தெரியுமா?, அதுக்கு  சுயநலம் கிடையாது. புலன்கள் இயங்காததுனால எனக்கு, தான், தனது, என் உடம்புன்னு திட்டமிடாது. நியாயம், நேர்மை, தெய்வ நீதின்னு  பிரம்ம நிலையிலேயே வயிற்றிலுள்ள குழந்தை இருக்கிறது. இந்த சார்பு இல்லாத, பாரபட்சம் இல்லாத நிலையினால அது உடம்பை கட்டிக் கொள்கிறதுன்னு வெச்சுக்கங்க. அதே மாதிரி அந்த குழந்தை வயித்துக்குள்ள இருந்துக்கிட்டே யோசனை பண்ணுது  எந்த நேரம் பொறக்கலாம், நல்ல கிரகமெல்லாம் எதுல நிக்குது?, இப்ப பொறந்தா நம்ம  கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்க முடியாதே!,  ரெண்டு நாள் பொறுப்போம் ஆ!.. இப்பதான் கெட்ட காலமெல்லாம் பொருத்தமா வருது, நல்ல லக்னாதிபதி நீச்சத்தில இருக்கிறான், சந்திரன் எட்டுல மறைஞ்சுக்கிட்டான், குரு காணாமப் போயிடுச்சு என்று முடிவுபண்ணிருச்சுன்னா அத தடுக்க முடியாதுன்னு வெச்சுக்கங்களேன். ஊகூம்! கெட்ட நேரம் வருது அவசரமா பொறந்துருவோம்ன்னு முடிவு பண்ணிட்டா அதையும் தடுக்கவும் முடியாது, தாமதம் பண்ணவும் முடியாது.  Doctor (மருத்துவர்) குடும்பத்துலேயே நல்ல நேரம் வருது, இத விட்டா அப்புறம் கெட்ட நேரம் வந்துரும், குழந்தை பொறக்கற அறிகுறியே இல்லை. ஆகவே, கிழிச்சு எடுத்துருவோம்ன்னு எடுக்க முயற்சி செய்வார்கள். என்னாகும் தெரியுமா? Current (மின்சாரம்) நின்னு போயிரும். Current (மின்சாரம்) நின்னுப் போனா அப்புறம் எப்படி Operation (அறுவை சிகிச்சை) பண்றது?. ஏய்! Current (மின்சாரம்)  இல்ல, Genarator போடும்பாரு Doctor (மருத்துவர்). Petrol (எரிபொருள்)ல தேடி Genarator போடறதுக்குள்ள அதுல பத்து நிமிஷம் போயிடும். வரவேண்டிய நேரம் வந்துரும். அப்பறம் ஒரு விஷயம், ஒரு Doctor (மருத்துவர்) Operation (அறுவை சிகிச்சை) பண்ண முடியாது, தெரியுமா உங்களுக்கு?. குறைஞ்ச பட்சம் ரெண்டு பேராவது வேணும். Anasthesia (மயக்க மருந்து) கொடுக்கிறதுக்கு ஒரு Doctor (மருத்துவர்) தேவைப்படும். அவரு நாடிய புடிச்சுப்புடிச்சு பார்ப்பார். உடம்பு மயக்க மருந்து தாங்குமான்னு பார்ப்பார். ஐயையோ! மயக்கம் கொடுக்க முடியாது, Pulse (நாடித்துடிப்பு) எல்லாம் Weak (பலவீனம்)-ஆக இருக்குது, மயக்கம் கொடுத்தா ஆள் போயிடும்,  Anasthesia (மயக்க மருந்து) போடக்கூடாதும்பார். இப்ப Anasthesia (மயக்க மருந்து) கொடுத்தா தாயும் வராது குழந்தையும் வராது. சம்மதமா?ம்பார். அப்ப சரி வேணாம்ன்னு முடிவு பண்ணுவாங்க. குழந்தை பொறக்கற நேரத்துலதான் பொறக்கும். நான் சொல்றது எல்லாம் அனுபவத்துல பார்த்தது.          அன்பர்களே! இந்த மனம், மனம் என்று ஒன்று தெய்வமாக இருந்து கொண்டு தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று நிர்ணயம் செய்து கொண்டிருக்கிறது. கெடுதலை ஈர்த்துக் கொடுக்கும் மனம். ஏனென்றால், தெய்வம் தானே தண்டிக்கும்?. மனம் வேறு, தெய்வம் வேறு இல்லை அதனால மனமே தண்டிக்கும். என் மனம்  என்னை எப்படி தண்டிக்கும்?. மனம்னு தனியா சொல்லக்கூடாது, மனம்தான் ஜீவகாந்தம், ஜீவகாந்தம்தான் மனமா இருக்குதுன்னு சொன்னோம். வான்காந்தம்தான் ஜீவகாந்தமா இருக்குது. அந்த வான்காந்தம்தானே எல்லாரிடத்திலயும் மனமா இருக்குது? ஆகவே உலகமெல்லாம் சேர்த்துப் பார்த்தா ஒரே மனம் ஆங்காங்கே துண்டு துண்டா இருக்குது. இந்த மனதுக்கும், அந்த மனதுக்கும் இணக்கத்தை கொண்டு வர முடியும். இந்த மனதுக்கும், அந்த மனதுக்கும் பிணக்கு ஏற்படுத்த முடியாது. எல்லாம் சேர்ந்து ஒரே மனமா இருக்கும். அப்ப எனக்கு கெடுதல் வரணும்னா நான் என்ன செய்யறேன்?, என் மனம்தானே அவர்கிட்ட இருக்குது என்ன வந்து நாலு ஒதை ஒதைய்யா அப்படீன்னு சொல்றேன். சரின்னு அவரும் ஒதைக்கிறாரு. அப்ப யாரால ஒதை விழுந்தது?. நான் தான் கூப்பிட்டேன். யாராச்சும் கூப்புட்டு தங்களையே ஒதைக்கச் சொல்வாங்களா?. அவர் மனதை என் மனம் போய் கெடுக்கும். அது எப்படின்னா வாட்டமான ஆள்கிட்டப் போய்  மூஞ்சியப் பாரு, மொகரையப் பாருன்னு திட்டிடுவேன்னு வெச்சுக்கங்க. அப்படித்தான் சீண்டறது. ஏன் அவரப் போயி மூஞ்சியப் பாரு, மொகரையப் பாருன்னு  சொல்லணும்?. இங்க ஒதை உழுகணும் இல்லையா? அவருக்கு கோவம் வரணுமே!. தீதும் நன்றும் பிறர் தர வாரா. வாழ்க்கையில எந்த கஷ்டமாக இருந்தாலும் அது நாமாக தேடிக் கொண்டதே தவிர வேறில்லை.  அந்த ஆள் தானே என்ன அயோக்கியப் பயலேன்னு திட்டினாரு?ன்னு ஒருத்தன் கேட்டான். அதிலிருந்து மூணு நாள் போய் படுத்தவன் எழுந்திருக்கவேயில்லை, அழுதுகிட்டே இருந்தான். மனசுக்கு கஷ்டம் வந்ததா?, வந்தது. யாரால வந்தது? அவர்தான திட்டினாரு.  திட்ட சொல்லி சொன்னது யாரு? இவன் தான். இந்த மாதிரி ஒரு நாலு நாளைக்குப் படுத்து அழுதா தான் என் பாவமெல்லாம் கொஞ்சம் தீரும்போல இருக்கு, ரொம்ப பாவம் வெச்சுருக்கிறேன், கொஞ்சம் குறைக்கணும்னு இவன் நினைச்சதால. பிறர் நமக்கு கெடுதல் செய்கிறார்கள் என்பதே கிடையாது, நாமே பிறருக்கு கூப்பாடு போடுகிறோம், கெடுதல் செய்யுங்களேன், கெடுதல் செய்யுங்களேன்ன்னு. சில நேரத்தில அவங்க கேக்க மாட்டாங்க தெரியுமா? ஐயோ! உனக்கு கெடுதல் செஞ்சா எனக்கு பாவம் வந்துரும், நான் மாட்டேன்னுடுவாங்க. இப்பதான் தன் மனம் தனக்கே தப்பு செய்யும், ரெண்டு படி இருக்கும்போது, சரியாப் போச்சு படின்னு காலை வைச்சார், உருண்டுட்டார். மூஞ்சி போச்சு, மூக்கு போச்சு, மொழங்கால் போச்சு, ஆஸ்பத்திரியில கிடந்தாரு. 2000 ரூபாய், 3000 ரூபாய் செலவாச்சு. வலி தாங்க முடியலை. வேலையும் போயிடுச்சு.  யாராவது தள்ளி விட்டாங்களா? இல்லயே!. படிதானே? பகல்தானே? ஏன் அப்படி நடந்தது?. இவர் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கார்ன்னு வெச்சுக்கங்க, என்ன ஆகும் தெரியுமா?. ஐயோ! நாமே தப்பு செஞ்சு, நாமே தண்டனைய, துன்பத்தை எடுத்துக்குவோம்னு  இறைவன் வருவான்.  என்ன நீ யாரையும் கூப்பிட மாட்டேங்கற ஒதைக்கறதுக்கு?. நீயும் தப்பா அடி வைச்சு ஒதை வாங்க மாட்டேங்கிற?, இரு நான் உன்னைப் புடிச்சு தள்ளிவிடுறேன்ம்பார். வழுக்கி விட்டுரும், அல்லது யாராவது எதிர்ல வந்துருவாங்க. இதுக்கு பேரு Accident. Accident என்றாக்க அது ஆங்கிலம். அப்படின்னா தமிழில விபத்து. இது எப்படி நேருகிறது? தற்செயல்.. அவருமில்லை, இவருமில்லை, தற்செயலான விபத்து. யாரும் இடிக்கணும்னு வந்து இடிச்சாங்களா? இல்லை. தற்செயலை நல்லா நோண்டி பாருங்க தான் என்ற சொல்லுக்கு இறைவன் என்று  பொருள், நீங்க அகராதியிலும் பார்க்கலாம். அப்ப தன்னுடைய செயல் தெய்வச்செயல். விபத்து எப்படி ஏற்படுது? தெய்வச்செயல். இவன் கஷ்டத்தை, பாவத்தை போக்கிக்கிறதுக்கு அடுத்த ஆளையும் கூப்பிட மாட்டேங்கிறான், தானும் தவறு செய்துட்டு மாட்டிக்க மாட்டேங்கிறான். சரி நாம தான் உதவி செஞ்சாகணும், பாவப்பதிவைப் போக்கணுமேன்னு நெனச்ச தெய்வச் செயல். இவ்வாறு இறைவனாகப்பட்டவன் செயல் விளைவுத் தத்துவமாக இருக்கிறான். யாரும் தவறு செய்து விட்டு தப்பிக்கவே முடியாது. ஒருவர் பார்த்து இன்னொருவரை கெடுப்பது கிடையாது. அவரவர்கள்தான் கெட்டு போவார்கள், அதற்கு இன்னொருத்தன் காரணமாக இருப்பான். இந்த ஹிட்லர் எல்லாத்தையும் கஷ்டப்படுத்தினாம் பாருங்க, அத்தனை பேரும் கஷ்டப் படணும்ங்கிற அமைப்பு இருக்கும் பொழுது  இந்த அருட்பேராற்றல் ஒருத்தனை அதைச் செய், இதைச் செய்ன்னு கொண்டாந்து விட்டுடும்.

      ஆகவே அன்பர்களே! ஒவ்வொருவருடைய மனதிலும் இறைவன் இருக்கிறான், ஒவ்வொருவருடைய மனதாகவும் இறைவன் இருக்கிறான் என்பதனாலே இறைவனை மீறி ஒன்றும் நடப்பதில்லை. மனமாக இருந்து கொண்டு இருப்பதுனாலே பதிவுகளைப் பெற்றுத் தீர வேண்டிய அவசியம் அவனுக்கு வந்துருக்குது. மனுசன் எதையாவது செய்ய, செய்ய... மனதுலதானே பதிவு வருதுன்னு சொன்னோம், மனம்னா என்ன? இறைவன்தானே?. மனுசன் தப்பு செய்ய இறைவன் கலங்கப் போறார் என்று இருந்தா அதை இறைவன் ஏற்றுக்கொள்வானா?. ரொம்ப சகிப்புத் தன்மையுடையவன் இறைவன். மன்னிக்கும் தன்மையுடையவன்,  பெருந்தன்மை உடையவன் அதனால பொறுத்துக்கிட்டே... போவான். அதுக்கு மேல தாங்க முடியாம போகும் போது, தன்னை clean (சுத்தம்) பண்ணிக்க, தன்னை தூய்மை படுத்திக் கொள்ள எடுக்கின்ற முயற்சி மனதுக்கு வலிக்கும்... மனுசனுக்கு வலிக்கும். பதிவைப் பெறுபவனும் இறைவன்தான், பதிவை நீக்கிக் கொள்பவனும் இறைவன்தான். பதிவை நீக்கிக்கொள்கிற Process (நிகழ்வு)ல பிறருக்கு கெடுதல் பண்ணின மாதிரி தனக்கும் கெடுதல் வரும். தெய்வீக நீதி மன்றம்னு சொல்லுவாங்க மனதை. மனம் கருமையத்தில் அம்சமாக இருக்கிறது. அதனாலதான் கருமையத்தை தெய்வீக நீதி மன்றம்னு சொல்லுவாங்க, ஆகவே இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்று பார்ப்பதற்கு ஒண்ணு செஞ்சா போதும். அதிகமா சாப்பிட்டா போதும். எவ்வளவு நம்மால செரிமானம் பண்ண முடியுமோ அதுக்கு நாலு இட்லி கூட சாப்பிட்டா தெரிஞ்சுக்கலாம். அஜீரணம் வருதா?.  நான் நாலு இட்லி அதிகமா சாப்பிட்டு விட்டேன் அதனால எனக்கு அஜீரணம் ஏற்படுத்திக் கொள்கிறேன், வயித்துல குத்திக்கிறேன்ன்னு அப்படியெல்லாம் ஒண்ணும் நீங்க செய்யலையே!. எப்படி அஜீரணம் வந்தது?  நான் மொதல்லயே சொன்னது மாதிரி ஒரு அற்பமான விஷயம், ஆனா ரொம்ப பெரிய விஷயம். கூடுதலா சாப்பிட்டா அஜீரணம் வருதுங்கறது ரொம்ப நுட்பமான விஷயம்.  பெரிய விஷயம் எப்படின்னா அதிலிருந்துதான் நமக்கு கஷ்டம் வருது, தெய்வத்தினுடைய தீர்ப்பைத் தெரிந்து கொள்கிறோம். நுட்பமான விஷயம் எப்படின்னா எப்போதும் கால காலமா இந்த தப்பை செஞ்சிட்டிருக்கிறோம், தெரியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம், அசிரத்தையா செய்து கொண்டிருக்கிறோம். அப்பப்ப அஜீரணம் வந்தாலும் கூட, அந்த அனுபவம் இருந்தாலும் கூட, மறுபடியும், மறுபடியும் பண்ணிட்டிருக்கிறோம். இது ஒண்ணு மட்டுமில்ல, எத்தனையோ தப்புகள்னு வெச்சுக்கங்க, அத்தகு தப்புகளை செய்துவிட்டு, தனக்கே துன்பம் வரக்கூடிய ஒரு தவறை செய்துவிட்டு அதனால் வரக்கூடிய துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாதென்றால் நமக்கு அன்னியமான ஒரு ஆற்றல் நம்மைத் தன் ஆதிக்கத்தில் வைத்திருக்கிறதுன்னுதானே அர்த்தம்?. அது  எது? அதுதான் உங்க மனம். என் மனம் இப்படி பண்ணுமா?ன்னு கேட்டா, ஆமா. கண்டிப்பா பண்ணும், நேர்மை தவறாதது உங்கள் மனம். உங்கள் மனதுக்கு நீங்கள் லஞ்சம் குடுக்க முடியாது, ஊழல் பண்ண உங்க மனதை உட்படுத்த முடியாது. அதனால்தான் சத்தியம் பண்ணும் பொழுது மனசாட்சிப்படிம்பாங்க. இறைவன் மேல நம்பிக்கை இல்லாதவங்க மனசாட்சியை வெளிய வாங்க சத்தியம் பண்றேன்ன்னு  மனதை சாட்சி வைத்து சத்தியம் பண்ணுவாங்க. மனம் நீதி தவறாதது. தெய்வம் நீதி தவறுமோ?, தெய்வமும் நீதி தவறாதது. தெய்வமும், மனமும் ஒண்ணுதான். நீதி தவறாத ஒண்ணு இருக்க முடியுமானால், அது தெய்வம் மட்டும்தான். இங்க practical (நடைமுறை) ஆக பார்க்கும் பொழுது நீதி தவறாமல் இருக்கக் கூடியது மனம். மனமும் தெய்வமும் ஒன்றாக இருப்பதை செயல் விளைவுத் தத்துவத்தின் மூலமாக நாம் உணர்ந்து கொள்ளலாம். உணர்ந்து கொண்டாச்சுன்னா, அப்புறம் என்ன செய்வோம்?. நெருப்பு சுடும்னு உணர்ந்து கொண்டோம், தொடறோமா?, அதே மாதிரி செயல் விளைவுத் தத்துவத்தை ஏமாத்த முடியாது. மனதையோ, இறைவனையோ ஏமாத்த முடியாதுன்னப்பறம் நமக்கு துன்பம் வரக்கூடிய செயல்களை செய்யலாமா?, செய்யக்கூடாது. நமக்கு துன்பம் சட்டுன்னு வந்துராது. சில செயல்களுக்குப் பின்னால வரும். நான் மொதல்ல சொன்னன் பாருங்க, தாத்தா பாட்டி தவறு செய்ய நாம துன்பம் அடையறம்ன்னு. அவ்வாறு நமக்கு பத்து வருஷமோ, இருபது வருஷமோ, நூறு வருஷமோ கழிச்சு துன்பம் வரும். நூறு வருஷம் கழிச்சு துன்பம் வரும்ன்னா நாம இருக்க மாட்டோம், ஆனா நம்ம சந்ததிகள் இருக்கும். ஆகவே இத ஒழிச்சுக் கட்ட முடியாது. நாம செத்துப் போயிட்டா, தற்கொலை, கிற்கொலை பண்ணிக்கறோம்னு வெச்சுக்கங்க, அப்பாடா! தீர்ந்து போச்சுன்னு  நெனைக்ககூடாது. தலைமுறை மாட்டிக்கும். இப்படி ஒரு தவிர்க்க முடியாத, மாற்ற முடியாத, எதிர்க்க முடியாத ஒரு ஆற்றல்... அதுதான் மற்றொன்று சூழிலும் தான் முந்துரும் என்பது.  நம்மையோ, பிறரையோ வருத்தினால் நாம் வருத்த வேண்டியிருக்கும் என்பதுதான் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. நாம வருந்தாமல் இருக்க வேண்டும்னா நம்மையோ, பிறரையோ நிகழ்காலத்தில வருத்தக்கூடாது. நமது குணாதிசயங்களை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டை, சுபாவத்தை எப்படியிருக்குதோ அப்படியில்லாம அதை மாற்றி நேர் பண்ணிக் கொள்ளணும். அது அவ்வளவு சுலபமில்லை. எங்க ஊர் பக்கம் ஒண்ணு சொல்லுவாங்க ஜென்மத்தோட பொறந்தத செருப்பால் அடிச்சாலும் போகாதுன்னு. செருப்பால் அடிச்சா எப்படி போகும்? வார்த்தை சொல்றாங்க, அது அவ்வளவு சுலபமில்லை. தவம் செய்தால் தான் அறநெறில நிற்க முடியும். தப்பு செய்யாம வாழணும். துன்பம் வரும்... துன்பம் வரும்... அதென்ன? அறநெறிதான், தர்மஞாயம்தான், நீதி உணர்வுதான். இந்த நீதி உணர்வு காக்கப்பட வேண்டுமென்றால் நமக்கு ஒரு ஆற்றல், ஒரு பலம், ஒரு ஆதரவு வேணும். அது எது? தெய்வம்தான், மறுபடியும் மனம்தான். அத எப்படிப் பெறுவது?. தவம் செய்து, தவம் செய்து மனதிலுள்ள பதிவுகளை நீக்கி.. தவம் செய்து, தவம் செய்து மனதுக்கு தவறான வழியில போகாத உறுதியை ஏற்படுத்தி.. தவம் செய்து, தவம் செய்து துன்பமே வந்தாலும் சகித்துக் கொண்டு.. தவம் செய்து, தவம் செய்து துன்பத்தை தவிர்த்துக்கொண்டு வாழ கத்துக்கணும். தவத்தை விட்டா மனித குலத்துக்கு வேற ஒண்ணுமே கெடையாது. ஆனா மனித குலம் எல்லாத்தையும்  செய்யுது. தவத்த மட்டும் செய்யறதில்லை.

      ஆகவே அன்பர்களே! இறைவன் மனதிலேயே இருக்கிறான், எங்கேயும் போய்த் தேட வேண்டியது இல்லை. அவனைப் பத்தி பேசிக்கிட்டே இருக்கலாம், அவனோட உறவாடிக்கிட்டே இருக்கலாம், அவனோட ஆற்றலெல்லாம் பெற்றுக் கொண்டே இருக்கலாம். அதனால நமக்கு ஒரு காபந்து கெடைக்கும், ஒரு  Support (ஆதரவு)  கெடைக்கும், சந்தோசமா இருக்கலாம் என்பதை  இறைவனெனும் மனத்தடியில் தேர்வோம் செயல் விளைவுத் தத்துவமாக என்று கூறி நிறைவு செய்யலாம்.

 - நினைவில் உங்களோடு, kgs.  

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 28

இப்போ சுத்தவெளியினுடைய இருப்பு, அதனுடைய பெருமை எல்லாம் யாருடைய பெருமையாக நினைக்கிறீர்கள். நமது பெருமையாக நாம் என்றால் யார்? தெய்வம். தெய்வத்தின்…

Arulnithi Muthappan

சினமும், செந்தன்மையும்

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும்,…

KG Sami

தவம் - 3

மிகப் பழங்காலத்தில் பிராணாயாமத்தில் மூலம் அவரவர்களும் தாங்கள் மூலாதாரத்திலிருந்து உயிர்ச் சக்தியை ஆக்கினைச் சக்கரத்துக்குக் கொண்டு வருவார்கள்.…

Puthiya Bharathi

சைவமும், அசைவமும்

ஆன்மீகம் தோன்றிய காலத்திலிருந்தே அதற்கேற்ற உணவு எது என்பது பற்றி ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. ‘ஆன்மீகவாதிகள் புலால் உண்ணலாமா? உண்ணக்…

KG Sami

தவம் – 39

ஆசிரியர் பயிற்சி மனவளக்கலையை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறு குனிய வேண்டும், எவ்வாறு தொட வேண்டும், எவ்வாறு தீட்சை கொடுக்க வேண்டும்…

KG Sami

அருட்செல்வி அவர்களுக்கு எழுதிய மடல்.

K.G சாமி ஐயா அவர்கள் அவர்தம் நண்பர் பேராசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்களின் மகள் அருட்செல்வி அவர்களுக்கு எழுதிய மடல்.அன்பு மகள் அருட்செல்விக்கு…