ஆன்மீகம் தோன்றிய காலத்திலிருந்தே அதற்கேற்ற உணவு எது என்பது பற்றி ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. ‘ஆன்மீகவாதிகள் புலால் உண்ணலாமா? உண்ணக் கூடாதா?’ என்ற கேள்வி நின்று கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான கோட்பாட்டை இது பற்றிப் பின்பற்றி வருகின்றன. இந்தியாவில் இரண்டு விதமான கோட்பாடுகள் உள்ளன. ‘புலால் உண்ணுவது ஆன்மீக விரோதம், மத விரோதம்’ என்றும் ‘அப்படியெல்லாம் கிடையாது’ என்றும் சொல்லப்படுகிறது.
உண்மைதான் என்ன? வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் மாதிரி, ஆன்மீகத்திற்கு – மனிதப் பண்புக்கு – ஓர் உச்சநீதிமன்றம் உள்ளது. அதுதான் திருக்குறள். நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டுள்ள விஷயம் பற்றி அதில் ஐயன் என்ன கூறுகிறார்? எடுத்த எடுப்பிலேயே – அதிகாரத் தலைப்பாக – அவர் தனது தீர்ப்பைக் கூறிவிடுகிறார், ‘புலால் மறுத்தல்’ என்று. போதுமா? அதிலுள்ள 10 குறள்களிலும் விதிவிலக்கு ஏதும் கூறப்படவில்லை. மாறாக ஒரே ஒரு குறளில், மேல்முறையீடு செய்ய முடியாத தீர்ப்பாக அவர் வழங்குவது, தன் ஊன் பெருக்கப் பிறிதொன்றின் ஊன் உண்பான் இங்ஙனம் ஆளும் அருள்? என்ற தீர்ப்பை. தனது சதை பெருபதற்காகப் பிற உயிரின் கதையை ஒருவன் தின்பானேயானால், அது எப்படி அருளுடமையாகும்? ஆன்மீகமாகும்? அதாவது, அருளுடமை, ஜீவகாருண்யம், அன்பு, கருணை உடையவர்களானால் புலால் உண்ணவே கூடாது என்பது தீர்ப்பு.
புலால் உண்ணாமையை அன்புடமை காரணமாக மேற்கொள்ள வேண்டும். அன்பு என்பதும் சிவம் என்பதும் ஒன்றே என்பர் அறிஞர். சிவம் என்பதைச் சைவம் என்றும் சொல்வார்கள். அதுபற்றியே, புலால் உண்ணாமை சைவம் என்றும், புல்லால் உண்ணுவது அசைவம் என்றும் சொன்னார்கள். ‘எது சைவம்? எது அசைவம்?’ என்பது பற்றித் திருக்குறளில் எந்த விதமான விளக்கமும் இல்லை. வேறு நூல்களிலும் தெளிவாக இல்லை. இந்த நிலையில் நாம்தான் ஆராய்ந்து விளக்கம் காண வேண்டும். உதவிக்கு வருகிறார் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷிகள். சைவம் என்பதற்கும், அசைவம் என்பதற்கும் நமது அறிவைக் கொண்டு ஒரு வரையறை ஏற்படுத்திக் கொண்டு அந்த வரையரைக்குட்பட்டு, என்ன என்ன உணவெல்லாம் சைவம்? எதெதெல்லாம் அசைவம்? என்பதை கண்டுபித்துக் கொள்ளலாம் என்கிறார் மகரிஷிகள். அன்பு என்பது துனபத்தைத் தோற்றுவிக்காது. ஆகவே துன்பத்தைத் தோற்றுவிக்காத உணவெல்லாம் சைவம் எனலாம்.
இப்போது துன்பம் பற்றிய சில உண்மையான விளக்கங்களை நம் அறிந்து கொள்ள வேண்டும். ஜீவன்களுக்குத்தான் துன்ப உணர்வு உண்டு. ஜடங்களுக்குக் கிடையாது. துன்ப உணர்வைப் பெறுவதற்கு – 1) துன்பத்தோடு தொடர்பு கொள்வதற்கு நரம்பு மண்டலமும், 2) துன்பத்தை உணர்வதற்கு மூளையும் – வேண்டும். நரம்பு மண்டலமும், மூளையும் இரண்டறிவு ஜீவன்கள் தொடங்கி, மனிதன் வரைக்கும் உண்டு. முதல் ஜீவனாகிய தாவர வர்க்கத்திலே நரம்பு மண்டலம் மட்டும் உண்டு. மூளை கிடையாது. துன்பம் உண்டு பண்ணப்பட்டால், துன்பத்தைதைச் சந்திப்பது நரம்பு மண்டலம். அந்தத் துன்பத்தைக் கடத்திக் கொண்டு செல்வதும் நரம்பு மண்டலம். புழு முதற்கொண்ட ஜீவன்களுக்கு நரம்பு மண்டலத்தோடு மூளைக்குத் தொடர்பு உள்ளதால், மூளையானது துன்ப அலைகளை ஏற்று, ‘ஆ! இது துன்பம்! ஐயோ! வலிக்கிறது!’ போன்ற துன்ப உணர்வுகளைப் பெறுகிறது. தாவரத்திற்கு மேற்பட்ட ஜீவன்களிடத்தில் தான் துன்பம் அனுபோகமாகும்.
தாவரங்களை மனிதர்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் போது துன்பம் விளைகிறதா? விளைகிறது. அனுபோகமாகிறதா? அனுபோகமாவதில்லை. அந்தத் துன்பத்தை உண்டு பண்ணிய அலைகளை – துன்ப அலைகளை - நரம்பு மண்டலமானது கடத்திப் போய், மூளையிடம் கொடுக்க, ‘இந்த உணர்வுகள் எனக்குப் பொருத்தமில்லை. இவை இன்ப மில்லை. துன்பம்’. என்ற முடிவினை மூளை மேற்கொள்கிறது. ஜீவன் வருத்தத்தை மேற்கொள்கிறது.
தாவரத்திற்கு மூளை கிடையாது. மூளையின் வேலையை பூமியே ஏற்றுக் கொள்கிறது. கடத்தப்பட்டு வந்த துன்ப அலைகள் பூமியை வந்து சேர்கின்றன. எர்த் (earth) ஆகின்றன. அந்த துன்ப அலைகள் பூமிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தா. ஆகவே, ’துன்பம் விளைகிறது’ என்பது உண்மைதான் என்றாலும். அனுபோகமாவது இல்லை. எனவே தவரங்களுக்கு துன்பம் ஏற்படுத்தாமலே அதை நாம் கிள்ளுகிறோம். பறிக்கிறோம், உடைக்கிறோம், வெட்டுகிறோம், பிடுங்கி எறிகிறோம். அந்தத் தாவர இன ஜீவன் வருத்தத்தை பெற்றுக் கொள்வதில்லை. ஆகவே தாவரத்தை நாம் உணவுக்கோ, அல்லது வேறு எந்த அனுபோகத்திற்கோ சேர்த்துக் கொள்வதில் எந்த விதமான தவறும் கிடையாது. ஆனால் ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் கூற்றை சில பேர் எடுத்துக் காட்டிவிளக்கம் கேட்பார்கள். வள்ளலார் வாடியது பயிர் துன்புறுகிறதே என்பதற்காக இல்லை. இப்படிப் பயிர் வாடினால், ‘எப்படிப் பலபேர் பிற்காலத்தில் பட்டினி கிடக்க வேண்டி வரும்!’ என்பதை நினைத்துத்தான் அவர் வாடியிருக்க வேண்டும். பயிர் வாடினால் வைக்கோலாவது ஆகும். மாடுகள் திண்ணும், வீண்போகாது. ஆனால், ‘விளைச்சல் குன்றிப் போவதால், மனித வயிறுகள் பல வாடிப் போகுமே!’ என்பது தான் சரியான விளக்கம்.
’ஒரு செடியைக் கிள்ளி வெய்யிலில் போட்டால்கூட அது வதங்குவது துன்ப உணர்வைக் கொண்டு இல்லையா?’ என்று கேட்கலாம். இல்லை. ஒரு செத்தை வெயிலிலேயே கிடந்தால் அது கூடத்தான் சுருள்கிறது. நுணுங்குகிறது. மண்ணாங்கட்டி மழையில் கரைகிறது. துன்புறுகிறதா? இப்படி நாம் அறிவைச் செலுத்தினால், தாவரத்திற்கு ஏற்படுகிற மாற்றம் துன்ப உணர்வை பெறுவதால் இல்லை என்பது விளங்கும். சரி. இப்பொழுது இன்னொரு சர்ச் சைக்குரிய விஷயத்தை எடுத்துக் கொள்வோம். ‘முட்டை சைவமா? அசைவமா? ‘முட்டையின் உள்ளே குஞ்சு இருக்கிறது. அது வெளிவந்தால் கோழியாகும். முட்டை தின்னுவது முழுக் கோழித் தின்பதாகவே ஆகும்’ என்பது வாதம். இதற்குப் பதில்? ஒரு செடியைச் சாப்பிடுவது பாவமில்லை என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கிறோம். அதனுடைய கொட்டையை தின்பது பாவமா? மேலே சொன்ன வாதப்படி செடிக்கே துன்ப அனுபோகம் இல்லையல்லவா? கொட்டைக்கு ஏது துன்ப அனுபோகம்? இல்லையென்றால் அதே போல், முட்டைக்கும் துன்ப அனுபோக கிடையாது…..