ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.
அன்பர்களே!
நானும் மகரிஷியும் ஒரு நாள் ரயில்ல போயிட்டிருந்தோம். இந்தப் பக்கம் மூணு பேரு... அந்தப் பக்கம் மூணு பேரு உட்கார்ற மாதிரியான சீட்டுல, முதல் சீட்டுல நான் உட்கார்ந்திருந்தேன். எதிர் சீட்டுல மகரிஷி உட்கார்ந்திருந்தார். மத்த சீட்டெல்லாம் காலி, கூட்டமே இல்லை. ஒரு சின்ன பையன் நாலு, அஞ்சு வயசு இருக்கும், “ஐயா!...ஐயா!”ன்னு கையை ஏந்திட்டு வந்தான். நான் சில, பல காரணங்களுக்காக காசு பிச்சை போடறது கிடையாது. அது நான் ஏற்கனவே எடுத்த முடிவு. “ஐயையோ!... இவன் பிச்சை கேட்டு வரானே! நாம காசு போடலைன்னா மகரிஷி நம்மளை கஞ்சன்னு நினைச்சுக்குவாரே, காசு போடறதா? வேண்டாமா?”ன்னு யோசனையில இருந்தேன். “சரி! மகரிஷி போட்டா, நாம போடலாம்”ன்னு இருந்தேன். மகரிஷி என்னையே பார்த்துட்டு இருந்தார். என்ன நினைச்சுட்டு இருந்திருப்பாரு? ஒருவேளை நான் போட்டா போடலாம்னு நினைச்சிருந்திருப்பாரோ? ரெண்டு பேரும் முன்னப் பின்னப் பார்த்துட்டு யோசனையிலயே விட்டுட்டோம். மகரிஷி எங்கிட்ட “இந்த பையன் இப்பவே இப்படி இருக்கிறானே! எதிர்காலத்துல எப்படி இருப்பான்?”னு கேட்டார். மகரிஷி சொல்ற ஒவ்வொரு வார்த்தையிலையும் ஆழம் இருக்கும். அது மட்டும் எனக்கு நல்லா தெரியும். இந்த வார்த்தையில என்ன ஆழம்னு தெரியலை. நான் திரு திருன்னு முழிச்சுட்டு ஒண்ணும் பேசாம இருந்தேன். “இவன் எதிர்காலத்துல நல்ல வாட்ட சாட்டமான ஆளா இருக்க மாட்டானா?”னு கேட்டார். “ஆமாம் சாமி”ன்னேன். “இன்னுமொரு இருபது வருஷம் கழிச்சா இவனுக்கு இருபத்தி அஞ்சு வயசு இருக்கும். வாட்ட சாட்டமான உடம்பு... நல்ல பலம்... அந்த உடம்பைக் கொண்டு எது வேணும்னாலும் செய்யலாம் இல்லையா? இப்பவே இவன் பிச்சை வாங்கி சாப்பிட்டுட்டு இருக்கானே, இவனுடைய அறிவு இதுக்கு மேல வளருமா? இப்ப இவனால யாரையும் அடிக்க முடியாது, அடிச்சா திருப்பி அடிச்சுருவாங்க, அதனால கையேந்தறான். தன்னால யாரையும் அடிக்க முடியும்ன்னு வரும்போது இவன் கையை ஓங்குவான். இருபத்தி அஞ்சு வருஷம் கழிச்சு இவன் அடிச்சா கூட்டமே ஓடிப் போகும். ஆகவே எதிர்காலத்துல திருடர்களாகவும், அயோக்கியர்களாகவும் வரக்கூடியவர்கள் எல்லாம் இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்னால இந்த சமுதாயத்தால உருவாக்கப்பட்டவர்கள். என்ன செஞ்சிருக்கணும் இந்த பையனோட அப்பா, அம்மா? ‘பிச்சை எடுக்க போக கூடாதுடா, பட்டினி கிடந்தாலும் பிச்சை எடுக்க கூடாதுடா. நாங்க உனக்கு சம்பாரிச்சு போடறோம்டா. முடிஞ்ச வரைக்கும் சாப்பிடலாம், இல்லைனா நீயே ஏதாவது வேலை செஞ்சு... பூட்ஸ்க்கு பாலீஷ் போடறது மாதிரி... சம்பாரி’ன்னு சொல்லி கொடுத்திருக்கணும்”ன்னு சொன்னார். மகரிஷியின் இந்த விளக்கம் எனக்குள் ஒரு புதிய சமுதாய உணர்வைத் தூண்டியது.
- நினைவில் உங்களோடு kgs