KG Sami1937 — 2006

இறைவன் அன்ன மயம்!

Signed Puthiya Bharathi

உலகம் இறைநிலையிலிருந்து தோன்றியது. இறைநிலையிருந்து ஒவ்வொன்றாகப் பஞ்சபூதங்கள், ஓரறிவுமுதல் ஐந்து வகையான அறிவுகளைப் பெற்ற ஆயிரம் ஆயிரம் ஜீவன்கள் எல்லாமே இறைநிலையென்ற ஒரே பொருளிலிருந்து வரிசையாக வந்தவைதான். அந்த வரிசையில் அடுத்து வந்தவன் மனிதன். வரிசைப்படி மனிதனிலிருந்து மாமனிதன் வர வேண்டும். மாமந்தனைத் தேவன் என்பார்கள். அதாவது ‘தெய்வன்’. இப்படி ஒரு வட்டம் பூர்த்தியாக வேண்டும்.

மனிதர்கள் மாமனிதர்களாவதை விடுத்து, முருக நிலைக்கும், அதற்கும் கீழேயும் பின்னோக்கிச் செல்கிறார்கள். இது இயற்கைக்கு எதிர் நிலை முரண் நிலை. இதனாலேயே மனிதகுலம் துன்பங்களையே சந்தித்துக்கொண்டிருக்கிறது – வரலாற்றுக்கும் எட்டாத காலத்திலிருந்து, இன்று வரை.

மனித நிலையிலிருந்து மாமனித நிலைக்கு ஆராய்ச்சியாலும், பயிற்சிகளாலும், விடா முயற்சியாலும், எங்கோ ஒருவர் – கோடியில் ஒருவர் – உயர முடிந்தது. அத்தகையவர்கள் அறிவு நிலை மேம்பட்டுக் கொண்டு வரும்போது, பழைய உலகியல் அனுபவங்கள் சலிப்பைத் தரும். உலகியல் சுகபோகங்களெல்லாம் உடலாலும், உடலுக்காகவும் வந்தவையாகையால் உடம்பின் பேரிலேயே அவர்களுக்குப் பிடிப்பு விட்டுப் போகும்.

என்றாலும், உடம்பை அவர்கள் வெறுப்பதில்லை. கெடுப்பதும் இல்லை. காரணம்: இந்த உடம்பு இருந்தால் தானே - அதில் உயிரும் இருந்தால் தானே – மனமும், அறிவும், ஞானமும் தோன்ற முடியும்? அந்த உடம்பைப் பராமரித்தாக வேண்டிய கட்டாயத்திற்காக, உணவு முதலிய அனுபோகங்களை அவர்கள் பெற்றுக் கொள்ளத் தவறுவதில்லை.

ஆனாலும் உணவுண்ணல் முதலிய உடலால் பெறுகின்ற இன்பங்களைத் தரக்கூடிய காரியங்கள் அவர்களுக்கு ஒருவகைச் சம்பிரதாங்களாகவும், சடங்குகளாகவும் போய்விடும். என்றாலும் அவர்கள் அவற்றை விட்டு விடுவதில்லை. மேற்க் கொண்டே வருவார்கள். இது சித்தர்களின் தெளிவான நிலை.

உடம்பை ’இழுக்கு’ என்றும், ’ஊற்றைச் சடலம்’ என்றும், “சோற்றுத் துருத்தி”, மற்றும் ’மலக்குறம்பை’ என்றும் இகழ்ந்து பேசி வந்தவர்கள் ஆன்மீகவாதிகளாக ஒரு காலத்தில் கருதப்பட்டனர். சித்தர் பாரம்பரியத்தில் வந்த வள்ளுவருக்கு இக் கருத்து உடன்பாடில்லை என்பது பின்வரும் குறட்பாவால் தெரிய வருகின்றது. ’மற்றும் தொடர்பா டெவன்கொல்? பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’ வள்ளுவர் உடம்பின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்பவர்.

ஒரு ஞானிக்கு உடம்பு வேண்டித்தான் இருக்கிறது என்பது அவர் கருத்தெனினும், இன்பங்களைத் தருகின்றன உடல் - ஞானியினுடைய கருத்தில் - தேவைக்கு மேலானது. அதிகால், கூடுதல், ஜாஸ்தி, Extra, Superflous. இதனாலேயே உடம்பு ஒரு வேண்டாப் பொருள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது சித்தர்கள் கருத்து - வள்ளுவர் கருத்தும்.

சித்தர்கள் அல்லாத நிலையிலிருந்து விட்டுச் சித்தர் நிலைக்கு வந்த திருமூலரும் உடம்பினை ’முன்னம் இழுக்கென்றிருந்தேன்’. ’உடம்பினை ஓம்ப வேண்டும், பராமரிக்க் வேண்டும்’ என்றே கூறுகிறார்.

திருவள்ளுவர் வார்த்தை என்னவென்றால் - உடம்பு மிகை - பிறப்பறுக்கலூற்றார்க்கு உடம்பு மிகை. இனி பிறவா நிலையென்னும் ஞானநிலை எய்தப்பட்டு விட்ட பிறகு, உலகியல் இன்பங்களில் அவர்களுக்கு ஒரு சலிப்பு தட்டும். ’என் துணிமணி? எதற்காக சாப்பாடு? வேளா வேளைக்குத் தீனி எடுக்க வேண்டுமா?’ என்றெல்லாம் தோன்றும். இந்தக் குழப்பத்தை திருமூலர் தெளிவிக்கிறார்.

  • அறிவு ஈசன் நிலையை எய்திய பிறகும்,
  • அறிவும் ஈனும் ஒன்றாகி விட்ட பின்னும்,
  • அறிவோ, ஈசனோ உடம்பிலிருந்தே வாழ வேண்டியுள்ளதால்,

உடம்பு வாடினால் ஈசனும் வாடுவான், உடம்பு என்பதே ஈசனே எடுத்துக் கொண்ட உருவமென்றாலும், அந்த உடம்புக்குச் சோறு போட்டுத்தான் ஆக வேண்டும். திருமூலரது வார்த்தை என்னவென்றால்: ஈசன் அன்னமயம்.

     அன்னம் என்றால் சோறு, அன்னமயம் என்றால் சோற்றால் ஆனவன். சோறில்லையென்றால் வாடிப்போய் விடுவான், பாமர பாஷையில் வேடிக்கையாகச் சொல்வதானால், சோற்றால் அடித்த பிண்டம் யார்? யார் சோற்றால் அடித்த பிண்டம்? இறைவன் தான். இறைவன்தான் சோற்றாலடித்த பிண்டம். உடம்பல்லவோ சோற்றாலடித்த பிண்டம்? உடம்பும் இறைவனும் வேறு வேறா? இரண்டும் ஒன்றுதானே? அவர் கூறுகிறார்:-

பன்னும் மறைகள் பயிலும் பரமனை,

உன்னும் அளவில் உணரும் ஒருவனை,

என்னுள் இருக்கும் இளையா விளக்கினை

அன்ன மயமென் றறிந்துகொண் டேனே.

திருமூலரின் நகைச்சுவை உணர்வைப் பாருங்கள். எப்படிப்பட்ட ஈசன்? பன்னும் மறைகள் பயிலும் பரமன். (பலப்பல வேதங்கள் இவனிடம் ஈசன் வந்து பாடம் படிக்கின்றனவாம்.) உன்னும் அளவில் உணரும் ஒருவனை. (புலன்களின் ஆதிக்கத்தை ஒழித்து வெற்றி கொண்ட மனதினால் மட்டும் தெரிந்து கொள்ளப்படக் கூடியவன்.) என்னுள் இருக்கும் இளையா விளக்கு. (தன்னுடைய அறிவுப் பிரகாசம் குன்றாமல் அவன் என்னிடத்திலேயே நிலை கொண்டிருக்கக் கூடியவன்).

     அப்படிப்பட்டவன் யதார்த்த வாழ்வில் எப்படிப்பட்டவன் தெரியுமா? அன்னமயம். (அவன் ஒரு சாப்பாட்டு ராமன்!) சாப்பாடு இல்லையென்றால் அவனுக்கு எல்லாம் போச்சு. இதை மனதில் வைத்தே கோயில்களில் சிவலிங்கத்தைச் சோற்றால் மூடி ‘அன்னாபிஷேகம்’ என்கிறார்கள் போலும்!

இது நிற்க, விளக்கினை என்ற சொல்லுக்குப் பிறகு, அன்னமயம் என்ற சொற்களைத் திருமூலர் போட்டிருப்பதால், ’இறைவனை அறிவு வடிவினன்’ என்று எடுத்துக் கொள்ளவும் தமிழ்மொழி இடம் கொடுக்கிறது. விளக்கினை அன்ன என்று சேர்த்து வாசித்து, விளக்கினைப் போன்றவன் என்றும் கொள்ளலாம். விளக்கு என்றால் அறிவு என நீங்கள் அறிந்திருக்கலாம்.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 21

அந்த ஆற்றல் புகையை மட்டும் இழுக்க முடியாது. புகையிடம் செல்லாது. இப்படி ஒரு பொருளிலிருந்து ஒரு முழ உயரம் தள்ளி உள்ள இடத்தில் ஏதோ ஒரு விசேஷம்…

Muthappan

பிச்சை

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும்…

Granthaalayam

இறைவன் அன்னமயம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலை, உயிர் நிலை, மனநிலை,…

KG Sami

தவம் – 37

தலைகீழாக நிற்பது உண்டு. கும்பகம் முதலான பிராணயாமப் பயிற்சிகள் செய்து அதனால் ஏற்படக்கூடிய சூட்டினால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கக் கூடிய…

Granthaalayam

நீங்களும் சித்தராகலாம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) நம்ம நாட்டிலே இப்ப எல்லாம் சித்து, சித்து என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறாங்க. எந்த…

KG Sami

தவம் – 25

நமது அருள் தந்தையவர்கள் தமது பயணங்களில் சில சமயம் மேற்கால பயணம் போவார். சில சமயம் கிழக்கால பயணம் போவார். அப்படி கிழக்கால பயணம் போகும்போது நம்ம ஊர்…