ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு
எழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.
அன்பர்களே!
பொதுவாக மனிதர்களிடத்தில் மூன்று விதமான குற்றங்கள் உண்டு. அதாவது இப்படி ஒரு Formula (சமண்பாடு) வெச்சுக்கங்க, தெய்வம் + மும்மலம் = மனிதன். நீங்கெல்லாம் கணக்கு படிச்சிருப்பீங்க ஒரு சமண்பாட்டுல ஒரு பகுதிய எடுத்து சமக்குறியத் தாண்டி அந்தாண்ட, இந்தாண்ட போட்டா அதோட குறியீட்டை மாத்தணும் ‘+’ இருந்தா ‘-‘ ஆகும். ‘-‘ இருந்தா ‘+’ ஆகும் தெரியுமா? இப்ப என்ன சொன்னோம்? கடவுள்+ மும்மலம் = மனிதன்னு சொன்னோம். இப்ப இந்த மும்மலத்த தூக்கி அந்தாண்ட போட்டுருவோம், அப்ப என்ன வரும்? தெய்வம் = மனிதன் - மும்மலம். இதிலிருந்து என்ன தெரியுது? மனிதனிடத்திலிருந்து மும்மலத்தையும் எடுத்துவிட்டால் அவன் தெய்வமாகிறான். ரொம்ப சுலபமா இருக்குது Formula (சமண்பாடு). மும்மலம்னா என்ன? ஆணவம், கன்மம், மாயை. அதாவது நம்மிடத்தில் இருக்கிற ஆணவம், கன்மம், மாயையை போக்கிடத்தான் இந்த வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். “ மிருகங்களுக்கு இந்த ஆணவம், கன்மம், மாயை உண்டா?”ன்னு கேட்டா, ஆணவம் கொஞ்சம் போல இருக்கு. ஆனா கன்மம், மாயையெல்லாம் மிருகங்களுக்கு கிடையாது.
அன்பர்களே! ஆணவம், கன்மம், மாயைன்னா என்ன? அது தெரிந்தால்தான் நான் சொல்றது எல்லாம் விளங்கும். ஆணவம் என்ற வார்த்தையை திமிரு, அகங்காரம், கர்வம் என்ற அர்த்தத்துல நாம சொல்றோம். ஆனா அது அப்படி இல்லை. உண்மையான அர்த்தம் என்னன்னா, தன்நிலை உணராத குற்றம். ஆணவம்ங்கற வார்த்தையில இந்தப் பொருள் எங்கிருக்குது? வேணும்னா ஆணவம்ங்கற வார்த்தையை ஆண்+அவம் என்று பிரிக்கலாம். “ஓ! அப்படின்னா பெண்ணவம் என்று ஒண்ணு இருக்கு போல” என்று நீங்க நினைக்கலாம். ஆணவம் என்ற வார்த்தையை ஆண் + அவம் என்று பிரிச்சா என்ன அர்த்தம்? ஆண் என்றால் ஆட்சி செய்ய வேண்டியவன், பெண்ணை அடக்கி ஆள வேண்டியவன், ஆணாதிக்கம்ன்னு அர்த்தம். தான்தான் பெரியவன் என்று நினைப்பது ஆணவம், தனக்கே எல்லாம் சொந்தம் என்று நினைப்பது ஆணவம். அதாவது இறைவனே எல்லோருமாக இருக்கிறான், நானுமாக இருக்கிறான் என்று தெரிஞ்சா எல்லாம் சமமாக போயிடும். ஆனா அது தெரியாததுனால ஒருத்தரை பெருசாகவும், இன்னொருத்தரை சின்னதாகவும் நினைக்கறது ஆணவம். அதாவது ஆண்+அவம் என்று சொன்னாலும் கூட தன்னைப் பெரியவனாக நினைப்பது ஆணவம். மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நான் சிறியவனாகவும் இருக்கலாம் இல்லை சமமாகவும் இருக்கலாம், ஆனால் நான் யாருக்கும் பெரியவனில்லை என்ற ஒரு உணர்வு வந்ததுன்னா அது ஆணவம் இல்லை. அதை சமநோக்கு அல்லது நேர்நிறை உணர்வு என்று சொல்லுவோம். அந்த சமநோக்கு, நேர்நிறை உணர்வு இல்லாதவர்களை ஆணவம் பிடித்தவர்கள் என்று சொல்வார்கள். நேர்நிறை உணர்வு, சமநோக்கு எப்ப வரும்? இறைவனே எல்லாமாகி, நானுமாக இருக்கிறான், பிறருமாக இருக்கிறான் என்று உணரும் பொழுது எல்லாரும் சமமாகத் தெரிவார்கள்.
அடுத்தது கர்மம். கர்மம்னா என்ன? “கர்மம், கர்மம்”னு தலையில அடிச்சிக்குவாங்க பார்த்திருக்கீங்களா? ‘என்ன கர்மம் பண்ணுனனோ தெரியலை, எனக்கு இந்த மாதிரி சாராயம் குடிக்கற புள்ள வந்து சேர்ந்திருக்கு’ அப்படீன்னு சொல்றாங்க பாருங்க, அதுதான் கர்மம், கர்ம வினை, முன்வினை, ஏற்கெனவே செய்த பாவம். நாமும் நமது முன்னோர்களுமாக சில பல அளவுல பாவம் செய்திருக்கிறதுனால இப்ப கஷ்டப்படறோம். அதுதான் Cause and Effect system (செயல் விளைவுத் தத்துவம்). ஒண்ணு செஞ்சா ஒண்ணு வரும். அந்தந்த காரியத்துக்குள்ளேயே அதற்குரிய விளைவு இருக்குது. அந்தவிதமாக நாம் செய்த முன்வினை, நாம் பிறந்ததிலிருந்து இன்று வரைக்கும் செய்தது, அதற்கு முன்னால செய்தது, தாயார், தகப்பனாராக இருக்கச்சே செய்தாங்க பாருங்க அந்த பாவம்... அதையெல்லாம் அவங்க அனுபவச்சிட்டு மிச்சம் வெச்சு நம்மகிட்ட கொடுத்திருக்கறாங்க. சொத்து கொடுக்கறாங்க, கடன் கொடுக்கறாங்க, மூக்கு முழியெல்லாம் கொடுக்கறாங்க, உடம்பெல்லாம் கொடுக்கறாங்க, செகப்பு, கருப்பெல்லாம் கொடுக்கறாங்களே... அந்த மாதிரி பாவமும் கொடுத்திருக்கறாங்க. அதனாலதான் நாம் சம்பந்தப்படாத கஷ்டங்களும் கூட நமக்கு வர்றதை நீங்க பார்க்கலாம். ஒரு ஊர்ல ஒருத்தர் ரொம்ப நல்லவரா இருப்பாரு ஆனா, கஷ்டத்துல இருப்பாரு. ஏன்னா அவங்க தாத்தா பாட்டிங்க நாலு பேரு செஞ்சதுல மிச்சம் போட்டுட்டுப் போனாங்க. அதை அவங்க அப்பா, அம்மா எடுத்துக்கிட்டாங்க. அவங்க அதை முடிஞ்சவரைக்கும் அனுபவிச்சாங்க, மிச்சத்தைப் போட்டுட்டுப் போனாங்க. அதை அவர் எடுத்திட்டிருக்கிறாரு. அதனாலதான் அவர் கஷ்டப்படறாரு. அதே மாதிரிதான் நாமளும். நாம என்ன செய்யப் போறோம்? மெதுவா நம்ம பசங்க தலையில கட்டிட்டு “அனுபவி ராஜா அனுபவி”ன்னு போய்ச் சேர்ந்திடுவோம். புரிஞ்சுகிட்டா சரி! இதுதான் கர்மம். எல்லாருக்கும் பாவம் இருக்குது. அது இருந்தா இறைவனை நெருங்க முடியாது, ஆள முடியாது, சமமாக பார்க்க முடியாது.
அடுத்தது மாயைன்னா என்ன? மயக்கம். மாயைல அவ்வளவு மாயை இருக்குது. வேதாத்திரி மகரிஷி தான் அவ்வளவு மாயையும் உடைச்சுப் போட்டு “நிறைவு பெறாத ஆசைகளின் கூட்டம் மாயை” என்று சொன்னார். அதாவது உதாரணமா ஒருத்தரு வீடு கட்டணும், ‘வீடு கட்டணும், வீடு கட்டணும்’ நெனச்சுக்கிட்டு இருக்கறாரு ஆனா வீடு கட்ட முடியலை இதுதான் மாயை. வீடு கட்ட முடியலைங்கறது மாயையில்லை. அவரால வீடு கட்ட முடியாதுன்னு மொதலையே தெரிஞ்சுகிட்டு ‘வீடு கட்டக் கூடாது, வீடு கட்டக் கூடாது’ன்னு நெனக்கறதுதான் புத்திசாலிதனம். அதான் வீடு கட்ட முடியலையில்ல, அப்பறம் ஏன் ‘கட்டணும், கட்டணும் கட்டணும்’ன்னு ஆண்டி மடங்கட்டுன கதையா ஆசைப்படணும்? ஒவ்வொரு குடும்ப ஸ்திரீயும் வீடு கட்டறாங்க தெரியுமா உங்களுக்கு? வீடு இருக்கறவங்க இன்னொரு வீடு கட்டப் பாக்கறாங்க. ஏன் வீடு கட்டாட்டி என்ன? வீடு கட்ட வேண்டியதுதான், என்ன வீடு தெரியுமா? பெரிய வீடு, வீடு பேறு... அதை கட்டறதை விட்டுட்டு நூறு வருஷத்துக்குள்ள இடிஞ்சு போற வீட்டை ஏன் கட்டணும்? வாடகை கொடுக்கறதுக்கு கட்டுப்படி ஆகலைனா கட்டணும்தான். ஆனா கட்ட முடியுதா? கட்ட முடியலை, அப்பறம் ஏன் கட்டணும்? இதுதான் மாயை. நிறைவு செய்ய முடியாத ஆசையை மனதிலே வைத்திருப்பது மாயை. ‘என்னங்க நீங்க, ஒரு வீடு கட்ட முடியலைனா எப்படீங்க? ஒரு குருவிக்குக்கூட கூடு இருக்கு, ஒரு எலிக்குக்கூட வளை இருக்குது. எனக்கு ஒரு வீடு இல்லைனா எப்படீங்க?’ன்னு கேட்டீங்கன்னா அதுதான் மாயை. என்னென்ன நெனைக்கிறமோ அதெல்லாம் செஞ்சு முடிச்சுட்டம்னா அல்லது எதெது செய்ய முடியுமோ அதை மட்டும் நெனச்சம்னா அது மாயை இல்ல. நெனச்சதெல்லாம் செய்ய முடியாம, செய்ய முடியாததையெல்லாம் நெனச்சுக்கிட்டு இருக்கக் கூடிய ஒரு நிலைதான் மாயை.
அன்பர்களே! ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று குற்றங்கள், மூன்று மலங்கள் மனிதனிடத்தில இருப்பதுனால அவனால தெய்வத்தை நெருங்க முடியலை. இறைநிலை என்பது ஒரு பொருளில்லை, ஒரு உருவமில்லை, அது ஒரு தத்துவம். எப்படின்னா, இப்போ அன்பு என்பது என்ன? தத்துவமா? பொருளா? அம்மா என்பது என்ன? தத்துவமா? பொருளா?. அம்மா என்பது ஒரு பொருள், மனுஷப் பொருள்ன்னு வைச்சுக்கங்களேன். ஆனா அன்பு என்பது ஒரு தத்துவம். அது மாதிரி தெய்வம் என்பதும் ஒரு தத்துவம். அந்த விதமான தெய்வம் என்ற தத்துவத்தை நாம் நெருங்குவது, தெய்வத்தை நாம் அடைவது, அதைவிட தெய்வமாகவே ஆகுவதுதான் மனிதப்பிறவியினுடைய நோக்கம். இதை மிருகங்களால செய்ய முடியாது. ஏன்னா அதுக்கு ஆறாவது அறிவு கிடையாது. ஆறாவது அறிவு நமக்குத்தான் உண்டு. அதைக் கொண்டு ‘நாம யாரு? எங்கிருந்து வந்தோம்? ஏன் பொறந்தோம்? ஏன் வாழறோம்? எப்படி வாழணும்? எங்கே போகணும்? அதற்குரிய காரியத்தை செஞ்சிட்டிருக்கிறமா இல்லை வேற காரியத்தை செஞ்சிட்டிருக்கிறமா?’ன்னு யோசிக்கணும். இதெல்லாம் மிருகத்துக்கு தெரியுமா? மிருகத்துக்கு சிந்திக்க தெரியுமா? ‘அது என்ன காரியம்? அதை எப்படி செய்யணும்? யாரைக் கேட்டா சொல்வாங்க? வழி என்ன?’ இதெல்லாம் மிருகத்துக்கு வராது, மனிதனுக்குத்தான் வரும். ஆகவே மனிதப் பிறவியே தெய்வநிலையை அடைவதற்காக வந்ததுதான். ஆனா நடுவுல சோறு திங்கணும், தண்ணி குடிக்கணும், காசு கொடுத்துதான் சோறு, தண்ணி வாங்கணும், காசு வேணும்னா வேலை செய்யணும். வேலை செய்து பொருள் சம்பாதித்து, பொருளால வரக்கூடிய இன்பங்களையெல்லாம் துய்த்து நிறைவாக வாழ்ந்தால்தான் இறைவனை நெருங்குவதற்கு அல்லது அடைவதற்கு உள்ள காரியங்களை நாம் செய்ய முடியும். இதை உலகியல், அருளியல் என்பாங்க. உலகியல் இல்லாமல் அருளியல் இல்லை, அருளியல் இல்லாமல் உலகியல் இல்லை.
அன்பர்களே! இறைவனை நெருங்குவதற்குரிய ஒரு வாய்ப்பை மூன்று குற்றங்கள் தடுத்து விடுகின்றன. தன்னிலை அறியா தன்மை, இறைவன் யார்? என்று தெரியாத தன்மை, இறைவன் நான் என்று தெரியாத தன்மை. அது தெரியாததுனாலதான இவன் பாவம் செய்யறான். “இறைநிலை உணர்ந்திருக்க வேண்டும், பாவப்பதிவுகள் இல்லாமல் இருக்க வேண்டும்” என்ற ஒரு மேன்மை வரும் பொழுது யாருக்கும் கெடுதல் செய்ய முடியாது. அதுக்கு அவசியமில்லாமல் போகும். இப்போ கர்மங்கிறது எங்கிருந்து வந்தது? செய்யக் கூடாததை செஞ்சாத்தான் பாவம். தன்நிலை உணர்ந்த மேன்மையிலேயே கன்மம் நீங்குகிறது. ஆகவே உள்ளதெல்லாம் ஒரே குற்றம்தான் இறைநிலை உணராத தன்மை. அதுவே கன்மமாகவும், மாயையாகவும் மலர்கிறது. இந்த ஒரு குற்றத்தை மனிதர்கள் நீக்கிக் கொள்ளவேண்டும். அதுக்கு தவமும், அறமும் தேவை. அப்பறம் வேலை, சமையல், சாப்பாடு எல்லாம் பண்ணணும். எதற்கு? இந்த ஆணவம், கன்மம், மாயை நீக்குவதற்காக. சாப்பிடலைன்னா இந்த ஆணவம், கன்மம், மாயை, தத்துவம், தவம் ஒண்ணும் புரியாது. ஆகவே இந்த உடலுக்கு வருத்தம் வராமல் பார்த்துக் கொண்டால்தான் ஆன்மீக மேம்பாடு பெற முடியும் என்று சொன்னது மகரிஷினுடைய சிறப்பு. மத்தவங்கெல்லாம் வேற மாதிரி சொன்னாங்க. “நீ முதல்ல உடம்பை கவனி”ன்றாரு இவரு. “உன்னை கவனி, உடம்பை கவனி, குடும்பத்தை கவனி, சுற்றத்தை கவனி, ஊரை கவனி, உலகத்தை கவனி”ன்றாரு. உலகத்தையும் நாம கவனிக்கணும். இந்த உலகுக்கு வேண்டிய மேம்பாடுகளையெல்லாம் வாங்கி தரக்கூடிய ஆற்றல் ஒவ்வொரு மனிதனிடத்திலயும் இருக்கிறது. ஏனென்றால் அவன் தெய்வம். இதை மகரிஷி வேற மாதிரி சொல்லுவாரு, “நீங்கள் நினைத்தால் ஆயிரம் பேருக்கு உதவி செய்யலாம்”பாரு. ஆயிரம் என்ற வார்த்தைக்கு “பல” என்று அர்த்தம்.
ஆகவே அன்பர்களே! நாம ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் நீக்குவதற்கு ஒரே காரியமாகிய ஆன்மீக மேம்பாட்டை பெறுவதையே வாழ்க்கையின் இலட்சியமாக வைத்துக் கொண்டு இருக்கணும். உதாரணத்துக்கு இப்போ சென்னை என்று போர்டு போட்டு பஸ் நிக்குது. நீங்க சென்னைக்கு போகணும்னு ஏறி உக்காந்துட்டீங்க. நடுவில இறங்குவீங்களா? மாட்டீங்களா? இறங்கறீங்க “என்ன நீங்க சென்னைக்கு போகணும்னீங்க! சேலத்திலயே இறங்கறீங்களே?”ன்னு யாராவது கேட்டா அவசியம் இறங்கித்தாங்க ஆகணும்ன்னு சொல்லுவீங்க. அப்பறம் விழுப்புரத்துல இறங்கறீங்க. “என்னங்க இன்னும் சென்னை வரலை”ன்னு சொன்னா “பசிக்குதுங்க, சாப்பிடறதுக்காக இறங்கறேன்”னு சொல்லுவீங்க. சென்னை போகக்கூடியவங்க உடல் உபாதைகளையோ மற்றதையோ நடுவுல, நடுவுல கவனித்துக் கொண்டு போற மாதிரி, வீடுபேறு பெற வந்தவங்க சம்பாதிக்க, சாப்பிட, செலவு பண்ண எல்லாந்தான் செய்யணும். அதை மறந்துடக் கூடாது. உதாரணமா.. சேலத்துல இறங்கறீங்க, ஆனா பஸ் மேலயே கண்ணை வெச்சுட்டுப் போறீங்களா? இல்லியா? விழுப்புரத்துல இறங்கி சாப்பிடறீங்க, ஹாரன் சத்தம் கேட்டா, கதவை படார்னு சாத்துனா, “எந்த கதவு? நம்ம கதவா, இல்லையா?”ன்னு பாக்கறீங்க இல்லையா? அதே மாதிரி வீடுபேறுக்கு மேலேயே நினைவை வைத்துக் கொண்டு உலக விவகாரத்தையும் கவனிக்கணும். அப்படி செய்தா ஆணவம், கன்மம், மாயை எல்லாம் போயி வீடுபேற்றுக்கு உங்களை தயார் பண்ணிட்டு இருக்கறீங்கன்னு அர்த்தம். “வாழ்வின் நிறைவுல வீடு பேற்றுக்குப் போயிடலாம்”ன்னு நெனைக்கக் கூடாது. அந்த மாதிரி எத்தனை பேரு போயிருக்கறாங்க? அனேகமா யாருமே இல்லை. இந்த சங்கதியே தெரியாதவங்க இருக்கறாங்க, இந்த சங்கதி தெரிஞ்சாலும் “அது கெடக்குது”ன்னு இருக்கறவங்க இருக்கறாங்க, இந்த சங்கதி தெரிஞ்சாலும் “அது கஷ்டம்”ன்னு இருக்கறவங்க இருக்கறாங்க.
அன்பர்களே! எல்லாரும் அந்த நிலையை அடையாமலே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள் அல்லது முடித்துக் கொள்ளப் போகிறார்கள். ஆனால் அந்த நிலையில் இருந்து தோன்றி, வாழ்ந்து கொண்டிருந்து, வாழ்வின் நிறைவுக்கப்பறம் அந்த நிலையை அடைய வேண்டியவர்கள் அடையவில்லை என்றால் என்ன செய்வாங்க? ஒரு இடம் கொடுத்துருவாங்க. அதுதான் திரிசங்கு சொர்க்கம். திரிசங்கு சொர்க்கம்னா ஒரு மாதிரி மிரட்டிட்டாங்க. “நெஜமாவே மேல ஒரு சொர்க்கம் இருக்குது, அது நடுவுல அப்படியே அந்தரத்தில தலைகீழா தொங்கிட்டு இருக்குது”னாங்க. அதெல்லாம் இல்லை. செத்தவங்க எல்லாம் நேரா திரிசங்கு சொர்க்கத்துக்குத்தான் போறாங்க. உலகத்துலயும் அவங்களால வாழ முடியாது. ‘ஆவி’ன்னு சொல்லுவாங்க ‘ஆவி’ன்னா நீங்க கேவலமான அர்த்தத்துல எடுத்துக்க கூடாது. ரொம்ப உயர்வா எடுத்துக்கணும். இட்லி எதுல வேகுது? ஆவில வேகுது. ஒரு தமாஷ் எங்க ஊர்ல சொல்லுவாங்க. “இட்லி ஆவிலோகத்தில இருந்து வருதாம், தோசை வெளக்குமாத்தடி வாங்கிட்டு வருதாம்”. ஆவின்னா ரொம்ப உயர்வானது, உயர்ந்த சமாச்சாரம். ஆவியுனுடைய தன்மை மேலே செல்வது. மற்றதெல்லாம் கீழே போவது. அது மட்டும் மேலே செல்வது. அப்படியே போனா இறைவன்கிட்டயே போகலாமே, அதுதான் முடியாது. அது காத்துல கரைஞ்சு, மழையாப் பேஞ்சு கீழே வந்துரும். அதுதான் நீராவி. பாலாவி கேள்விபட்டிருக்கீங்களா? நீராவியில வேக வெக்கற மாதிரி பாலாவியில வேக வெக்கற மருந்து ஒண்ணு இருக்குது. இட்லி சுடற மாதிரி மருந்தையே கொழுக்கட்டை கொழுக்கட்டையா பிசைஞ்சு வெச்சு, பாலைக் காய்ச்சி அதோட ஆவிலேயே வேகக்கூடிய மருந்தெல்லாம் இருக்குது. ஆவி என்றால் உயர்ந்தது. வாத்தியார் என்ன சொல்றாரு “என்னடா படிக்க மாட்டீங்கறீங்க? நான் ஆவிபோகக் கத்தறேன்”ம்பாரு. அதுக்கு என்ன அர்த்தம்? “ஆவியை, உயர்ந்த சரக்கை நான் கொடுக்கிறேன், நீங்க கற்றுக்கொள்ள மாட்டேங்கறீங்களே!”ன்னு அர்த்தம். எல்லோரும் இறந்த பிறகு ஆவியாகி விடுவார்கள். ஆவியாகி எங்கே போறது? நேராப் போயிட முடியுமா சொர்க்கத்துக்கு? முடியாது. அப்ப இருக்கிற இடம் என்ன? திரிசங்கு சொர்க்கம். வார்த்தைதான் வித்தியாசம். உடலும் கிடையாது, தெய்வநிலையும் அடைய முடியாது. மனுஷ நிலையில இருந்து முடிச்சாச்சு, மனுஷ நிலையில இருந்த உடம்பு கெட்டு போச்சு. அதைக் கொண்டு போய் சுடுகாட்டுலே போட்டுட்டாங்க. தெய்வநிலையாவும் ஆக முடியலை. இது என்ன நிலை? ரெண்டுங்கெட்டான். திரிசங்கு சொர்க்கமாக இருக்கறாங்க. முந்தா நாளு செத்தாரே ஒருத்தர், போன மாசம் செத்தாரே அவரு, உங்க தாத்தா செத்தாரே ஆறுமாசத்துக்கு முன்னால அவரு எல்லாருமே இங்கதான் இருக்கறாங்க. உங்களுக்குத் தெரிஞ்சு செத்தவங்க, தெரியாம செத்தவங்க, இந்தியாவுல செத்தவங்க, இங்கிலாந்துல செத்தவங்க எல்லாருமே இங்கதான் இருக்கறாங்க. எல்லா பூமிக்கும் ஒரே காற்று மண்டலம்தானே? காற்று மண்டலம் என்ன கண்டம் இருக்கிற மாதிரி ஏரியா, ஏரியாவா தனித்தனியாவா இருக்குது? ஆசியாக்கண்டம், ஐரோப்பா கண்டம் எல்லாத்துலேயும் ஒரே காற்று மண்டலம்தான். ஒரே காற்று மண்டலத்துலதான் உலகம் முழுசும் சாகறவங்க, செத்தவங்க இருக்கறாங்க. எத்தன பேரு இருக்கறாங்க உலகம் முழுக்க? எண்ணாயிரங்கோடிப் பேராம். அது சீக்கிரமா ஆயிரங்கோடிப் பேரா ஆயிடப்போகுதாம், அந்த சந்தோசத்தை நாம் அனுபவிச்சுத்தான் சாகப்போறோம்னு வெச்சுக்கங்களேன். இப்படியாப்பட்ட சாவு நமக்கு தேவையா?
அன்பர்களே!
வாழும்போதே நாம யாருன்னு தெரிஞ்சிக்கணும், எந்த நிலைல இருக்கறோம்னு தெரிஞ்சிக்கணும். இந்த உடம்ப பத்தி நல்லா தெரிஞ்சிக்கணும். உயிரப் பத்தியும் தெரிஞ்சிக்கணும். செத்த பிறகு உயிர எங்க கொண்டு போகணும், எங்க கொண்டு கரைக்கணும்னு அவசியம் தெரிஞ்சே ஆகணும். இதுக்கு நாம தவம் செய்யணும், இறைநிலையப் பத்தியும் தெரிஞ்சி நிறைஞ்ச மனசா தினசரி வாழணும். இறைநிலைய உணர்றதுக்கு நம்மகிட்ட தடையா இருக்கற ஆணவம், கன்மம் மாயயை நீக்கி நலம் பல காண்போம்.
- நினைவில் உங்களோடு kgs.