KG Sami1937 — 2006

தவம் – 5

Signed KG Sami

ஆக்கினைச் சக்கரத் தவத்தை உருவகப் படுத்தி (Symbolic) பலவிதமாகத் தமிழ்நாட்டுச் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். நிறைய பாடல்கள் அப்படிப் பட்டவை இருக்கின்றன. ஒரு மூன்றைப்பார்ப்போம்

     ”முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே

அத்தை அடக்கி அங்கே ஆருமில்லா வேளையிலே

குத்து விளக்கேற்றி – என் கண்ணம்மா

கோலமிட்டுப் பாரேனோ

  • அழுகண்ணிச் சித்தர்

இந்தப் பாடலில் பரிபாஷையும், உருவகங்களும் உள்ளன. முத்து முகப்பு: நவரத்தினங்களில் ஒன்றான ஆக்கினைச் சக்கரம் முத்தோடு ஒப்பிடப்படுகிறது. முத்து உருண்டையாக இருக்கும். ஆக்கினைச் சக்கரம் உணரப்படுகின்ற பிட்யூட்டரி சுரப்பி (pituatory gland) ஏறத்தாழ உருண்டை வடிவம் தான். மூளையிலே பல முக்கிய பொருள்கள் உருண்டு திரண்டு பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள ஹார்மோன்களாக மாறுகின்றன. கடலிலே முத்து உருவாவதும் அவ்வாறுதானே. சிப்பியினுடைய சதைப் பகுதியிலே உள்ள பல முக்கியப் பொருட்கள் திரண்டு தானே முத்துவாக உருவெடுக்கிறது!

முகப்பு என்பது முன்பகுதி ‘பிட்யூட்டரி சுரப்பி’ உள்ளே இருந்தாலும் அதிலே குண்டலினி சக்தி திரண்டிருப்பதன் கனம் நெற்றியிலே தான் தெரிகிறது! முச்சந்தி வீதி அதாவது மூக்கு, புருவங்கள் இரண்டு இவை மூன்றும் சந்திக்கின்ற இடம் ஆக்கின்னைச் சக்கரம். ஆகவே ‘முச்சந்தி வீதி’ என்கிறார்கள்.

அத்தை அடக்கி – அகத்தை அடக்கி, மனதை அடக்கி, அங்கே ஆருமில்லா வேளையிலே – மனதில் ஓர் எண்ணமும் இல்லாத நிலையில்

”வாசியோக முறையொன்றும் இங்கு இல்லை

வாய்விட்டு உச்சரிக்கும் மந்திரமில்லை

ஊசி முனை வாசல் ஒன்றைத் திறந்து காட்டி

உன்னையே அங்கக் காவல் சில நாள் வைத்து

தேசிகனார் அருள் ஒளிரும் பார்வை மூலம்

தீட்சை மறுபடியும் ஈந்தழைத்துச் சென்று

மாசில்லா ஆதி நிலையறியும் உச்சி

மன்றத்தில் அமர்த்திடுவேன் அமைதி காண்பீர்”

(ஞா. வா. 62)

என்று நமது அருள் தந்தையவர்கள் “ஞானமும வாழ்வும்” என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார்கள். ஊசிமுனை வாசல் என்பது ஆக்கினைச் சக்கரம்தான். மெல்லியதானதும், மேன்மையானதுமான இடம் என்று பொருள் கொள்ள வேண்டும். மனதிற்குள்ளே செல்லக் கூடிய இடம், என்பதால் வாசல் என்றார்கள். நாசி என்றால் மூக்கு, நுனி என்றால் முனை.

இந்த இடத்தில், முற்காலத்தில் சிக்கல் பண்ணி வைத்திருந்தார்கள். மூக்குக்கு இரண்டு முனைகள். ஒரு முனை மேல் தட்டுக்கு மேலே இருக்கும். இதை ‘நாசி நுனி’ என்ற வார்த்தை குறிப்பிடுவதாகத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆகவே ‘கண்ணைத் திறந்து கொண்டு நுனி மூக்கை பார்த்துக் கொண்டிருப்பது தவம்’ என்று முற்காலத்தில் ஒரு கருத்து இருந்தது.

அது சரி அன்று. பின் எது சரி ? மூக்குக்கு இன்னொரு முனை உண்டே ! மூக்கின் மேல் பகுதியை எடுத்துக் கொண்டு பார்த்தோமானால் அது ஒரு துண்டுக் கோடு மாதிரி இருக்கும். ஒரு துண்டுக் கோட்டுக்கு இரண்டு முனை இருக்கும். ஒன்று மேலுதட்டுக்கு மேலே இருக்கிறது. இன்னொன்று எங்கே இருக்கிறது? இரண்டு புருவங்களும் கூடுகின்ற இடம். அதை ‘நெற்றிக் கண்’ என்று சொல்வார்கள். பொட்டு வைக்கக் கூடிய இடம் அது.

இரண்டாவது முனை நாசிநுனி என்று முற்காலத்தில் குறிக்கப்பட்டதும், நமது மகரிஷிகள் மேற்சொன்ன பாடலில் குறிப்பிடுகின்ற நாசிநுனி என்பதும் இந்த இடம் தான். சளி சிந்துகின்ற முனை இல்லை. பொட்டு வைக்கின்ற இடம். இந்த விவரங்கள் தெரியாமல் இக்காலத்திலும் கூடச்சிலர் மூக்கின் தவறான நுனியைக் கண்ணைத் திறந்து கொண்டு பார்த்து ஒரு பயிற்சி செய்கிறார்கள். அதனால் பல தொந்தரவுகள் வரும். ‘கிர்ரென்று’ ஒரு மயக்கம் வரும். பறப்பது போலே இருக்கும். ‘Trance’ என்று சொல்லக்கூடிய ‘தன் மறதி’ வரும். காலஞ் செல்லச் செல்ல, இந்நிலைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. இறுதியில் பைத்தியம் பிடிக்கும். எதனால் பிடித்தது என்று தெரியாது.

இது போன்று இன்னொரு குழப்பமும் உண்டு. கூட்டுத் தவ நிகழ்ச்சியில் ‘தவம்’ எடுக்காதவர்கள் இருந்தால், அவர்களுக்கு வேலை கொடுப்பதாகக் கூறிக் கொண்டு மூச்சையே கவனியுங்கள் என்று சொல்வார்கள். இதுவும் தவறு. மேலே சொன்ன தொந்தரவுகள் அனைத்தும் இதனாலும் வரும்.

நமது இயக்கத்தில் முன்பெல்லாம் ஒரு தவம் இருந்தது. அது வேண்டாமென்று கூறி தற்பொழுது நிறுத்தி விட்டார்கள். காரணம் மூச்சையும் சேர்த்துக் கொண்டு அந்த தவத்தைச் செய்வார்கள். தீவிரம் காரணமாகவும், அதில் ஒரு புத்துணர்வு பிறப்பது காரணமாகவும் சில அன்பர்கள் அழுத்தமான மூச்சுகளை அதிக எண்ணிக்கையில் போட்டார்கள். அது ஒரு வித மயக்கத்தைத் தந்தது. அது மகரிஷிகளிடத்தில் சொல்லப்பட்ட பொழுது, ‘அந்தத் தவமே வேண்டாமே ! தள்ளி விடுங்கள் !‘ என்று சொல்லி விட்டார்கள். இதெல்லாம் பழைய கதை.

நன்னெறி வாழ்க்கையால் ‘குண்டலினி சக்தி’ தானாக மேலேறி விடும். நன்னெறி மரபிலே தோன்றியவருக்கும் ‘குண்டலினி சக்தி’ மேலேறி விடும். பக்தி வழியிலே பூஜை, புனஸ்காரங்கள் நிறைய செய்பவர்களுக்கும் ’குண்டலினி சக்தி’ தானாக மேலேறி விடும். அப்படிப்பட்ட பரம்பரையில் பிறந்தவர்களுக்கும் ‘குண்டலினி சக்தி’ மேலேறி விடும். இதெல்லாம் நல்ல நிலைகள் என்றாலும், தங்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அது மட்டுமல்ல, பல மன மாறாட்டங்களும் ஏற்படும். இவற்றை எல்லாம் ‘தண்டு வட சுத்தி சாந்தி’ கொடுத்து சரிப்படுத்தி விடலாம்.

மாந்த்ரீக அப்பியாசங்கள் செய்தவருக்கும் அவர்தம் சந்ததியர்க்கும் கூட இது போல் உயிர்ச்சக்திமூலாதாரத்திலிருந்து மேலேறி விடும் (ஆக்கினைக்கு கீழே). காற்று, கறுப்பு தீண்டலும் இதே போன்ற நிலையை ஏற்படுத்தும். அந்நிலையில், இருந்த உயிரோடு, வந்த உயிரும் நேர்ந்து கொள்வதால் இரண்டு உயிர்களும் ஒன்று சேர்த்து, இரண்டு உயிரினுடைய ஆற்றலும் ஒன்று கலந்து, அதிகரித்த ஆற்றல் ‘குண்டலினி சக்தியை’ மேலேற்றி விடும்.

’செய்வினை, செய்வினை என்று ஒன்று இருக்கிறது. ‘தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்’ என்ற பழமொழிப்படி செய்வினை தனக்குச் செய்யப்பட்டாலோ அல்லது தன் கண்ணுக்கு எதிரே தனக்கு வேண்டியவர்களுக்குச் செய்யப்பட்டிருப்பதன் பாதிப்பைக் கண்டாலோ தான் அதை ஒப்புக்கொள்ள முடியும். செய்வினை செய்பவர்கள் தங்களுடைய மாந்தரீக சக்தியைக் கொண்டு பிரச்சனைக்குரியவர்களுடைய குண்டலினி சக்தியை அவர்களுடைய மூலாதாரத்திலிருந்து தூக்கி ஆக்கினைக்குக் கீழே ஏதோ ஒரு மையதில் வைத்து விட்டுப் போய் விடுவார்கள். குண்டலினி சக்தியானது, இருந்தால் மூலாதாரத்தில் இருக்க வேண்டும், அல்லது ஆக்கினை, அதற்கு மேல் இருக்க வேண்டும். கீழ் மையங்களில் தங்கி இருப்பதால் ‘பஞ்சபூத’ தத்துவப்படி அந்தந்த மையத்திற்குரிய வியாதிகள் வரும் சுவாதிஷ்டானத்தில் இருந்தால் ‘சீதள ரோகம்’ வரும். மணிப்பூரகம், அநாகதத்தில் இருந்தால் வெப்பரோகம், வாயுரோகம் வரும். விசுக்தியில் இருந்தால் பைத்தியமே பிடிக்கும். இதையெல்லாம் வைத்திய பரிசோதனை எதனாலும் கண்டு பிடிக்க முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கும் ‘தண்டுவட சுத்தி சாந்தி’ தான் கொடுக்க வேண்டும். அருட்காப்பும் முக்கியம்.

நமது அருள் தந்தையவர்களுடைய கூற்று என்னவென்றால், “மனம் சம்மந்தமான எந்தவிதமான நோயாக இருந்தாலும் மேற்படி நமது தவமுறைகளால் சரி செய்து விடலாம். அதற்கு ‘வார்ட் பாய்கள்’ எல்லாம் அருட்செல்வர்களாக இருக்க வேண்டும். நர்சுகள், காம்பவுண்டர்கள் எல்லாம் அருள் நிதிகளாக இருக்க வேண்டும். டாக்டர்கள் எல்லாம் பேராசிரியர்களாக இருக்க வேண்டும். அப்படி ஒரு மருத்துவமனையை நாம் எதிர்காலத்தில் கட்ட வேண்டும்”.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 47

சரி கண்ணை மூடித் தவம் செய்யுங்கள். ஒரு மாதிரி “குறு குறு” “விறு விறு” என்று மனசில, நெற்றியில் தெரிகிறதா. இப்பொழுது தான் கேட்க வேண்டும். இதற்கு முன்பு…

KG Sami

தவம் – 30

எண்ணெய் எங்க வீட்டில் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. பெரும்பாலும் வீட்டில் எள் எண்ணெய் தான் இருக்கும். அதை நல்லெண்ணெய் என்று சொல்வார்கள். அந்த…

KG Sami

தவம் - 38 A

ஏனென்றால் அப்புறம் கல்யாணம் ஆகாது. வயசு அதிகமாகும். படிப்பு அதிகமாகும். அதற்குத் தக்க பையனைத் தேட வேண்டும். அதன்பின் படிப்பு அதிகமாக அதிகமாக சம்பளம்…

KG Sami

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

KG Sami

தவம் – 31

எத்தனை முறை விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது, விளக்கு பார்ப்பது, கண் புதைப்பது என்றால் மூன்று முறை. ஆமாம் அதற்கு மேல் போக வேண்டாம். இன்று…

Granthaalayam

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்…