KG Sami1937 — 2006

தியாகச் செம்மல் வேதாத்திரி

Signed Arulnithi Muthappan

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதோ, எழுபத்தொன்றோ, சரியாக நினைவிலில்லை. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி. கூடுவாஞ்சேரியில் மகரிஷிகளுடைய இல்லத்தின் எதிர்புறத்தில் அமைந்திருந்த அவர்களது சாயத் தொழிற்சாலைத் தொழிலாளர்களைத் தனது இல்லத்தின் முன்பாக அழைத்து, தொழிலாளர் அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய விபரங்களை மகரிஷிகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர்கள் பெரிய அளவில் லுங்கி வியாபாரம் செய்து கொண்டு இருந்ததையும், அதில் ஒரு மாதத்திற்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் (நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பின்படி) வரவு செலவு நடந்து கொண்டிருந்ததையும் நீங்கள் அறிந்திருக்கலாம். 2 கார், 2 பங்களா என்ற அளவில் செல்வ செல்வீகத்தில் அவர்கள் திளைத்து கொண்டிருந்ததும் நீங்கள் அறிந்த செய்தியாகவே இருக்கும். கைத்தறித் துணிகளின் தேக்கத்தினால் 20,000 தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகக் கடனுக்கு நூல் வாங்கி, நூல் கொடுத்து, கைலி வாங்கி, அடுக்கிக் கொண்டிருந்ததானாலேயே அன்றைக்கிருந்த சொத்துக்கள் எல்லாம் ஜப்தி செய்யப்பட்டு மகரிஷிகள் தன் குடுபத்தோடு, கட்டிய துணியோடு, வீட்டை விட்டு வெளியில் வர நேர்ந்து விட்டதையும் நீங்கள் அறிந்தே இருக்கலாம்.

பிறகு, பெரியம்மாவின் உதவி மற்றும் ஆலோசனைப்படி, புட்டு சுட்டு விற்பது தொடங்கி, மகரிஷிகள் மீண்டும் பொருளாதாரத்தில் சிறப்புற்றார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். பின்னர் சாயத் தொழிற்சாலை தொடங்கி, அங்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு தனித்தன்மை பொருந்திய சாயங்கள் ஏற்றிக் கொடுத்து, அதன் மூலம் மகரிஷிகள் பழைய பொருளாதார நிறைவை அடைந்திருந்தார்கள். தானே பல வண்ணக் கலவைகளை – மற்றவர்கள் இதுவரைக்கும் அறிந்திராத வண்ணக் கலவைகளை – வியாபார உலகமும், உபயோகிப்பாளர் உலகமும் வியந்து பாராட்டக் கூடிய – வண்ணங்களை அவர்கள் கண்டுபிடித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். (பின்னர் தொழிலை விடும் போது, தான் கண்டுபிடித்த வண்ணக் கலவை ரகசியங்களை இனமாகப் பகிரங்கப்படுத்திவிட்டார் என்பதும் நீங்கள் அறிந்த விஷயமாக இருக்கலாம்).

சாயத் தொழிற்சாலை சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் போது தான் மகரிஷிகள் கடலூர், காரைக்கால், புதுச்சேரி போன்ற ஊர்களில் உலக சமுதாய சேவா சங்கத்திற்குக் கிளைகளை அமைத்து வெளியூர்களுக்கு மாதந்தோறும் சென்று வருகின்ற தீவிர அருள் தொண்டை விரித்துக் கொண்டார்.

மகரிஷிகள் தனது உய்த்துணர்வின் மூலம் பல வண்ண ஜாலங்களை நூல்களில் ஏற்றிக் கொண்டிருந்தார். அவருடைய சாயங்கள் என்ன நிறத்தனவாக இருந்தாலும் பளிச்சென்று இருக்கும். துணி குப்பைக்குப் போகும் வரை வண்ணம் மங்காது. அதனால் நூல் பேல் பேல்களாகச் சாயந் தோய்க்க வந்திறங்கும். அவற்றைக் காலா காலத்தில் சாயந்தோய்த்துத் திருப்பி அனுப்பும் பணி தொய்வடைந்து கொண்டிருந்தது. மாதத்தில் பல நாள் மகரிஷிகள் ஊரில் இல்லாதிருந்ததே இதற்குக் காரணம். இதனால் காலஞ் செல்லச் செல்ல, நூல் வரவு குறைந்து பொருளாதாரச் செழுமையும் குறைய ஆரம்பித்தது.

இந்த நிலையில் தான் மேற்சொன்ன ஆகஸ்ட் 16 நிகழ்ச்சி – சாயத் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூறுதல் – என் கண் முன்னால் – நடந்தது. தேவையான உத்தரவுகளை எல்லாம் போட்டு விட்டு, மகரிஷிகள் என்னிடம் பேச ஆரம்பித்தார்கள். இந்தக் கட்டத்தில் நேற்று, பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து நடந்த செயற்குழுக் கூட்டத்தின் சில நிகழ்ச்சிகளை வாசகர்களுக்கு எடுத்துச் சொன்னால் தான் அவர்கள் நன்கு விளங்கிக் கொள்ள கூடுமாகையால், முதல் நாளைக்குப் போவோம்.

ஆகஸ்ட் 15. நமது மகரிஷிகளுடைய பிறந்த நாள் கூடுவாஞ்சேரியில் கொண்டாடப்பட்டது`. “இதென்ன? தவறாகச் சொல்கிறீர்களே ஆகஸ்ட் 14 அல்லவா பிறந்த நாள்!” என்கிறீர்களா? அன்றைக்கு அரசு பணி நாள், அன்பர்கள் ஒரு நாள் லீவு போட வேண்டியிருக்கும். எனவே நடைமுறைவாதியாகிய மகரிஷி அவர்கள் அன்பர்கள் சௌகரியத்திற்காகத் தனது பிறந்த நாளை அப்போதெல்லாம் மறுநாள் தான் கொண்டாடுவார்கள். அன்றைக்கு அரசு விடுமுறையல்லவா?

நேற்று நடந்த கூட்டத்தில் நமது சங்கத்தினுடைய பரிதாபமான நிதி நிலை பற்றிப் பேசப்பட்ட்து. (எவ்வளவு துண்டு விழுகிறதோ அவ்வளவையும் மகரிஷிகளே ஈடு செய்து விடுவார்கள்!).

பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்குப் பல அன்பர்கள் வேகமாகப் பல ஆலோசனைகளை சொன்னார்கள். ‘சிவாஜிகணேசனைக் கொண்டு ஒரு நாடகம் போட்டால் நிறைய வருமானம் கிடைக்கும்’, ‘வாடகைக்குத் திரையரங்கைப் பிடித்து எம்ஜிஆர் படங்களைத் திரையிட்டால் நிறைய பணம் கிடைக்கும்’… என்ற ரீதியில் அன்பர்களுடைய உற்சாகமான ஆலோசனைகள் தொடர்ந்தன.

‘உங்களில் யார் யார் இவற்றில் எந்த எந்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறீர்கள்? என்று மகரிஷிகள் கேட்டதும், அனைவரும் கப்சிப்.

நேற்று நடந்த விவாதங்களை மனதில் வைத்துக் கொண்டு மகரிஷிகள் என்னிடம் பேசினார்கள். ‘சங்கத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு நூறு யோசனைகளை நேற்றுச் சொன்னீர்களே! இதோ இந்த யோசனையைக் கேளுங்கள். நமது சாயத் தொழிற்சாலைக்கு வருகின்ற நூல் அத்தனைக்கும் சாயம் போட நம்மால் முடியவில்லை. ஒரு மாதம் என்னைச் சங்கத்திற்கு இழுக்காமல், இங்கேயே விட்டு விடுங்கள். உங்களுக்கு மாதமொன்றுக்கு 2லட்சம் ரூபாய் தருகிறேன். உங்கள் சங்கம் ஜாம் ஜாமென்று நடக்கும். … ஆனால் இதில் ஒரு சிறு சங்கடமும் இருக்கிறது. மாதமொன்றுக்கு 2லட்ச ரூபாயைப் பார்த்ததும், நான் சங்கத்திற்கே வராமல் சாயத் தொழிற்சாலையிலேயே குந்தி விடுவேனா என்னவோ?’…

மாதம் 2லட்சம் ரூபாய் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், குடும்பச் செலவுகளுக்கும் அருள்பணிக்கும் எவ்வளவு தேவையோ, அவ்வளவு மட்டும் தொழிற்சாலையில் கிடைத்தால் போதும் என்று தனது சாயத் தொழிலை கட்டுக்குள் வைத்திருந்தார்களே, அந்தத் தியாக மனப்பான்மையை உங்களால் அளவிட்டு பார்க்க முடிகிறதா? நமது அருள் தந்தை அவர்களின் தியாக சீலத்திற்கு இது ஒரு மாதிரி (Sample) தான். இன்னும் எத்தனையோ!

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 39

ஆசிரியர் பயிற்சி மனவளக்கலையை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறு குனிய வேண்டும், எவ்வாறு தொட வேண்டும், எவ்வாறு தீட்சை கொடுக்க வேண்டும்…

Puthiya Bharathi

இறைவன் அன்ன மயம்!

உலகம் இறைநிலையிலிருந்து தோன்றியது. இறைநிலையிருந்து ஒவ்வொன்றாகப் பஞ்சபூதங்கள், ஓரறிவுமுதல் ஐந்து வகையான அறிவுகளைப் பெற்ற ஆயிரம் ஆயிரம் ஜீவன்கள்…

KG Sami

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத்…

KG Sami

வீடு பேறு

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்) அன்பர்களே! நாம் இறைவனைத் தேடுகிறோம், ஆனால் இறைவன்னா என்ன? என்று தெரியாமலே…

Arulnithi Muthappan

நயத்தக்க நாகரீகம்

பணத்தைப் பரிகொடுத்த சிலர் மகரிஷிகளிடம் புகார் சொல்வார்கள். மகரிஷிகள் சொல்கின்ற பதில்: ‘எனக்குத் தெரிந்து நான் பாவம் செய்ததில்லை. எனது பெற்றோரும்…

KG Sami

தவம் – 26

என்ன வேண்டும் உங்களுக்கு? சள்ளை இல்லாமல் வாழ வேண்டும். அவ்வளவு தான். சரி அப்புறம் பரவச நிலைக்கு வாங்க. அங்கே ஒரு சள்ளையும் கிடையாது. மனதை மட்டும்…