KG Sami1937 — 2006

ஆசான் நிகழ்த்திய அற்புத சாதனை

Signed Puthiya Bharathi

1976, ஜூன் மாதம், முன்பாதி. நமது ஆசான் அவர்கள் காரைக்காலில் 7 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி ஒன்றினை நடத்திக் கொடுத்து விட்டுக் கூடுவாஞ்சேரிப் பயணத்திற்குத் தயாரானார்கள்.

அப்பொழுதெல்லாம் அருள் பயணமாக எந்த ஊர் சென்றாலும் சித்த மருந்துகள் கொண்ட மருந்துப்பை ஒன்றைக் கையில் அவர்கள் எடுத்துச் செல்வார்கள். நமது சங்கத்தில் சேர்ந்து கொண்டு விட்ட அன்பர் யார் ஒருவருடையதும் அவர் குடும்பத்தினருடையதுமான வைத்தியப் பொறுப்பினையும் அவர்கள் தமதாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். மருந்துக்கு விலையாகக் கூட எதுவும் பெற்றுக் கொள்வதில்லை.

முன்பு ஒரு சமயம் எனது துணைவியின் விரல் மரமர்ப்புக்காக இரசகந்தி மெழுகு என்று ஒரு மருந்து கொடுத்து அதைக் குணப்படுத்தினார்கள். அதற்காக ரூ. 1 எனது வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக் கொண்டார்கள்.

எனது துணைவிக்கு இப்பொழுது (1976 இல்) ஒரு கஷ்டம். கருவுற்றிருக்கின்ற அறிகுறிகள் தோன்றின. ஆனால் 10 மாதம் தாண்டியும் குழந்தை பிறக்கவில்லை. 12 மாதம் போன பிறகுதான் இது கர்ப்பம் இல்லை என்று தெரிந்து கொண்டோம். ஆனால் அவளை வைத்தியத்திற்கு உட்படுத்துவதை யாராலும் சாதிக்க முடியாது. வேண்டுமானால் மயக்கமுறச் செய்து மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு செல்லலாம். சரி. மருந்து சாப்பிட மாட்டாளே! இந்நிலையாலேயே, 12 மாதமும் தாண்டிப் போகவே, நான் மனங்கலங்கிய நிலைக்கு வந்திருந்தேன்.

ஆசான் அவர்கள் கூடுவாஞ்சேரி புறப்பட ஆயத்தமான பிறகுதான் எனக்கு இந்தக் கேஸை அவர்களிடம் சொன்னால் என்ன என்று தோன்றியது. சொன்னேன். சட்டென்று, ’இதெல்லாம் நாம் பார்க்கின்ற விஷயம் இல்லை. உடனடியாக ஒரு லேடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். தாமதிக்க கூடாது’ என்றார். நான் பயந்து போனேன். (ஏனெனில் என் மனைவிதான் டாக்டரிடம் செல்ல மறுப்பவளாயிற்றே. டாக்டர் வீட்டிற்கு வந்து பார்த்தாலும் உடம்பை காட்டிக் கொள்ள மாட்டாளே!).

 ஆசானும் கைவிட்டதனால் என் மனக் கலக்கம் அதிகமாயிற்று. ஆனால், ஒரேயடியாக அவர் கைகழுவிவிடவில்லை என்பது எனக்குத் தெரிந்தது. எப்படி? எங்கேயோ பார்த்துக் கொண்டு, அவர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். எனக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியுமாகையால் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை அவர்கள் சொல்லப் போகிறார்கள் என்று உணர்ந்து கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘ஒரு வெற்றிலை வேண்டுமே!’ என்றார். உடனே வெற்றிலை வரவழைக்கப்பட்டது. அதை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்றுப்பார்த்து கொண்டிருந்தார். பிறகு அதை என் மனைவியிடம் கொடுத்து, ‘தின்று விடு!’ என்றார். தின்றாயிற்று. ‘இது வேலை செய்யும்’ என்று கூறிவிட்டு, ஆசான் அவர்கள் கூடுவாஞ்சேரி புறப்பட்டு விட்டார்கள்.

காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு எனக்கு மாற்றல் உத்தரவு வந்திருந்ததால் நாங்களும் புதுவைக்கு மூட்டை முடிச்சுடன் புறப்பட்டோம். புதுவை சேர்ந்த மறுநாளே பன்னிரண்டு மாதம் காத்திருந்த மாதவிடாய் லகுவாக வந்து விட்டது! யாருக்கும் எவ்விதத் தொந்திரவும் கொடுக்கவில்லை. எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், இது ஒரு விளங்கிக் கொள்ள முடியாத புதிராகவும், அற்புதமாகவும் இருந்தது.

30 நாட்களுக்குள் ஆசானைச் சந்தித்து அந்த சாதனையின் இரகசியத்தைக் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:- ‘நான் டெல்லி போய் வந்து கொண்டிருக்கிறேன் அல்லவா? அங்கே வயதான ஒரு தம்பதிகள் ஒவ்வொரு தடவையும் என்னை வந்து பார்ப்பார்கள். அந்த அம்மையாரிடம் ஒரு ஆவி இருக்கிறதாம். அது மிகவும் நல்ல ஆவியாம். நான் நாக்பூர் நெருங்கும் போதே, ”உங்கள் சாமியார் வருகிறாரே போய் பார்க்கப் போகிறீர்களா?” என்று கேட்குமாம். அந்த அம்மையாரிடம் ஓய்வு ஒழிவின்றி அது பேசிக் கொண்டேயிருக்குமாம். இது ஒரு வேடிக்கையான நிலை என்றாலும், அந்த அம்மையாருக்கு இது ஒரு தொந்திரவாக இருந்திருக்கிறது.

‘அதனால், சென்ற முறை டெல்லி போன போது, அந்த ஆவியை எப்படியாவது விலக்கி விடும் படியாக என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுதே அந்த ஆவி அந்த அம்மையாரிடம், “என்னை ஏன் விலக்க வேண்டும்? நான் உனக்கு என்ன கஷ்டம் கொடுக்கிறேன்? நல்லது தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்? இப்பொழுது கூட, இந்தச் சாமியார் மிகவும் நல்லவராக, ஊருக்கெல்லாம் நன்மை செய்பவராக தோன்றுவதால், அவருக்கே ஒரு நன்மை செய்யலாமென்று இருக்கிறேன். அவர் சம்மதித்தால் நான் சொல்லுகிறேன்” என்றுசொல்லிற்றாம்.

’நான் சற்று யோசித்து விட்டு அது உண்மையாகவே நல்ல ஆவி தான் என்றெனக்குத் தோன்றியதால், ”ஊருக்கு செய்வதற்குரிய நல்லது ஏதாவது இருந்தால் எனக்குத் தெரிவிக்கச் சொல்லுங்கள்” என்றேன். அந்த ஆவி அந்த அம்மையாருக்குச் சொல்லி, அவர் மூலமாக நான் தெரிந்து கொண்ட வித்தைதான் இது:-

’தீரவே தீராது என்று கைவிடப்பட்ட நோய் ஏதாவது எனக்குத் தெரிய வந்தால் அந்த ஆவியை நினைத்துக் கொண்டு ஒரு வெற்றிலையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அந்த வெற்றிலையை நோயாளியிடம் தந்து, அதை அவர் தின்னச் செய்தால், அந்த வியாதி போய்விடும். அந்த வித்தயைத் தான் உன் மனைவி மீது நான் பிரயோகித்தேன் அதை நான் பயன்படுத்துவது இதுவே முதல் முறை’ என்று விபரம் கூறினார்.

அந்த ஆவியை நமது ஆசான் அவர்கள் வேறு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஆவிகள் இருக்கின்றன. நல்ல ஆவிகள் இருக்கின்றன. அவற்றைக் கைவசப்படுத்திக் கொள்பவர்கள்தான் குறி சொல்பவர்கள் மற்றும் மந்திரவாதிகள் என்ற விளக்கத்தை அடிப்படையிலிருந்து விஸ்தாரமாக ஆசான் அவர்கள் எனக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் விளக்கிச் சொன்னார்கள். ஆன்மா, ஆவி பற்றி ஆன்மீகத்தில் நிலவிய சில சிக்கல்களை நீக்கிக் கொள்ளவும், சிடுக்குகளை அவிழ்த்துக் கொள்ளவும் அந்த விளக்கங்கள் எனக்கு உதவின.

எந்த வைத்தியத்தாலும் தீர்ந்திருக்க முடியாத ஒரு வியாதி என் மனைவிக்கு இருந்தது. அது ஆசானால் இவ்வளவு எளிதாக தீர்த்து வைக்கப் பட்டில்லை என்றால் எனது, எனது குடும்பத்தினுடைய வாழ்க்கைப் போக்கே தலைகீழாக மாறி, எங்களது வாழ்க்கை ஒரு நரகமாகிவிட்டிருக்கும்! மாறாக, அந்த நோய் தீர்ந்தது என்கின்ற ஒரு பெரிய நன்மையோடு, ஆவிகள் பற்றிய மர்மமான விபரங்கள் எனக்கொரு கொசிராக (போனஸ்) கிடைத்தது என்பது நானும், என் முன்னோரும் செய்திருந்த நற்தவத்தால்தான்.

Keep reading

More from the archive

Kannimuthu

விஞ்ஞானமும்அறிவுஇயலும்

இயற்கையினைஎடுத்துநுகர்ந்தனுபோகிக்க,பொருளியலும்அரசியலும்பெருகலாச்சு,இயற்கையிலேஊடுறுவும்ஒழுங்கைஉன்ன,இயல்கலைகள்பலவகையும்தோன்றலாச்சு,இயற்கையதன்நுணுக்கங்கள…

Muthappan

பூக்களும், பூவையரும்

முப்பது ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் எங்கள் ஊருக்கு மாதாந்தோறும் வருவார்கள். 3 நாள் இருப்பார்கள். 3 நாளும் நான் உடன் இருப்பேன் எல்லோருக்குமாக அவர்கள்…

KG Sami

தவம் - 44

அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று எண்ணி கீழே கிடந்ததைத் தூக்கி டமால், டமால் என்று அடித்தார் ஒரு அடி. நெப்போலியன் பார்த்துச் சிரித்துக் கொண்டே…

KG Sami

தவம் – 34

அந்தந்த அளவில் அந்தந்த உறுப்புகள் அந்தந்த வழிகளில் பாதிக்கப்பட்டு ஜீவகாந்தம் இழப்பாகிறது. என்னே, இறைவன் ஜீவகாந்தத்தை செலவு பண்ணுகிற விதமாகவே வைத்து…

Puthiya Bharathi

சைவமும், அசைவமும்

ஆன்மீகம் தோன்றிய காலத்திலிருந்தே அதற்கேற்ற உணவு எது என்பது பற்றி ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. ‘ஆன்மீகவாதிகள் புலால் உண்ணலாமா? உண்ணக்…

Puthiya Bharathi

அடைந்தே ஆக வேண்டும் வீடு பேறு

திருநெல்வேலிநெல்லை SKY டிரஸ்ட்அறிவுக்கூடத்திறப்புவிழாவுக்குச்சென்றிருந்தேன். மன்றஅன்பர்ஒருவர்வீட்டில்தங்கியிருந்தேன்அவர்கள்வீட்டுப்பையன்ஒருவன்பிரம்மஞா…