பணத்தைப் பரிகொடுத்த சிலர் மகரிஷிகளிடம் புகார் சொல்வார்கள். மகரிஷிகள் சொல்கின்ற பதில்: ‘எனக்குத் தெரிந்து நான் பாவம் செய்ததில்லை. எனது பெற்றோரும் செய்ததில்லை. அதற்கு முன் தலைமுறைகளில் ஏதோ உண்டு போலும். ஆனால் இதுவரை நான் செய்த தவத்தினால் அந்தப் பாவம் அழிந்து போயிருக்கும் என்று நினைத்தேன்.
அதற்கு இறைவன், “இல்லையப்பா! இன்னும் பாவம் நிறைய இருக்கிறது. அதெல்லாம் தீர வேண்டும் அல்லவா? அவை தீரத்தான் மன்னன் கணியனை அனுப்பி உள்ளேன்” என்று சொல்கிறான் போலும். அதற்காகத்தான் இறைவன் இவரை அனுப்பி வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன். என்ன செய்ய?
அவரை நானாக எந்த ஊருக்கும் கூப்பிட்டுக் கொண்டு போவதில்லை. ‘இந்தாப்பா நீ என்னுடன் வரத் தேவையில்லை. வராதே’ என்று நான் எப்படி சொல்ல முடியும்? அது போகட்டும். உங்களுக்கு அவர் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று மகரிஷிகள் சட்டப் பையில் கையை விடுவார்கள். இது தான் மகரிஷிகளின் நயத்தக்க நாகரிகம்!
புகார் கொண்டு வந்த அன்பர்களின் ரிவர்ஸ் கியரில் நழுவி விடுவார்கள்.
***
’பரிமாறியாறிற்று, சாப்பிட வாருங்கள்’ என்று தனவந்தர் வந்து வினயமாக அழைத்தார். மூன்று பேரும் சென்று இலை முன் அமர்ந்தோம். தனவந்தரின் மனைவி வந்து பரிமாறினார். எனக்குக் கடுமையான பசி. அது சாப்பிடும் வயது. ஊற்றிய சாம்பாரைச்ச் சோற்றுடன் கலந்து பிசைந்து வாயில் அள்ளி வைத்தேன். நெருப்பை அள்ளி வாயைல் வைத்த அனுபவம் எனக்குக் கிடையாது. ஆனால் சிறு பிராயத்தில் வெண்ணெய் என்று நினைத்துச் சுண்ணாம்பை வழித்து நக்கிய அனுபவம் உண்டு. சாம்பார் அந்த அனுபவத்தை நினைவூட்டியது.
பசி தாளாமல் நாலைந்து வாய் உள்ளே தள்ளினேன். கண்களில் நீர்; தொண்டையில் எரிச்சல். நான் புலால் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் எங்கள் வீட்டு உணவினது காரத்தின் அளவு மிகவும் குறைந்து போயிருந்தது. ’10 ஆண்டுகள் தவம் செய்து இருக்கின்ற எனக்கே இப்படி இருந்தால், பாவம் 10 ஆண்டுகளாகத் தவம் செய்கின்ற மகரிஷிகளின் கதி என்னாயிற்றோ?’ என்று அவர் இலையைப் பார்த்தேன்.
மகரிஷிகள் சோற்றில் எந்த அளவு சாம்பார் ஊற்றப்பட்டிருந்ததோ அதை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு, கூட்டை இழுத்துப் போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பொறியலைத் தொடவே இல்லை. கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். மூக்கையும் துடைத்துக் கொண்டிருந்தார். நண்பர் இலையைப் பார்த்தேன். சாம்பார் சாதம் காலியாக இருந்தது. ரசத்திற்காகச் சாதத்தை எடுத்துக் கொண்டு வந்த அம்மையார், ‘என்ன சாமி சோறு அப்படியே இருக்கிறதே!? என்று கேட்க, ‘நீ முதலில் போட்ட சோற்றிலேயே பாதியை அப்படியே வெள்ளையாக வைத்திருக்கிறேன் பார்! இதிலேயே ரசம் போடு’ என்றார் மகரிஷிகள்.
ரசம் போட்டதும் பிசையத் தொடங்கினார். அம்மையார் எனக்கும் மன்னன் கணியனுக்கும் சோறு போட்டு ரசம் ஊற்றி விட்டு, மகரிஷிகள் பக்கம் திரும்பினார். சாம்பார் சோற்றை ஒதுக்கி வைத்தது மாதிரியே, ரசம் சோற்றையும் ஒதுக்கி வத்து விட்டு, ‘மோறுக்குச் சோறு போடம்மா” என்கிறார் மகரிஷிகள். ‘என்ன சாமி, சமையலில் காரம் கொஞ்சம் ஜாஸ்தியாகப் போய் விட்டதோ’? என்று சொல்லிக் கொண்டு சோறு போட்டு மோர் ஊற்றினார், அம்மையார். அதைப் பார்த்த மகரிஷி முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
’என்ன சாமி இவ்வளவு சந்தோஷம்?’ என்கிறார் அம்மையார். ‘சில வீடுகளில் மோரை தாளித்து விடுவார்கள். அதில் 2 மிளகாயும் போடுவார்கள். அதைக் கிள்ளியும் போடுவார்கள். நீ எவ்வளவு நல்ல மனுஷி என்றால், தாளிக்கவே இல்லை!?’ என்று கூறி மோருக்கு சோறு இன்னும் கொஞ்சம் போடு என்று வாங்கிக் கொண்டார். அம்மையார் புரிந்து கொண்டார். ‘சாமி நீங்கள் வருகிறீர்கள் என்று நான் காரத்தை எவ்வளவோ குறைத்து விட்டேனே! இதற்கு மேல் எப்படி சாமி குறைப்பது?’
’அதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறதே! சில நேரங்களில் நீ உப்பு போட மறந்து விடுவாயல்லவா?’ இது மகரிஷி. ‘ஆமாம் சாமி அதற்கென்ன?’ அம்மையார் பதில். ‘போட்டு விட்டதாக நினைத்துக் கொள்வாய் அல்லவா?’ இது மகரிஷிகள் கேள்வி. ‘ஆமாம்’ இது அம்மையார் பதில். மகரிஷிகள் கூறினார்: ‘அதே மாதிரி மிளகாய்த்தூள் போட்டு விட்டதாக நினைத்துக் கொண்டு சமையலை முடித்து விடு. சரியாய் போயிற்று’. சிரிப்பை அடக்க முயன்ற எனக்குப் பொறையேறி விட்டது. என்னே, மகரிஷிகளின் நயத்தக்க நாகரிகம்!