KG Sami1937 — 2006

மாதா, பிதா, குரு, தெய்வம்

Signed Granthaalayam

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)

வாழ்க்கை நெறி

நூலறுந்த பட்டம் காற்றில் எப்படிப் பறக்குமோ, அது போல பலபேரது வாழ்க்கை முறை அமைந்துள்ளது. இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தக்கவாறு தனது எண்ணம், சொல், செயல்களில் மாறுபட்டுக்கொண்டும், வேறுபட்டுக் கொண்டும், துன்பத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையே செய்து கொண்டும் உள்ளனர். இதற்குப் பாவம் என்று பெயர். பொதுவாக தனது எண்ணம்,  சொல், செயலால் பாவத்தை மக்களில் பலர் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சிலரோ வாழ்க்கை நெறியினை தேர்ந்தெடுத்து பாய் கட்டி சுக்கான் பொருத்திய படகு மாதிரி சிறப்பாக வாழ்ந்து கொண்டுள்ளனர். நற்குறிக்கோளை நிர்ணயம் செய்து அதன் படி வாழ்வது என்பது சிறப்பே.

      இவ்வாறு நற்குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து, அதன் படி தனக்கும் துன்பம் ஏற்படுத்தாது, பிறர்க்கும் துன்பம் ஏற்படுத்தாது வாழும் வாழ்வு புண்ணிய வாழ்வாகிறது.     

கண்கண்ட தெய்வம்

இவ்வாறான புண்ணிய வாழ்விற்குக் காரணமாயிருப்போர் நமது மாதா, பிதா தான். மாதா, பிதா செய்த பிரார்த்தனை, தவம், தானம், மற்றும் அவர்களது இன்சொல், நல்லெண்ணம், நற்சிந்தனை யாவும் நம்மை இனிமை கலந்த வாழ்விற்கு அழைத்துச் செல்கின்றது. மனிதப் பிறவியின் நோக்கமும் இறையுணர்வு பெற வேண்டும் என்பதே. இந்த நோக்கம் நிறைவேறும்.. நிறைவு பெற்ற பின்னரும் மற்றவர்களுக்கும் ஞானத்தை ஊட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழும் மனிதன் மாமனிதனே. இதற்கெல்லாம் காரண கர்த்தாவாக இருப்பவர்கள் நமது பெற்றோர்கள்தான். அவர்கள்தான் நமக்குள்ளே இருந்து நம்மை, நமது எண்ணத்தைத் தூண்டி நமக்கு ஊக்கத்தையும் வெற்றியையும் கொடுக்கிறார்கள்.

தாய் தந்தையின் உடல் நமது உடலில் இருந்தாலும் தாயின் பங்கே இவ்வுடலில் அதிகம். பத்து மாதம் அம்மாவின் வயிற்றுக்குள் இருந்தோம். பின்னர் ஓரிரு ஆண்டுகள் அத்தாயின் இரத்தத்தையே பாலாக உண்டு வளர்ந்தோம். ஐந்து வயது வரை தாயின் மடியில் தான் வளர்ந்தோம். தாயின் அனுபோகப் பதிவுகள் எல்லாம் நம்மிடத்தில் அதிகமாகவே இருக்கும். அம்மா தான் பெரியவங்க, அம்மாதான் வல்லவர்கள், அம்மாதான் அறிவாளி, அம்மாதான் சகலமும்.. ஏன் அம்மாதான் இங்கே நாமாகவும் இருக்கிறார்கள். ஆகவே  தாயினுடைய அம்சம் அல்லது குணாதிசியம் நம்மில் அதிக மாகவே இருக்கும். அந்தத் தாய்க்கு அவர்கள் தாயின் குணாதிசியம் அதிகமாக இருக்கும்.

அதாவது பெண்பால் தொடர்தான் இன்னமும் மனித குலத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. நமது முன்னோர்களில் தாயோ, பாட்டியோ, பாட்டிக்கு பாட்டியோ, நல்ல சிந்தனையும், நற்குணமும், நற்தவமும் செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக இங்கே தவம் செய்வோரும் உண்டு. எனவே தாய்க்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இதனால்தான் நமது முன் னோர்கள் தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்று கூறினர். அம்மாவுடைய ஆற்றல் உடலில் ஏற்கனவே இருந்தாலும், நினைக்கும் தோறும் கூடுதலாக உடனடியாய் வரும், மேலும் பல வெற்றிகளுக்கும் வழிகோலும் என்பதால் அம்மாவை தெய்வத்திற்கு நிகராக கொண்டாட வேண்டும். 

அப்பாவும் அதே மாதிரிதான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. அம்மாவிற்கு தாலி கட்டி, வாழ்க்கையில் பங்கு கொடுத்து ஆதரித்துக் கொண்டிருப்பது அப்பா. நம்மை உருவாக்குவதற்கு அம்மாவிற்கு உதவியாக இருந்தவர் அப்பா. அந்த அப்பாவின் உயிரும் நம் உடலில் ஓடுகிறது. ஆகவே தகப்பனாரையும் நாம் தெய்வமாக வணங்க வேண்டும்.

இந்த இரண்டு பேரும் தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்படக் கூடியவர்கள். எனவே இவர்களைக் கண்கண்ட தெய்வம் என்பார்கள். கண் காணாத தெய்வம் என்று ஒன்றும் இருக்கிறது.

கண்காணாத  தெய்வம்

இறைவன் என்ற ஒன்று உள்ளது. இறைவன்  இல்லாத இடமே இல்லை  என்று நினைக்கும்போது நமது மனம் பெரியதாகிறது. இறை மிக வலியது என நினைப்பதால் நம் மனதிற்கு ஆற்றல் கூடுகிறது. மிகத் தூய்மையானது என நினைக் கும்போது மனம் தூய்மையடைகிறது.  அப்போ, அம்மாவையும் அப்பாவையும் விட்டுவிட்டு இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறதா? ஆனால் இறைவனை நினைக்கக்கூடிய அளவிற்கு நமக்கு உடல், உயிர், மனம், அறிவு எல்லாவற்றையும் கொடுத்தது அம்மா அப்பாதானே? எனவே முதலில் அவர்களை வணங்க வேண்டும்.

நமது வாழ்க்கையில் துன்பச் சூழலும் துன்பமும் உள்ளது என்பதால் நமது தாய் தந்தையர் அறிவின் முழுமை அல்லது ஞானம் அடைந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கும் ஞானத்தை அல்லது முழுமையை கொடுக்க வேண்டும். நாம் செய்யும் தவத்தால் அவர்களும் வீடுபேறு அல்லது முழுமை அடைவர். இந்த மாதிரி மாதா, பிதா, தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட அவசியத்திலும் ஒன்றால் ஒன்று மேம்பட்டதாக இருக்கிறது.

மாதா, பிதா, தெய்வம் வரிசை சரி! தெய்வத்தைக் காட்டிக் கொடுத்தது யார்? அவர்தான் குரு. மாதா, பிதா, தெய்வம் வரிசையில் தெய்வத்தை காட்டிக்கொடுத்தவர் ஒருவர் வருகிறார் என்றால் தெய்வத்திற்கு முன்னதாகவும் மாதா பிதாவிற்கு பின்னதாகவும் அவரை வைத்து வணங்கி வந்தார்கள் நமது முன்னோர்கள்.

இதை வேறு விதமாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். மாதா ஒரு தெய்வம், பிதா ஒரு தெய்வம், குருவும் ஒரு தெய்வம் என்று நான்காவது இருப்பதை மூன்றுக்கும் போட்டுக் கொள்ளலாம்.

வாழ்க்கையில் ஒருவன் பெற்றோரை வருத்தினான் என்றால் அவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அவர்களை ஆதரிக்க வேண்டும். பெற்றோர்களின் நல்ல அன்பு ஆற்றல் எப்போதும் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும். எனவே அவர்களது ஆற்றல் நமக்கு வந்துகொண்டேயிருக்கும். நாமும் அவர்களை நினைத்தால் ஆற்றல் இரட்டிப்பு ஆகும். அம்மா, கூட வந்தால் எப்படி நன்மை விளையுமோ அது போல அவர்களது நல்ல எண்ணமும் நம்முடனே வந்து நன்மை செய்யும். நமது முன்னோர்களின் தவ நிலை நமக்கு நற்தாயைக் கொடுத்துள்ளது. முன்னோர்களில் சிலருக்கு தவ நிலை கிடைக்கா நிலையும் ஏற்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் நாம்  தான் நமது குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக வாழ்ந்துகாட்டி நமது குழந்தைகளுக்கும் பின்னால் வரும் சந்ததியினருக்கும் வழி காட்ட வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையை நீங்கள் எவ்வாறு அர்த்தம் பண்ணிக் கொண்டாலும் சரி. உண்மையாய், அன்பாய், அறிவாய், காணாத ஒன்றாயும் ஒன்று உள்ளது. அதனையே கண்காணா தெய்வம் என்கின்றோம். இதுவே கண்ணுக்கு புலப்படா ஆற்றலாயும், கண்ணுக்கு புலப்படா காலமாயும், கண்ணுக்குப் புலப்படாமல் அனைத்து உயிர்களுக்குள்ளும் ஊடுருவியும் நிலைத்துமாயும் உள்ளது. மூன்றாவது கண்ணால் கண்டால் காணும் தெய்வமாயும் அதுவே  உள்ளது. 

வாழ்வின் குறிக்கோளினை  அடைய வேண்டுமாயின் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கையும் போற்ற வேண்டும்.

இவற்றையெல்லாம் அறிந்து, தெரிந்து, புரிந்து, உணர்ந்து செய்தால் பலன் அதிகமாகவே விளைவதைக் காணலாம்.

  • நினைவில் உங்களோடு., Kgs

Keep reading

More from the archive

KG Sami

தவம் - 38 A

ஏனென்றால் அப்புறம் கல்யாணம் ஆகாது. வயசு அதிகமாகும். படிப்பு அதிகமாகும். அதற்குத் தக்க பையனைத் தேட வேண்டும். அதன்பின் படிப்பு அதிகமாக அதிகமாக சம்பளம்…

Puthiya Bharathi

இறைவன் அன்ன மயம்!

உலகம் இறைநிலையிலிருந்து தோன்றியது. இறைநிலையிருந்து ஒவ்வொன்றாகப் பஞ்சபூதங்கள், ஓரறிவுமுதல் ஐந்து வகையான அறிவுகளைப் பெற்ற ஆயிரம் ஆயிரம் ஜீவன்கள்…

Puthiya Bharathi

சைவமும், அசைவமும்

சென்ற இதழில் வெளியான சைவமும், அசைவமும் என்ற விளக்கங்களைத் தொடர்ந்துமுட்டை சைவமா? அசைவமா?பால் சைவமா? அசைவமா?என்ற கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கான…

Granthaalayam

அன்பும் சிவமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ…

Granthaalayam

உயிர்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை ஆகாசம்…

KG Sami

தவம் – 36

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு…