(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்கள் ஆற்றிய உரை - பேச்சு நடையில்)
அன்பர்களே!
இணக்கம் என்ற தமிழ்ச்சொல், பிணக்கு என்பதனுடைய எதிர்ப்பதம். ஆங்கிலத்தில் இணக்கம் என்பதனை Harmony என்றும், பிணக்கு என்பதை Disharmony என்றும் சொல்வார்கள். அந்த Harmony என்ற சொல்லுக்கும், நமது உடலில் சுரக்கக்கூடிய ஹார்மோன்(Hormone) என்ற சுரப்பியைக் குறிக்கும் சொல்லுக்கும் அடிப்படையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நமது உடலில் பல்வேறு இயக்கங்கள் நடைபெறுகிறது, அந்த இயக்கங்களையெல்லாம் ஒரு சீராக கொண்டு வருவது ஹார்மோன்கள்(Hormones). நமது உடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி, குறைவா இருந்தா தூண்டி, அதிகமா இருந்தா குறைத்து, உடலின் இயக்கமெல்லாம் சரியாக நடைபெறுவதற்கு ஹார்மோன்கள் (Hormones)தான் காரணமாக இருக்கின்றன. சரியான ஹார்மோன்(Hormone) சரியான நேரத்தில், சரியானஅளவுல சுரக்கணும்.
இதை நாம மனித வாழ்க்கைலேயும் பார்க்கலாம், சரியாக ஹார்மோன்(Hormone) சுரக்கலேன்னா, குழந்தை கவிழ்ந்து விழுகிறது. யார் சொல்லி கொடுக்கறா குழந்தைக்கு மூணு மாசம், நாலு மாசம் ஆயிடுச்சு கவிழ்ந்து படுக்கணும்னு?. அதுக்கா.. கவிழ்ந்து படுக்கத் தோணும். கவிழ்ந்து படுத்தா விட்டரணும். அப்பத்தான் கையை ஊனி மண்டி போட்டு நடக்கும். அதற்கு ஒரு ஹார்மோன் (Hormone) சுரக்கும். நான் ஒரு இடத்துல பார்த்தேன். மண்டி போட்டதும் திருப்பி விட்டாங்க. என்னம்மா இப்படி செய்யறீங்க?ன்னு கேட்டேன். முட்டியெல்லாம் காய்ச்சுப் போயிடும்னாங்க. நமக்குதான் இது செஞ்சா அது ஆகும், செய்யலைன்னா ஆகாது, கெட்டுப் போகும், கெடாதுன்னு சரியா தெரியாது. ஆனா எப்ப, எப்படி, எது செஞ்சா, எப்ப, எப்படி, என்னென்ன நல்லது நடக்கும்னு குழந்தைகளுக்கு கரெக்டா தெரியும். அதனாலதான் அது மண்டி போடுது.
முட்டி காய்ச்சு போறதுன்னா என்னன்னு தெரியுமா? முட்டி கடினமா கருப்பா ஆயிடும். ஒரு மாசம், ரெண்டு மாசம் கழிச்சு உட்கார்ந்தப்பறம் அது போயிடும். இதை தடுத்தா என்ன ஆகும்னா, குழந்தைக்கு முட்டிக்கால் தட்டிப் போயிடும். முட்டி ரெண்டும் நெருங்கி கணுக்கால் ரெண்டும் விலகிப் போயிடும். அதனால கடைசிவரைக்கும் நடையே கெட்டுப் போயிரும். ஆகவே எந்த நேரத்துல என்ன செய்யணும், எப்ப, எப்படி, எந்த மாறுதல் வேணும் என்பது உள்ளுணர்வாக குழந்தைகளுக்கும், மனிதர்களுக்கும் தெரியும்.
ஆண்களுக்கு 13 வயசில வந்து குரல் தடிக்கும். ஓகோ! 13 வயசு ஆயிடுச்சு, நம்ம குரல் தடிச்சுட்டு கர்ராபுர்ரான்னு பேசுவோம் அப்படின்னு நினைச்சா செய்யறாங்க? பெண்ணுக்கு பூப்பு வரும். அது அவங்க நினைச்சா செய்யறாங்க?. மாசா மாசம் சுழற்சியா அது நடக்கும். அது மட்டும் அவங்க கையில இருந்தா எவ்வளவு செளகரியமா இருக்கும் தெரியுமா? பரிட்சை வருது இப்ப வேண்டாம்னு சொல்லிட்டா அது வராதா..? திரும்பி பரிட்சை முடிஞ்சு போச்சு, வான்னா வருமா? முடியாது. அது.. உள்ளிருந்துகொண்டு ஒரு இயக்கம் நடத்துகிறது, இதை சாதாரணமா அந்தராத்மான்னு சொல்லுவாங்க. அதெல்லாம் இல்லை, எல்லாம் ஹார்மோன்களுடைய (Hormones) வேலை. எல்லா, ஹார்மோன்களையும் (Hormones) சேர்த்து கட்டுபடுத்துது (Control) பிட்யூட்டரி சுரப்பி( Pituitary Gland). அதுமாதிரி எல்லா இயக்கத்தையும் ஒரு உடம்புல காலா காலத்துக்கும் கடைசி வரைக்கும் நடத்தி, ஒழுங்குபடுத்தி வரக்கூடிய ஹார்மோன்(Hormone) என்ற வார்த்தையை அடிப்படையா வைச்சுதான் இணக்கம் (Harmony)ன்னு பேர் வைச்சிருக்காங்க.
இந்த இணக்கம்(Harmony) மிருகங்களிடத்தில இயற்கையாகவே இருக்கிறது பாருங்க. மிருகங்கள் ஆண் பெண் வாழ்க்கைய ரெண்டு தினுசா நடத்தும்ங்க. சில மிருகங்கள் கணவன் மனைவி, மனைவி கணவன், ஒரு ஆணுக்கு ஒரு பெண், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் என்றிருக்கும். உதாரணமா புறா! நீங்க புறா பார்த்திருக் கீங்களா?. புறாக்களுக்குள்ள கணவன் மனைவி சண்டை வந்திருக்கா? ஒரு ஆண், ஒரு பெண் என்று வாழக்கூடிய வாழ்க்கையில சண்டை வந்திருக்கா?. வேறு அந்த நெறி இல்லாத மிருகங்களும் இருக்கிறது. ஆனா அங்கேயும் கூட ஒண்ணுக்கு, ஒண்ணு சண்டை கிடையாது. எல்லாம் சேர்ந்து இசைவாகத்தான் இருக்குதுங்க.
உதாரணமா Discovery Channel, National Geography channel எடுத்து பாருங்க. நிறைய மான்கள் இருக்கும். மந்தை மந்தையா மான்கள் இருக்கும். மந்தை மந்தையா மனுசங்க இருந்தா என்ன செய்வாங்க? இவன், ஏய்! நீ எட்டி நில்லும்பான், அவன் ஏய்! நீ எட்டி நில்லுன்னு சொல்லி ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்குவாங்க. ஆனா, மான்கள் என்ன செய்யும்..? ஒழுங்கா இருக்கும். அதுமாதிரி பெருங்கூட்டமாய் இருக்கக்கூடிய பறவைகள்... இதையெல்லாம் நீங்க ஒரு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கணும்.
இதென்ன, தத்துவ ஞான வகுப்பா? விஞ்ஞான வகுப்பா?ன்னு கேட்கக்கூடாது, எல்லாம் ஞான வகுப்புதான். தத்துவ ஞானமும், விஞ்ஞானமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி. இங்கே தத்துவ ஞானத்தில விஞ்ஞானமும் சொல்லி கொடுக்கலாம், விஞ்ஞானத்துல தத்துவ ஞானமும் சொல்லிக் கொடுக்கலாம். நீங்க ரெண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்ளணும். ஆனால், கேக்கறதை அடிப்படையா வைத்துக் கொண்டு உங்க அறிவை வைச்சு ஆராய்ச்சி செய்வது ரொம்ப அவசியம்.
உதாரணமா கணிதமேதை ராமானுஜம்.. அவர் வந்து சின்னப்பையனா இருந்தபோது கணிதம் தவிர மற்ற எல்லாவற்றிலும் மக்கு. எப்பவும் எதாவது சிந்தனையிலேயே இருப்பாராம். அப்ப வாத்தியார் வந்து இயற்கை அறிவியல் (Naturel Science) நடத்திட்டு இருந்தாரு, அவர் கவனிக்கல. பறவைகள் ஆகாயத்தில் எப்படிப் பறக்கின்றன?ன்னு வாத்தியார் கேட்டார். நடந்து கொண்டிருந்த வகுப்புப் பிரகாரம் இறக்கைகளைக் கொண்டு பறக்கின்றன என்ற பதில் வரணும். அங்கே நாம் கால்களைக் கொண்டு நடக்கிறோம். மீன்கள் செதில்களைக் கொண்டு நீந்துகின்றன, பறவைகள் ஆகாயத்தில் இறக்கைகளைக் கொண்டு பறக்கின்றன, அப்படின்னு பதில் வரணும். அவர் எங்கயோ யோசைனையில் இருந்தார். சுமார் 130 டிகிரி கோணத்தில் பறக்கின்றனன்னு பதில் சொன்னார்.
பறவைகள் சேர்ந்து கூட்டமாகப் போகும் போது இப்படி ஒரு கோணத்துல(Angle-Form) போகும். நீர்வாழ் பறவைகள் இப்படிப் போகும். ராமானுஜம் அதை கவனிச்சிருக்கிறார். 90 டிகிரிய விட அதிகம். ஒரு வட்டத்தை 120, 120, 120ன்னு மூணு 120 டிகிரியா பிரிப்பாங்க. பறவைங்க 120 டிகிரியை விட அதிகமா, சுமார் 130 டிகிரியில் பறக்கின்றன. இதுதான் ஆராய்ச்சி. அந்த மாதிரி நாம எந்த நேரமும் ஆராய்ச்சியோட இருக்கணும்.
போதனைகள் நமது அறிவை உயர்த்தக்கூடியது. ஆனால் ஆராய்ச்சிதான் நம்மை முழுமைப்படுத்தக்கூடியது. யாரோ சொன்னாங்கன்னு நம்பக் கூடாது. நாமளே சோதித்துப் பார்க்கணும். அவரவர்களுக்கு ஒரு அறிவு இருக்கிறது. அதை வளர்த்துக்கொள்ளணும். யார் சொன்னதையும் சோதித்துப் பார்த்து ஒப்புக்கொள்ளணும். அப்படியே நம்பக் கூடாது .
அன்பர்களே! இப்ப நாம அந்த இணக்கம் (Harmony) என்பது பற்றி ஆராய்ச்சி பண்ணலாம். பறவைகள் அந்த இணக்கத்தைப் பராமரிக்கின்றன. இப்ப நான் வரும்போது ஏரி மாதிரி ஒண்ணு இருந்தது. அதில் நிறைய நீர் வாழ்ப்பறவைகள் உட்கார்ந்திருந்தன. எல்லாம் உக்காந்துட்டு, அவங்கவங்க ஒண்ணுக்கு ஒண்ணு சண்டையில்லாம கம்முன்னு பார்த்துட்டு இருந்தன.
மான் கூட்டத்துல ஒண்ணுக்கொண்ணு சண்டையில்ல. ஆனால் மனிதன்? சண்டையில்லாத நாளேயில்ல. இங்கதான் இணக்கம் (Harmony) இல்ல. இந்த இணக்கத்தை (Harmony) நாம ஏற்படுத்திக் கொண்டால் எவ்வளவு செளகரியமாக இருக்கும்! எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்! நினைச்சுப் பாருங்க. ஆனால் இணக்கம் ஒன்று இல்லாமல் பிணக்கு என்று ஒண்ணு வருகிறது. ஏன் பிணக்கு வருகிறது? அவரவர்களுக்கு ஒரு அபிலாஷை, ஆங்கிலத்தில் Ambition என்று சொல்லுவார்கள். அது கிடைக்கல. அதனால தனக்குள்ளயே பிணக்கு. வேண்டுவது ஒண்ணு, கிடைப்பது ஒண்ணு, நினைப்பது ஒண்ணு, நடப்பது ஒண்ணு, தேவை ஒண்ணு, இருப்பு ஒண்ணு, 500 ரூபாய் தேவை, 400 ரூபாய்தான் இருக்கு.
இந்த மாதிரி அபிலாஷைகளால நடப்புக்கும் நினைப்புக்கும் வித்தியாசம் ஏற்படற போது, தனக்குதானே பிணக்கு வருது. பிணக்குங்கிற வார்த்தையை விட்டுட்டு வேற ஒரு வார்த்தைய போட்டு பாருங்க. தனக்குதானே சண்டை வருது. சண்டையின்னா ரெண்டு பேர் வேணுமே? அதனாலதான் பிணக்குன்னு சொல்றேன். ஆனா சில பேர் தனக்குத்தானே சண்டை போட்டுக்குவாங்க தெரியுமா? தலையில அடிச்சுக்குவாங்க, யார் மேல கோபம்? தன்மேலேயே. அதுதான் பிணக்கு. தனக்கு தானே பொருந்தா உணர்வு வரும்போது அதுதான் பிணக்கு.
இப்படித்தான் வேண்டுவது ஒண்ணு, கிடைப்பது ஒண்ணு. இப்படி வரும்போதுதான் பிணக்கு வருது. மிருகங்கள் இயற்கையை விட்டு விலகுவதில்லை. தேவைக்கு மேல ஆசைப்படறது இல்ல. காலையில புல்லு வேணும், பனிரெண்டு மணிக்கு தண்ணி வேணும், மூணு மணிக்கு நிழல் வேணும். அவ்வளவுதானே, அவைகளின் தேவைகள். அப்புறம் இன்னொண்ணு, எல்லா மாட்டுக்கும் அதுதான் வேணும், எல்லா ஜீவராசிகளுக்கும் அதுதான் வேணும். அது நல்ல கோர்வையா போகின்றன. அதை, அதை அது புரிஞ்சுக்கிறது.
ஆனால் மனுசங்களுக்கு ஒவ்வொருவருக்கும் வேண்டியது ஒவ்வொண்ணு. உதாரணமா எனக்கு இட்லி வேணும், ஆனா பூரி இருக்கு. உங்களுக்கு பூரி நல்லா இருக்கும். எனக்கு இட்லிதான் நல்லாயிருக்கும். ஆனா மாடு எல்லாத்துக்கும் புல்லுதான் நல்லாயிருக்கும். பிரச்சனை இல்ல பாருங்க. எனக்கு ஜன்னலைத் திறந்து வைக்கணும், ஆனா சாத்தி வைச்சிருக்கு. ஜன்னலைத் திறந்து வைச்சா, கொசு வரும். சாத்தி வைச்சா காத்து வராது. புழுக்கமா இருக்கும். மின் விசிறி(Fan) வேகமா வைச்சா குளிருது, கம்மியா வைச்சா வேர்க்குது. ஜன்னல சாத்தி வைக்கறதா? திறந்து வைக்கறதா? மின் விசிறி(Fan) போட்டுக்கலாமா? வேண்டாமா..? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடம்பு சூடு (Temperature).
எல்லா மாடுக்கும் காத்து வேணும், எல்லா மாடுக்கும் வீடு வேணும், எல்லா மாடுக்கும் தண்ணி வேணும், வித்தியாசமே இல்ல பாருங்க. நமக்கெல்லாம் வேண்டுவது என்னன்னு தெரியும். ஏதோ இதுதான் வேணும், அதுதான் வேணும்னுல்ல...
ஆனா மனிதர்களானதுனால வேண்டுதல்ல வேற்றுமை, வித்தியாசம் வரத்தான் செய்யும் அப்படின்னு நீங்க சொன்னா.. மனிதர்களானதுனாலதான் வேண்டுதல்ல வித்தியாசம் வரக்கூடாதும்பேன் நான். அதற்கு காரணம் ரெண்டு. முதலாவது, அதிகபட்சமா( Ultimately) எல்லா மனிதர்களுக்கும் வேண்டியது வீடுபேறு. அப்புறமென்ன? எல்லாருக்கும் வேண்டியது வீடுபேறு தானே?அப்புறம் உரசல் என்ன?. ரெண்டாவது, அந்த வீடுபேறு வேணுங்கறது சரியா வரலைன்னா.. அவங்க வேண்டுவது வேறு ஒன்று உண்டு. அது என்ன..? மனஅமைதி.
மனஅமைதி இருந்து விட்டால் இந்த அபிலாஷைகளில.. அதாவது அபிலாஷைல(Ambition) வித்தியாசம் இருந்தாலும், சரி போகட்டுமே, இருக்கட்டுமே, போதுமே, குடுத்துவோமேங்கற எண்ணம்தான் வரும். இதுதான் இணக்கம். இன்னொருத்தருடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்தம்னா இந்த பிணக்கு வராது. ஊம்.. அவரு கேக்கிறாரு, நான் எப்படி கொடுக்கறது?ன்னு நினைக்கும்போது ரெண்டு வருது. ஒண்ணு மன அமைதி போச்சு. ரெண்டாவது இருக்கிறதும் பிடுங்கிட்டு போயிருது. உள்ளதும் போச்சு, மனஅமைதியும் போச்சு. இப்ப நீங்க நல்லா யோசனை பண்ணிப் பாருங்க...
வீட்டுக்குப் போயி ஏதோ ஒண்ணுல விவகாரம் பண்ணினோம்னா, எதை வைச்சு விவகாரம் பண்ணினோமோ அதுவும் நமக்கு நிச்சயமில்ல, ரெண்டாவதா விவகாரத்துனால மனஅமைதியும் போச்சு. ரெண்டும் போச்சா? கொடுத்திட்டாக்கா... பொருள் போச்சு, மனஅமைதி இல்ல. சரி, தெரியாத கேட்டுட்டான் இல்லேன்னா அடிப்பான் அடி வாங்கறதுதான் மிச்சம்ன்னு கொடுத்திட்டா? அடிங்கறது பெரும்பாலும் வீட்ல இருக்கறவங்க கொடுக்கற மன அடிதான். கருத்து வேற்றுமை, கோபதாபங்கள், ஏச்சு பேச்சு இது நமக்கு ஏற்பாக இருக்கிறதா..? அதே சமயம் மனஅமைதி இருக்குதுன்னு வைச்சுக்கோங்க... விவகாரம் பண்ணி தக்க வைச்சுக்கிட்டோம் பாருங்க பொருள்.. அதை அனுபவிக்க மனசு நெருங்காது. இந்த மாதிரி என்னை இழுத்தானே.. கொடுக்க மாட்டேனானே.. பறிச்சிட பார்த்தானேன்னு அதிலேயே புத்தி போயிடும். அனுபவிக்க மனசு வராது.
அன்பர்களே! நீங்க எல்லாம் சின்னப் பிள்ளையா இருந்து பெரிய புள்ளையா ஆயிருக்கீங்க. ஆறு, ஏழு வயசுல இருந்திருப்பீங்க இல்லையா? அப்போ உங்கப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை வருமா? வராதுன்னு சொல்லாதீங்க, சொன்னா பொய். வருமில்ல..? அப்ப உங்க மனநிலை என்னாவாயிருந்ததுன்னு நினைச்சுப் பாருங்க. இப்ப சண்டை போட்டாங்கன்னா, பேசாம இருங்கம்மா.. அவர்தான் கத்தறார்னா நீங்களும் கத்தக்கிட்டுன்னு நியாயம் சொல்லுவீங்க. இப்ப உங்க குழந்தைங்க நியாயம் சொல்லும் உங்களுக்கு, ஆனா ஒரு அஞ்சு, ஆறு வயசு இருக்கறப்போ அம்மா அப்பாவுக்கு பிணக்கு வந்தா குழந்தைகளுடைய மனநிலையை நினைச்சுப் பாருங்க.. அந்த மனநிலைல இருந்து கொண்டு படிக்கும் போது படிப்பு வராது. குழந்தைகளால நல்லா படிக்க முடியாது. டியூஷன் எல்லாம் வைப்பாங்க பரிட்சையில மார்க் வராது. ஏன்னு பார்த்தா.. ஒரு இணக்கமான, இனிமையானஅலை இயக்கம்(Harmonious Vibration, Field, Situation) வீட்டுல இல்ல. குழந்தைகளுடைய மனநிலை, புத்திகூர்மை கெட்டுப் போறது மட்டுமில்ல... உடல் நலமும் கெடும். அடிக்கடி தலைவலி, தலைவலி போனா கால்வலி, கால்வலி போனா வயிற்றுப் போக்கு, அம்மைன்னு... ஏதாவது பிரச்சனை குழந்தைகளுக்கு வந்து கொண்டே இருக்கும். குழந்தைகள் மென்மையானவை. வெளிப்பக்கம் வளர்ந்தவங்களுக்கு அவ்வளவு அடிக்கடி ஏற்படாது. எப்பவாச்சும் ஏற்படும். எப்பவாச்சும் ஏற்பட்டா அது ரொம்ப தீவிரமா இருக்கும். பெரிய கஷ்டம் வந்துரும்.
இந்த சின்னம்மை(Chickenpox) என்று ஒரு வியாதி இருக்குது பாருங்க. அது ஏன் வருதுன்னா.. இரத்தம் முறிஞ்சு போய் உடம்பு, முறிஞ்சு போன இரத்தத்தை வெளியேத்தும். அப்படி வெளியேத்தறப்போ அங்கங்கே வீக்கம் வரும். ஏன் முறிஞ்சு போச்சு? சூடு (Heat). சூடு (Heat) எங்கிருந்து வந்தது? மனதிலிருந்து வரக்கூடிய சூடு (Heat) மாதிரி பெரிய சூடு எதுவும் கிடையாது. கோபம் வந்து அதை அடக்கினால் இந்த மாதிரியான வியாதி வரும். இரத்தக்கொதிப்பு(Blood pressure) வரும். எந்தத் தொற்று நோயா இருந்தாலும் படார்ன்னு அவங்களைப் பிடிச்சுடும்.
மனதை அடக்கக் கூடியவர்கள், கோபமோ, கவலையோ... ரெண்டும் ஒண்ணுதான். கோபம் உள்ளயே வைச்சுக்கிட்டா கவலை, ரெண்டு மன உணர்வுகளும் உடம்பை சூடு படுத்தி, இரத்தக்கொதிப்பு (blood pressure) உண்டு பண்ணி, அம்மை முதலிய பயங்கரமான தொற்று நோயை உண்டு பண்ணும். அந்த சூடு (Heat) புறத்தே இருந்தும் வரும்ன்னு வைச்சுக்கோங்க.. வெயில் காலத்துல வரும். பெரும்பாலும் உள்ளிருந்து வரக்கூடிய அந்த மன உணர்வுகளின் அடக்கம் தான் சின்னம்மை(Chickenpox) போன்ற நோயாக வருகிறது.
என்ன செய்யறோம்னா, நாம ஒருத்தருக்கொருத்தர் பொருந்தா உணர்வு ஏற்படும் போது அதை வெளிக்காட்டி சண்டை போடறோம், அல்லது அடக்கிக்கறோம். ரெண்டும் இருக்கக்கூடிய இடத்துல ஒரு இனிமையான அலை இயக்கம் இருக்காது. உதாரணமா, ஒரு குடும்பத்துல அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டாங்கன்னா.. ஏசிக்குவாங்க அல்லது திட்டிக்குவாங்கன்னா.. அல்லது நொச்சு நொச்சுன்னு ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்கன்னா... உதாரணமா, இதை ஏன் அங்க வைச்ச?அப்படிங்கறது.. ஏதாவது சோம்பலா இருக்கலாம், இல்ல தெரியாம இருக்கலாம், அல்லது அவசரமா இருக்கலாம்னு சமாதானம் படறதை விட்டுட்டு, இதை ஏன் இங்க வைச்ச?ன்னு குத்திக் காட்டும் வார்த்தை இருந்து கொண்டேயிருந்ததுன்னா, பொருத்துக்காம சொல்லக் கூடிய கருத்துகளை ரொம்ப கடுமையா (Harsh) சொல்வாங்க. அதை சாதாரணமா எடுத்துக்கறவங்களும் உண்டு. இதுக்கெல்லாம் போயி நை நைங்கறானே இந்த ஆளு அப்படின்னு நினைக்கறவங்களும் உண்டு.
இது என்ன ஆகுதுன்னா.. அங்குள்ள அலை இயக்கத்தை மாத்தி பொருந்தா உணர்வை ஏற்படுத்தறதுனால நோயினுடைய தாக்கத்துக்கு உடம்பு ஈடு கொடுக்க முடியாம போயிடுது. அதனால குழந்தையினுடைய நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து போகும். இனிமையான அலை இயக்கம் இல்லைன்னு வைச்சுக்கங்க... இன்னும் எத்தனை விதமான குழப்பம் வரும்னா.. எதையாச்சும் எங்கேயாவது வீட்டுலே வைச்சுட்டு மறந்துருவோம். ஏன் மறந்தோம்.? அத்தகு அலை இயக்கம் மனிதனுடைய ஓர்மை திறனை (concentration Power) குறைச்சுடுது. தேடறமில்லையா? அது கண்ணுக்கு நேரா இருக்கலாம். அதைப் பார்த்துட்டு போயிருப்போம்.
அரசாங்கத்துல( Govt. office) வேலை பார்க்கிறவங் களுக்கு நான் சொல்றது புரியும். நான் அரசாங்கத்துல( Govt. office) வேலை செஞ்சேன். அதிகாரி (Officer) கூப்பிட்டு அந்த ஃபைல (File) எடுத்திட்டு வாம்பார். ஐயோ! அந்த ஃபைலா( File).. சரி!ன்னு வந்து தேடுனா, அந்த ஃபைல் (File)அங்க இருக்காது. வேகமா தேடுவோம், ஆனா கிடைக்காது. உண்மை என்ன தெரியுமா?அதே ஃபைல(File) அப்பத்தான் பார்த்துட்டு வைச்சிருப்போம். ஏன்? பொருந்தாத அலை இயக்கம் நமக்குள்ள வந்ததுனால, நமக்கு அது தெரியலை. ஃபியூன் வருவான், கிளார்க் வருவான், தேடுவான், ஆனா கிடைக்காது. பரபரப்பா இருக்கும்னு வைச்சுக்கங்ளேன், அது.. கண்ணு சரியா பார்க்காது, மூளை சரியா வேலை செய்யாது.
அந்த மாதிரி ஒரு அலை இயக்கத்துல (Field) படிக்கற புள்ள, எப்படி படிக்கும்?. அந்த அலை இயக்கத்துல (Field)தான் அம்மா, அப்பா காலைல சண்டை போட்டுக்கிட்டாங்க, இப்ப இல்ல. ஆனா, அந்த அலை இயக்கம் (Field) அங்க தான் இருக்குது. அம்மா, அப்பா மட்டும் இல்ல.. குடும்ப உறுப்பினர்கள் யார் சண்டை போட்டுக்கிட்டாலும் சரிதான், மாமா மச்சான் போட்டுக்கிட்டாலும் சரிதான்.
இனிமையான அலை இயக்கத்தை மாற்றி முரணான அலை இயக்கத்தை உண்டு பண்ணினா, அறிவு மழுங்கிப் போகும், பார்வை மங்கிப் போகும். அப்ப என்ன வரும்? எரிச்சல் வரும், கோபம் வரும், திட்டு வரும். அந்த இடத்துல இருந்தா நம்ம அலை இயக்கம் இன்னும் இன்னும் அதிகம் ஆகுமே தவிர, அது குறையாது.
இதனால வெங்காயம் அரியும் போது கையை அறுத்துக்குவாங்க, கடுகு தாளிக்கும் போது கையை சுட்டுக்குவாங்க. அவர்களுடைய கவனக்குறைவுதான் காரணம். அத்தகு கவனக்குறைவு ஏன் வந்தது? அது மட்டுமில்ல.. நிக்கற வண்டியில போய் முட்டுவாரு, ஓடற வண்டியில, எதிர்ல வர வண்டியிலையும் முட்டுவாரு, கேட்டா பிரேக்(Brake) சரியா புடிக்கலேம்பாரு. ஏன் சரியா புடிக்கல? ஏன்னா புத்தி கெட்டுப் போச்சு. அப்புறம் அதுமட்டுமில்ல, உதைச்சு ஸ்டார்ட்(Start) பண்ணறேன்னுட்டு முழங்காலை உடைச்சுக்குவாரு. பெடல் (pedal) வழுக்கிட்டு விழுந்து அதில போய் முழங்கால் பட்டு காலை உடைச்சுக்குவாரு.
இந்த மாதிரி அஜாக்கிரதையான விபத்துக்கள் எவ்வளவு ஏற்படுது பாருங்க.. வீட்டிலையும் சரி, வெளியிலயும் சரி. அதுமட்டுமில்ல, அவர் ஒரு வியாபாரின்னு வைச்சுக்கங்க அல்லது ஆபீஸர் (Officer)ன்னு வைச்சுக்கங்க.. ஆபீஸ்ல வந்து கோபமாகவும், படபடப்பாகவும் அதே மனநிலைல உட்கார்ந்திருந்தார்னா அந்த அலை இயக்கம் (Field) எப்படி இருக்கும் தெரியுமா? உள்ளேயும் இருக்கும், வெளியேயும் இருக்கும். அவரை சுத்தியும் இருக்கும். அவர் ஒரு ஃபைல் பார்க்கிறாரு. என்ன ஃபைல் (File) போட்டுருக்கான் இந்த கிளார்க்கு? அப்படிம்பாரு. அவருக்கு விளங்காதுன்னு வைச்சுக்கங்க. கிளார்க்கு போட்ட ஃபைல், குறிப்பு (Note & Draft) அவருக்கு விளங்காது. இல்ல விளங்குச்சுன்னு வைச்சுக்கோங்களேன்... என்ன கையெழுத்து இது? அப்படிம்பார். வேற குறை கண்டுபிடிக்க முடியல. அது ஃபைலோட ஃபைலா ஒரு இருபது நாள் அப்படியே கிடக்கும். எதிர் மறையா(No, not grantedன்னு) பதில் வரும். அதனால குடுக்கிறவன் குடுக்கமாட்டான். வாங்கறவன் வாங்க வரமாட்டான். விக்கறவன் உனக்கு குடுக்க மாட்டான். அந்த மாதிரிதான் மாட்டும்.
இப்படி நாம வந்து இனிமையான அலை இயக்கத்தை நம் மனதில் ஏற்படுத்திக் கொள்ளாததுனால, பிறரோடு தொடர்பு கொள்ளும் போது அதே விதமான முரணான அலை இயக்கம் ஏற்பட்டு, ஏற்பட்டு, ஒன்றோடு ஒன்று பரவி, ஒன்றோடு ஒன்று ஊடுருவி, அது நிலை கொண்டு விடும். அதனால உடல் நலம் கெடும், வாழ்க்கை மேம்பாடு கெடும், குடும்ப நலம் கெடும் என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்தால் தேவலை.
என்ன இப்படி சொல்லிப்புட்டார்?ன்னு அப்படியே தள்ளிடாதீங்க. ஒரு ஆராய்ச்சிக்கு எடுத்துக்குவோம். நாளைக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தா தானே எடுத்துக்காட்டி விடும். உங்க வீட்டுலயே, உங்க போக்குல, உங்க நண்பர்களின் மத்தியில, நீங்க தொழில் செய்யற இடத்தில, நாளை ஒரு சந்தர்ப்பம் கிடைச்சு, தானே எடுத்துக்காட்டிடும். அதுக்கப்புறம் சிந்தித்துப் பாருங்க.
இது ஏன் நடந்தது? இவ்வாறு நடக்குமாறு ஆசைப்படலையே? என்ன பேசறோம்னு தெரியாம பேசிருவோம், தெரியுமா?. ஏதோ ஒரு வருத்தமான செய்தின்னு வைச்சுக்கங்களேன், அதுவும் கடுமையான வார்த்தைகள் சொல்லி பேசிருவாங்க. அப்பறமா ஏன் இந்த மாதிரி நான் பேசினேன்?னு தோணும். தனியா ஒரே ஒரு காட்டில, ஒரே ஒரு விசயம் இருந்தா பிரச்சனை இல்ல (No Problem). நாம ரெண்டு பேரா சேர்ந்து, கணவன் மனைவியா, பெற்றோர்களா, குடும்பமா, சமுதாயமா சேர்ந்து வாழறதுனாலே இந்த இனிமையான உணர்வு கெடுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்குது. ஏன்னா நாம அவங்க இப்படி, இவங்க இப்படின்னு சிந்தனையோடு கூடி வாழும்போது, மன அமைதி கெடுவதற்குத்தான் எல்லா வாய்ப்பும் உண்டு. அப்படிங்களா? அப்ப அதெல்லாம் சரி! என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?. நீங்கதானே சொன்னீங்க மன அமைதி கெடறதுக்கு எல்லா வாய்ப்பும் இருக்குதுன்னு கேட்டா, நாம அதை அதிகரிக்கக் கூடாது. முடிந்த வரைக்கும் அதை குறைக்கப் பார்க்கணும். அடுத்தவர்களால ஏற்படக் கூடிய அந்தப் பிணக்கை நாம குறைக்கப் பார்க்க வேண்டும். இது சாத்தியம்.
இந்த மாதிரி பிணக்கு இல்லாத இணக்கம் நம்ம குடும்பத்தில எல்லார் மத்தியிலும் இருந்துருச்சுன்னு வைச்சுக்கங்க, அது என்னமாய் இருக்கும்னு நினைச்சுப்பாருங்க. பாரதிதாசன் சொல்லியிருக்காரு நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்ன்னு. காலையில பேப்பர் வந்ததும் யார் படிக்கிறது? அது பாட்டுக்கு அமைதியா கிடக்கும். அண்ணன் போய் எடுத்தா, தம்பி வந்து பிடுங்குவான், உண்டா? இல்லையா?. அதில விளையாட்டு பகுதி (Sports Section) மட்டும் எனக்கு குடும்பான். அதுதான் தனக்கு வேணும்பான். ஒவ்வொரு வீட்டிலேயும் எத்தனை பேர் இருந்தாலும், எல்லாரும் கருத்து மோதல் இல்லாமல் இருந்தால் ஒவ்வொருவருக்கும் சந்தோஷமாக இருக்குமா? இல்ல வேற மாதிரி இருக்குமா..? சொல்லுங்க. இதை நாம் உருவாக்க வேண்டும். பொதுவாக மிருகங்கள் இதை பராமரிக்கின்றன. நாய்கள் போன்றது எல்லாம் சரியா வராது, ஒரு நாய் இன்னொரு நாயைப் பார்த்தா குறைச்சுக்கிட்டே இருக்கும். சில கொடூரமான விலங்குகளும் இருக்கின்றன. சண்டை போட்டுக்கிட்டேயிருக்கும். ஒரு கொடூரமான விலங்கு இன்னொரு கொடூரமான விலங்கு மேல பசி வந்துருச்சுன்னாக்கா கடிக்கும், அடிக்கும் எல்லாம் செய்யும். வாஸ்தவம்தான். ஆனா, அப்படி நடப்பது ரொம்ப அரிது.
மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை வந்ததுன்னு இப்ப சிந்தனைக்கு எடுத்துக்கணும். வேண்டுவது ஒன்று கிடைப்பது ஒன்றா இருந்தா, பகையுணர்வு, சங்கடம், கோபதாபம், எரிச்சல் வரும். இல்லையா? உதாரணமா நீங்க சினிமாக்கு போறீங்க. முதல் வகுப்பு டிக்கெட் (First Class ticket) கேட்கறீங்க. முடிஞ்சு போச்சு, சரி ரெண்டாவது வகுப்பு டிக்கெட் (Second Class Ticket) கிடைக்குது. சந்தோஷமா போறீங்களா... வேண்டியது முதல் வகுப்பு (First Class), கிடைச்சது ரெண்டாவது வகுப்பு (Second Class). சரி ஏதோ ஒரு வகுப்புல (Class) போய் உட்கார்றீங்க. சந்தோஷமா பார்க்காலாம்னா எதிர்ல ஒரு தலை மறைக்குது, எப்படித்தான் இருக்கும் உங்களுக்கு?. ஒவ்வொண்ணுலயும் அப்படித்தான் இருக்கும். நீங்க நல்ல படம்னு பார்க்கப் போனீங்க அது ஒரு மோசமான படமா இருக்குது. இப்படி மனிதர்கள் எது கிடைத்தாலும். அதில் ஒரு குறையை காணுகிறார்களா? இல்லையா?. இந்த மாதிரி இந்த உணர்வுதான்னு வைச்சுக்கோங்களேன், நாம சந்தோஷமா இருக்கணும், திருப்தியா இருக்கணும், சந்தோஷமா இருக்கணும் என்ற உணர்வு ஆண்களுக்கு அதிகமா? பெண்களுக்கு அதிகமா? சொல்லுங்க..,
அழகுணர்ச்சி என்பது பெண்களுக்கு ஏற்பட்டதுன்னு வைச்சுக்கோங்க, தான் அழகா இருக்கணும், அழகான பாத்திரங்கள், பண்டங்கள் வைச்சிருக்கணும் என்று அவங்க நினைப்பாங்க, இதை ஒத்துக்கிறீங்க இல்லையா?. ஒரு ஜவுளி கடைக்குப் போய் இது வரைக்கும் எந்தப் புடவையாவது பிடிச்சு வாங்கினீங்களா? நல்லா நினைச்சு பாருங்க, வீட்டுக்குப் போயும் நினைச்சுப் பாருங்க. கலர் சரியா இருந்தா, பார்டர் சரியா இருக்காது, பார்டர் சரியா இருந்தா முந்தி சரியா இருக்காது, முந்தி சரியா இருந்தா, தரம் சரியா இருக்காது. ஏன்? இதை ஆண்களுக்கு வேற மாதிரி எடுத்துக்கலாம். இன்னிக்கு என்ன குழம்பு? பூண்டு குழம்பு. வெந்தயக் குழம்பு வைச்சிருக்கலாம் இல்லையா?ம்பாங்க. சரி மறுநாள் வெந்தயக் குழம்பு வைச்சாச்சு. இன்னிக்கு என்ன குழம்பு? வெந்தயக் குழம்பு. மிௗகுக் குழம்பு வைச்சிருக்கலாம் இல்லையா?ன்னு கேப்பாங்க. சாப்பிடும் போது எல்லாம் நல்லா இருக்கும். கொஞ்சம் உப்புக்கூடங்கறது, உப்பு சரியா இருந்தாக்கா, இவ்வளவு காரமா?ங்கறது. அதிசயமா எல்லாம் நல்லா இருக்கு இன்னும் கொஞ்சம் போடுன்னு கேட்கும்போது எல்லாம் ஆயிப்போச்சுன்னு மனைவி சொன்னா. என்ன.. எல்லாம் ஆயிப்போச்சா? உம் புள்ளைகளெல்லாம் முதல்லயே தின்னுட்டு போயிட்டாங்களா?ன்னு குறை சொல்றது. என்ன இருந்தாலும் ஒரு குறை இருக்கிறதா? இல்லையா?. ரெண்டு விதமான உதாரணமும் எடுத்துக்கிட்டாச்சு. நான் கடைக்குப் போனா எப்படி புடவை எடுப்பேன் தெரியுமா? கடைக்காரர் எடுப்பான புடவையா எடுத்தெடுத்துப் போடுவாரு. எடுத்துப் போடாதன்னுட்டு அப்படியே ரேக்கிலயே பார்ப்பேன். இதை எடு, அதை எடுன்னு பார்த்து அப்படியே புரட்டுவேன். அப்படியே தேர்ந்து எடுத்துட்டு வந்துருவேன். ஒரு நிமிஷம் ஆகாது நான் தேர்வு(Select) பண்ணி எடுக்க. அதான், அதாவது எனக்கு அதுல திருப்தி வந்துருது. கொண்டு போய் வீட்ல கொடுக்கிறேன்னு வைச்சுக்கங்க, எப்படி எடுத்தீங்க? இது எல்லாம் ஒரு புடவையா?ம்பாங்க. சரி கொண்டு போய் திருப்பிக் குடுத்திருவோம்ன்னு சொன்னா... வேணாம்னு திருப்பிக் கொண்டுபோய் குடுக்கற கடைகள் இருக்குது. தேர்வு பண்ணிட்டு வேணாம்னா கொண்டுபோய் திருப்பிக் குடுத்துரலாம். திருப்பிக் கொண்டு போய் குடுக்க வேணாம்பாங்க. ஏன்? திருப்பிக் கொண்டு போய் குடுத்திட்டு வேற புதுசு வாங்கிட்டு வந்தா அது இதை விட மோசமா இருக்குமாம். புதுசுக்கு பழசே தேவலாம்னு இருக்குமாம்.
நான் எத்தனை உதாரணம் சொன்னாலும் உங்களை ஒரே கருத்துக்குதான் அழைச்சிட்டு வருவேன். எது கிடைத்தாலும் திருப்தி இல்லையே... ஏன்? நான் ஓரிடத்தில போய் பழகினேன்னு வைச்சுக்கோங்களேன். கொஞ்சம் கஷ்டத்தில இருந்தாங்க, சில ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சு ஒரு நல்ல திசை வந்தது. ஒரு தங்க மாளிகைன்னு வைச்சுக்கங்க, 7,500 ரூபாய் சம்பளம். குருவி உக்கார பனம்பழம் விழுந்த கதையா என்னவோ தெரியலை, நான் போய் சில வேலையெல்லாம் செஞ்ச உடனே 15,000 ரூபாய் சம்பளம் கிடைச்சுச்சு. திருப்தி வந்ததா? திருப்தி வரலை.
கார் வாங்கிக் கொடுன்னாங்க, சரி கார் வாங்கிக் கொடுத்தாச்சு., கார் வாங்கி கொடுத்தா, வேன் வாங்கிக் கொடுன்னாங்க. அதை வாங்கிக் கொடுத்தாக்க, பெட்ரோல் கம்பெனியிலேயே போட்டுக் கொடுக்கலை போட்டுக் கொடுங்கறாங்க. இப்படியே போனா என்னங்க ஆகறது? ஏன் திருப்தி ஆக மாட்டேங்கறாங்க? நான் சொன்ன புடவை விஷயம், சமையல் விஷயம் எல்லாம் சின்னது. காசு பணத்துல ஏன் திருப்தி வரலை?. வேண்டுவதை விட கிடைப்பது பெரிசா இருந்தாலும் பிடிக்காது, சிறிசா இருந்தாலும் பிடிக்காது. எப்படி பிடிக்கும்?
இனி குழந்தைங்ககிட்ட வருவோம். ஆறு மாச, ஒரு வருஷத்து குழந்தைக்கு பேசத் தெரியாது. கத்தும், ஏதோ கேட்குதுன்னு நமக்குத் தெரியும், ஆனா என்னன்னு தெரியாது. நாம வந்து கிலுகிலுப்பைய எடுத்துக் காட்டுவோம். குழந்தை அதை தூக்கிப் போடும், நோட்புக்கை தூக்கிப் போடும், பென்சிலை தூக்கிப் போடும், இதெல்லாம் அது கேட்கக் கூடிய பொருள். என்னமோ வேணும் ஆனா அதுக்கு கேட்கத் தெரியலை. உண்மையிலேயே அதுக்கு என்ன வேணும் தெரியுமா? அவங்க அஞ்சு வயசு அண்ணங்காரன் வர்றான், அவனுக்கு மட்டும்தான் தெரியும். ஏதோ ஒரு சாக்லெட்டை உரிச்சு வாய்ல போட்டான், அந்தப் பேப்பரை கீழே போட்டான். அந்தப் பேப்பர் பளபளன்னு இருந்தது. அந்தப் பேப்பர் வேணுன்னு கேக்குது. அது நமக்குத் தெரியாம போச்சு, பெரிசா கிலுகிலுப்பை,பென்சில், நோட்புக் எல்லாம் தூக்கி கையில கொடுத்தோம். அது கத்துது. அவங்க அண்ணங்காரன் வந்து பளபளன்னு பேப்பரை கொடுத்தான். அதை வாங்கிட்டு கம்முன்னு இருந்துருச்சு.
வேண்டியது கிடைக்கிறவரைக்கும் குழந்தை அழும். வேண்டியது கிடைக்கிறவரைக்கும் பெரியவங்க நிம்மதியா இருக்க மாட்டாங்க. தானும் நிம்மதியா இருக்க மாட்டாங்க, அடுத்தவங்களையும் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. ஆக மொத்தம் உலகமே பிணக்கு என்பதில் அகப்பட்டு கொண்டு யுத்தம் செஞ்சுட்டு இருக்கு. யுத்தம்னா என்னன்னு தெரியுமா? போர். அதுதான் பெரிய பிணக்கு. ஏன்?
மனித குலத்துக்கே வேண்டியது கிடைக்கலை. அது கிடைக்காதவரைக்கும் என்ன கிடைச்சாலும் அதிருப்திதான். அதனால அவன் மனசில பிணக்கு, கணவன், மனைவியிடையே பிணக்கு. இல்லீங்க.. நான் ரொம்பத் திருப்தியா இருக்கிறேன், அப்படீன்னு யாராவது ஒருத்தர் சொல்லுங்க பார்ப்போம். இப்பல்லாம் ஆணும், பெண்ணும் பார்த்துட்டுத்தானே கல்யாணத்துக்கு சம்மதம்(Yes, Ok ) சொல்றாங்க. அந்தக் காலத்துல மாப்பிள்ளைய பொண்ணை பார்க்க விட மாட்டாங்க. கல்யாணத்தன்னைக்கு மாப்பிள்ளைக்கு அடிக்கும் பாருங்க ஷாக்(Shock)... கறுப்பு மூக்கு.. கருடன் மூக்கு மாதிரி, எடுப்பு பல்லு எவ்வளவு பிணக்கு வரும்? ஏன்? அவன் என்னவோ தேவ சுந்தரி மாதிரி மனசுல கற்பனை பண்ணி வைச்சுருந்து இருப்பான். தேவ சுந்தரியையே கொண்டு வந்து நிப்பாட்டினாலும், இன்னும் கொஞ்சம் உயரமா இருந்தா தேவலாம்பான்.
இன்னொரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. உங்களுக்கு காசுபணம் வேணும், இருக்குது. யாராவது ஒருத்தர் வாங்கற சம்பளம் போதும், இருக்கற சொத்து போதும். ஆனாலும் திருப்தியா இருக்கீங்களா? ஹர்ஷத்மேத்தாவை, பில் கேட்ஸ்சைக் கேளுங்க, போதுமா?ன்னு. உலக மகா பணக்காரர், ஆனா அவருக்கு ஏன் போதலை?. அவனுக்கு எது வேணுமோ, அது கிடைக்கலை. அதனால இப்ப கிடைச்சுருக்கறது போதலை. அவனுக்கு எது வேணும்? அதுதான் எனக்கும் வேணும். எனக்கு எது வேணும்? அன்றாடங்காய்ச்சி பட்டினி கிடக்கிறான் பாருங்க அரை வயித்தோட.. அவனுக்கும் அதுதான் வேணும்.
எல்லோருக்கும், ஏகமா மனித குலத்துக்கு ஒண்ணு தேவைப்படுது. அதுதான் சரியான தேவை. உள்மனதுக்குத்தான் சரியாத் தெரியும், என்ன வேணும்னு. உள்மனதை எடுத்து வெளியே பார்க்கிறவங்க யாரு? ஆகவே, தேவையானது கிடைக்காததுனால உள் மனது வந்து அதிருப்தியில இருக்கும். உள்மனதுக்கு வேண்டியது கிடைக்காத வரைக்கும் அது அதிருப்தியிலதான் இருக்கும். அந்த அதிருப்தி புறமனதை எட்டும்போது, அது 800 ரூபாய் புடவையா இருந்தாலும் நல்லாயிருக்காது, வடை பாயாசமா இருந்தாலும் நல்லாயிருக்காது. அப்ப எது அந்தராத்மாவோட இருக்கும் எல்லோருக்கும் தேவைன்னு கேட்டீங்கன்னா... அதுதான் இறைவன் அருள், வீடுபேறு.
எல்லோருக்கும் தேவை நான் எங்கிருந்து வந்தேன்?ங்கிற கேள்விக்கும், நான் எங்க போய் சேரணும்?ங்கிற கேள்விக்கும் பதில். எல்லார் மனதிலும் இது இருக்குது. பதில் கிடைச்சுதா..? ஆகவே அந்த புக்கை காட்டினாலும், பென்சிலை காட்டினாலும் கத்துச்சு பாருங்க குழந்தை, அந்த மாதிரி எல்லோரும் அதிருப்தியில இருக்காங்க. அதே அதிருப்தி ஒருத்தருக்கொருத்தர் பழகிப் போகுது.
அன்பர்களே! என்ன வேணும்? இறைவனை அடைய வேண்டும். நான் யார்?, கடவுள் யார்?, ரெண்டு பேரும் ஒரே விஷயமா?, வேறு வேறா?, ஒரே விஷயம் என்றால் ஏன் பிரிந்திருக்கிறேன்?, ரெண்டு பேரும் வேறு வேறாய் இருந்தா கடவுளைப் போய் அடைவது எவ்வாறு? என்ற தாகம் உள்ளே இருக்குது. அதெல்லாம் வெளியே தெரியாது. ஆனாலும் உள்ளே இருக்குது. அதை திருப்தி பண்ணாம எதை கொடுத்தாலும் இப்படித்தான். ஆகவே அதை உரை மூலம், விளக்கம் மூலம் தெரிவிக்கிறோம். நேரடியா, அனுபவமா தவத்தைக் கொடுத்து நீயே போய்ப் பார், அந்த உணர்வை நீயே பெற்றுக்கோ என்று தெரிவிக்கிறோம். சுயசிந்தனை செய்ய சொல்லிக் கொடுத்து, ஆழ்ந்து பார்ன்னு கேட்டதையும், அடைந்ததையும் ஒத்து வைச்சுப் பார்க்க வைக்கறோம். சுய சிந்தனை செய்து, தீட்சை வாங்கினவங்க காலையில, மாலையில ஒரு ரெண்டு நிமிஷம் இதை அனுபவிக்கலாம். தவம் செய்யும் போது ரொம்ப ஆனந்தமா இருக்கும், தவம் செய்து முடிச்ச பிறகும் அந்த இனிமை கரையாது. கொஞ்ச நேரம் ஆக ஆக கணவனோட, மனைவியோட கோபதாபம், வேக உணர்ச்சியில சேரும்போது, ஓடற வண்டியில ஏறதுக்கு ஓடறோம் பாருங்க, அந்த மாதிரி நம்மளை பிடிச்சுடும். அந்த அனுபவத்தை மறந்திடுவோம், ஆனா சாயந்திரம் நினைப்போம்.
ஆனா மறக்காம இருக்க கத்துக்கிட்டம்னா, இதை ஆங்கிலத்தில ஒரு வார்த்தை சொல்வாங்க Bliss-ன்னு.. ஒரு ஆனந்த அனுபவமா இருக்கும். அந்த ஆனந்த அனுபவத்தை கலைக்காம அதிலேயே இருந்தா தேவலாம் போல இருக்கும். நீங்க ஆதிபராசக்தி படம் பார்த்திருப்பீங்க, அபிராமி பட்டர் இருக்கிறார். சோழ மன்னர் வந்து, இன்னிக்கு என்ன திதி?ன்னு கேட்பாரு. அன்னைக்கு அமாவாசை திதி, ஆனா அவரு பௌர்ணமி திதின்னு சொல்லிடுவாரு. ஏன்னா, அவர் ஆனந்த அனுபவத்துல(Bliss) இருந்தாரு. ஒரு தெய்வீக உணர்வில இறைவனோடு இறைவனாகக் கூடி ஆனந்த அனுபவத்தில இருக்கும் போது, பௌர்ணமின்னு சொல்லிட்டாரு.
அந்த மாதிரி ஒரு நிறைவான அனுபவத்துல, நாமும் இறைவனும் ஒண்ணா இருக்கும்போது என்ன குறை இருக்கப்போகுது?. இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி, கிடைச்சாலும் சரி, கிடைக்காட்டியும் சரி, வாழ்த்தினாலும் சரி, தூற்றினாலும் சரி, சம பாவனை இருந்து கொண்டே இருக்கும். அப்ப எது கிடைக்கலையோ அந்தக் குறை இருக்குமா? இருக்காது. அந்தக் குறை அங்கேதான் இருக்கும், ஆனா மனம் அந்தக் குறையோடு சம்பந்தப்பட்டு, இருக்கிற இனிமையை கெடுத்துக் கொள்ளாது. இதெல்லாம் வேணுமா?, வேண்டாமா?... வேணுந்தான், கிடைக்காம இல்லே, மன அமைதி கெடாம இருக்கணும்னா, இறையுணர்வு பெற்றே ஆக வேண்டும். அது பெறாத வரைக்கும் என்ன பெற்றிருந்தாலும் ரசிக்காது, ருசிக்காது. குறையாகத்தான் இருக்கும். சங்கடமாதான் இருக்கும். அதுதான் பெரிதாகத் தெரியும்.
அன்பர்களே! இந்த குறையுணர்விலேயே இருந்து இருந்து பழகிப்போன நமக்கு குறையுணர்வு இல்லைன்னா என்னவோ போல இருக்கும். ஆகவே ஆராய்ச்சி பண்ணி என்ன நமக்கு குறைச்சல் அப்படிங்கிறத தேடிக் கண்டுபிடிச்சு, அது இல்லையேன்னு சொல்லி வருந்தறதை தவிர்க்கணும். நான் சொல்றது அத்தனையும் மகரிஷி கருத்து. அதை எடுத்து விளக்கம் சொல்ற பங்குதான் நம்மளுது.
நாமெல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறோம். என்ன கஷ்டம்? இந்தக் குழந்தை குட்டிகளை வளர்த்து ஆளாக்கி, காலேஜ்ல ஒரு அட்மிஷன் வாங்கி, ஒரு உத்யோகம் வாங்கி, ஒரு பொண்ணத் தேடி, ஒரு மாப்பிள்ளையத் தேடி, கட்டிக் கொடுத்து.... இது சாமானியப்பட்ட காரியமா?, சொல்லுங்க பார்ப்போம். ரொம்பக் கஷ்டம். குழந்தையே இல்லாதவங்க திருப்தியா இருக்கலாம் இல்ல? நமக்கெல்லாம்தான் நிறைய வேணும். ஒரு 5000 ரூபாய் சம்பளம் கூடுதலா வந்தா தேவலாம், ஒரு லாட்டரி சீட்டு விழுந்தாத் தேவலை அப்படின்னு நினைக்கிறோம். ஏற்கனவே இருக்கிற கோடிய எண்ணத் தெரியாம நிறைய பேர் இருக்கிறாங்க பாருங்க. டி.வி.(T.V.), பேப்பரெல்லாம் படிக்கிறது உண்டா..? உலகமெல்லாம் எப்படிப் போகுது, வருதுன்னு தெரியுதா? நினைச்சு பாருங்க, குழந்தை குட்டியே இல்ல... ரெண்டு பேரும் அக்கடான்னு இருக்க வேண்டாம்?. நானா இருந்தா அப்பாடா ஒரு செலவும் இல்லன்னு உள்ள போய் ரூபா நோட்டை எண்ணிட்டே இருப்பேன். அதுதானே பெரிசுன்னு நினைக்கறாங்க. அதுதான் எக்கச்சக்கமா நடக்குதே... ஒரு கட்டு(Bundle), ரெண்டு கட்டு(Bundle)ன்னு.., ஒரு கட்டு(Bundle)ல 50,000 ரூபாய், இத்தனை கட்டு இருக்குது. அவங்களுக்கு வேண்டியது பணம்தானே?. ஆனாலும் நிம்மதியா இருக்காங்களா பாருங்க..?
நான் நேத்து நடந்ததை வைச்சு சொல்லலே, முந்தாநாள் நிம்மதியா இருந்தாங்களா? இல்லயே. பணம் வந்து கொண்டேயிருந்தது, அடுக்கிக்கிட்டே இருந்தாங்க. அப்பவாவது போதும், இவ்வளவு வச்சிருக்கேன்னு நிறைவா இருந்தாங்களா..? யாரு..? குழந்தை குட்டி இல்லாதவங்க. அப்ப... குழந்தை குட்டி இருக்கறவங்க நிம்மதியா இருக்காங்களா..? இல்ல. ஏன்..? வீடு இல்ல. வீடு இருந்தா நிம்மதி இல்ல. ஏன்..? உத்யோகம் இல்ல! உத்யோகம் இருந்தா நிம்மதி இல்ல, ஏன்..? வீடு இல்லயே. என்ன இல்லன்னு தேடிப்பிடிச்சு... ஒன்பது இருக்கும், ஒன்பதையும் நினைச்சு ரசிச்சு பார்க்காம, உதாரணமா... என்ன இருக்குது எனக்கு? வீடு இருக்கு, மனைவி இருக்கிறா.., நாலு குழந்தைக, நாலும் ஆண் குழந்தைகன்னு இப்படி இருக்கக் கூடியதை நினைச்சு நினைச்சுப் பார்த்தா வருத்தப்படக் கூட நேரமில்லாமப் போயிடும். ஒவ்வொருவரும் இருக்கக் கூடியதை நினைச்சு நினைச்சு பார்த்தா... ரெண்டு கால், ரெண்டு கை இருக்கில்ல, அதை நினைச்சுப் பாருங்க. ஒரு கால்ல ஒரு விரல் கூடப்போயிருந்ததுன்னா ஆறு விரல வைச்சுக்கிட்டு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? அல்லது கால்ல ஒரு விரல் குறைஞ்சு போயிருந்துச்சுன்னு வையுங்க, சப்பக்காலு, சப்பக்காலும்பாங்க பாருங்க, அப்ப எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? ஏன் இந்தக் குறைபாடு? இருக்கிறதை நினைச்சு நினைச்சு பார்த்து மகிழ்ச்சியடையலாம் இல்ல..? முடியாது. ஏன்? அந்த ஆனந்த அனுபவம் கிட்டாததனால...
ஆனந்த அனுபவத்தை தேடி மனம் நாடித் தவித்து கொண்டிருக்கிறது. தவம் வாங்கி நல்லா பயிற்சி செய்து, பயிற்சி செய்து வர.. வர.. வர... எனக்கென்ன குறைச்சல்? இந்த இறைவனுக்கும், அருட்பேராற்றலுக்கும் எதை கொடுக்கணும்னு தெரியாதா? கொஞ்சம் ஒரக்கண்ணு, கொஞ்சம் நொள்ளக் கண்ணா குறை இருக்கறதுக்கு ஏதோ காரணம். அந்தக் காரணம் எனக்கு புலப்படலை. முயற்சி பண்ணினா அதை தெரிந்து கொள்ளலாம். அல்லது அது கிடக்குது விடு என்று விட்டரலாம். அது நிஜமான தேவை என்றால், அந்தத் தேவைக்கு நான் உரியவன் என்றால் அது காலத்தால கிடைக்கும். நாளை கிடைக்கும், அல்லது நாளன்னிக்கு கிடைக்கும்ங்கற திருப்தி மனப்பான்மை வந்துடும்.
திருப்தி மனப்பான்மை வந்துடுச்சுன்னா யாரோடும் யாருக்கும் பிணக்கு வராது. இந்த நிலைக்குப் போனவங்க திருப்தியா இருப்பாங்க. அவங்களை சீண்டவோ, தூண்டவோ முடியாது. இருக்கிற குறையே தெரியாம இருக்கறவங்ககிட்ட யாராவது போய் ஒரு கோபத்தையோ அல்லது ஒரு வருத்தத்தையோ உண்டு பண்ணிற முடியுமா? அப்படியே யாரவது வந்து ஒரு வருத்தத்தை உண்டு பண்ணினாலும் சரி எனக்கு இறைவனுடைய ஆட்சியில இது வரணும் போலிருக்கு. இத நான் ஏத்துக்கறேன்ன்னு இருந்துருவாங்க.
அன்பர்களே! நீங்கள் நிறை உணர்வுக்கு வந்து விட்ட பின்னும் கூட உங்களுக்கு சில பாதகங்கள், சில சங்கடங்கள் வருவதற்கு வாய்ப்பு நிறைய இருக்குது. காரணங்கள் ரெண்டு. ஒண்ணு, உங்களிடத்தில பாவப்பதிவு ஏதோ இன்னும் இருந்து கொண்டு இருக்கும். நீங்களோ, உங்கள் முன்னோர்களோ செய்த ஒரு வினைப்பயன் காரணமாக அதன் விளைவு இப்ப கிடைக்குதுன்னு தெரிஞ்சுக்கணும். ரெண்டாவது, இந்த சமுதாயத்தில் சில குறைபாடுகள் இருக்குது. அதனால கொஞ்சம் கேஸ் சிலிண்டர் விலை ஏறிப்போச்சு, மண்ணெண்ண விலை ஏறிப்போச்சுன்னு சில மனக்குறைகள் ஏற்படும். சமுதாயத்தில நாம் இருக்கறவரைக்கும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேணும். நமது பாவத்தினால, நமது முன்னோர் செய்த பாவத்தினால வரும் கஷ்டங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேணும். அது இப்ப தெரியாது, இறைவன் அருள் பெறும் பொழுதுதான் அது தெரியவரும். இப்படி இருந்தீங்கன்னா உங்களுக்கு என்ன வேணுமோ அது அந்த நேரத்திலே, அந்த இடத்தில கிடைக்கும். முன்கூட்டியே (Advance) கிடைக்காது. முன்கூட்டியே(Advance) யாருக்குக் கிடைக்கும்னா இந்த ஆசைக்காரங்க, பேராசைக்காரங்க இருக்காங்க பாருங்க... குறையுணர்வு அவங்களுக்கு முன்கூட்டியே(Advance) கிடைக்கும்.
ஒரு உதாரணத்து மூலம் தெரிஞ்சுக்கங்க.. உக்காருன்னா உக்காருவீங்க, சாப்பிடுன்னா சாப்பிடுவீங்க, இட்லி வைக்கறாங்க, எத்தனை? ஒரு பன்னெண்டு வைக்கறாங்கன்னு வைச்சுக்கோங்க இத நாளைக்கும் வைச்சுக்கங்கன்னா என்ன செய்வீங்க? அதை நாளைக்கு கொடுன்னு கேட்பீங்களா இல்லையா?. அதுதான் இறைவனுடைய தன்மையும். என்ன, எங்க, எப்ப வேணுமோ அது கிடைக்கும். இந்த நம்பிக்கை வேணும். இதில்லாம மனசுல குறையுணர்வு இருந்ததுன்னா, யார் மேலேயாச்சும் குறை கண்டுட்டே இருக்க தோணும். அவங்களுக்கும் அதேதான். உங்க மேல குறை காணணும்னு தோணும். ஆகவே ஒருத்தரிடம் ஒருத்தர் மாட்டிட்டு சண்டை சச்சரவு என்று இருந்துக் கொண்டு இருக்கணும். இப்போ இந்த நிலையில உச்சகட்டமா( ultimate) நாம இறைவன் அருள் பெறும் போது எல்லா குறையும் தீரும். அது அவ்வளவு சீக்கிரம் கிடைச்சுடாது.
இறைவன் மேல மனம் வைச்சு தவம் பண்ணுவது மாதிரியான சில பயிற்சிகள் வாங்கணும். அவற்றை சரியா செய்யணும். தத்துவத்தை நிறைய கேட்கணும். அப்புறம் அதை பற்றி சிந்திக்கணும். அது வரைக்கும் பிணக்கு என்பது வந்துக்கொண்டுதான் இருக்கும். அதை கம்மி (minimise) பண்ணணும். அந்த பிணக்குகளால நமக்கு வரக்கூடிய பாதகங்களை தவிர்த்துக் கொள்ளணும். எப்படி? பிணக்கு யாரால வருது? எத்தனை நாளா வருது? ஏதோ ஒண்ணு வேணும், கிடைக்கல.. சரி இருக்கட்டும்னு அதை ஏற்று பழக கற்றுக் கொள்ளணும். எப்படி? சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பி போறானே ஒருத்தன், அவனை விட இரண்டாம் வகுப்பு டிக்கெட்(second class ticket) கிடைச்சதுக்கு சந்தோஷப்படலாம் இல்லையா? அந்த மாதிரி நம்மை விட இந்த மாதிரிப் பிணக்குகள் நிறைய இருக்கறவங்களைப் பார்த்து நாம மேன்மையான நிலையில (better place) இருக்கறோம் என்று நமக்கு இருக்கக்கூடிய பிணக்குகளை, குறைகளை விவாதத்துக்கு(argument) உட்படுத்திப் பார்க்கிறது, நமது உயர்வுகளை நாமே தெரிந்து கொள்வது.
அடுத்ததா நமது குறை உணர்வு காரணமாக பிறரைத் தூண்டி விட்டு அவர்கள் வந்து நம்ம மேலே ஒரு வருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். சமைச்சிட்டு இருந்தாங்க. நீங்க என்ன நினைச்சு வந்தீங்க? சமையல் முடிஞ்சிருக்கும், சாப்பிடலாம் அப்படின்னு வந்தீங்க. ஆனா அவங்க அப்பதான் சமைச்சிட்டு இருந்தாங்க, உடனே ஒரு பொருந்தா உணர்வு வரும். நீங்க நினைச்சுப்பாருங்க. ஏன் அவங்க இன்னும் சமைக்கல? ஆ.... சித்தி சீரியல் ஓடிட்டிருக்கு, அதைப் பார்த்துட்டு கரண்டியும் கையுமா உட்கார்ந்துட்டாங்க. ஏன் சமைக்க லேட்?ன்னு கேட்டா, நீங்க இந்த நேரத்துக்கு வருவீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?. வழக்கமா வர நேரத்துக்கு வருவீங்கன்னு நான் நெனைச்சேன்ம்பாங்க. ஏன் சமையல் லேட்?ன்னு கேட்காம இருந்தா என்ன?. கேட்டதுனால சீக்கிரம் ஆயிருமா?.
இந்த அறிவுரையை தெரிஞ்ச்சுக்க இன்ஜினியர் காலேஜ்ல, மெடிக்கல் காலேஜ்ல போய் படிக்க வேணாம். ஏன் லேட்?ன்னு கேட்டதால சமையல் சீக்கிரம் ஆயிடுமா? ஏன் லேட்?ன்னு கேட்டா இந்தக் காரணத்தினால லேட்ன்னு அமைதியா சொல்வாங்களா? லேட் ஆனது, சமைக்காம இருக்கோம்னு ஒரு குற்ற உணர்வையும், அவரோட அன்புக்கு ஈடு கொடுக்காம இருந்துட்டமேன்னு ஒரு குறை உணர்வையும் அவங்ககிட்ட ஏற்படுத்தியிருக்கும். ஏன் லேட்?ன்னு கேட்டா ஒரு எதிர்ப்பு மனப்பான்மை வரும். அவங்க கொஞ்சம் ஒரு மாதிரிதான் பதில் சொல்லுவாங்க, அதைக் கேட்டு நமக்கு சந்தோஷமா இருக்குமா? நாம அதுக்கு ஒரு பதில் சொல்லுவோம். அவங்க அதுக்கு ஒரு பதில் சொல்லுவாங்க. யாருக்கு என்ன லாபம்?, என்ன நஷ்டம்? கூட்டி கழிச்சு பாருங்க நாம நல்லா சந்தோஷமா சாப்பிடணும், திருப்தியா சாப்பிடணும்னு வந்துட்டு கடைசியா சாப்பிடாம படுத்துருவோம். இது எப்படி இருக்கும்?. இப்படி இல்லாம சரி, சித்தி சீரியல் வந்து முக்கியமான இடத்துல வந்துருக்கும் போல, உட்கார்ந்து பார்த்துட்டு இருந்துருக்காங்க. சமையல் ஆகுது சரி ஆகட்டும் என்று ஒரு பேப்பர் படிக்கறது, ஒரு சிந்தனை பண்றது, ஒரு டி.வி.(T.V.) பார்க்கிறது என்று இருந்தால், அது எப்படி இருக்கும்?.
அப்ப மன அமைதி வேணும்னா, ஒண்ணு.., எது நடந்ததோ அத அப்படியே ஏத்துக் கொள்ளத் தெரியணும். ரெண்டாவது, பிறரை விட்டு தனக்குத் துன்பம் கொடுத்துக்க கூடாது. இப்ப, பிணக்கு இல்லாமல் வாழ்வதற்கு யார் அடிப்படையா இருக்கறாங்க பாருங்க? நாமதான், அடுத்தவங்க இல்லை. எல்லாம் சரிதான், ஆனால் நடைமுறைப்படுத்த முடியவில்லையே?. ஒரு விஷயம் நடந்து முடிஞ்ச பின்னாடிதான் நினைச்சு பார்க்கிறோம், அடடா! நேத்து வகுப்புல இப்படி சொன்னாங்களே, நாம காரியத்தை கெடுத்துட்டமே அப்படின்னு தோணும்.
அதற்காகத்தான் தவம் செய்யணும், சுயசிந்தனை செய்யணும், தத்துவ விளக்கம் தெரிந்துக் கொள்ளணும். பயிற்சியை கூட்டிக் கொண்டே வரணும். நமது இயற்கையான சுபாவத்தை, நாம பெற்ற ஒரு மேம்பாடு காரணமாக மாற்றிக்கொண்டே வரணும், என்ற ஒரு கருத்தோட்டத்தை எடுத்துக் கொண்டு அதற்காக ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும். ஒரு முயற்சி செய்து தவறு செய்திட்டாக் கூட அதற்காக வருந்தாம அப்படி சொன்னாங்க இப்படி செஞ்சுட்டேனேன்னு வருந்தாம, சரி! இதை ஒரு பாடமாக, ஒரு புத்திமதியாக வைத்துக் கொண்டு இனி மேலாவது நான் யார் மனதையும் புண்படுத்த மாட்டேன்ன்னு சங்கல்பம் செஞ்சுக்கணும். பாடம்(Subject) என்ன? பிணக்கா? யார் மனதையும் புண்படுத்தக் கூடது. புண்படுத்தினால் என்ன வரும்?, பிணக்கு. புண்படுத்தா விட்டால் என்ன வரும்?. உள்ளே சமையல் ஆயிட்டிருக்கும்போது, தட்டு, கிட்டு கழுவணுமா?, வெங்காயம் ஏதாவது உரிச்சு குடுக்கணுமா?ன்னு கேட்டா அது எப்படியிருக்கும்?. அங்கிருந்து சொல்லுங்க, அப்பத்தான் அவங்க செஞ்ச தப்பு அவங்களுக்கே உரைக்கும். இல்லைன்னா நான் செஞ்சது தப்பே இல்லை. யார் வீட்டில சித்தி சீரியல் பார்க்கலை?ன்னு கேப்பாங்க. அவங்க செய்த தப்பு அவங்களுக்கே தோணாது. அவங்க திருந்தவும் வாய்ப்பில்லை, அந்த இணக்கம் அவங்களிடமிருந்து வரவும் வாய்ப்பில்லை.
கொள்ளிக்கட்டைய எடுத்து தலைய சொரிஞ்சுக்கிறதுன்னு சொல்லுவாங்க பாருங்க. அரிக்குது, சொரிஞ்சுக்க வேண்டியதுதான். அதுக்காக கொள்ளிக்கட்டைய எடுத்து சொரிஞ்சுக்கலாமா? தான் சாப்பிடற உணவில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளலாமா?. இன்னும் எத்தனை உதாரணம் வேணும்னாலும் சொல்லலாம்.
அன்பர்களே! இந்த உயர்ந்த மேம்பாட்டை நாம் மட்டும் பெற்றால் போதாது, மற்றவர்களும் பெற வேண்டும். நம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் இந்த மேம்பாட்டை பெற்றால்தான் வந்த மேம்பாடு நமக்கும் நிலைக்கும். இல்லைன்னா நமக்கு, அது கிடக்குது போன்னு தோணும். அவர்கள் அதே பழக்கத்திலிருக்க, நாம் மட்டும் மேலிடத்தில இருந்தால் அது நமக்கு பெருமையில்லை. ஆகவே இதனை பலர் அறியச் செய்ய வேண்டும்.
அந்தப் பலர் என்பதை நமது குடும்பத்தில் இருந்து தொடங்குவோம். நட்புல, தொழில் செய்யற இடத்தில இதைப் பற்றி சொல்லுவோம். நம்மைச் சார்ந்தவர்களெல்லாம் மேம்பாடான நிலைக்கு வந்தால் அதுவும் நமக்கு நன்மைதான் என்று கூறி நிறைவு செய்கிறேன். நன்றி... வணக்கம்.
- நினைவில் உங்களோடு kgs.
_