KG Sami1937 — 2006

சீர்திருத்தமும் முன்னேற்றமும்

Signed Granthaalayam

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்து

வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.

அன்பர்களே!

நமது வாழ்க்கையை சீராகவும், செம்மையாகவும் நடத்துவதற்கு முன்னேற்றம், சீர்திருத்தம் என்ற இரண்டு விஷயங்கள் தேவை. சரி, இப்போ நான் உங்களை ஒண்ணு கேட்கிறேன் முன்னேற்றம்னா என்ன? சீர்திருத்தம்னா என்ன? காசு பணம் சம்பாதிக்கறது, தோட்டம் தொரவு வாங்கறது, குழந்தை குட்டி பெத்துக்கறது... இதெல்லாந்தான் முன்னேற்றம்னு மக்கள் நினைச்சுக்கறாங்க. ஆனா, வெறும் காசு பணம் சம்பாதிக்கறது மட்டுமே முன்னேற்றமில்லை.

அன்பர்களே!

நாம நிம்மதியா வாழறதுக்கு வேண்டியதெல்லாம் இரண்டுதான், ஒன்று சந்தோஷம், மற்றொன்று சவுக்கியம். உடனே நீங்க அய்யா இதுல காசு, பணம், நிலம் எல்லாம் விட்டுப் போச்சுங்களே!ன்னு கேப்பீங்க. காசு, பணந்தான் சந்தோஷங்கறதுலயே அடங்கிருதே, அப்புறம் என்ன? காசு, பணம் இல்லைனா சந்தோஷம் எப்படி வரும்? அதனால, சந்தோஷத்தைதான் பார்க்கணுமே தவிர காசு, பணம்னு பிரிச்சு பார்க்கக் கூடாது. அடுத்தது நலம், உடம்புல நலன் இருந்தா அது தான் சவுக்கியம், மனசுல நலன் இருந்தா அதுதான் சந்தோஷம். இதுக்கு மேல வேற என்ன வேணும்? இந்த உலகத்துல பிறந்து வாழக்கூடிய நாம எப்பவும் இன்பமா இருக்கணும்னு எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த இன்பம் உடலில் விளைந்தால் அது சவுக்கியம், அதே இன்பம் மனதில் விளைந்தால் அது சந்தோஷம். ஆனா, அதுக்காக நாம எடுக்கற முயற்சிகள் முழுமையான வெற்றி தருவதாக இல்லை, இன்பம் குறைவாகதான் வருகிறது. நாம் மகிழ்ச்சியாகவோ, நிறைவாகவோ வாழக்கூடிய அளவுல இன்பம் வருவதில்லை. இப்ப என்ன செய்யறது? நமது செயல்பாடுகளில் ஏதேனும் குறை உள்ளதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் இருந்தால், அந்த குறைபாட்டை நமது எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து அவற்றில் ஒரு முன்னேற்றமும், ஒரு வேளை அந்த முன்னேற்றத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால் அதனை சீர் செய்ய ஒரு சீர்திருத்தமும் கொண்டு வர வேண்டும். மீண்டும் ஒருவேளை அந்த சீர்திருத்தத்தில் ஒரு சீர் கேடு வந்தால் அதனை சரி செய்ய மேலும் ஒரு சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். 

அன்பர்களே!

இப்போ உங்களுக்கு இன்னும் எளிமையா புரிய வைக்க ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. இந்த பிரஷர் குக்கர் பத்தி உங்களுக்கு தெரியுமில்ல, அது என்ன பண்ணும்? அரிசி போதுமான அளவு வேக்காடு வந்தவுடனே கத்தும். அப்படி அது கத்தலைன்னா என்ன ஆகும் சொல்லுங்க? சாதம் எல்லாம் வீணாப் போயிடும். அந்த பிரஷர் குக்கரை பயன்படுத்த கேஸ் அடுப்பை கொண்டு வந்தாங்க. அந்த கேஸ் அடுப்பை பத்த வைக்க முதல்ல வத்திக்குச்சியை பயன்படுத்தினாங்க, அதற்கப்புறம் லைட்டரை கொண்டு வந்தாங்க. அந்த லைட்டர் ஒரு முன்னேற்றம் தானே? ஆனா பாருங்க அந்த லைட்டருலையும் சில சங்கடம் வந்தது. சில சமயம் அது வேலை செய்யாமல் பளிச் பளிச்னு அடிச்சுட்டு இருக்கும். எனவே அதுல ஒரு சீர்திருத்தம் தேவைப்பட்டுச்சு. அதனால புதுசா ஒரு கேஸ் அடுப்பை கண்டுபிடிச்சாங்க, அந்த அடுப்பை நீங்க பார்த்திருக்கீங்களா? கேஸை ஆன் பண்ணும்போதே அடுப்பு எரியும், லைட்டரே தேவையில்லை. இப்போ அடுப்புங்கறது ஒரு முன்னேற்றம், கேஸ் அடுப்பங்கறது ஒரு சீர்திருத்தம், அந்த சீர்திருத்தத்துக்கு வந்த ஒரு முன்னேற்றம்தான் லைட்டர், அந்த முன்னேற்றத்துல கொண்டு வந்த ஒரு சீர்திருத்தந்தான் லைட்டரே தேவைப்படாத அடுப்பு. இப்படி நீங்க வாழ்க்கையில் மேம்பாடு அடைவதற்காக ஒரு முன்னேறறத்தை கடைபிடிக்க, அதில் ஒரு சங்கடம் ஏற்பட அந்த சங்கடத்தை போக்குவதற்கு நீங்க ஒரு ஏற்பாடு செய்தால் அதுதான் சீர்திருத்தம். அந்த சீர்திருத்தத்தை நாம் கடைபிடித்தால் நாம் நினைத்த முன்னேற்றம் மேலும் அதிகமாக வரும். ஒரு வேளை அதிலும் ஒரு சங்கடம் வந்தால், அந்த சங்கடமும் இல்லாமல் வாழ மேலும் ஒரு சீர்த்திருத்தை தேட வேண்டும். இப்ப சீர்திருத்தம்னா என்ன, முன்னேற்றம்னா என்னன்னு புரிஞ்சுதா? 

அன்பர்களே!

பொதுவாக உலகியல் தழுவியும், பொருளாதாரம் தழுவியும், நடவடிக்கை தழுவியும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அடுத்து வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமென்றால், நாம் முக்கியமாக செய்ய வேண்டியது என்ன? தவம் செய்ய வேண்டும்.

தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்

அவம்செய்வார் ஆசையுட் பட்டு. - திருக்குறள் - 266.

யாராவது நல்ல செயலை செய்யக் கூடியவங்க இருக்கறாங்கன்னா அவங்க தவம் செய்ய கூடியவங்க, தவம் செய்யறவங்க யாராவது இருக்கறாங்கன்னா, அவங்க நல்ல காரியம் செய்ய கூடியவங்கன்னு அர்த்தம். அதைதான் தவம் செய்வார் தம் கர்மம் செய்வார்ன்னு வள்ளுவர் சொல்றார். மற்றவர்களெல்லாம் ஆசைப்படுவதன் மூலமாக, அதாவது ஒரு ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தேவையான அறிவு, பொருளாதாரம், உடல் வலிவு, நட்பு... போன்றவை உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்காமல் ஆசைப்படுவதன் மூலமாக பாவம் செய்வார்கள். அதைதான் அவம் செய்வார் ஆசையுட் பட்டுன்னு வள்ளுவர் சொல்கிறார். தமக்கும் பிறருக்கும் கெடுதல் செய்யக் கூடியதாக தவம் செய்யாதவர்களுடைய ஆசை இருக்கும். அவம் செய்வார்ன்னா பாவம் செய்வார்கள்ன்னு அர்த்தம். அதற்குக் காரணம் என்ன? ஆசை. தவம் செய்யலைன்னா, ஆசை வரும்னு வள்ளுவர் சொல்றாரு. என்ன ஆசை? பெரிய ஆசை, முரணான ஆசை, தேவையில்லாத அற்ப ஆசை போன்ற பல ஆசைகள்.

அன்பர்களே!

ஒருவர் தவம் செய்வதால் அவரது மனம் தூய்மை அடையும், புத்தி தெளிவடையும். அதனால் தவறுதலான காரியங்களையோ, கெட்ட காரியங்களையோ அவர் செய்ய மாட்டார்ன்னு வள்ளுவர் சொல்கிறார். அவர் சொன்னது சரியா? பொதுவா சரி. ஆனால் ஆங்காங்கு பார்க்கும் போது அப்படியில்லை. அதாவது தவம் செய்யறது பயிருக்கு உரம் போடறது மாதிரி. பயிருக்கு உரம் போட்டா என்னாகும்? விளைச்சல் அதிகமா இருக்கும். உரம் போட்டால் பயிர் மட்டுமா விளையும்? களையும் சேர்ந்து தானே வரும்? அந்த களை எல்லாம் எங்க இருந்து வந்தது? நிலத்துல இருந்து தானே? பயிர் விளையறதுக்கு போட்ட உரத்துனால பயிரோட சேர்ந்து களையும் வரும். கெட்ட எண்ணம், கெட்ட செயல், கெடுதி, பொறாமையெல்லாம் எங்க இருக்குது? நம்ம மனசுலதானே? அந்த மனசுல நீங்க தவத்தை தூக்கி போட்டீங்கன்னா, நிலத்துல உரம் போட்டதுனால நட்ட பயிரை விட களை அதிகமா வர்ற மாதிரி நீங்க வேண்டுற நன்மையை விட தீமைகள் அதிகமா வரும். ஏன்னா, மனசு மூலமாதானே தவம் செய்யறோம்? எல்லோர் மனமும் ஒரே மாதிரியா இருக்குது? சில பேர் அவர் தவம் செஞ்சாரு, நல்லா இருக்கறாரு, நான் தவம் செஞ்சேன் ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு சொல்லுவாங்க. அவர் ஏற்கனவே தூய்மையான, நேர்மையான, களங்கமில்லாத மனதை வைச்சுட்டு தவம் செஞ்சுருப்பார், அதான் காரணம். அதனால உங்க மனசுல கெட்ட களங்கங்கள் இருந்தால் நீங்கள் செய்யக் கூடிய தவமே கெடுதலாக மாறிவிடும். இராவணன் தவம் செய்தான் தெரியுமில்லையா உங்களுக்கு ? அவனுக்கு நல்லது வந்ததா கெடுதல் வந்ததா? கெடுதல்தான் வந்தது. என்ன காரணம்?அவன் கெட்டவன். கெட்டவன் தவம் செஞ்சா, கெடுதல்தான் வரும். தவம் என்பது கூட்டிக் கொடுக்கும். ஒருவரிடத்தில் என்ன இருக்கிறதோ அதனை அதிகரித்துக் கொடுக்கும். ஆகையால் தன்னிடத்தில், தன்னுடைய மனதில், தன்னுடைய பரம்பரையில் எப்படிப்பட்டவங்க இருந்தாங்க, அவங்க என்னவெல்லாம் செஞ்சாங்க, தன்னிடத்தில் எவ்வளவு களங்கங்கள் இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்து அந்த களங்கங்கள் எல்லாம் நீங்கற வரைக்கும் ஒருவருக்கு தவம் கெடுதல் செய்யும்.

அன்பர்களே!

உரம் போடறது ஒரு முன்னேற்றமுன்னு சொன்னேன் இல்லையா? அதுல ஒரு சீர்திருத்தமா புதுசா ஒண்ணு கண்டுபிடிச்சுருக்காங்க தெரியுமா உங்களுக்கு? அதான் இரசாயன கலப்பு ஏதுமில்லாத தழை உரம். அதே மாதிரி நாம் செய்யும் தவத்தில் ஒரு முன்னேற்றம் வேண்டுமென்பதற்காக அருள் தந்தை அவர்கள் ஒரு சீர்திருத்தம் கொண்டு வந்தார்கள், அதுதான் தற்சோதனை. பயிறு வளர்க்கறவங்க களை எடுக்கற மாதிரி தவம் செய்யறவங்க தங்களோட மனசுல இருக்கற கெட்டதை எல்லாம் எடுத்து வெளிய போடறதுக்குதான் தற்சோதனை. ஏன்னா கெட்டதை எல்லாம் வெளியே எடுத்து போடாம நன்மை வராது. எனவே வாழ்கையில் மட்டுமல்ல தவத்திலும் கூட சீர்திருத்தம் தேவைப்படுகின்றது. வாழ்க்கையில் முன்னேற்றமும், சீர்திருத்தமும் பிசிறி, பிசிறிக் கொண்டு வரும். வாழ்வில் முன்னேற்றம் வேண்டித்தான் தவம் செய்யறோம். அப்படி தவம் செய்வதற்கு நாம் முயற்சி எடுக்கும் போது அதில் சில குறைபாடுகள் வருகின்றன. மனித மனந்தானே? பரம்பரை பரம்பரையா என்னென்னமோ நினைச்சு என்னென்னமோ செஞ்சதுதானே? அப்படிதான் இருக்கும். நாம தவம் செய்யலாம்னு ஆரம்பிச்ச பிறகுதான் நம்ம கிட்ட இருக்கற கெட்ட எண்ணங்கள் நமக்கு தெரிய வரும். தவம் செய்யறதுக்கு முன்னாடி நம்ம மனசுல கெட்ட எண்ணம் கிடையாதுன்னு நினைச்சுட்டு இருந்திருப்போம், தவம் செய்ய ஆரம்பிச்ச பிறகுதான் தவமே செய்ய விடாம கெட்ட எண்ணங்கள் நம்மை அமுக்குறது தெரிய வரும். அதனாலதான் தவத்தை முன்னாடி கொடுத்துட்டு, உள்ள இருக்கறதெல்லாம் வெளிய வர்றதை பார்த்துட்டு அதற்கப்புறம் துரியம், துரியாதீதம் கொடுத்துட்டு தற்சோதனை பண்ண சொல்றாங்க. நான் முன்னமே சொன்ன மாதிரி தற்சோதனை என்பது ஒரு சீர்திருத்தம். தற்சோதனை சேராத தவம் ஒருவருக்கு மேன்மையை தராது. உடனே நீங்க அய்யா நாங்க தற்சோதனை எல்லாம் செஞ்சுட்டுதான் வரோம், ஆனா ஒரு முன்னற்றத்தையும் காணோம்ன்னு சொல்லுவீங்க. நீங்க உங்களுக்கு என்ன வேணுங்கறதை தெளிவுப்பட நினைச்சு பார்த்தீங்களா? அப்படியே நடக்க வேணும்னு உறுதி பூண்டீங்களா? இல்லையே. அதுக்கு ஒரு சீர்திருத்தமா வந்ததுதான் சங்கல்பம். அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓiகி வாழ்வேன்  இது என்ன? சங்கல்பம். இது இல்லைன்னா நீங்க பாட்டுக்கு தவம் செஞ்சுட்டே இருக்க வேண்டியதுதான், விளைவு வந்து சேராது. உங்களுக்கு வேண்டியது என்னன்னு நீங்கதான் தேடி எடுக்கணும். சங்கல்பத்துல சொன்ன அஞ்சுக்கு மேல வேறென்ன வேணும்? நீங்க என்ன வேணும்னு கேட்டாலும் அது இந்த அஞ்சுக்குள்ள அடங்கிரும். திரும்பவும், அய்யா, நான் நீங்க சொன்ன மாதிரி தவம், தற்சோதனை, சங்கல்பம் எல்லாம் சரியாதான் செஞ்சுட்டு வரேன், அப்பவும் ஏசுறாங்க, திட்டறாங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னீங்கன்னா அதை சீர் செய்ய வந்த ஒரு சீர்திருத்தம்தான் வாழ்த்து. உடனே நீங்க அய்யா பகைவனை எப்படி வாழ்த்தறது? நான் மாட்டேன். அவன் என்னை விட முன்னேறிப் போயிருவான் அப்படின்னு நினைச்சீங்கன்னா நீங்க வாழ்கையில பின்னேறிடுவீங்க. இப்படி நடைமுறை வாழ்க்கையாகட்டும், ஆன்மீக வாழ்க்கையாகட்டும் மேம்பாட்டை நோக்கித்தான் சில வேலைகளைச் செய்யறோம். ஆனால் அந்த மேம்பாட்டாலேயே சில சீர்கேடுகள் வரலாம். அதை திருத்தி விட்டால் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வரும். அந்த மேம்பாடிலும் ஒரு சீர்கேடு வரலாம். அதை கண்டுபிடித்து திருத்தி விட்டால் மேலும் முன்னேற்றம் வரும். முன்னேற்றமும், சீர்திருத்தமும் ரயில் தண்டவாளம் மாதிரி இணைந்தே போய் கொண்டிருப்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். இந்த ஆராய்ச்சியியை நீங்கள் மேற்கொண்டு உங்கள் வாழ்க்கையிலும், அக்கம்பக்கம் உள்ளவர்களின் வாழ்கையில் பொருத்திப் பார்த்து வாழ்வில் மேன்மைகள் பல அடைய வாழ்த்துகின்றேன்.

- நினைவில் உங்களோடு kgs.

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 5

ஆக்கினைச் சக்கரத் தவத்தை உருவகப் படுத்தி (Symbolic) பலவிதமாகத் தமிழ்நாட்டுச் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். நிறைய பாடல்கள் அப்படிப் பட்டவை…

Puthiya Bharathi

இறைவன் அன்ன மயம்!

உலகம் இறைநிலையிலிருந்து தோன்றியது. இறைநிலையிருந்து ஒவ்வொன்றாகப் பஞ்சபூதங்கள், ஓரறிவுமுதல் ஐந்து வகையான அறிவுகளைப் பெற்ற ஆயிரம் ஆயிரம் ஜீவன்கள்…

Granthaalayam

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!இறைநிலையை புலன்களால் உணர்ந்து…

Granthaalayam

அன்பும் சிவமும்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ…

KG Sami

தவம்-15

வேதாந்திகள் சொன்னது என்ன? அறிவே தெய்வம். சித்தாந்திகள் சொன்னதற்கும், வேதாந்திகள் சொன்னதற்கும் வித்தியாசம் இருக்குதா? இவர்கள் சுத்தவெளிதான் தெய்வம்…

KG Sami

தவம் – 38

சாதாரணக் குடிமகன் எவர் ஒருவராலும் உடலும், உயிரும் இருந்தால் போதும். விருப்பமும், முயற்சியும் கூட்டிக் கொண்டால் இந்த உடற்பயிற்சி, காயகல்பப் பயிற்சி,…