KG Sami1937 — 2006

தவம் – 2

Signed KG Sami

முற்காலத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த முறை பிராணாயாமம். பிராணன் என்றால் இரண்டு பொருள். ஒன்று காற்று. இரண்டு உயிர். (தமிழிலும் அப்படி ஒரு வார்த்தை இருக்கிறது. அது ஆவி. ஒரு பொருள் காற்று. இன்னொரு பொருள் உயிர். ஆனால் உடல் இல்லாத உயிரை மட்டும் ஆவி என்று சொல்வது பழக்கமாகி விட்டது.) பிராணாயாமம் என்றால் காற்று வழி என்று பொருள். அதாவது காற்றை உதவியாகக் கொண்டு செய்யக் கூடிய மனப் பயிற்சி. அந்தப் பிராணாயாம முறையில் காற்றை – மூச்சை – சுவாசத்தைப் பயன்படுத்தியே குண்டலினி சக்தியை மேலேற்றுவார்கள்.

நாம் சாதாரணமாக மூச்சைப் பயன்படுத்தித் தான் உயிர் வாழ்கிறோம். ஒரு மூச்சு என்பது ஒரு முறை காற்றை இழுப்பது, ஒரு முறை வெளியேற்றுவது. பிராணாயாமத்திலும் இதைச் செய்வார்கள். ஆனால் ஒரு கணக்கு வைத்துக் கொள்வார்கள். இழுக்கின்ற நேரத்தை விட விடுகின்ற நேரம் கூடுதலாக இருக்கும். எவ்வளவு நேரம் கூடுதல் என்பது காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம் வேறுபட்டிருந்தது. அதை ரேசகம், பூரகம் என்று சொல்வார்கள். அவற்றோடு மூச்சை அடக்குவது என்று ஒரு பயிற்சியும் பிராணாயாமத்தில் சேரும். அதைக் கும்பகம் என்று சொல்வார்கள். கும்பகத்திலும் மூச்சை அடக்குவதற்கும் ஒரு நேரக் கணக்கு வைத்திருந்தார்கள். பொதுவாக அதுவும் மூச்சை இழுப்பது போல் இரண்டு பங்காகும்.

இந்த கும்பகத்தில் தான் பிராணாயாமத்தின் முக்கிய தத்துவம் இருக்கிறது. அதாவது நாம் மூச்சை இழுப்போம், விடுவோம் ஒரு கணம் கூட அடக்குவது இல்லை. ஆனால் பலப்பிரயோகம் செய்து ஒரு கடுமையான காரியத்தில் ஈடுபடுவது மூச்சை அடக்கித் தான். அதை ”தம் கட்டுவது” என்று சொல்வார்கள். மேலே இருக்கும் அம்மியை கீழே இறக்கி வைக்க வேண்டும். கீழே இருக்கும் அம்மியை மேலே தூக்கி வைக்க வேண்டும். அம்மாதிரி சமயங்களில் மூச்சைப் பிடிக்காமல் அக்காரியங்களைச் செய்ய முடியாது. அதாவது மனிதன்+தம் முடிகிறது என்றால் “தம்” தான் தூக்கியது என்றல்லவா வருகிறது! இது என்ன வேடிக்கை!

இதன் விளக்கம் என்னவென்றால், ஒரு கடுமையான வேலையில் ஈடுபடுகின்ற பொழுது, நமது உடலில் ஆங்காங்கும் இருக்கக் கூடிய சக்தியெல்லாம் உடலில் எந்த நரம்புகள், சதைகள் அக் காரியத்தைச் செய்ய முற்படுகின்றனவோ, அந்தப் பகுதிக்குத் திரண்டு வரும். இது கம்யூட்டர் மாதிரி தன்னில் தானாக உடலில் நடைபெறுகின்ற அனிச்சைச் செயல். சரி. எந்தக் கடுமையான காரியத்தில் ஈடுபடாமல் பத்மாசனத்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு நிலையிலோ இடம் பெயராமல் உட்கார்ந்து கொண்டு, தம் பிடித்து, பிராணாயாமம் செய்தால், கிளர்ந்தெழுந்து வருகின்ற ஆற்றலுக்கு என்ன இலக்கு?

நமது உடல் ஆற்றல் கிளர்ந்தெழுந்து விட்டால் அது ராம பாணம் மாதிரி. ராம பாணத்தைப் பற்றிச் சொல்வார்கள். தூணியிலிருந்து ஒரு முறை அம்பை நாணேற்றி விட்டால், அதை எய்யாமல் இருக்கக் கூடாது. ஏதோ ஓர் இலக்கு கொடுத்தாக வேண்டும். இது பற்றி ராமாயணத்தில் கதை சொல்வார்கள். பிராணாயாமம் செய்து உயிர்ச் சக்தி கிளர்ந்தெழுந்து பிராணாயாமத்தில் அதற்கு ஒரு வேலை கொடுக்கவில்லை என்றால் அது உடலைத் தாகாமல் இருக்கப் பலவிதமான ஆசனங்கள் பழகி வைத்துக் கொள்வார்கள், பிராணாயாமத்தில் ஈடுபடுவதற்கு முன்னயே சில வியாதிகள் வருவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னால் ஒரு மருந்தைச் சாப்பிட்டு விட்டால், அந்த நோய் வெளிப்படாது என்பார்களே, அம் மாதிரி இது. ஆசனங்கள், யோகாசனங்கள், நோய் வராமல் தடுப்பதற்காகவும், நோய் வந்தே விட்டால் அதைப் போக்குவதற்காகவுமே வடிவமைக்கப்பட்டவை.

எனவே பிராணாயாம முறையில் அல்லாது வேறு வழிகளில் (உதாரணமாக நமது தொடுமுறை) குண்டலினி சக்தியை உயர்த்தி கொண்டவர்கள். பிராணாயாமம் செய்யத் தேவையே இல்லை என்று வருகிறது. அப்படி இருக்கும் போது யோகாசனங்களை ஒரு உடல் பயிற்சியாக மதித்துச்செய்வது பொருத்தமில்லாத விஷயம் என்பது வெளிப்படுகிறது. அதே போல வெறும் “பிராணாயாமத்தால் மட்டுமே ஆன்மீக மேம்பாடு பற்று விட முடியும்’ என்ற கருத்தும் தவறானது என்பது வெளிப்படுகிறது.

இது இருக்க யோகாசனங்களே நோய்களை உருவாக்கி விட கூடும் என்ற நிலையும் இருக்கிறது. இதனால் தான் 108 ஆசனங்களை 54, 54 ஆகப் பிரித்து இருக்கிறார்கள். உண்மையில் ஆசனங்கள் – நோய் நீக்கும் ஆற்றலையுடைய ஆசனங்கள் – 54 தான் அவை ஒவ்வொன்றும் ஒரு நோயை உண்டு பண்ணக் கூடியது. ஒவ்வொரு நோயைப் போக்குவதற்கு ஒவ்வொரு ஆசனம். இவை ஒரு 54 ஆக ஆசனங்கள் 108. இந்தப் பிராணாயாமம், ஆசனம் என்பவை எல்லாம் நம் நாட்டு ஞானிகள் – அவர்கள் தென்னிந்தியராகவும் இருக்கலாம். வட இந்தியராகவும் இருக்கலாம் வடிவமைத்த முறை தான் “பதஞ்சலி” என்ற பெரியவர் ஆராய்ச்சி செய்து வடிவமைத்ததனால் “பதஞ்சலி யோக சூத்திரம்” என்ற பெயரில் இது வழங்குகிறது.

அந்த யோகசூத்திரம் முறையில் ஆன்மீகப் பயிற்சிகளை 8 அங்கங்களாகப் பிரித்தார்கள். ஆகவே அதற்கு ‘அஷ்டாங்க யோகம்’ என்று பெயர் (அஷ்டம் என்றால் 8). அந்த 8 அங்கங்கள் வருமாறு – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், தாரணா, தியானம், சமாதி. இயமம் என்றால் ஆன்மீக வாழ்வுக்குத் தயாராகுபவர்கள் என்னென்ன செயல்களைச் செய்யக் கூடாதோ, அவற்றை எல்லாம் தவிர்த்தல். அதில் பொறாமை, திருட்டு, புலால் உண்ணாமை போன்றவை அடங்கி இருக்கும். நியமம் என்றால், அந்தப் பயிற்சியாளர்கள் என்னென்ன செயல்களை அவசியம் பின்பற்ற வேண்டுமோ அவைகள். அவற்றில் அதிகாலையில் எழுந்திரித்தல், குறைவாக உண்ணல், உண்மையையே பேசுதல், ஈகை போன்றவை அடங்கி இருக்கும். இந்த இயம, நியமச் செயல்களை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டுமோஅவைகள். அவற்றில் இருக்கும். இந்த இயம, நியமச் செயல்களை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டுவந்து, யோகாசனங்களையும் முறையாகச் செய்துவர வேண்டும். (காலையில் 2 மணி நேரம் ஆகும்) பிராணாயாமத்தால் ஆற்றல் கிளர்ந்தெழும். அதற்கு உடல் உழைப்பு போன்ற உபயோகம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. எனவே அவ்வாற்றல், உடலினுடைய எந்த உறுப்பையும் பாதித்து விடாமல், நேராக மூலா தாரத்திற்குச் சென்று, அங்கு உறைகின்ற குண்டலினி சக்தியின் இருப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தும். அதாவது ’நம்மிடத்தில் உயிர்ச் சக்தி இருக்கிறது. அது இவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது. அந்தத் தேக்கம் இன்ன இடத்தில் (மூலாதாரம்) இருக்கிறது’ என்று தெரியவரும். நூற்றுக்கு நூறு இந்தப்பயிற்சியைச் செம்மையாகச் செய்து வந்தால், மூலாதாரத்தில் உயிர்ச் சக்தியின் இருப்பு உணரப்படுவதற்கு, சுமார் 2 வருடம் ஆகும்.

இன்னும் 5 ஆதாரம் தாண்டி ஆக்கினைச் சக்கரத்துக்குப் போக குறைந்தது 12 ஆண்டுகளாவது ஆகும். சாதகனுடைய ஆற்றலும் தீவிரமும் குறைவாகியிருக்கின்ற பட்சத்தில், 24 வருடமும், 36 வருடமும் ஆகலாம். தொடங்கியது 16 வயதில் என்று வைத்துக் கொண்டாலும், வெற்றி அடைவதற்கு 52 வயது ஆகும். அதற்குப் பிறகு பொருளீட்டும் வல்லமை பெற்றுக் கொண்டு, ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ்கின்ற திறனையும் தெரிந்து கொண்டு உலகியலில் இல்லறம் நடத்துவது என்பது மிகவும் சிரம சாத்தியம். அதனால் இந்த வழியே வந்தவர்கள் அப்படியே பிரம்மச்சாரிகளாகவே போய்விடுவார்கள். அவர்கள் தான் ’துறவிகள்’ என்று மதிக்கப்பட்டார்கள்.

பிராணாயாம முறை இல்லாமல் நமது மன்றத்தில் பழக்கத்தில் இருக்கின்ற தொடுமுறையும் முற்காலத்தில் இருந்திருக்கிறது. அதை ‘உப நயன தீட்சை’ என்பார்கள். நயனம் என்றால் கண் ‘உபநயனம்’ என்றால் ‘additional eye’ என்று பொருள். அது நெற்றிக் கண் தான். அதைத் தான் யோக பாஷையில் ‘ஆக்கினைச்சக்கரம்’ என்கிறோம். சில வகுப்பினர் ’உபநயனத்தை’ ஒரு சடங்காக இன்றும் வைத்திருக்கிறார்கள். பெரும் பொருட்செலவில் அதை நடத்துவார்கள். ‘பிரம்மோபதேசம்’ என்றும் அதைச் சொல்வார்கள். பையனுக்குச் சுமார் 12 வயதில் இதைக் கொடுப்பார்கள்.

இதற்கு ஒரு பெரியவர் வருவார். பிராமணர்கள் அவரைச் ‘சாஸ்திரிகள்’ என்பார்கள். உபநயனம் பெறவேண்டிய சிறுவனைத் தனக்கு முன்னால் வைத்துக் கொண்டு இருவருக்கும் சேர்த்து ஒரு முக்காடு போட்டுக் கொள்வார், அந்தப் பெரியவர். சிறிது நேரங்கழித்து முக்காட்டை எடுத்து விடுவார். பையன் எழுந்து சமையல் கட்டை நோக்கி ஓடி விடுவான். அப்பளத்தையோ, வடையையோ கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்ருப்பான். அவைப் பிடித்து, ‘சாஸ்திரிகள் என்ன சொன்னார்’ என்று கேட்டால், ‘ஒன்றுமில்லை’ என்று சொல்வான். சரி தான், பையனுக்கு விளங்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, இளமையில் ‘உபநயனம்’ வாங்கிக் கொண்டு இப்பொழுது வளர்ந்து பெரியவர்களாக இருக்கக் கூடியவர்களைக் கேட்டாலும், இதையே தான் சொல்வார்கள். ஆகவே ‘உபநயனம்’ என்று சொல்லக் கூடியதும், பிரம்மோபதேசம் என்று சொல்லக் கூடியதும் வெற்றுச் சடங்காகப் போய் விட்டன.

ஒரு காலத்தில் குண்டலினி சக்தியை உயர்த்தி ஆக்கினைச் சக்கரத்துக்கு அதைக் கொண்டு வந்து அரூபமான இறைநிலையையும் உணர்த்துவது என்று இருந்த நிகழ்ச்சிகள், ‘கழுதை தேய்ந்த – கதையாக, இப்பொழுது வெற்றுச் சடங்குகளாக முடிந்துள்ளன. குண்டலினி யோக தீட்சை பெற்று நன்கு பயிற்சி செய்து இறை நிலையையும் உணர்ந்து விட்டவர்களால் விரும்புகிறவர்களுடைய குண்டலினி சக்தியை அவர்களுடைய மூலாதாரத்திலிருந்து ஆக்கினைச் சக்கரத்துக்கு முதுகுத் தண்டு வழியாக அழைத்துக் கொண்டு வந்து விடலாம். அதற்குப் பயிற்சியும், முதிர்ச்சியும் அன்றி, குருவினுடைய அனுமதியும், ஆசியும், காப்பும், வழி காட்டுதலும் வேண்டும். மற்றபடி மிக எளிதில் முடிந்து விடக் கூடிய காரியம் இது. சாதகனுக்கு 12 வருட காலச் செலவு இல்லை. வாழ்க்கையை வீணாக்குவது இல்லை.

ஆனால் தொடுமுறையிலோ, குண்டலினி சக்தி மேலே வருவதற்கு 12 விநாடி கூட ஆகாது. பகுதி நேரமாக, அவரவர்களும் அவர்களுடைய தொழில்களைச் செய்து கொண்டே, இந்தப் பயிற்சியைத் தொடங்கலாம். செய்து வரலாம். இறை உணர்வு பெறலாம். ஆகவே ’இது தற்காலத்திற்கேற்ற தவமுறையாக’ (Yoga for modern age) அமைந்துள்ளது. நமது உலக சமுதாய சேவா சங்கத்தில், அதனால் அங்கீகரிக்கப்பட்ட மன வளக்கலை மன்றத்தில், இந்த யோக முறையை சொல்லிக் கொடுக்கிறார்கள். இதற்காகப் பயிற்சி பெற்றவர்களை மனவளக்கலை ஆசிரியர்கள் என்று அழைப்பார்கள். அவர்களுக்கு அருள்நிதி என்று பட்டம்.

அவ்வாறான ஒரு அருள்நிதியைத் தேர்ந்தெடுத்துப் பொறுப்பாசிரியராக அறக்கட்டளை நியமித்துக் கொள்ளும். இவர் புலால் தவிர்த்தவராக இருக்க வேண்டும். திருமணம் ஆனவராக இருக்க வேண்டும். சமுதாயத்தின் நன்மதிப்பை இழந்து விடாதவராக இருக்க வேண்டும். தனது வருமானத்துக்கான தொழில் ஒன்று நடத்துபவராக இருக்க வேண்டும். மனவளக்கலை ஆசிரியர் பொறுப்பை பகுதி நேரமாகவும், ஒரு சமுதாயத் தொண்டாகவும் பாவித்து நடத்துபவராக இருக்க வேண்டும்.

அவர் பயிற்சியாளருக்குத் தனது உயிர்ச் சக்தியை வழங்கிக் குண்டலினி சக்தியை உயர்த்தி தரவேண்டுமாகையால், அதற்கான உயிர் அழுத்தத்தைப் பெற்று வைத்துக் கொள்வதற்காக, தினமும் ஜீவகாந்தப் பொருக்கப் பயிற்சிகள் செய்து வருபவராகவும், மறந்தும் சினவயப்படாதவராகவும் இருக்க வேண்டும். மன்றம் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆசிரியர்களை நியமித்துக் கொள்வதும் உண்டு. பெண்களுக்குத் தீட்சை கொடுக்கப் பெண் ஆசிரியர்களும் நியமிக்கப் பட்டிருப்பார்கள். ஆக்கினைச் சக்கரத் தவம் பெற்றுக் கொண்டவர் சில நாட்களில், ‘தண்டு வட சுத்தி, சாந்தி’ என்ற பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

எங்கோ சில காரணங்களால் யாரோ சிலபேருக்கு ‘குண்டலினி சக்தி’ மூலாதாரத்திலிருந்து ஏற்கெனவே மேலேழும்பி இருக்கலாம். ஆனால் ஆக்கினைச் சக்கரத்தை எட்டுவதற்குப் போதுமான ஆற்றல் இருக்காது. அதனால் முதுகந் தண்டின் இடையே எங்கோ ஓரிடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடிய குண்டலினி சக்தியின் தேக்கத்தை மேலே கொண்டு வர வேண்டும். அதற்காகத் ‘தண்டுவட சுத்தி’ என்ற பயிற்சியும் கொடுக்கப்படும். எதிர்காலத்தில் இந்த மாதிரித் தொந்திரவு எந்தக் காலத்திலும் வராமல் இருப்பதற்காகச் ‘சாந்தியோகம்’ என்றப் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. குண்டலினி சக்தியை மீண்டும் மூலாதாரத்திற்குக் கொண்டு போய் வைத்து அங்கேயே தவம் செய்வது தான் ‘சாந்தியோகம்’

Keep reading

More from the archive

KG Sami

குரு வணக்கம்

அண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்றுஅவ்வறிவு ஒன்றுமுதல் ஆறதாகிக்கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்கோடான கோடி எண்ணிஅனுபவித்துக்கண்டபலன் எனையறிய…

KG Sami

தவம் – 36

தன்னால் வாத்யார் வேலைக்குப் போகவே முடியாது என்று தெரிகிறது. ஏனெனில் அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அவர் ‘Teacher training’ அல்லது B.Ed., Course-க்கு…

KG Sami

தவம் - 49

கடைசி வரைக்கும் சுழல் தெரியாது. அழுத்தம் அதிகமாகி நிலை கொண்டுவிடும். Concentration ஆகிவிடும்.உட்கார்ந்து கொடுப்பதா, நின்று கொண்டு கொடுப்பதா. உங்கள்…

KG Sami

வான் காந்தம், ஜீவ காந்தம்

வான் காந்தம், ஜீவகாந்தம் எவ்வளவு மகிமையான வஸ்துக்களாக இருந்து கொண்டு எவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம் செய்து கொண்டு இருப்பது தெரியாமல் இருக்கிறது.…

KG Sami

தவம் – 8

(3) தலையில் பேன் ஊறுவது போல் இருக்கும், எவ்வளவு நேரம் கிண்டிப் பார்த்தாலும் ஒரு பேனும் அகப்படாது. இந்த நிகழ்ச்சி எதைக் குறிக்கிறது? ஒட்டு மொத்தமாக…

KG Sami

தவம் – 18

மேலே தூக்கி விட்ட உடனே ‘ஆக்கினைச் சக்கரத் தவம்’ வந்து விடும் யாருக்கும். அப்பவே தெரியும். தீட்சை எடுத்த அன்றே ‘ஆக்கினைச் சக்கரம்’ தெரியும். ஆனால்…