KG Sami1937 — 2006

சினமும், செந்தன்மையும்

Signed Arulnithi Muthappan

1969, முப்பது நாளைக்கு ஒரு முறை மகரிஷிகளைச் சந்திக்கும் எனது வழக்கப்படிக் கூடுவாஞ்சேரி சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கும், சென்னைக்குமாக நானும், மகரிஷியும் சென்று வந்து கொண்டிருப்போம். என்ன காரணமோ, நினைவில்லை, மகரிஷி என்னை அன்று சென்னையில் விட்டு விட்டு வந்து விட்டார். துறைமுகத்தில் ரயிலேறி தாம்பரம் வந்து விட்டேன். அபொழுதெல்லாம் நேரே கூடுவாஞ்சேரிக்கு நாள் முழுவதும் இரண்டு ரயிலோ மூன்று ரயிலோ தான் ஓடும். எனக்கு அன்று தாம்பரத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு ரயில் கிடைக்கவில்லை.

     தாம்பரம் ஸ்டேஷனில் இருந்து இறங்கி பஸ் ஸ்டேண்ட் வந்தேன். ஒரு சினிமா பேனர் என்னை ஈர்த்தது. கிளியோபாட்ரா. ரிச்சர்ட்பர்ட்ன், எலிசபெத் டெய்லர் நடித்தது. பிரம்மாண்டமான படம், அற்புதமான படம். சினிமாஸ்கோப். எங்கள் ஊருக்கு இன்னும் வரவில்லை; வராது: வருவதற்கு இன்னும் பத்து வருடம் ஆகும். பார்த்து விடலாமா? மாலை மணி 7. கூடுவாஞ்சேரி போக வேண்டுமே? அம்மா (அருள் அன்னை லோகாம்பாள்) காத்திருப்பாரே? (மகரிஷிகளை நாங்கள் அப்பொழுதெல்லாம் சாமி என்று தான் சொல்லுவோம். அப்படிச் சொன்னவர்கள் இன்னும் அவர்களைச் சாமி என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்).

     இப்பொழுது கிளம்பினாலும் 8 மணிக்குத்தானே போய்ச் சேரலாம். படம் பார்ப்பதானால், அது முடிய மணி 10 ஆகுமே. எப்படிக் கூடுவாஞ்சேரி போய்ச் சேருவது? 10 மணிக்கு டவுன் பஸ் இருக்காதா என்ன? இருக்கும். இரவு 11 மணிக்கெல்லாம் கூடுவாஞ்சேரிக்குப் போய் விடலாம். அம்மா சாப்பிட்டு விட்டு படுத்து விடுவார்கள். சாமி நம்மை எதிர் பார்த்துக் கொண்டே சங்கத்தில் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். எப்படியும் அவர் துங்க ஆரம்பிப்பதற்குள் நாம் போய் சேர்ந்து விடலாம். (மன்றத்தை அப்பொழுதெல்லாம் சங்கம் என்று தான் சொல்வோம்).

     தியேட்டரில் நுழைந்து விட்டேன். பாதி மனம் தான் படம் பார்த்துக் கொண்டிருந்தது. கால் மனம் அம்மாவின் வீட்டில் இருந்தது. மீதி கால் மனம் கூடுவாஞ்சேரி சங்கத்தில் இருந்தது. ஐயோ! படம் நீளமாக இருந்து தொலைத்து, The End போடும் முன்னாலேயே நான் பஸ் ஸ்டாண்டில் இருந்தேன். மணி 10.30. ஆச்சரியம் பாருங்கள் ஒரு பஸ் நின்றிருந்தது. கல்பாக்கம் என்று போட்டிருந்து. வழி வண்டலூர் என்றும் போட்டிருந்தது. வண்டலூர் வழி என்றால் கூடுவாஞ்சேரி போகத்தானே வேண்டும்? ஏறிக் கொண்டேன். ஸ்டாண்டிங்தான்.

     எல்லாத் தியேட்டர்களிலும் நின்று ரசிகர்களை ஏற்றி திணித்துக் கொண்டு பஸ் ஊர்ந்து கொண்டிருந்தது. வண்டலூர் தாண்டி இடம் கிடைத்து உட்கார்ந்தேன். ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பஸ் நேராகச் செல்ல வேண்டும். ஆனால் இடது பக்கம் திரும்பிப் போவது தெரிந்தது. ‘பஸ் கூடுவாஞ்சேரி போகவில்லையா?’ என்று கண்டக்டரைக் கேட்டேன். ‘நீங்கள் அந்தக் கூட்டு ரோட்டிலேயே இறங்கிக் கொண்டிருக்க வேண்டும்’ என்று அவர் என்னை இறக்கி விட்டு விட்டார். நடந்து கூட்டு ரோடு திரும்பி, கூடுவாஞ்சேரி போய்ச் சேர மணி 12 ஆகி விட்டது.

     சங்கக் கதவைத் தட்டினேன். மகரிஷிகள் திறந்தார்கள். என்னை ஏறிட்டுப் பார்த்தார். அவர் முகத்தில் ஆச்சரியம் கலந்த பரிதாம் தெரிந்தது. ‘எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த நேரத்தில் எப்படி வருகிறீர்கள்? ஏது பஸ்? ஏதோ காரணமாக சென்னையில் ஏதோ ஓர் இடத்தில் தங்கி விட்டீர்கள் என்றல்லவா நினைத்து உங்களுக்குக் காப்பு கொடுத்து விட்டு, இப்பொழுது தான் படுத்தேன். ஏதோ குற்றம் செய்து விட்டவர் போல் மகரிஷிகள் பதறிக் கொண்டு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

     நான் என் காரணத்தைச் சொன்னேன். மகரிஷிகள், உங்கள் வயதுக்காரர்கள் சினிமா பார்ப்பது இயல்புதான். படம் முடிந்து அங்கேயே படுத்து விட ஏற்பாடு இருக்க வேண்டும். எப்படி வந்து சேர்ந்தீர்கள்? பஸ் ஒன்றும் இருந்திர்க்காதே!. சரி சாப்பிட்டீர்களா? என்று கேட்டார்கள். நடந்த விபரத்தை சொன்னேன்; ‘ஐயோ! இந்தப் பாதி ராத்திரியில் 5 கி.மீ. விளக்கில்லாதாத, ஜன நடமாட்டமில்லாத சாலையில் எப்படி உங்களால் நடந்து வர முடிந்தது? சரி. களைப்பாய் இருக்கும், சீக்கிரம் படுங்கள்’, என்று தன் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டார்கள் மகரிஷிகள். விளக்கு அணைக்கப்பட்டது.

      சினம் வெளிப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் செந்தண்மை வெளிப்பட்டது. முன் அனுபவத்தின் காரணமாக, இத்தகுச் செந்தன்மை நான் எதிர்பார்த்தது தான். இல்லை என்றால், குரு வீட்டிற்கு விருந்து சாப்பிடச் சென்ற நான் சினைமாவுக்குச் செல்வேனா?

Keep reading

More from the archive

KG Sami

தவம் – 30

எண்ணெய் எங்க வீட்டில் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. பெரும்பாலும் வீட்டில் எள் எண்ணெய் தான் இருக்கும். அதை நல்லெண்ணெய் என்று சொல்வார்கள். அந்த…

KG Sami

தவம் – 27

சுத்தவெளி எங்கே? அது இருந்த இடத்திலே வேறு என்னவோ அல்லவா இருக்குது. விரிவலை இருந்ததே. போச்சே. அது என்ன ஆச்சு. அதுவும் காணாமல் போய்விட்டதே. இரண்டும்…

KG Sami

தவம் – 43

ஒரு செயலைத் தெரிந்து செய்யும் போது ஒரு பலன் ஏற்படும். தெரியாமல் செய்யும் போது வேறு பலன் ஏற்படும். காரியம் ஒன்று தான். பென்சில் சீவுகிறோம் என்று…

Granthaalayam

சௌக்கியம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!சௌக்கியம்னா என்னன்னு தெரியுமா?…

KG Sami

தீதும் நன்றும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)இன்னைக்கு பல பேர் நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலையே!, ஆனால் இறைவன் ஏன் எனக்கு…

Kannimuthu

அறிவிற்கு நான்கு நிலை

அறிவிற்கு நான்குநிலை: இயற்கைத் தேவைஅவைமட்டும் நிறைவுகொளல் ஒன்(று); (இ)ரண்டு பொறி புலனால் இயற்கைஎழில் ரசித்தல்; மூன்று, பகுத்தறிவால் இயற்கைரக சியங்களை…