புதுமைச் சித்தர் தத்துவஞானி உலகச் சமுதாய சேவா சங்கத்தலைவர் தவத்திரு வேதாத்திரி சுவாமிகள் அவர்கட்கு அன்னாரின் மாணாக்கருள் ஒருவனான காரைக்கால் க. கோவிந்தசாமி சமர்ப்பிக்கும்
மெய்ப்பொரு ளாகிநின் மேன்மை யுணர்ந்ததால்,
மெய்ப்பொரு ளாக்கியெம் மேன்மை யுணர்த்திட,
மெய்விளக் கத்தவ மன்றங் கண்டனை!
நெய்விளக் கன்னவெம் நெற்றிச் சுடர்பெற
நிகழ்த்தினை யற்புதம்! நின்னிரு திருப்பதப்
புகழ்த்திறம் பாடநான் புண்ணியம் செய்ததென்!
ஆற்றுநற் றொண்டெலாம் அதிகமில் கடனென
புகழைப் பேணா பெற்றியோய்! பெண்மையை
இகழாக் கொள்கை இயற்றிய ஏந்தலே!
காமக் குரோத லோப மோக
மாமத வஞ்சமாய் மயங்கிய அறிவினைத்
துலக்கி விளக்கித் தூய்மையை மீட்டு
விளைவறிந் தாற்றும் விழிப்பினைத் தந்தாய்!
துன்ப விருளே தோன்றெனா அருண!
அன்பையும் இன்பையும் அறத்தோ டிணைத்துநல்
லமைதியை அவனியில் அமைத்திட நினைத்தனை!
எண்ணிய எண்ணியாங் கெய்துவர் திண்ணியர்
திண்ணிய! நீயும் எண்ணிய தியன்று
வரலா றாகும் வளமிகு காலம்
வருவிதம் விளக்கி வைத்தனை, வாழ்க!
வாழ்கநின் றிருவடி! வாழ்கநின் ளருட்கரம்!
வாழ்கநின் வண்புகழ்! வாழ்கநின் அருட்குழு!
வளர்கநின் தொண்டிவ் வுலகுள வரையிலென்
றென்றும் வாழ்த்தினேன்; என்றும் வாழ்த்துவேன்;
இன்றும் வாழ்த்தினேன் இன்பப் பொங்கல்
பொங்கிச் சரிதல்போல் இன்றைய வாழ்த்தும்
பொங்கிச் சரிந்ததென் உள்ளம்விட் டேட்டில்!
ஓங்குக ஒழுக்கம்! ஒளிர்க அறச்சுடர்!
நீங்குக மிடிநோய்! நிலைக்கநீ ளமைதி!
நின்று நிலவுக அந்தமில் லின்பம்!
குன்றும் தொளியெனத் துலங்குக ஞானம்!