A remembrance
1993-94 ஆம் ஆண்டுகளில் நான் செஞ்சியில் இருந்து வந்து புதுச்சேரி வேதபுரம் மனவளக்கலை மன்றத்தில் நடைபெற்ற அகத்தாய்வுப் பயிற்சிகளில் அய்யா K.G.S முன்னின்று நடத்திக் கொடுப்பர். அருள்நிதி ஜானகிராமன் அய்யா புதுச்சேரி அறங்காவலர் குழுத்தலைவராக இருந்தார்.
நான் 1994 ஆம் ஆண்டில் ஆழியாரில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சியில் பங்கேற்று அருள்நிதி ஆனேன். 26.01.1995 இல் புதுச்சேரி மன்றத்தின் கிளையாக எங்கள் செஞ்சியில் தவமையம் தொடங்கப்பெற்றது. காலையில் 10 மணிக்கு KGS மையத்தைத் தொடங்கி வைத்தார். பிறகு அன்பர்கள் சூழ அருமையான ஒரு ‘தனாகர்ஷண சங்கற்பம்’ நிகழ்ச்சியையும் அய்யாவே வெற்றிகரமாக நடத்தினார். செஞ்சி மையம் புத்துயிர் பெற்றது. உயிர் கொடுத்தவர் KGS அவர்கள்.
”இந்த செஞ்சி மையம் இந்தப்பக்கம் செங்கம் வரையிலும், அந்தப்பக்கம் திண்டிவனம் வரையிலும் ஆல்போல் தழைத்து வளர்க”, என்று KGS வாழ்த்திப் பேசினார்.
14.2.1996 அன்று செஞ்சி மன்றம் அறக்கட்டளையாக மாறுவதற்கு மகரிஷி அவர்கள் அனுமதி அளித்தார்கள். ‘அறக்கட்டளையாக வழிகாட்டுதல் யார்?’ என்று சுவாமிஜி கேட்க நாங்கள் ‘KGS’ என்று ஒரே பதில் அளித்தோம்.
’நல்ல பேராசிரியர்… விட்டுவிடாதீங்க கெட்டியாய் பிடிச்சுக்குங்க’ என்று மகரிஷி மனம் திறந்து தன் சீடரைப் பாராட்டினார்.
அதன்பிறகு இரண்டே நாட்களில், அதாவது 16.2.1996 முதல் திருவண்ணாமலையில் எங்கள் செஞ்சி மன்றக் கிளையாக தவமையத்தைத் தொடங்கினோம். அடியேனும் அருள்நிதி சரோஜா அம்மா அவர்களும் இராமகிருஷ்ணா பள்ளியில் மையத்தைத் தொடங்கினோம். தொடங்கி ஒரே மாதத்தில் KGS காயகல்ப பயிற்சி நடத்தினார். திருமண மண்டபமே நிறைந்துவிட்டது. மண்டபத்தின் வெளியிலும் ஒரே கூட்டம். தொலைக்கட்சிப்பெட்டி வைத்து KGS இன் செயல்விளக்க முறையைக் காட்டினோம்.
திருவண்ணாமலையில் ஓர் அன்பர் மன்றத்திற்கு இடம் கொடுக்க முன்வந்தார். அங்கு KGS ஆலோசனையின்படி ----------2ரூ 12000/- செலவு செய்து கொட்டகை போட்டோம். அங்கேயும் KGS காயகல்பம் நடத்தி வருவாயைப் பெருக்கினார். மன்றம் வளர்ந்தது.
திருவண்ணாமலையைச் சுற்றி செங்கம், போளூர், திருக்கோயிலூர் ஆகிய ஊர்களில் அறக்கட்டளை மற்றும் தவமையங்களை உருவாக்கிட KGS அரும்பாடுபட்டார்.
1996 ஆம் ஆண்டில் நான் KGS அவர்களின் பரிந்துரைப்படி, உலக சமுதாய சேவாசங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினராக மகரிஷியால் நியமிக்கப்பட்டேன். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரதம தலைமை வரைவாளர் என்ற பணியில் நான் இருந்தேன். அதன்பிறகு பதவி உயர்வு கொடுக்கப்பெற்று சென்னை கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டேன். அப்போது மகரிஷி அவர்கள் வாழ்ந்த வீட்டருகிலேயே குடியிருக்கும் பேற்றினைப் பெற்றேன். அதன் விளைவாக கூடுவாஞ்சேரி மன்றத்தின் பொறுப்பாசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினேன்.
1958 ஆம் ஆண்டு கூடுவாஞ்சேரியில் மகரிஷி அவர்களால் தொடங்கப்பெற்றது அம்மன்றம். அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அன்னை லோகாம்பாள் அவர்களும் இணைந்து ‘அகில உலக பெண்கள் ஆன்மிக கல்வி அறக்கட்டளை’, எனும் பெயரில் தொடங்கி நடத்திவந்தார்கள். தற்பொழுது விடுதலை வீரர் வ.உ. சிதம்பரனாரின் பேத்தி பிரம்மகுட்டி அவர்கள் பொறுப்பேற்று அதனை நடத்தி வருகிறார்கள்.
பின்னர் மறுபடி பணி உயர்வு பெற்று நான் 2007 இல் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் KGS சித்தி அடைந்துவிட்டார். செஞ்சியில் நான் கட்டிய வீடு முழுமை பெறாமல் பாதியில் நின்றது. KGS அவ்வப்போது வந்து தவம்செய்து, தனாகர்ஷண சங்கற்பமும் செய்து கட்டிடப் பணி முழுமை அடைய வாழ்த்தினார். இடையில் நான் வீட்டை விற்றுவிடலாம் என்று எண்ணியபோது, ‘நீ விற்க மாட்டாய், விற்கவே முடியாது’, என்று KGS சொன்னார். அது பலித்துவிட்டது. இப்போது அந்தக் கட்டிடத்தில்தான் அறக்கட்டளை இயங்குகிறது. மூன்று அடுக்கு வரை ஓங்கி நிற்கிறது.
அய்யாவின் அற்புதங்கள் அனைத்தும் நான் அறிவேன். எங்கள் மன்றத்தில் ஒரு பெண் தன் சுகப்பிரசவத்திற்காக KGS இடம் ஹோமியோபதி மருந்து கேட்டாள். அய்யாவும் ஏதோ மருந்து கொடுத்தார். அவள் சென்றபின், “அந்தப் பெண்ணிற்கு விரைவில் சுகப்பிரசவம் ஆகும். நான் இப்போ கொடுத்தது மருந்தே இல்லை வெறும் டம்மி granules தான்,” என்றார் என்னிடம். கொஞ்ச நாள் கழித்து அப்பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் ஆகிவிட்டது. KGS அப்பெண்ணின் மனோபலத்தை அதிகப்படுத்த ‘Passes’ கொடுத்தார். வேறொரு சமயம் ஒரு பெண்ணின் மேல் ஏறியிருந்த கெட்ட ஆத்மாவை (soul attachment) வெகு நேர்த்தியாக விடுவித்தார்.
KGS சித்தியான பிறகு என் மகளுக்குத் தலையில் infection ஆகியிருந்தது. மருத்துவர்கள் கண்டறிந்து அறுவைசிகிச்சைக்குத் தயாரானார்கள். என் மகள் KGS புகைப்படம் முன் அமர்ந்து உளமுருக வேண்டினார்.
“என்னவேணும் பொண்ணு கேளு”, என்பது போல இருந்ததாம்.
கொஞ்ச நாளில் என் மகளின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாய் முடிந்து அவள் வீட்டிற்கு நலமாய்த் திரும்பிவிட்டார்.
என் மகன் ந.பா. அசோகன், மன் ந.பா. சீதாலட்சுமி ஆகியோர் இன்றளவும் வாழ்வில் மேன்மையுற்று இருப்பதற்குக் KGS அவர்களே முழுமுதற் காரணமாவார். என் மகன் சென்னை மேடவாக்கத்தில் standard chartered Bank – இல் Technical writer ஆக இருக்கக் காரணமானவர் KGS. அவனை அவ்வப்போது ஊக்கப்படுத்தி அறிவூட்டி நெறிப்படுத்தியவர் KGS என்றால் அது மிகையல்ல.
”எப்போதும் அஜம் மாதிரி அதாவது ஆட்டுக்கிடா மாதிரி தலையை ஆட்டிக்கிட்டே இருக்கக்கூடாது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு. எந்தக் குற்றம் யார் இழைத்தாலும் அவர்களை வெளியேற்றவும் வேண்டும். இதைத்தான் கண்காணித்தல் மற்றும் களையெடுத்தல் என்கிறோம்,” என்று KGS அடிக்கடி கூறுவார்.
தன்னுடல், தன் சுகம் பற்றி எல்லாம் சிந்திக்காதவர் KGS. தன் உடல் நிலை பற்றிப் பொருட்படுத்தவே மாட்டார். செஞ்சி மன்றப் பயிற்சியின்போது ஓர் அன்பர் காலதாமதமாக வந்தார்.
“ஏன் தம்பீ ஏன் லேட்?” என்று கேட்டார். KGS “அய்யா காய்ச்சல்...” என்றிழுத்தார் அன்பர். “கொஞ்சம் அப்படியே வந்து என்னைத் தொட்டுப்பாரு தம்பீ”, என்று அவரழைக்க, அன்பர் அவர் உடலைத் தொட்டதும் அதிர்ந்துவிட்டார். சும்மா சுட்டெரிக்கும் காய்ச்சல். அந்த நிலையிலும் KGS பயிற்சி நடத்திக் கொண்டிருந்தார். குறைந்தது இரண்டு நாளாக அந்தக் காய்ச்சலுடன் அவர் இருந்திருக்கிறார். உடனே காலதாமதமாய் வந்த அன்பர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். நேரம் தவறாமையை அடிக்கடி அய்யா வற்புறுத்துவார். மேலும் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் பயிற்சியை முடித்துவிடுவார். நேரத்தை வீணடிக்க மாட்டார். அளவுக்கு மீறி பேச்சை நீட்டமாட்டார்.
மொத்தத்தில் எங்கள் செஞ்சி மன்றத்தை வளர்த்தெடுத்த பெரியார் KGS.
— அ/நி நடராஜப் பாண்டியன் செஞ்சி 6 May 2017