A remembrance
அன்புடையீர்,
வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன் பழகும்போது அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும். காலம் செல்லச் செல்ல அவருடைய அக்கறை, தன் பெண்ணைப் போல அதனினும் ஒரு பங்கு மேலே நின்று நம் அறிவை உயர்த்தி, நாமும் சமுதயத்தில் எல்லோராலும் பேசப்படும் வகையில் என்னை அவர் மாற்றிய விதம் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
நான் என்ன படித்திருக்கிறேன் என்று கேட்டு அதை நான் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்று அக்கறையுடன் வழிநடத்தினார். நான் B.A. English literature படித்துள்ளேன். Altruism என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் உள்ளதை தமிழாக்கம் செய்து என்னைத் தரச் சொன்னார். அந்தத் தமிழாக்கத்தைத் தான் திருத்தி அதை அன்பொளி புத்தகத்தில் தமிழாக்கம் J. வசந்தி என்று போட்டார். 1½ வருட அளவில் அன்பொளியில் என் பெயர் வரும். எல்லோருக்கும் என்னைத் தெரிகிற அளவில் என்னைப் பிரபலப்படுத்தியவர் ஐயா தான். எல்லோரும் அறிவுப் பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொள்வார்.
ஒவ்வொரு முறை சொற்பொழிவின் போதும் நிறைய ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி அதற்கு தமிழ் அர்த்தம் சொல்வார். நாமும் நன்றாகப் பேச வேண்டும் என்று நினைப்பார். ஒவ்வொருவரையும் கேள்விகள் கேட்டு சிந்திக்க வைப்பார். நல்ல தைரிய சாலி. அவருடைய தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று நம்மையும் தைரியப்படுத்துவார்.
மாதம் ஒருமுறை ஈரோட்டில் பெண்கள் வகுப்பில் பேசுவார். அவர் பேசி முடித்தவுடன் நாங்கள் மூன்று பேர் அவர் பின்னாலேயே அவர் வீட்டிற்குச் சென்று அவரிடம் அருட்காப்பு கயிறு கட்டிக் கொள்வோம். வீட்டிற்கு வந்தவர்களை எதாவது கொடுத்து சாப்பிடாமல் அனுப்ப மாட்டார். எல்லாப் பயிற்சிகளும் ஈரோட்டில் எடுத்து குமாரபாளையத்தில் மனவளக்கலை மன்றம் பெண்கள் வகுப்பு ஆரம்பித்து அதனை நடத்தும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. ஐயாவின் ஆசீர்வாதம் தான் என்னை மேலும் மேலும் உயர்த்தி உயர்ந்த இடத்திற்கு வைத்துள்ளது.
நம் குரு வேதாத்திரி மகரிஷியின் உண்மையான சீடர்களில் ஐயாவும் ஒருவர். தள்ளாத வயதிலும் மகரிஷியின் கருத்துக்களை எல்லா மக்களும் பெற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டு தொடர்ந்து வகுப்புகள் எடுப்பார். என் மாமியார் வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக் கொண்டிருந்தார். அவருடைய சிறு வயதிலிருந்தே அவருக்குப் புகையிலை போடும் பழக்கம் இருந்தது. ஐயா வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரிடம் புகையிலையை விடச் சொல்லி சொல்வார்கள். நாங்கள் எல்லாம் எவ்வளவோ சொல்லியும் புகையிலைப் பழக்கத்தை விடாத அவர் ஐயா சொல்லி சிறிது காலத்திலேயே அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டு விட்டார். இப்பொழுது வெற்றிலை கூட போடுவது கிடையாது. அவர் இதைப்பற்றி யாராவது கேட்டால் ஐயாவைப் பற்றிப் பெருமையகப் பேசுவார்.
அவர் மன்றத்திற்கு சொற்பொழிவிற்கு வரும் போதெல்லாம் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டுப் பிறகுதான் மன்றத்திற்கு செல்வார். வீட்டிற்கு வரும் போதெல்லாம் வீட்டிலுள்ள அனைவரையும் அக்கறையுடன் கவனிப்பார். ஏசுவார். குழந்தைகளை நல்ல குழந்தைகளாக வர வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டுவார். அவருடைய ஆசீர்வாதத்தால் இப்பொழுது நாங்கள் தொடர்ந்து மன்றத்திற்குச் சென்று தொண்டாற்றும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எங்கள் உயிர் உள்ளவரை ஐயாவுடனான அனுபவங்கள் எங்கள் மனதில் ஒரு பக்கம் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். ஐயாவை என்றுமே மறக்க முடியாது.
K.G. சாமி ஐயா வாழ்க வளமுடன். ஐயாவின் ஆன்மா இன்னொரு பிறவி எடுத்து இதே போல் மக்களைத் திருத்தட்டும். மக்களுக்கு மகரிஷியின் கருத்துக்கள் பரவ இது போன்ற ஆன்மாக்கள் எப்பொழுதும் எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் உருவாக வேண்டும். இந்த பொன்னான வாய்ப்பை எனக்குக் கொடுத்த திருவளவன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
இப்படிக்கு
அ/நி J. வசந்தி
குமாரபாளையம்.
— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம் 6 May 2017