A remembrance
நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக முதல் நிலை அகத்தாய்வுப் பயிற்சி நடத்துவதற்கு அய்யா KGS வந்திருந்தார். அது முதல் எனக்கு மிக நெருக்கமாகிய என் சொந்த வாழ்விலும் நல்ல வழிகாட்டியாக, நல்ல தந்தையாக விளங்கினார். அப்போதெல்லாம் மரகதம் சுப்பு போன்றவர்கள் ஈரோட்டில் பயிற்சி நடத்துவர். அய்யா அவர்கள் மாதம் ஒருமுறையாவது வந்துவிடுவார்.
1986 – ஆம் ஆண்டின் இறுதியில் ’அருள்நிதி’ பயிற்சி பெற்றேன். எனக்கும் KGS அவர்களுக்கும் இடையே உறவு பாலமாய் இருந்து நட்பை வளர்த்தவர் பேராசிரியர் பரமசிவம் ஆவார். திருவாரூர், கும்பகோணம், நாகை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், பூந்தோட்டம், தஞ்சை, சென்னை, விழுப்புரம் போன்ற ஊர்களில் KGS பயிற்சிக்குப் போகும் போதெல்லாம் நாங்களும் போவோம். ஒரே ஒரு அஞ்சல் அட்டை மூலமே எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் நிகழும். நிறைய நிறைய பயிற்சிகள் அவர் நடத்த நடத்த நாங்கள் அவற்றில் ஊறிப் போனோம். நான் நிறைய கேள்விகள் கேட்பேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதன் மூலம் ஒரு தெளிவு கிடைத்தது. அவரின் பேச்சுத்திறன், தோற்றப் பொலிவு ஆகியவை அவர்பால் என்னை ஈர்த்தது. மிகபலர் அவருடன் நெருங்கிப் பழக பயந்த வேலையில் நான் மட்டும் அவரிடம் மிக நெருக்கமாகி உள்ளங்கவர் சீடனாகிவிட்டேன். என் அம்மாவிடமும் அவருக்குப் பரிச்சயம் உண்டு. ஆன்மீக விளக்கங்கள், உரையாடல்கள் என் அம்மாவிடமும் நிகழ்ந்ததுண்டு.
1990 இல் நான் திருச்சி நகரத்திற்கு வந்துவிட்டேன். பிறகு திருச்சி மனவளக்கலை மன்றப் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டேன். நான் பொறுப்பேற்ற பிறகு KGS அடிக்கடி அகத்தாய்வுப் பயிற்சிகள் நடத்த திருச்சி வந்தார். மன்றம் வேகமாய் வளர்ச்சி அடைந்தது. பதினான்கு தவமையங்கள் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கின. விரைவில் அவை இருபத்தியிரண்டு மையங்கள் ஆகப் பெருகின. அனைத்து மையங்களும் ஒரே அறக்கட்டளையின் கீழ் இயங்கின.
அருள்தந்தை அப்போது எல்லோரிடமும் சொல்வார், “ஒரு மாவட்டத்திற்கு ஓர் அறக்கட்டளை என்று அமைத்துக் கொள்ளுங்கள்,” என்று நாங்களும் மகரிஷி அவர்களின் கருத்துக்கிணங்க 22 தவமையங்கள் ஒரே அறக்கட்டளை என வைத்துக் கொண்டேன். “திருச்சிராப்பள்ளி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை” என்ற பெயரில் இயங்கினோம்.
திருச்சி தில்லை நகர், தென்னூர், ஸ்ரீரங்கம், அனிச்ச நல்லூர், KK நகர், சுந்தர் நகர், திருச்சி கடைவேதி, ஸ்ரீனிவாசர் நகர், பொன்மலை, என்றப்படி எண்ணிலா மையங்கள் இயங்கத் தொடங்கின. திருச்சி கடைவீதியில் மட்டுமே 3 மையங்கள் செயல்பட்டன. எல்லா தவமையங்களுக்கும் பேராசிரியர் KGS வழிகாட்டும் பிதாமகர் ஆனார். அப்போது ஒருமுறை திருச்சி ரெயில்வே காலனி அருகில் பொன்மலை மன்றத்தில் முதல் நிலை அகத்தாய்வுப் பயிற்சி நடத்த அய்யா வந்தார். சீவகாந்தப் பெருக்கத்திற்கான கண்ணாடிப் பயிற்சி மற்றும் தீபப்பயிற்சிகளைக் காலையில் 3 மணிக்கெல்லாம் நடத்திகாடட உள்ளார். அவர் நடத்தும் பயிற்சி என்றதும் விடியற்காலை 3 மணிக்கே மகளிர் மட்டும் 25 பேர் வந்துவிட்டனர். பயிற்சி முழு வெற்றி. ‘ஒரு சாதாரண மனிதனை மாமனிதனாக மாற்றக் கூடிய பயிற்சி அகத்தாய்வு முதல்நிலைப் பயிற்சி ஆகும்’, என்று KGS அடிக்கடி கூறுவார். அதனாலேயே அவர் அகத்தாய்வு முதல்நிலை பயிற்சியை மிக விரும்பிய நடத்துவார்.
தஞ்சைக்குப் போவதாக இருந்தால், திருச்சியில் நின்று எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிச்செல்வார். எங்கள் வீட்டில் 3 ஆண்டுகள் ‘உறையூர்த் தவமையம்’ செயல்பட்டது. பிறகு இடம் பற்றாக்குறை ஏற்பட்டதால் தில்லை நகருக்கு மாற்றிவிட்டோம். இம்மையத்திற்கு KGS பலமுறை வந்துள்ளார். ஆக்கப் பூர்வமான உரைகளை நிகழ்த்தியுள்ளார். அவர் கூறும் எடுத்துக்காட்டுகள் நடைமுறை வாழ்வியலுக்குப் பொருத்தமானவையாய் இருக்கும்.
KGS அய்யாவின் பேச்சுத்திறனை மகரிஷி நன்கு அறிந்திருந்தார். “புரியாத தத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமா? KG சாமியைக் கேட்டுக்கொள்ளுங்கள்”, என்று மகரிஷி அடிக்கடி கூறியுள்ளார்.
ஒருமுறை ஆழியாரில் ‘பிரபஞ்ச உயிரினப் பரிணாமம்’, என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு அன்பர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தார். பயிற்சிக்கு வந்திருந்த அன்பர்கள் மகரிஷியை பார்த்தனர்.
அவர்கள் பார்வையைக் கொண்டு மனநிலையை அறிந்த மகரிஷி, “கொஞ்சம் இருங்க. இதோ கோவிந்தசாமியை வரச் சொல்கிறேன். அவர் வந்து உங்களுக்கு நல்லா புரியும்படி பேசுவார்,” என்று சொன்னார். மகரிஷி அவர்களின் மனதில் நின்ற சீடர் KGS அய்யாதான் என்பது இதன்மூலம் எல்லோர்க்கும் விளங்கும்.
”தம்பீ வா! திருநெல்வேலியில் மெளன நோன்பு, மே முதல் வாரம் கடைசி நாளின்போது வா. நிறைய பேசலாம். மன்றப் பொறுப்புகளில் நிறைய சீர்திருத்தம் செய்ய வேண்டும்,” என்று அய்யா என்னிடம் கடைசியாகச் சொன்னார். ஆனால் அதன் பிறகு அவரைச் சந்திக்க இயலாமல் போய்விட்டது.
என்னை விட அறிவு, அனுபவம், வயது எல்லாம் பெற்றவராய் இருந்தும் என் ஆலோசனைகளை ஏற்பார். “என்ன” என்னையே எதிர்த்து சண்டை போடுகிறாயா? பரவாயில்லை உன் நேர்மை எனக்கு பிடிக்கிறது, நிறைய கேள்விகள் கேட்டால்தான் நமக்குப் பிடிக்கும்”, என்பார். சுயநலம் கருதாமல் மனவளக்கலையை வளர்த்த மகா பெரியவர் KGS.
— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி 6 May 2017