A remembrance
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
குரு வாழ்க! குருவே துணை!!
தத்துவ ஞானி, யோகிராஜ், விஞ்ஞான மெய்ஞ்ஞானி என்றெல்லாம் போற்றப்படுபவரான நம் குரு, அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள், எப்பொழுதுமே தன்னை உலகநலத் தொண்டராகவே அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பினார்கள். குருவின் வழியில் தொண்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நம் ஐயா, K.G. சாமி அவர்களோடு எனக்கேற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
அருட்தந்தையிடம் தீட்சை பெற்றதால் புதுப்பிறவி அடைந்ததாகவும் கோவிந்தசாமியான தான் மகரிஷியால் K.G. சாமி என அழைக்கப்பட்டதாகவும் மகிழ்ச்சியோடு ஐயா கூறுவார்கள்.
”தத்துவங்களை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து விளக்குவதில் K.G. சாமியைப்போல் விளக்க வேண்டும்”, என அருட்தந்தையால் பாராட்டப்பட்ட ஐயாவிடம் புதுவை வேதபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையில் 1991 ஆம் ஆண்டு பெற்றேன். ஐயாவின் காந்தக்குரலால் ஈர்க்கப்பட்டு அருள்நிதி V. ஏழுமலை அவர்களும் நானும் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு அவர் சொற்பொழிவைக் கேட்பதற்காகவே சென்று வருவோம். சில ஆண்டுகளுக்குப் பின்னரே விழுப்புரத்தில் ஐயாவால் மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. ஐயாவின் சொற்பொழிவைக் கேட்டு, மிகவும் சிறப்பாக இருந்தது எனக் கூறினால், அதற்கு ஐயா, நிலவின் ஒளி இரவியால் போல், தான் ஒரு ஒலிப்பெருக்கி (MIKE) என்றும் மகரிஷிதான் பேசியதாகவும் உரைப்பார்கள்.
வாழ்வின் நோக்கத்துக்கேற்றவாறு நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்க ஐயா, “ஆன்மிகத்தை முன்வைத்து லெளகிக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மன அமைதி நிலைக்கும்”, என்பார்கள்.
ஒவ்வொரு தத்துவத்துக்கும் பலப்பல உதாரணங்களைக் கூறி, ஐயா விளக்கும்போது அத்தத்துவங்கள் கேட்போர் மனதில் பசுமறத்தாணி போல் பற்றிக் கொள்ளும். அதுவே, பின்னாளில் நான் யோகாவில் M.Phil படிக்க உதவியாக அமைந்தது. தற்பொழுது என் கணவர் அருள்நிதி காத்தமுத்து அவர்களும் நானும் சென்னை ட்ரஸ்டுபுரத்தில் தவமையம் நடத்தி வருகிறோம்.
காந்தத்தின் பதிவு தத்துவத்தை விளக்க, ஐயா, தனக்கு மகரிஷியோடு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறி விளக்குவார்கள். ஒரு முறை மகரிஷி, ஐயாவின் இல்லத்துக்குச் சென்றபோது, தனிமையில் ஐயாவிடம், “வீட்டில் யாரிடமும் கோபப்படாதே. அன்பாய் இரு” என கூறிச் சென்றாராம். தன்னைப்பற்றி தன் துணைவியார் தான் மகரிஷியிடம் கூறியிருக்கக்கூடும் என எண்ணி துணைவியாரிடம் நடந்ததைக் கூறினாராம். அதற்கு அம்மா, “நான் சாமியிடம் ஏதும் கூறவில்லை”, என்றாராம். ஐயா மகரிஷியிடம் எவ்வாறு அறிந்தீர்கள் எனக் கேட்டபோது, மகரிஷி, “உன் வீட்டுச் சுவரெல்லாம் சொல்லியது” என்றாராம். அந்நிகழ்ச்சியே பதிவு தத்துவத்தை விளங்கிக் கொள்ளவும் விளைவறிந்த விழிப்பில் செயலாற்றவும் காரணமானதாக உறுவார்கள்.
பழக்கத்திலிருந்து விடுபட்டு விளக்கத்தின் வழியே வாழ, தொடர்ந்து 48 நாட்கள் மெளனம் ஏற்று வெற்றி பெற்ற தன் அனுபவத்தைக் கூறி, ஐயா, மெளனத்தின் மேண்மையை விளக்குவார்கள். “ஆன்மிகத்துறையில் முன்னேற எளிமையான மார்க்கம் குருவின் நினைவே” என்பார்கள்.
”ஒருவர் பெற்ற ஞானத்தை அளக்கும் கருவி குடும்ப அமைதியே” என்ற மகரிஷியின் உற்றுக்கேற்ப தான் வாழ்ந்து தன் வாழ்க்கைத் துணைவிக்கு ‘கண்ணம்மா’ என பெயரிட்டழைத்தார்கள். அம்மாவும், ஐயாவைப் பார்க்கவரும் அன்பர்களை அன்போடு உபசரிப்பார்கள்.
ஐயாவின் தத்துவத்தெளிவை விளக்கும் ஒரு நிகழ்ச்சி. பெண்மணி ஒருவர் மன்றத்தில் பேய்பிடித்தவர் போல் (soulaffachmeat) அமர்ந்தபடியே ஆடிக்கொண்டிருந்தார். அப்போது ஐயா, தொற்றிய ஆன்மாவிடம், ‘என்னுடன் வருகிறாயா, நீ போகவேண்டிய இடத்தைக் காட்டுகிறேன்” என்றாராம். தத்துவத்தில் தெளிவும் அதை ஆணித்தரமாக பேசுவதில் துணிவும் பெற்றிருந்த ஐயாவை ‘ஞானத்தந்தை’ என்றால் அது மிகையாகாது.
நன்றி,
வாழ்க வளமுடன்!
— அ/நி சாந்தி காத்தமுத்து கோடம்பாக்கம், சென்னை 6 May 2017