KG Sami1937 — 2006

மாமனிதர் KGS! மறக்க முடியாத கடைசி நாட்கள்

A remembrance

நான் அய்யா KG சாமி அவர்களை 1992 ஆம் ஆண்டில்தான் அறிந்து கொண்டேன். பேராசிரியர் என்ற முறையில் அகத்தாய்வுப் பயிற்சிகளுக்காக அவர் திருநெல்வேலி பேட்டை தவ மையத்திற்கு வருவார். அதன்பிறகு 1995 ஆம் ஆண்டில் இத்தவமையம் திருநெல்வேலி தாமிரபரணி மனவளக்கலை அறக்கட்டளையாக மலர்ச்சி பெற்றது. அதன்பின் அறக்கட்டளை நடத்தும் பயிற்சிகளுக்கு அய்யா KGS அவ்வப்போது வருவார் சிறப்பான முறையில் பயிற்சிகளை நடத்தி தருவார். அகத்தாய்வின் போது அவரளிக்கும் தவ விளக்கங்கள் மிகவும் மேன்மையாக இருக்கும். தீபப்பயிற்சி மற்றும் கண்ணாடிப் பயிற்சிகளை அய்யா நடத்தும் அழகே அழகு. ஒவ்வொரு பயிற்சியையும் உள்ளார்ந்து மனதைத் தொடும் வகையில் நடத்துவார். வேதாத்திரியத் தத்துவத்தில் துறை போனவர்; கரைகண்டவர். ஆன்மீக அன்பர்கள் அவரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வர்.

அய்யா அவர்கள் பயிற்சிகளைக் குறித்த நேரத்தில் தொடங்கிக் குறித்த நேரத்தில் முடிப்பார். தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே சமயம் வேதாத்தியத்தில் இருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் விலகிச் செல்லாமல் பேச்சை வரையறுத்துக் கொள்வார். பயிற்சிக்கு வரும்போதெல்லாம் எங்கள் இல்லத்தில்தான் தங்கிச் செல்வார்.

”தென் தமிழ்நாட்டில்தான் மனவளக்கலை சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையான மனவளக்கலைஞர்கள் இப்பகுதியில் தான் மிகவும் அதிகமாய் இருக்கின்றனர்,” என்று KGS அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.

அய்யா அவர்கள் மனவளக்கலை implementation course என்று 6 நாட்கள் கொண்ட பயிற்சியைத் தாமே நேரடியாக அன்பர்களுக்கு ஆங்காங்கே தரவேண்டும் என விழைந்தார். அதற்காக 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் நாள்கள் குறித்துத்தரும்படி திருநெல்வேலி மன்றத்தைக் கேட்டிருந்தார். ஆனால் ஏனோ அந்தத் திட்டம் கைவிடப் பெற்றுப் பின்னர் அடுத்த ஆண்டு மே வாக்கில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

ஆகவே 2005 மே முதல் நாளில் அப்பயிற்சியைத் தொடங்கித் தொடர்ந்து 4, 5 நாட்கள் KGS தங்கி நடத்தித் தர இசைந்தார். இதற்கென 2 நாட்கள் முன்னரே அதாவது ஏப்ரல் 29 அன்றே திருநெல்வேலிக்கு அய்யா வந்துவிட்டார். ’Mushroom பிரியாணி’ வேண்டும் என்று என் மனைவியிடம் கேட்டார். பயணக்களைப்பு தீர சற்றே படுத்தார். கொஞ்ச நேரம் கழித்து அவர் படுத்திருந்த அறைக்குள்ளே போன என் மனைவி பதற்றத்துடன் ஓடி வந்தார். “அய்யா ஏதோ ஒரு மாதிரி இருக்கிறார் வந்து பாருங்கள்” என்று என்னிடம் கூறினார். உடனே நான் உள்ளே ஓடினேன். என்னைப் பார்த்ததும் எழ நினைத்த, KGS முடியாமல் கட்டிலிலேயே சாய்ந்தார். ‘ஒன்னுமில்லை களைப்புத்தான். சரியாயிடும்,’ என்றார். ஆனால் குரலில் தெளிவில்லை. நான் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துப் போனேன். ஒரு ஊசி போட்டனர். சற்றே தெளிவுடன் எழுந்தார். “இப்போ தெளிவாக ஆகி விட்டேன்,” என்றார்.

வீடு வந்து சேர்ந்தோம். இரவு மணி 12 ‘இட்லி வேணும்’ என்றார். மிகுந்த பசியாய் இருந்திருக்க வேண்டும். 10 நிமிடத்தில் இட்லி கொடுத்து சாப்பிடச் செய்தோம்.

விடிந்தது காலை 5 மணி, அய்யாவுடன் இருந்த அன்பர்கள், ‘அய்யா ஒரு மாதிரி இருக்கிறார் என்று என்னிடம் கூறினர்.

உடனே Hospital க்கு எடுத்துச் சென்று MRI Scan செய்தோம். மூளையில் கட்டியிருப்பது தெரிந்தது. செய்தி கேள்விப்பட்ட உலகசுமுதாய சேவா சங்கத் தலைவர் SKM அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். செலவைத் தாமே ஏற்பதாகக் கூறினார்.

இடையில் மதிப்பிற்குரிய T.K. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னார். அடிக்கடி ஈரோட்டில் KGS கீழே விழுந்திருக்கிறார். ஆனால் சிகிச்சை ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை,” என்றார். KGS உடல்நிலையில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டது. நாங்கள் மே முதல் நாள் முதல் நடக்கவிருந்த பயிற்சியை முற்றிலும் ரத்து செய்து விட்டோம். அன்பர்களின் கட்டணத்தையும் திரும்பக் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டோம்.

மே இரண்டாம் நாள் காலை 6 மணி இருக்கும், நான் அய்யா எழக்கூட இயலாமல் படுத்திருந்த இடத்திற்குச் சென்றேன். உடன் ஆன்மிக அன்பர்கள், பேராசிரியை சாரதாமணி ஆகியோர் இருந்தனர். அய்யா அவர்கள் ”உலக சமுதாய சேவா சங்கத்தின் செயல்பாடுகளில் சில தவறுகள்…..” என்று ஏதோ சொல்ல விரும்பினார்கள். அய்யாவின் உடல்நிலை சரியில்லை என்பதால் ‘பேசவேண்டாம் என்று நாங்கள் அவரை அன்புடன் கேட்டுக் கொண்டோம்’.

காலை மணி 7 மணி ஆகிவிட்டது. ‘அய்யா நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரேன்’ என்றேன் பணிவுடன். “போகாதே.. வேண்டாம் போ…கா…தே” என்று சொல்லியவாறே என் கையைப் பிடித்து இழுத்தார். அவ்வளவுதான். அப்புறம் ஒன்றுமேயில்லை.

ஆ… அந்த ஞானச்சூரியனின் உடல் என்மேல் சரிந்தது. அவ்வளவு தான்.

KGS பயணப்பட்டுவிட்டார். தன் குருவாகிய சுவாமிஜியின் தடங்களைப் பின் தொடர்ந்து கால எல்லைகளைக் கடந்து தம் பயணத்தைத் தொடங்கிவிட்டார். அருள்தந்தை வேதாத்திரி மகரிஷியால் ‘அன்புமகனே’ என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்டவர் தன் தந்தையின் இடம்தேடிப் புறப்பட்டுவிட்டார். எங்கள் நெஞ்சம் கனத்தது. மனம் அழுதது. நெல்லைத் தாமிரபரணி அறக்கட்டளையினர் மனவளக்கலை அன்பர்கள் திரளாக வந்திருந்து அய்யாவின் உடலுக்கு மலர் அஞ்சலி செய்தனர். மதிப்பிற்குரிய SKM அவர்கள் தொலைபேசி செய்து அய்யா உடலை ஈரோடு மன்றத்துக்கு எடுத்துவரச் சொன்னார்கள்.

ஒரு வேனில் அய்யாவின் உடல் அலங்கரிக்கப்பட்டு ஈரோட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழியில் கோவில்பட்டி, சாத்தூர், மதுரை, திண்டுக்கல் போன்ற ஊர்களில் முக்கியச் சாலைகளில் மனவளக்கலை அன்பர்கள் ஆங்காங்கே திரண்டிருந்து அய்யாவிற்கு இறுதி மரியாதை செய்தனர்.

SKM அவர்கள் தம் சொந்த செலவில் ஈரோட்டில் அய்யா KGS-ன் உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.

KGS – இன் மகன்கள் திரு கனக திருமேனி, அருண், இனியன், ஞானகுரு ஆகியோரும் ஈரோடு வந்துவிட்டனர். ஈரோட்டில் மிகத்திரளான அன்பர்கள் வந்திருந்து அய்யாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஈரோட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சுவாமிஜி அவர்களுக்கு என்ன மரியாதை செய்தார்களோ அதேபோல் KGS அவர்களுக்கும் சிறப்பான முறையில் இறுதி மரியாதைகள் செய்து அடக்கம் செய்தனர்.

பிறகுதான் நான் கேள்விப்பட்டேன். KGS அவர்கள் திருநெல்வேலியில் தான் தன் இறுதி மூச்சு நிற்க வேண்டும் என்று விரும்பினார். அங்குதான் தான் சமாதியாக வேண்டும் என்றும் அழுத்தமாக நினத்தார். இவற்றையெல்லாம் அவருக்கு நெருக்கமாக இருந்து ஈரோட்டில் அணுக்கத் தொண்டாற்றிய அன்பர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். அதற்காகவே அவர் பயிற்சியைத் திருநெல்வேலியில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

KGS திருநெல்வேலிக்கு வந்த உடன் சென்ற இடம் ஒரு முஸ்லிம் தர்கா அங்கிருந்த ஓர் இசுலாமியப் பெரியவர் இவருக்கு ஒரு நாற்காலி போட்டுக் கொஞ்ச நேரம் பேசியுள்ளார். அப்போது அவரிடம் KGS சொன்ன வார்த்தைகள் இவைதான் “அதோ தெரிகிறதே அறிவுத்திருக்கோயில், அந்தத் தாத்தா ஏற்கனவே போய் சேர்ந்துட்டார், அடுத்து இவன் போகப் போகிறான்”.

ஆக தன் இறுதி நாளின் வரவை முன்னரே உணர்ந்து அதற்காக காத்திருந்திருக்கிறார். “அறிவுடையார் ஆவதறிவார்,” என்ற குறளின் கருத்துக்கு இலக்கியமாய் ஆகிவிட்டார்.

எந்த ஒரு மகானும் மரணத் தருவாயில் தன் சீடர்களையும் உடன் அழைத்துச் செல்வார்களாம். KGS அவர்களும் சுவாமிஜி சமாதியான 35 நாட்களுக்குள் தன் ஞானகுருவே ஐக்கியமாகிவிட்டார்.

இனியொரு வேதாத்திரி சுவாமிஜி பிறக்கப் போவதில்லை. அவருக்கு உள்ளார்ந்த உணமைச்சீடனாய் KG சாமி என்ற தயாநிதி தோன்றப் போவதுமில்லை. தாயினும் சாலப் பரிந்து மனவளக்கலை தவமையங்களுக்கும் மன்றங்களுக்கும் ஓடி ஓடிப் போய் மகரிஷியின் தத்துவத்தை விளக்கிச்சொல்ல இனி யாருள்ளார்?

மறக்க முடியாத மனவளக்கலை மாமனிதர் KGS என்றால் அது மிகையன்று.

— அ/நி P.R. சந்திரன் திருநெல்வேலி தாமிரபரணி 6 May 2017

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி