A remembrance
எளியவனின் வாழ்க்கையில் பொருள் பொதிந்த பயன்மிகுந்த நாட்கள் எவையேனும் உண்டா என்று கேட்டால் ஆம் உண்டு அவையெல்லாம் என் ஆன்மீக ஆசான் KG சாமி அவர்களிடம் நான் பாடம் கேட்ட நாட்கள் என்று என்னிடமிருந்து பதில் வரும். யான் இளமையின் துள்ளலில், இலக்கிய ஈடுபாட்டில் என்போக்கில் திரிந்து கொண்டிருந்தேன் என்னைத் தன் காந்தவிசைப் பேச்சால், ’கணீர்’ என்ற குரலால் கட்டிப்போட்டு என்னை எனக்கே உணர்த்தியவர் KG சாமி அய்யா. நான் 1986 வாக்கில் பல்கலைக் கழகத்தேர்விற்காக புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள அரசு கல்லூரிக்குத் தினமும் போல் வந்துகொண்டு இருந்தேன். ஒருநாள் காலை 9 மணி இருக்கும். இலாசுப்பேட்டை மேட்டுப் பகுதியில் இருந்து ஒரு சைக்கிள் வெகுவேகமாக சரிவில் வந்து கொண்டிருந்தது. சைக்கிளில் இரண்டு சிறுவர்கள், ஒரு பெரியவர். நான் தேர்விற்குச் செல்லும் கவனத்தில் ஏதோ அலட்சியமாக என் சிறு ‘’லூனா’ மோட்டார் வாகனத்தைச் சைக்கிளின் குறுக்கே பின்புறமாக செலுத்தி விட்டேன். அவ்வளவுதான் சரிவில் வேகமாக வந்து கொண்டிருந்த சைக்கிள் பிரேக் கட்டைகள் திசைக்கொன்றாய்ப் போய் விழுந்தன; சைக்கிள் விழுந்தது. சைக்கிளில் வந்த உயரமான பெரியவர் தன் கால்களால் தரையை ஊன்றிக் கொண்டு, கீழே விழுந்த இரண்டு சிறுவர்களை மெல்ல எழுப்பி அவர்கள் முட்டிகளில் பட்டிருந்த மண்ணைத் தட்டிவிட்டார். ‘என்னப்பா, ஏன் பார்த்து வருவது தானே’ என்று என்னைக் கேட்டார் பெரியவர். நான் அவரைப் பய பக்தியுடன் பார்த்தேன்.
’ஐயா நான் எம்.ஏ தேர்வுக்குப் போகிறேன்’ என்றேன். அவ்வளவுதான், “வாழ்க வளமுடன்” “அப்போ நீங்க போங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்னபடி அப்பெரியவர் அருகில் இருந்த ‘சைக்கிள் ஸ்டோரில்’ தன் வண்டியைக் கொடுத்துவிட்டுப் பையன்களோடு கிளம்பிவிட்டார். அந்தப் பையன்கள் அவருடைய பிள்ளைகள், அவர்கள் பள்ளிக்குப் போக வேண்டும். அதன் பின் அவர் அலுவலகம் செல்ல வேண்டும். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சைக்கிளின் ரிப்பேர் செலவை நான் ஏற்கவியலும். ஆனால் எதையுமே என்னிடம் எதிர்பாராமல் பெரியவர் தன் பையன்களோடு புறப்பட்டு விட்டார். எனக்கு மிகுந்த திகைப்பு. என்னைக் குறைந்தது நாலு வார்த்தைகள் வசைபாடி இருக்க வேண்டும்? ஆனால் என்ன பெருந்தன்மை. இந்தப் பெரியவர் யார்? ஏன் இந்த நிகழ்வு? எதுவும் சிந்திக்க முடியாமல் தேர்வு மையம் நோக்கி நான் சென்றேன். ஒருவழியாக காலையில் ஒரு தேர்வு தாள், மதியம் நான் சரியாகப் படிக்காததால் ‘அரியர்’ வைத்திருந்த ’பாடத்திற்காக’ தேர்வு என்று இரண்டு தேர்வுகளையும் முடித்து விட்டேன். மாலை 6 மணிக்குத் திரும்பி வரும்போது காலையில் சைக்கிளை மோதிய அதே இடத்திற்கு வந்து நின்றேன். அருகில் இருந்த ‘சைக்கிள் ஸ்டோரில்’ விசாரித்தேன். அந்தப் பெரியவர் காசு கொடுத்து வண்டியைச் சரி செய்து கொண்டு போய்விட்டதாக பதில் வந்தது. எனக்குக் கொஞ்சம் வருத்தம். நான் மீண்டும் கேட்டேன் “நான் எவ்வளவு காசு கொடுக்க வேண்டும்,” என்று “அதெல்லாம் வேண்டாம் அய்யாவே கொடுத்துவிட்டார்” என்று பதில் வந்தது. என்னைக் குற்ற உணர்வு வாட்டியது. அடுத்த நாள் எழுத வேண்டிய தேர்வு என்னை இழுக்க மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அத்துடன் அந்த நிகழ்வு என் நினைவில் அடிக்கடி வந்து வந்து போனது. ஆனால் அந்தப் பெரியவரை நான் பிறகு பார்க்க முடியவில்லை இன்னொருமுறை அவரை பார்க்க முடியாதா ஏதோ என்க்குள் ஓர் ஏக்கம் அந்தப் பெரியவரின் காந்தக்கண்கள் என்னைக் கட்டிப் போட்டுவிட்டன.
ஓரிரண்டு ஆண்டுகள் கூட ஓடிவிட்டன. என் அம்மாவிற்குத் திடீரென்று கடலூருக்கு அருகாமையில் உள்ள குருமாம்பாக்கம் பள்ளிக்கு இட மாற்றம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட நாற்பதாண்டு ஆசிரியர் பணியை முடித்தும் நிலையில் அவருக்கு இந்த இடமாற்றம் நிகழ்ந்தது. அதன்பிறகு என் தாயாருடைய வயது, உடல் நிலை, பணிமூப்பு ஆகியவற்றை கல்வித்துறை உயர் அலுவலர்களிடம் எடுத்துச் சொல்லித் திரும்ப நகரப்பகுதிக்கே மாற்றம் கிடைக்க ஏற்பாடு செய்தோம். அதற்கான ஆணையைப் பெற நான் புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் சென்றேன். அங்கு நேரே என்னைக் கண்காணிப்பாளர் அறைக்குச் செல்லுமாறு அங்கிருந்தவர்கள் கூறினர். நானும் கண்காணிப்பாள் நிலை II என்ற பலகை தொடங்கிக் கொண்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்க்க விரைந்தேன். ‘வாழ்க வளமுடன்’ என்று கணீர்க் குரலுடன், வரவேற்றார் ‘மீசையும் தாடியும்’ வைதிருந்த ஒரு பெரியவர்.
என்னுள் நினைவலைகள் முன்னோக்கி நகர ஆரம்பித்தன. இந்தப் பெரியவரை நாம் எங்கேயோ பார்த்திருக்கிறோமே…. ஆம் அவரே தான். நான் அன்று என் ‘லூனா’ வண்டியால் மோதிவிட்டேனே, சைக்கிளோடு கீழே விழுந்த அந்தப் பெரியவர்… அவரேதான்.
’அய்யா உங்களை எங்கோ… பார்த்திருகிறேன்,” என்றேன் எதையுமே வெளிக்காட்டாமல், ‘நானுந்தான் தம்பி’ என்றார் பெரியவர், கொஞ்சம் ஆராய்ச்சிப் பார்வையோடு என்னை முழுவதும் அளந்தார். சரி என்ன விஷயம்?’ என்று கேட்டார். உடனே சுயகாரியப் புலியான நான் நிகழ்காலப் பணிக்கு வந்துவிட்டேன். பழைய விஷயத்தை அவருக்கு நினவுபடுத்தவில்லை. ‘ஒன்றுமில்லை அய்யா! ஒரு டிரான்ஸ்பர் விஷயமா வந்தேன்’, என்றேன்.
’எந்த கேடர்’ என்றார்.
’’பிரைமரி எச். எம். என் அம்மாவின் கிரான்ஸ்பர் ஆர்டர் அதுக்காகத்தான்! என்றேன்.
‘ஓ அப்படின்னா காப்பி இருக்குமே என்றார்.
”இல்லைங்க அய்யா ஆர்டர் டைரக்டர் கையெழுத்து ஆயிடுச்சி, காப்பி எடுத்து அதை நீங்கதான் வெளியே கொண்டு வரணும்” என்றேன், தாடி வைத்த பெரியவர் யோசித்தார். தாடியை வருடிக்கொண்டே, “இல்லை தம்பி இன்னைக்கு வெள்ளிக் கிழமை சாயங்காலம் 4 மணி ஆயிடுச்சி நாளை சனிக்கிழமை லீவு நாள். இப்போ ஸ்டென்சில் போட நேரமில்லை அப்புறம் திங்கள் கிழமைதான் முடியும்போல இருக்கே,” என்றார் நான் கொஞ்சம் அழுதேவிட்டேன். இல்லைங்க அய்யா இன்றைக்கு ஆர்டர் வராவிட்டால் அப்புறம் திங்கள் கிழமை எங்க அம்மாவால பணியில் சேர முடியாது” என்று திரும்பி மன்றாடினேன். தொடர்ந்து என் அம்மாவின் உடல்நலம், பணி மூப்பு எல்லாவற்றையும் சொல்லிக் கேட்ட அவர் ‘பெயர் என்ன’ என்று கேட்டு நிறுத்தினார்.
’தனபாஞ்சாலி சார்’ என்று பதிவுப் பெயரை முழுமையாகச் சொல்லவும் பெரியவர் முகம் மலர்ந்தது. அம்மா கூடப் பிறந்தவர்கள் யாராவது உண்டா? என்று விசாரித்தார். நானும் அம்மாவின் உடன் பிறந்தோர் பெயர்களை எல்லாம் ஒவ்வொன்றாய்ச் சொன்னேன். பெரியவருக்கு நான் யாரென்று தெளிவாகப் புரிந்து விட்டது.
பெரியவர் உற்சாகத்துடன் எழுந்தார். மேல்மாடியில் இயக்குநர் கையெழுத்திட்டுச் சென்றிருந்த அரசாணையின் நகல்களை எடுக்க ஆணை செய்தார். ஐந்து மணிக்குள் கல்வித்துறை அலுவலகம் விட்டு எல்லாப் பணிமாற்றக் கடிதங்களும் பறந்துவிட்டன ‘order issued’. கைகெட்டியது வாய்க்கெட்டாது போலிருந்த ஆணையை உடனே ‘stecil’ எடுக்க வைத்து பல படிகளாக்கி ஓர் இடமாற்ற அரசாணையை அலுவலகத்தின் எல்லா formalities ஐயும் முடித்து அதற்கு உயிரூட்டினார் பெரியவர். நான் என் அம்மாவின் இடமாற்ற ஆணையைக் கையில் பெருமகிழ்வுடன் பெற்றேன். இடமாற்ற ஆணையின் நகலை முறையாக என் கையில் கொடுத்த அவர் சொன்ன செய்தி இதுதான்.
”தம்பீ உன் அம்மா என்னுடன் படித்தவர், உன் மாமாதான் என் முதல் தலைமை ஆசிரியர். நான் அவரிடம் தான் முதன்முதல் ஆசிரியப் பணியில் சேர்ந்தேன்;” என்றார் பெரியவர். நான் மீண்டும் கண்காணிப்பாளர் நிலை – II என்ற பலகையின் கீழே பெயரை பார்த்தேன். ‘கோவிந்தசாமி’ என்று இருந்து.
உடனே “என் பெயர் கோவிந்தசாமி. சுருக்கமாக K. G. சாமின்னு சொல்வாங்க என்று தன் அறிமுகத்துக்கு வந்தார்.
அய்யா குறிப்பிட்ட என் மாமா, அதாவது என் தாயாரின் மூத்த அண்ணா பெயர் தனபூபதி, அவர் அந்த அந்தக்காலத்துத் தலைமை ஆசிரியர்.
அதன்பிறகு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்குப் பறந்தோடினேன். திங்கள் கிழமை என் அம்மா முத்தியால் பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்; பின் ஓய்வு பெறும்வரை அங்கேயே பணி செய்தார்.
அதன் பிறகு ஒரு நாள்நிதானமாக அந்தப் பெரியவருக்குநன்றி சொல்ல மீண்டும் கல்வித்துறை அலுவலகத்திற்குச் சென்றேன். ’வாழ்க வளமுடன்’ என்னும் வழக்கமான வாழ்த்துக்களுடன் வரவேற்றார் பெரியவர். பேச்சோடு பேச்சாக நான் முன்பு என் ‘லூனா’ மொபெட்டால் அவரை, அவர் பையன்களைக் கீழே தள்ளிய நிகழ்ச்சியைக் கூறி மன்னிப்புக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே மறுபடியும் ’வாழ்க வளமுடன்’ என்று சொன்னார். “’அய்யா! அது என்ன? அவ்வப்போது வாழ்க வளமுடன்’ என்று அடிக்கடி சொல்கிறீர்களே!..” என்றிழுத்தேன்.
’ஓ அதுவா! வாங்களேன் மனவளக்கலைப் பயிற்சிக்கு’ என்றார்.’
”என் முகவரியை அறிந்து கொண்ட அவர் உங்கள் வீட்டுத் தெருவில்தான் தம்பி மனவளக்கலை மன்றம் உள்ளது வாங்க குப்புசாமி போஸ்ட் மாஸ்டர் வீட்டுக்கு,” என்றார்.
அதன்பிறகும் கொஞ்ச நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் மாலை எங்கள் திருமுடி நகர் முதல் தெரு சந்திப்பிலேயே அய்யா தன் ‘டிவிஎஸ்’ வண்டியில் வந்து நின்றார். நானும் அவரை எதிர் கொண்டேன். ஏதோ பயிற்சிகள் தொடர்ந்து இரு நாட்கள் அங்கே உள்ள மன்றத்தில் நடப்பதாகச் சொல்லி என்னையும் ‘நேரமிருந்தால் வாங்க’ என்றபடி சென்று விட்டார்.
அய்யா சொன்னாரே என்பதற்காக ஓரிரு வாரங்கள் மாலை நேரங்களில் நான் சென்று அமர்ந்தேன். அய்யா ஏதோ ‘தவம்’ என்றார். ஒரு இருபது நிமிடம் யாருமே ஏதும் பேசவே இல்லை. ஒரே அமைதி, பிறகு மவுனம் கலைத்துப் பெரியவர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் கூறிவிட்டுப் பேசத் தொடங்கினார். பேச்சு நன்றாக இருந்தது. முடிந்ததும் அனைவரும் கலைந்து சென்றார்கள். நானும் வீட்டிற்கு வந்து விட்டேன்.
பெரியவரின் தத்துவ விளக்கப் பேச்சு என்னை மாற்றியது. நானும் இறைநிலை பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன். அவரிடம் மீண்டும் சென்றேன். அப்போது எனக்குத் திருமணம் ஆகவில்லை. அரசுப்பணியில் ஆசிரியராக அமர்ந்த நேரம். “தம்பீ! இது உனக்குச் சரியான தருணம் இறைநிலையை உணர்ந்து கொள்ள…” என்றார்.
அதற்கடுத்து அய்யாவின் அருளாசிகளினால், ‘தவச்செல்வன்’ ஆனேன். அன்று முதல் மன்றத்து நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
இடையில் என் ‘திருமண நிகழ்வு’ குறுக்கிட்டது. கொஞ்ச நாட்கள் பெரியவரைப் பார்க்க முடியவில்லை. திருமண நிச்சயதார்த்தம் புதுச்சேரி வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் 1989 தொடக்கத்தில் நடந்தது. அய்யாவை அழைத்தேன். நேரில் வந்திருந்து வாழ்த்தினார். ஆனால் ‘திருமணம்’ நடைபெற்ற நாளில் அவரால் வர முடியவில்லை. வெளியூர் நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார். ஆனால் முன்னதாக என்னை வரச்சொல்லி வாழ்த்துக் கூறினார்.
என் ஆன்மீக வாழ்வின் புதிய அத்தியாயம் என் திருமணத்திற்குப் பிறகே எழுதப்பட்டது. அதன் பிறகு அதிக ஈடுபாட்டுடன் மனவளக்கலைப் பயிற்சிகளில் கலந்து கொண்டேன். அதுவும் அய்யா தலைமையில் நடைபெற்ற அநேக அகத்தாய்வுப் பயிற்சிகளில் பங்கேற்று அவர் கரங்களால் சான்றிதழ் பெற்றிருக்கிறேன். கேள்விக் கணைகளை நான் அறியாமையால் வீச, ஒரு புன்னகையுடன் அய்யா அவற்றிற்கு வெகு இலாவகமாக பதில்களை அளிக்க ‘விரு விரு’ வென்று தத்துவ ஞான விளக்கப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் என் அகவாழ்வில் பெரும்புயல் வீசிக் கொண்டிருந்த நேரம் அது. உடனுக்குடன் எனக்கு விளக்கம் கொடுத்து, வேதாத்திரியத்தை முழுவதுமாக உணரவைத்தார் அய்யா.
தவச்செல்வனாக ஆரம்பித்த என்னை அருட்செல்வனாக்கித் துரியாதீதப் பயிற்சியில் முழு ஈடுபாடுடையவனாக்கினார். ”இன்றுமுதல் உன்னை என் நிலைக்கு உயர்த்திவிட்டேன். இனி நீயும் நானும் சமம்.” என்று சொல்லு இனிப்பு கொடுத்து ‘அருட்செல்வர் திருவளவன்’ வாழ்க வளமுடன் என்று பலமுறை வாழ்த்தினார். அவையில் இருந்த அனைவரும் வாழ்த்தினர். அது நடந்தது 1990 ஆம் ஆண்டில். இடையிடையே காயகல்ப பயிற்சிகளும், அகத்தாய்வுப் பயிற்சிகளும் இடைவிடாமல் பெற்றேன். பிறகு ஆழியார் சென்று ‘அருள் நிதியர்’ பயிற்சி பெற விழைந்தேன். இப்படி என் மிகப்பெரிய பேறு நான் மனவளக்கலையில் தொடக்கம் முதல் ஆசிரியர் பயிற்சி வரை அய்யா KG சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படியே நடைபெற்றது. அவர்தான் என் புருவமத்தியில் தன் பூ விரலால் தொட்டு எனக்கு ஆக்கினை பயிற்சி அளித்து தவச்செல்வன் ஆக்கினார். பிறகு ‘சாந்தி தவம்’ என்கிற இறங்குபடி தீட்சையும் கொடுத்தார். பின்னர் தன் காந்தப் பார்வையால் நயன தீட்சையும் அளித்தார். தன் ஆற்றலால் என் உயிராற்றலை எழுப்பித் துரியம் மற்றும் துரியாதீத தவப்பயிற்சிகளையும் அளித்த ஞான வள்ளல் K.G. சாமி ஆவார்.
நான் என் தந்தையாரும் இணைந்து அய்யா அவர்களிடம் பெற்ற முதல் பயிற்சி காயகல்ப பயிற்சி ஆகும். அதற்கான சான்றிதழை இன்னமும் நான் வைத்துள்ளேன். சான்றிதழில் அவர் கையொப்பம் உள்ளது. பயிற்சி பெற்ற நான் 15.1.1990.
1992 வாக்கில் அருள்தந்தை வேதாத்திரி சுவாமிகளின் தலைமையில் ஆழியாரில் நடைபெற்ற ‘அருள்நிதியர்’ பயிற்சியில் கலந்து கொண்டேன். புதுச்சேரி அருள்நிதி மூர்த்தி அவர்களும் என்னுடன் ஆழியாரில் தங்கியிருந்து அப்பயிற்சியை எடுத்துக் கொண்டார். எப்போதும் டிசம்பர் மாத முதல் இருவாரங்களில் அங்கே பயிற்சி நடைபெறும். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான அன்பர்கள் வந்து தங்கியிருந்து ஆண்டுதோறும் அந்த அருள்நிதியர் பயிற்சியை மகரிஷிகளிடமிருந்து கற்றுச் செல்வர். அவர் அருள்நிறைந்த வாழ்த்துக்களைப் பெற்றுச் செல்வர்.
யான் ‘அருள்நிதி’ பட்டம் பெற்றவுடன் திருமுடிநகர் மனவளக்கலை மன்றத் தலைவர் பெரியவர் குப்புசாமி அவர்களுடன் திருவாரூரில் நடைபெற்ற பொறுப்பாசிரியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டேன். சுவாமிஜி அவர்கள் நேரில் எல்லா ஊர்களிலும் இருந்து வந்த மன்றப் பொறுப்பாளர்களுக்கு இருஆள் பயிற்சி அளித்தார். அய்யா K. G. சாமி அவர்கள் அந்த மாநாட்டில் தவ விளக்கம் மற்றும் தத்துவ விளக்கப் பயிற்சிகளை அளித்தார்.
’அருள்நிதி’ ஆனபிறகும் தொடர்ந்து மன்றத்தின் செயல்பாடுகளில் கலந்து கொண்டேன். அய்யா தாமிருந்த இலாசுப்பேட்டை எல்-3 குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 7 மணி அளவில் தவமும் தத்துவ விளக்கப் பயிற்சியும் அளித்து வந்தார். நானும் வாரந்தவறாமல் அவர் வீட்டிற்கு என் மனைவியோடு சென்று கூட்டுத்தவத்தில் கலந்து கொள்வேன். அவ்வப்போது அவரது கருத்தோடு நான் முரன்பட்டு நின்றபோதெல்லாம் அவர் என்னைக் கைவிடாமல் கை கொடுத்து எழுந்து நிற்க வைத்தவர். எனக்கு ஞானத் தெளிவைக் கொடுத்தவர். பலரிருக்கும் அவையிலும் தனித்தனி அன்பர்களின் சந்தேகங்களுக்கும் அவர் உரையில் நல்ல விடை கிடைக்கும்.
அய்யா அவர்கள் ஈரோடு சென்று அங்கேயே தங்கி அருட் தொண்டாற்றி வந்தார்கள் அப்போதெல்லாம் என்னை மிகவும் ‘பிரிவுத்துயர்’ வாட்டி எடுக்கும். 1999 ஆம் ஆண்டு, திடீரென்று அய்யாவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு உடனே ஈரோட்டிற்குக் கிளம்பிவிட்டேன். இரவு 10 மணிக்குப் பேருந்தில் பாண்டியிலிருந்து கிளம்பினேன். மறுநாள் காலை 3 மணிக்கெல்லாம் ஈரோடு சென்று சேர்ந்துவிட்டது. அய்யாவிடம் தொலைபேசியில் பேசினேன். பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவரே TVS மொபெட்டில் வந்து என்னை அவரது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஈரோடு, பெரியார் நகரில் அப்போது அவர் குடியிருந்தார். வீட்டிற்குள் சென்றதும் அவர் செய்து கொண்டிருக்கும் அலுவலகப் பணிகள் பற்றிப் பேசினார். ‘அன்பொளி’ மற்றும் ‘மனவளக்கலைஞன்’ இதழ்களின் ஆக்கப் பணிகள் அய்யாவின் உழைப்பால் எவ்வாறு சிறப்பாக நடந்தேறி வருகின்றன என்பதை உணர்ந்தேன். காலையில் 6 மணிக்கெல்லாம் அம்மா அவர்கள் பெரிய சைஸ் இட்டலி நான்கைந்து சுட்டு எனக்குச் சாப்பிடக் கொடுத்தார்கள். அந்தத் தாயுள்ளம் அன்புள்ளம், உயர்ந்த் உள்ளம், அம்மாவின் சிரிப்பு கள்ளங்கபடமற்றது. ஒரு பெரிய ஞானத்தந்தையின் வாழ்க்கைத் துணை என்ற கர்வமே இல்லாத குழந்தைதனம். எனக்கு அய்யாவை விட அம்மாவையே ரொம்பப் பிடிக்கும்.
1999 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் என் தந்தையின் மறைவிற்குப் பின்னர் நான் முழுக்க முழுக்க KGS அவர்களின் வழிகாட்டுதல்படி வாழ்ந்தேன்.
புதுச்சேரி மன்றத்தில் சிறப்புப் பயிற்சிகள், தவவிளக்கம் மற்றும் தத்துவ விளக்கப் பயிற்சிகள் அளிக்க அய்யா வருவார். அச்சமயங்களில் என் குடும்பத்துடன் சென்று அவரருகில் அமர்ந்து அவர் உரையைக் கேட்டு மகிழ்வேன். பிரிவுத்துயர் நீங்கி முழுமனமகிழ்ச்சி கொள்வேன்.
என் இல்லத்தில் KGS பெயர் நிலையான நீங்காத இடம் பெற்றது.
என் மனைவி அறிவாள், அகத்தாய்வுப் பயிற்சிகள் பல பெற்றிருக்கிறாள்.
என் மகள் அறிவாள், என் மகனும் அவர் வாழ்த்துக்களைப் பெற்றுள்ளான்
என் தங்கை அறிவாள், அவளுக்காக வீட்டில் தனாகர்ஷண சங்கற்பம் செய்துள்ளார். என் தந்தையும் உடன் இருந்துள்ளார்.
இப்படி என் குடும்பத்தின் ஞான குருவாய், தனிப்பட்ட முறையில் என் ஞானத்தந்தயால் என் ஊனில் உயிரில் கலந்து நிறைந்துள்ளவர் KGS.
— அ/நி. திருவளவன் புதுச்சேரி 6 May 2017