A remembrance
அய்யா KGS அவர்களோடு 1996 ஆம் ஆண்டிலிருந்து எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இங்கு சைதையில் மனவளக்கலை அறக்கட்டளை 1996 இல் நிறுவப்பட்டது. முதன் முதல் காயகல்ப பயிற்சியை மாலையில் நடத்திக் கொடுத்தவர் KGS. முதல் பயிற்சியில் 250 அன்பர்கள் பங்கெடுத்துக் கொண்டனர் அன்றுமுதல் தொடர்ந்து சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை அமர்வாகவே சென்னையில் காயகல்ப பயிற்சி நடைபெறுகிறது. அன்பர்களும் திரளாக வந்திருந்து கலந்து கொண்டுப் பயனடைகின்றனர்.
அய்யா அவர்கள் 1997 இல் அரக்கோணத்தில் தவ விளக்கப்பயிற்சி நடத்தினர் அப்பயிற்சியில் நான் கலந்து கொண்டேன். அய்யா KGS அளித்த விளக்கம் அனைவரையும் ஈர்த்தது. அதன் பின் ஆழியாரில் பிரும்ம ஞானப் பயிற்சி நடைபெற்றது. அப்போது மகரிஷி அமர்ந்திருக்க, அய்யா KGS அவர்கள் பல மணி நேரங்கள் மாற்றி மாற்றி அளித்த பயிற்சி என் வாழ்வில் மறக்க முடியாததாகும். உடன் பேராசிரியர் சுப்பையா பிள்ளை, மாரியம்மா ரோ. சுப்பு ஆகியோரும் இருந்தனர்.
சென்னையில் 1997-98 இல் சிறப்பு தவ தத்துவ விளக்கப் பயிற்சியும் KGS ஆல் நடத்தப் பெற்றது. இப்படியாக அவராலே ஒரு நல்ல மனவளக்கலைஞனாக உருவானேன். அடுத்து என் மகள்களுக்கும் தீட்சை, தத்துவ விளக்கங்கள், துரியம் துரியாதீதம் மற்றும் அகத்தாய்வுப் பயிற்சிகளை அளித்து மிகவும் மேண்மையான நிலைக்கு உயர்த்தினார். என் மகள்கள் எல்லோரும் அய்யாவைக் ‘காப்புக்கயிறு தாத்தா’ என்றே அழைப்பர். ஏனென்றால் பயிற்சிக்கு வரும் போதெல்லாம் எங்களுக்கும் எங்கள் உறவினர்களுக்கும் அருட்காப்பு போட்டுக் கைகளில் கயிறு கட்டிவிடுவார். என் பெரிய மகள் அதிக சளி பிடித்து அவதிப்பட்டாள். அப்போது ஒரு எளிய வைத்திய முறையால் அவளுடைய நாட்பட்ட ‘சளியை’ப் போக்கினார். இப்போது என் மகள்களெல்லாம் திருமணமாகி நல்ல நிலையில் உள்ளனர்.
எங்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாளின்போதெல்லாம் KGS அவர்கள் தன் புகைப்படம் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைப்பார். நாங்கள் அதை மிகுந்த விருப்பத்துடன் வாங்கி வைத்துள்ளோம். அந்தப் புகைப்படத்தில் அய்யாவுடன் அம்மா கண்ணம்மா அவர்களும் இருப்பார்.
2004 இல் சைதாப்பேட்டையில், காரணீசுவரர் கோயில் பக்கம் ஜோன்ஸ் டோட்டில் எங்கள் சொந்த இடத்தில் 2ரூ 15 இலட்சம் செலவில் அறிவுத்திருக்கோயிலைக் கட்டினோம். அது முழுக்க முழுக்க எங்களின் சொந்தப் பணத்தில் சொந்த இடத்தில் கட்டப்பெற்றது. கட்டிடத் திறப்பு விழாவிற்கு ஒரு வாரம் முன்பே வந்திருந்து தனாகர்ஷன சங்கர்பம் செய்து வைத்தார்.
பெரும்பாலும் எங்கள் மன்றத்தின் வளர்ச்சிக்கு அடிக்கடி ‘மெளன நோன்பு’ மேற்கொள்ளுமாறு KGS அறிவுறுத்துவார்.
மகரிஷி உடல்நலம் குன்றியபோது சைதை மன்றம் சார்பில் தினமும் காலை 10 மணியிலிருந்து இடைவிடாமல் வாழ்த்தும் ‘தொடர் வாழ்த்து’ முறையைச் செய்தோம்.
இப்படி மகரிஷி மறையும் நாள்வரை நாங்கள் தொடர்ந்து வாழ்த்தலைகளை அழியாருக்கு அனுப்பிக் கொண்டே இருந்தோம். இதுவும் KGS இன் வழிகாட்டுதல் படியே நிகழ்ந்தது.
என் உறவுக்காரப் பெண்ணுக்கு வெகுநாள் திருமணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அவள் பூப்படையவும் இல்லை. தொடர்ந்து தனாகர்ஷணம் செய்தமையால் அப்பெண்ணின் உடல்நலம் குணமாகியது. அவள் பூப்படைந்தாள். தொடர்ந்து அய்யாவின் அறிவுறுத்தலின்படி அவளுக்குத் திருமணமும் ஆகிவிட்டது. இப்போது அவள் நன்றாக இருக்கின்றாள்.
மேலும் என் உடன் பிறந்த தம்பியின் வீடு, கட்டிட வேலை இடையில் நின்று போனது. அங்கே சென்று சில வாரங்கள் தனாகர்ஷண பூஜை செய்து வீட்டுக் கட்டிட வேலைகளைச் சிறப்பாக முடிக்க வைத்தார்.
ஒருமுறை, “அய்யா இவ்வளவு சிறப்பாக பேசுகிறீர்களே. தங்களின் உரைகளைத் தொகுத்துப் புத்தகமாக ஆக்கினால் ல்லோரும் படித்துப் பயனடைவார்களே,” என்றோம். அதற்கு அவர், “வேண்டாம், நான் இருக்கும் வரை எதுவும் சொல்ல வேண்டாம். மறைவிற்க்குப் பின் விரும்பினால் செய்து கொள்ளுங்கள்’ என்று பதிலளித்தார்.
— அ/நி கருணாகரன் சென்னை 6 May 2017