A remembrance
அய்யா KGS அவர்களை முதன்முதலில் 1996 ஆம் ஆண்டு புதுச்சேரியில் சந்தித்தேன். அப்போது புதுச்சேரி வேதாபுரம் மனவளக்கலை மன்றத்தில் தவ விளக்கப் பயிற்சி நடைபெற்றது காலை 7 மணிப் பயிற்சிக்கு 6.45 க்கே பேராசிரியர் KGS வந்துவிட்டார். நானும் நண்பர் செஞ்சி நடராஜ பாண்டியனும் குறித்த நேரத்தில் பயிற்சிக்குச் சென்றுவிட்டோம்.
”நீங்கள் வெளியூர்க்காரா. அதான் சரியான நேரத்திற்கு வந்துவிட்டீர்கள்!” என்று KGS சபையில் கூறியது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
முதலில் எங்கள் திருவண்ணாமலையில் தவமையம்தான் தொடக்கப் பெற்றது. நாட்கள் செஞ்சி மனவளக்கலை மன்றத்தின் கிளையாகத்தான் செயல்படதுவங்கினோம். பிறகு அய்யா KGS அவர்களின் முயற்சியால் எங்கள் தவ மையம் அறக்கட்டளையாக மலர்ந்தது.
அப்போதெல்லாம் அகத்தாய்வுப் பயிற்சிகளுக்கு நாங்கள் செஞ்சி மன்றத்தைத் தாம் தேடிப்போவோம் . ஏனென்றால் அங்கே திரு நடராஜப் பாண்டியன் அவர்கள் KGS அவர்களை அழைத்து வந்து அகத்தாய்வு பயிற்சிகளை நடத்துவார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர்கள் கணபதி மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
1996 ஆம் ஆண்டில் முதன்முதல் ஒரு காயகல்ப பயிற்சியைத் திருவண்ணாமலை மையத்தில் KGS நடத்தினார். 50 அன்பர்கள் கலந்து கொண்டனர். அச்சமயம் ராஜ பாளையம் மன்றத்தின் பொறுப்பாசிரியர் திரு வெங்கடேசன் என்பவர் தன் பணி நிமித்தம் மாற்றலாகி திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அவர் கரூர் வைசியா வங்கியின் எழுத்தர் பணியில் இருந்தார். அதன்பிறகு திருவண்ணாமலை மையம் பெரிய வளர்ச்சியை நோக்கி நடைபோட்டது.
KGS திருவண்ணாமலை வரும்போதெல்லாம் பக்கத்தில் செஞ்சி மற்றும் விழுப்புரம் மன்றங்களுக்குத் தேதி கொடுத்துவிடுவார். திருவண்ணாமலையில் காலையில் காயகல்பம் என்றால் மாலையில் செஞ்சியில் காயகல்பம் நடத்துவார்.
பின்பு மறுநாள் காலையில் விழுப்புரம் கிளையில் பயிற்சி இருக்கும். ஆனால் ஒரே காயகல்ப பயிற்சியை மூன்று இடங்களிலும் மூன்று வித்தியாசமான கோணங்களில் நடத்துவார். பாடப் பொருள் ‘காயகல்பம்’ என்றாலும் கற்பிக்கும் முறை, உதாரணங்கள், அணுகுமுறை எல்லாம் வெவ்வேறாக இருக்கும். கேட்பவர்களுக்கு அலுப்பே தட்டாது. சபையறிந்து பேசுவார். சபையில் அமர்ந்துள்ளோர் அனைவரையும் தன் பேச்சால் கட்டி வைத்து விடுவார்.
பின்னர் ஆழியாரில் அருள்நிதியர் பயிற்சியில் நான் கலந்து கொண்டேன். 1998 இல் என் திருமணம் நடைபெற்றது. ஆனால் KGS அய்யாவால் வர இயலவில்லை. ஏனென்றால் அதே நாளில் ஆழியாரில் மகரிஷி தலைமையில் பேராசிரியர் கிருஷ்ணசாமியின் தம்பி திருமணம் நடைபெற்றது. அதை நடத்திக் கொடுக்க KGS போய்விட்டார். பின்பு ஒருநாள் திருவண்ணாமலைக்கு வந்திருந்த சமயம் என்னையும் என் மனைவியையும் வாழ்த்தினார்.
1997 இல் திருவண்ணாமலை மன்றத்தில் ஒரு தவ விளக்கப் பயிற்சியை KGS நடத்தினார். ‘சக்திகளம்’ என்பதற்குச் சரியான வரைபடத்தை விளக்கிக் காட்டினார். நினைத்த மாத்திரத்தில் ‘சக்திகளம்’ செல்லக் கூடிய ஆற்றலை வழங்கியவர் KGS.
அன்பர்களின் உள் மனதை புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர் KGS ஆன்மீக வகுப்புகளில், தத்துவ விளக்கப் பயிற்சிகளில் அவரின் எதிரில் அமர்ந்திருக்கும் அன்பர்களின் மன ஓட்டங்களை எளிதில் புரிந்துகொள்வார். அன்பர்கள் கேட்க விரும்பிய கேள்விகளுக்குப் பதிலைத் தன் உரையின் போதே அளித்துவிடுவார் சில அன்பர்கள், “நான் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன். ஆனால் அதற்குள் நீங்களே அதற்குரிய விடையை அளித்து விட்டீர்களே”, என்று கூறுவர். இப்படி MIND READING இல் நன்கு தேர்ச்சி பெற்றவர் அய்யா KGS. நாம் உணவு அருந்தும் முறையை வைத்தே எந்தத் தன்மை உள்ளவர் என்பதை எடைபோடும் ஆற்றலுடையவர் KGS.
ஒருநாள் விடியற்காலையில் எந்தவித முன்னறிவுப்பும் செய்யாமல் நான் அவரின் ஈரோடு வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டேன். நான் அவர் வீட்டு வாயிற்படிக்குச் செல்வதற்குள் முன்னரே கதவைத் திறந்துவிட்டு நிற்கிறார் KGS. எனக்கு ஒரே ஆச்சரியம். “எப்படி அய்யா உங்களால் நான் வருவதை உணர முடிந்தது?” எனக் கேட்டேன். “எல்லாம் வாழ்த்தலைகள் தாம் தம்பி,” என்றார்.
எங்கள் திருவண்ணாமலை மன்ற அறக்கட்டளை அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை மன்ற நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு போன்ற எல்லா நிர்வாகச் செயல்பாடுகளையும் கண்காணித்துச் சீரமைத்தவர் KGS. தாம் செஞ்சி மன்றப் பொறுப்பாசிரியர் திரு நடராஜ பாண்டியன் அவர்கள் KGS அவர்களின் ஆத்மார்த்தமான சீடர் ஆவார். அவரும் எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்தார். எங்கள் திருவண்ணாமலை அறங்காவலர் குழுத்தலைவராக திரு வாசு அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டில் எம் மன்றத்துப் பயிற்சியை முடித்துவிட்டுக் கிளம்பினார். “அடுத்தமுறை வரும்போது உன் இல்லத்திலேயே தங்க விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனவர் பிறகு திரும்பவேயில்லை.
அய்யா பார்ப்பதற்குப் பலாப்பழம் போன்றவர். ஆனால் குழந்தை உள்ளம். நான் நாலைந்து ஜிப்பா தைத்துக் கொடுத்திருந்தேன். போகுமிடமெல்லா அன்பர்களிடம் அதை சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போனார். அவரிடம் ஒருமுறை சுவாமிஜி கைகளால் வழங்கப்பெற்ற சட்டைத்துணி இருந்தது. அதை எனக்கு வழங்கி மகிழ்ந்திருகின்றார். அம்மாவும் உபசரிப்பில் அய்யாவிற்கு இளைத்தவர் அல்ல ஈரோட்டிற்குப் போய் விட்டாலே தன் சொந்த மகனுக்கு உணவளிப்பது போல் அளித்து மகிழ்வார்.
— அ/நி S. முரளி திருவண்ணாமலை 6 May 2017