KG Sami1937 — 2006

KGS எனும் கர்மயோகி

A remembrance

நானும் நண்பர் வெங்கடேசனும் புதுவை அரசு ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருந்த மத்திய சிவில் சர்வீசுக்கான வகுப்பில் பழக்கம் ஏற்பட்டது. 1993 ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை சென்னையில் முதல்நிலை தேர்வில் கலந்து கொண்டேன். வயதின் அடிப்படையில் அதுதான் கடைசி வாய்ப்பு. இடையில் குண்டலினி தியானம் சொல்லித் தரும் மனவளக்கலை மன்றம் ஒன்று புதுச்சேரி ஜீவா ருக்குமணி திரையரங்கத்தின் பின்புறத்தில் இராமன் குடில் என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. நான் அங்கு போய் வருகிறேன்; புதன் கிழமை மாலை கூட்டுத்தவமும், KG சாமி என்ற பேராசிரியர் மற்றும் கணபதி, கிருஷ்ணசாமி போன்றவர்களும் வந்து பேசுவார். மிகச்சிறப்பாக இருக்கும் என்றும் என்னை அங்கு அழைத்தார். நானும் புதன்கிழமை எப்பொழுது வரும் என்று ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தேன். புதன் கிழமையும் வந்தது. அன்று மாலை அலுவலகம் முடிந்து நானும் வெங்கடேசனும் இராமன் குடிலில் செயல் பட்டு வந்த மன்றத்திற்குச் சென்றோம். மாலை 7.00 மணிக்குச் சரியாக கூட்டுத்தவம் தொடங்கியது. பேராசிரியர் K.G. சாமி நடத்தினார். பின்னர் அவரே உரை நிகழ்த்தினார். அந்த சபையில் நிலவிய ஒருவித இனிமையான, அருள்தன்மை கொண்ட அலை இயக்கமும், அவரது இனிமையான எளிய நடைப் பேச்சும் என்னை வெகுவாக ஈர்த்தது.

பின்னர் அடிக்கடியும், தொடர்ந்தும், தினசரியும் அங்கு செல்ல ஆரம்பித்தேன். அவரது ஆழமான தத்துவ விளக்கமும், அன்பு கலந்த விசாரிப்பும் என்னை மன்றத்தில் ஒருவனாக மாற்றியது. இப்படித்தான் KGS அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. மேலும், அவர் அப்போது (1993) அரசிதழ் பெற்ற கண்காணிப்பாளராக புதுவை அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றினார். நான் தலைமைச் செயலகத்தில் எழுத்தராக (L.D.C.) நான் சார்ந்த அரசுத் துறையில் அவர் பணியாற்றி வந்ததும் குடும்ப உறுப்பினர் போல் ஒரு நட்புணர்வை அதிகமாக்கியது.

அவர் சபையில் தவம் முடிந்து உரை நிகழ்த்த தொடங்கும் முன் அமர்ந்துள்ள அனைவரையும் பார்வையாலேயே நோக்குவார். அன்றும் என்னைப் பார்த்து, யார்? பழைய தம்பியா? எங்கே கொஞ்ச நாட்களாகப் பார்க்க வில்லையே? என்று வினவினார். நான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் சிறு சிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டு சைக்கிள் ஓட்டாமல் இருந்ததினால், அலுவலகத்திற்கும் மன்றத்திற்கும் செல்ல இயலவில்லை. நான் விவரமாகக் கூறாமல் சுருக்கமாக சில பணிகள் காரணமாக வர இயலவில்லை என்று அவருக்குப் பதில் கூறினேன். பொழுது அகத்தாய்வு முதல் நிலை எடுக்க வேண்டும் என்றால் துரியதவம் முடித்து ஒரு மாதம் பூர்த்தியாக இருக்க வேண்டும். எனக்கு அந்தத் தகுதி அப்போது இல்லாததால் பயிற்சியில் பயிற்சியாளராக இல்லாமல் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். அதில் அகத்தாய்வுப் பயிற்சிகள், தத்துவ விளக்கங்கள் ஆகியவைகளை திரு KGS அவர்கள் மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் எடுத்துக் கூறினார்கள். அவர் மூலமாக அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களை பற்றியும் அவரது ஆழமான தத்துவ சிந்தனைகளையும் அறிவின் வீட்சையும் முழுமையாக உணர்ந்து கொள்ளவும், மானசீகக் குருவாகவும் மனம் ஏற்றுக் கொண்டது.

பின்னர் அகத்தாய்வு I, II, III ஆகியவை முடித்தேன். 1994 ல் ஆழியாறுக்கு ஆசிரியர் பயிற்சிக்கு (அருள்நிதியர் பயிற்சி) வேறு 4 அன்பர்களுடன் சென்று கலந்து கொண்டேன். அங்கு சென்று அருள்தந்தையை கண்டதும், பேராசிரியர்கள் அளித்த விளக்கமும் எனக்கு மகரிஷி மீதும் மனவளக்கலைப் பயிற்சி மீதும் மிகுந்த ஈடுபாட்டையும், இந்த அமைப்பை வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தையும் அதிகமாக்கியது.

இதனால், அலுவலகம் முடிந்து நேராக மன்றத்திற்கு வந்து விடுவேன். அங்கு பணியாற்றிய அன்பர் ஆத்ம ராமனுடன் சேர்ந்து பாஸ் போடுவது, கரும்பலகையில் பயிற்சிகள் மற்றும், நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளை எழுதுவது, புதிய அன்பர்களுக்கு தீட்சை மற்றும் சாந்தி தவம் அளித்தல் ஆகியவைகளை அப்பொழுது இருந்த மற்ற அன்பர்களுடன் இணைந்து செய்து வந்தேன். இதனால், என்னை அப்போது துணை பொறுப்பாசிரியராகவும், பின்னர் சில ஆண்டுகளில் திரு V. ஜானகிராமன் மற்றும் பெரியவர்கள் நியமித்தனர்.

1995 ல் KGS அவர்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஈரோட்டில் அன்பொளி அலுவலகத்தில் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரோட்டில் இருந்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் தவ, தத்துவ விளக்கப் பயிற்சிகளை நடத்தச் சென்று விடுவார். இடையில் உள்ள நாட்களில் மாலை வேலையில் மிகத் தூரமாக அமைந்து பல கிராமங்கள் மற்றும் சிற்றூர்களுக்கு மாலை நேரங்களில் உரை நிகழ்த்தச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு வெளியூரிலிருந்தாலும் புதுச்சேரி மன்றத்திற்கு தாய் மன்றம் என்ற உரிமையில் அவரை தலைவரும் நானும் ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறைகள் சிறப்பு பயிற்சிகளுக்கும், வில்லியனூர் ஆச்சாரியா கல்லூரி, மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீமணக்குள வினாயகர் பொறியியல் கல்லூரி மற்றும் அமலோர்பவ பள்ளி ஆகியவற்றில் பயிலும் ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சிகளை அளிக்க அழைத்துள்ளோம்.

இதற்கிடையில் 1996 செப்டம்பர் 22 ம் தேதி எனக்குத் திருமணம் நடந்த போது அவருக்குத் தபாலில் அழைப்பிதழை அனுப்பி வாழ்த்த வருமாறு கேட்டிருந்தேன். ஐயா அவர்கள், உள்ளூர் தபால் கவரில், “நான் அன்றைய தினம் ஏதேனும் ஊரில் அருட்பணியாற்றிக் கொண்டிருப்பேன்; உனக்கும் உன் வாழ்க்கைத் துணைக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார். அதையே இனிய வாழ்த்துக்களாக நான் அனுபவித்தேன்.

அதேபோல் புதுச்சேரிக்குப் பயிற்சிக்கு வரும்போது முதல் நாளிலேயே அன்பர்கள் வீட்டுக்கு வந்து விடுவார். அன்றைய தினம் ஒருவித இனிமையான, பாதுகாப்பான பலத்தை தருகின்ற ஒரு வித அழுத்த உணர்வை நான் உணர்ந்திருக்கின்றேன். அதை எனக்கும் மன்றத்தின் வளர்ச்சிக்காகவும் ஒரு பாதுகாப்பான உணர்வாகவும் வழிகாட்டியாகவும் நான் மானசீகமாக ஏற்று அகமகிழ்வு கொண்டுள்ளேன். அதற்குக் காரணம் அவரது அயராத உழைப்பும், தெளிவான சிந்தனையும், தவ ஆற்றலுமே காரணம் என்று உணர முடிந்தது.

அதேபோல் மன்றத்தில் அவரைப் பற்றியும் அவருடைய ஆன்மிகச் செறிவை பற்றியும் அவரை விளக்கும் போது,

“தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

நெஞ்சுக்குள்ளே சிறுத்தை எழும்

மண்டைச்சுரப்பை உலகம் தொழும்”

     என்ற தந்தை பெரியாருக்காக புரட்சிகவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய கவிதையைக் கூறினேன்.

     சில பெரியவர்களுக்கும், அருஞ்செயல் புரிந்தவர்களுக்கும் கவிஞர்கள் தருகின்ற கவிதை மதிப்பீடு வேறு சில கர்மயோகிகளுக்கும், சான்றோர்களுக்கும் பொருந்துவது வழக்கம் தானே.

அதேபோல் ஒருமுறை 45 அடிசாலை விக்னேஷ் வளாகத்தில் மன்றம் இயங்கிய போது வள்ளலார் நினைவு தினமான தைப்பூசம் அன்று மாலை KGS அவர்களின் சொற்பொழிவு “வள்ளலாரும் வேதாத்திரியும்” என்ற தலைப்பில் ஏற்பாடாகியிருந்தது. முதலில் நானும், பின்னர் பேராசிரியர் கண். கிருஷ்ணசாமி அவர்களும் அதன் பின்னர் KGS ஐயா அவர்களும் பேசினோம்.

     தன்னுடைய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார், மூன்று பேருடைய பேச்சும் இன்று சமமாக, பொருத்தமாக அமைந்துள்ளது. இது ஒரு அரிய நிகழ்வு (rare happening) என்றார். அவர் அன்றைய தினம் மிகவும் மூத்த, அனுபவம் வாய்ந்த சிறந்த பேராசிரியர் மற்றும் பேச்சாளர்; எனினும், மற்றவர்களைப் பாராட்டவும், ஊக்குவிக்கவும் அவருக்கு நிகர் அவரே.

     இவ்வாறாக காலச்சக்கரம் உருண்டோட, உ.சே. சங்கத்தின் அமைப்புகளில் சில மாற்றங்கள் வர, புதிய புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 2006-ல் அருட்தந்தை அவர்கள் அவரது 96-ஆவது அகவையில் மார்ச் 28 – ல் அவருடைய பருவுடல் நீங்கி வேதாத்திரியம் ஆக மாற்றம் பெற்று சுமார் ஒரு மாத காலத்தில் அதாவது 2006- ஆம் ஆண்டு மே, 2 – ஆம் தேதி KGS ஐயா அவர்கள் இயற்கை எய்திய செய்தியை தலைவர் ஜானகிராமன் அவர்கள் தொலைபேசியில் தெரிவித்தார். மறு நாள் ஈரோட்டுக்குப் போய் நான், தலைவர் மற்றும் மன்றத்தின் அறங்காவலர்கள் குழுவாகச் சென்று நெடிதுயர்ந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கனத்த மனதுடன் வந்தோம்.

     அவரிடம் இன்னும் பல்லாண்டுக்கான வாழ்க்கையும், அதன் மூலம் அரிய தொண்டினையும் எதிர்பார்த்திருந்த எங்களுக்கு அவரது மறைவு ஏமாற்றத்தைத் தந்திருந்தாலும், அவருடைய தொண்டின் பரிமாணமும், ஆழ்ந்த சிந்தனைகளின் வீச்சும், பேச்சின் அர்த்தமும் அவரை ஒரு கர்மயோகியாக, ஆற்றலின் அடையாளமாகவே எங்களுக்கு உணர்த்தி வருகிறது.

வாழ்க வேதாத்திரியம்                 வளர்க அறிவுத்திருக்கோயில்கள்

— அ/நி கோ. செளந்திரராஜன் புதுச்சேரி 14 Apr 2015

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி