A remembrance
முன்னுரை:-
ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல பக்தனை கொண்டு கடவுளின் ஆற்றலை உணர்வது போல குருவின் தன்மையை அறிய சீடரின் செயல்பாடுகளே போதுமானது. அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி என்ற தன்னிகரற்ற குருவின் பெருமையை உணர அவரின் கோடான கோடி சீடர்களில் யாரை அடையாளம் கொள்வது? நினைவிலும், உணர்விலும் முதலில் வருவது பேரா கனக K.G. சாமி என்ற வேதாத்திரிய முழுமைச் சீடன்தான்.
தனித்த சுவை
மா, பலா, வாழை என்பது முக்கனிகளாகும். மா, வாழை இரண்டும் பறிப்பதும், சுவைப்பதும் எளிது. ஆனால் பலாப்பழம் பறிப்பதும் கடினம். சுவைப்பது அதைவிட கடினம். அதுபோல குருவேதாத்திரியின் பரிபூரண அன்பையும், ஆசியையும் பெற்ற போதிலும் தன்னை எளிதில் அண்டவிடாத படி ஒரு முரட்டு முட்களாய் தன்னை வளையமிட்டுக் கொண்டவர் நமது கனக K.G. சாமி அவர்கள், பலாவைச் சுவைத்தவர்கள் அதன் சுவைக்கு அடிமையாவதுபோல் KG யின் அருமையை உணர்ந்தவர்கள் அவருடைய அன்புக்கு அடிமையாவது இயல்பான தன்மையாகும். அவரை நெருங்குவது வெகு கடினம்; நெருங்கிவிட்டால் அவரை விட்டு விலகுவது அதைவிட கடினம்.
அன்பொளி கர்மயோகி
இன்றும் என்றும் மனவளக்கலை அன்பர்களை இணைப்பதில் ‘அன்பொளி’ மிக முக்கிய பங்காற்றுகிறது. அன்பொளி இதழின் வளர்ச்சி வரலாற்றில் நமது KG ஐயாவின் தனிப்பட்ட உழைப்பை, அர்ப்பணிப்பை, குருகடமை செய்வதில் உள்ள ஆனந்தத்தை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ‘அன்பொளி’ மாத இதழுக்காக மாதத்தில் எல்லா நாட்களிலும் தீவிரமான உழைப்பைக் கொடுத்தவர் அச்சுப்பிழை வருவது சராசரி இதழ்களில் வெகு இயல்பு. ஆனால் சல்லடை போட்டு தேடினாலும் அன்பொளி இதழில் காணக் கிடைக்காது. அப்படிப்பட்ட கழுகுக் கண்களுக்கு சொந்தக்காரர் நமது KG ஐயா.
குரு பரம்பரை
நமது KG ஐயாவின் சொற்பொழிவுகளில் குருவைப்பற்றி நேரிடையாக சிலாகித்து பேசுவது வெகு குறைவு. குரு பெருமை பேசாமலேயே பல ஆயிரம் பேர்களை குருவோடு ஒன்றிணைத்து சேவைக்கு தயார் செய்வதில் ஐயாவுக்கு நிகர் ஐயாவே! குரு என்ற உணர்வை பலநபர்களிடம் விதைத்து ஆயிரமாயிரம் வேதாத்திரிய குழாமை, தொண்டர் படையை கட்டமைத்ததில் மற்ற எல்லோருக்கும் முன்னோடியாக திகழ்ந்தார்.
அருள்(ட்) தந்தை
அன்பொளி, பிரசுரங்களில் தத்துவ விளக்கம் பிசகாமல் பார்ப்பதிலாகட்டும், மகரிஷி பெயரை பிரசுரிப்பதிலாகட்டும் தனித்த கவனத்தை, ஈடுபாட்டை கொண்டிருந்தார். ஒருமுறை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி என்ற வார்த்தை வடிவத்தை தமிழ் இலக்கணப்படி ‘அருள்தந்தை’ என அழைப்பதே சரியாகும், ‘அருட்தந்தை’ என்பது வார்த்தைப் பிழை என்பதை எடுத்துரைத்து அதை நிருபித்துக் காட்டியவர் நமது KG ஐயா மகரிஷியின் தத்துவங்களில் மட்டுமல்ல, வார்த்தைகளில் கூட தனித்த கவனத்தை கண்காணித்தவர் நமது KG ஐயா.
மஞ்சள் சால்வை மகிமை
மகரிஷி தரிசிப்பதற்கு வரக்கூடிய பிரமுகர்கள், முக்கிய விருந்தினர்கள் மரியாதை நிமித்தம் பழவகைகள், சால்வை மகரிஷிக்கு பரிசளிப்பது வழக்கமான மரபு. தனக்கு வரும் சால்வைகளை தன்னை காணவரும் தொண்டர்களுக்கு மகரிஷி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நமது KG ஐயா மகரிஷியிடம் பெற்ற சால்வைகளை தான் மட்டும் அனுபவித்து இன்புறாது, தான் பெற்ற இன்பம் பெறும் இவ்வையகம் என்ற நோக்கில் உள்ளுணர்ந்த சீடர்களுக்கு உவகையோடு வழங்குவார். நமது KG ஐயாவின் திருக்கரத்தாள் சால்வை பெற்ற அன்பர்களுள் நானும் ஒருவன் என்பது பெரு மகிழ்வாகும்.
வசப்படுத்தும் வார்த்தைகள்
நமது KG ஐயா சொற்பொழிவாற்றும் தருணங்கள் மிக அற்புதமானவை ; உணர்வு பூர்வமானவை தவ நிறைவுக்கு பிறகு இறை வணக்கம், குருவணக்கம் பாடிய பிறகு சபையை பார்த்து “ஆங்! இன்றைக்கு என்ன தலைப்பு?” என்று கேட்கும் கம்பீரம்; சிங்க கர்ஜனை, மகுடிக்கு பாம்பு வசமாவது போல ; சபையோரை ஆட்டுவிப்பது நமது ஐயாவுக்கு கை வந்த கலை யாருடைய மனமும் கோணாமல் சிந்தனையை தூண்டுவதில் வல்லவர் KG ஐயா. மனவளக்கலை பயிற்சிகளை தொடர்ந்து செய்துவரும்படி ஊக்குவிப்பதில் ஐயாவுக்கு நிகர் ஐயாவே ஆரம்பிப்பது மட்டுமல்ல; நிறைவு செய்வதிலும் நேர மேலாண்மை கடை பிடிப்பதில் குருவுக்கு நிகர் சீடர் நமது ஐயா! சொற்பொழிவை கேட்கும் நபர்கள் ஐயோ! அதற்குள் முடித்து விட்டாரே! இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே? என்று ஏங்க வைக்கும் அளவிற்கு தனது சிந்தனை உரையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்தார். சபையில் தன்மைக்கேற்ப பேசுவது ஐயாவின் தனிப்பட்ட சிறப்பு; சிரிக்கவும், சிந்திக்கவும் சுவைமாறாது குருதத்துவத்தை வெளிப்படுத்தியவர் நமது ஐயா! தனது பேச்சை கேட்பதற்காகவே ஊர்விட்டு ஊர், மன்றம் விட்டு மன்றம் வரும் அன்பர்களை வேதாத்திரிய தத்துவத்தில் வசீகரிப்பார். பேச்சு வசீகரித்ததிற்காகவே ஓடோடி வரும் அன்பர்களுள் நானும் ஒருவன்!
அன்புணர்வு
நமது KG ஐயாவுடன் இணைப்பை, உறவை பலப்படுத்திக் கொள்ள அவரது வீட்டிற்கு படையெடுக்கும் ஆயிரமாயிரம் தேனீக்களில் நானும் ஒருவர் அம்மாவின் (ஐயாவின் வாழ்க்கைத் துணை) வரவேற்பில், அன்பில், உபசரிப்பில் ஆடிப்போய் விடுகிறோம். வீட்டிற்கு சென்றால் உணவு சாப்பிடாமல் வெளியேறுவது சிரமம், வெகு சிரமம். நமது ஐயா வீட்டின் காந்த கனத்தை அவ்வளவு அற்புதமாக, ஆற்றல் மிக்கதாக வைத்திருப்பார். ‘அன்பின் பிரவாகம்’ இல்லமெங்கும் நிறைந்திருக்கும். அம்மா சிறுசிறு வேலைகளை அவர்களிடம் கூறுவார்; அதை வரமாக நினைத்து நாங்கள் ஆர்வத்தோடு செய்வோம்; ஆனால் நமது KG ஐயா அதற்கு உடன்படாமல் அம்மாவை செல்லமாக கோபிப்பார். அன்பர்களை தமது சொந்த வேலைக்கு பயன்படுத்த விரும்பாத மனோபாவம் நமது ஐயாவுக்கு! ஐயாவிடம், அம்மாவிடம், அவர் வசித்த இடத்தில் அதன்பின் தன்மை ததும்பி வழியும்; அதன்பின் தரிசனத்தை பலமுறை கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.
திணிப்பல்ல; புகுத்தலே சிறப்பு
ஊர்தோறும், கிராமம்தோறும் மனவளக்கலையை சுமந்து சென்ற நமது KG ஐயா தமது சொந்த வீட்டில் அதிகளவு அதை வலியுறுத்தாது ஆச்சர்யம் தரும் உண்மையாகும். வலிந்து திணிப்பதில் வெறுப்புணர்வே புகும் என்பதை தமது சொந்த வாழ்விலேயே உணர்ந்திருந்தார். ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகரிஷி மேல் பற்றும், பயிற்சிகள் ஓரளவு ஈடுபாடும் காட்டிவந்தது அதிசயமாகும். ‘உயர்வாயினும்; பிறப்பாயினும் வாழ்க்கை துணை ஒத்துக் கொள்ளும்வரை ஒத்திப்போடுவதே சிறப்பு’ என்று குருவார்த்தைக்கு இணங்க குடும்பத்தாரிடம் திணிக்காமல் அதே சமயம் வலியுறுத்தவும் செய்வதில் ஐயாவே நமக்கு ஆகச் சிறந்த உதாரணம்.
முன்னோடி
சங்க வளர்ச்சிக் கூட்டத்தில் நிர்வாகக் குழு, பொதுக்குழு எடுக்கும் முடிவுகளில் ஆட்சேபமான நடவடிக்கைகள் அல்லது தத்துவத்திற்கு ஒவ்வாத முயற்சி இருந்தால் சற்றும் ஒத்துக் கொள்ளாது அதை எதிர்ப்பதில் தீவிர அக்கறை காட்டுவார் நமது ஐயா! உறுப்பினர்கள் தீர்மானத்தின்படி ஒருவேளை முரண்பாடான செயல் நடைமுறைப்படுத்தப் பட்டால் அதை முதலில் நடைமுறைப்படுத்துவது நமது ஐயாவாகத்தான் இருக்கும். அந்தளவு கருத்தை மறுப்பதிலும் மாற்றுக்கருத்து இருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் முன்னோடியாகவும் விளங்கினார்.
தீர்க்க தரிசனம்
சங்க வளர்ச்சி மிதமாகவும், சீராகவும் வளர்வதில் ஆர்வம் உள்ளவர் நமது KG ஐயா! வெகுவேகமான வளர்ச்சியோ, விளம்பர கவச்சியோ நிலைக்காது என்பதில் நிலைத்த கருத்துடையவர். அதேபோல் மன்ற அன்பர்கள் அல்லாத ஆன்மிக பேச்சாளர்கள் பட்டிமன்ற சொற்பொழிவாளர்களை நமது மன்ற விழாக்களுக்கு அழைத்துவருவதில் மாறுபட்ட கருத்து கொண்டார். நமது ஐயா! மகரிஷி தத்துவம் தெரியாத பிரபல பேச்சாளர்கள் மக்கள் மனதை சிலநேரம் களிப்பாற்றுவார்களே தவிர முழு நன்மை, பயன் கிடக்காது என்பதை எப்போதும் வலியுறுத்துவார், அவ்வாறே நடந்தும் வருகிறது. ஐயாவின் தீர்க்க தரிசனத்திற்கு வரும்பேது.
குருவார்த்தை
ஆழியாறு வரும் பேராசிரியர்களை எல்லாம் மகரிஷி அவர்கள் வாழ்த்தி இன்புறுவது வழக்கம்; ஒருமுறை மெளன நோன்பு காலம் நமது KG ஐயா ஆழியாறு வந்திருந்தார்; மகரிஷி அவர்கள் ஐயாவிடம் கொஞ்ச நாள் இங்கே இருந்து அருட்பணி ஆற்றி ஓய்வெடுக்கலாம் அல்லவா?!” என்று கூறினார். உடனே ஒப்புக் கொண்ட நமது ஐயா அங்கிருந்தவாறே அன்பொளி கடலை, கர்ம யோகத்தை தொடர்ந்து செய்தார். அதற்கு முன்பும் பலமுறை மெளன நோன்பு ஆழியாறில் நடைபெற்றாலும் நமது ஐயா பொறுப்பெடுத்துக் கொண்டவுடன் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக மெளன அன்பர்கள் காட்டுதலத்திற்கு வருவது குறைவாக இருக்கும். நமது KG ஐயா பொறுப்பேற்றவுடன் ஓம்கார மண்டப தவத்திற்கு இடம் கிடைப்பது அரிதானது. ஓம் கார மண்டபத்தை 3 முறை வலம் வந்து நுழைய வேண்டும் என்று ஐயாவின் வேண்டுதலை அனைவரும் கடைபிடித்தோம். அந்த சமயத்தில் மகரிஷி உடல்நலக்குறையோடு இருந்த காலம், குருதரிசனம் கிடைக்காமல் அனைவரும் ஏங்கி தவித்தோம்; ஏக்கத்தை உணர்ந்த நமது KG ஐயா ஓர் உபாயம் அருளினார்.
பலப்படும் குருபடி
’நமது குரு மேல்மாடியில் இருக்கிறார்; அவர் உள்வாங்கி வெளிவிடும் மூச்சுகாற்று இங்கு நிரம்பி இருக்கும்; குருவின் உண்மையான சீடன் நேரடி தரிசனம் பெறாமலேயே, மூச்சின் சக்தி கொண்டு குரு அருள் பெற முடியும், இதை நீங்கள் கண் மூடி அனுபவித்து பாருங்கள்” என்ற உபாயம் தந்தார் நமது ஐயா; உடனே நாங்கள் முயற்சித்தோம்; அனுபவித்தோம்; ஆனந்தமடைந்தோம். குருவோடு இணைப்பு பெறுவதற்கு பாலமாக இருந்தார் நமது KG ஐயா!
இரங்கற்பா
வாழ்நாள் முழுவதும் துணை வரும் உறவு வாழ்க்கைத்துணை: அதற்கு ஈடு இணை இல்லை என்பார் நமது அருள்தந்தை. நமது KG ஐயாவின் துணையும் அவருக்கு கிடைத்த வரமே! உடல் ஒவ்வாமையால் அம்மா விடைபெற்ற போது ஐயா அவர்கள் முழுமையாக உடைந்து போனார். அம்மா திரு உடல் அருகே ஒரு கவி; இரங்கற்பா எழுதி வைத்தார் அந்த இரண்டுவரி ஐயாவின் வாழ்க்கை தரத்தை பறைசாற்றியது “ என் தேவையை யார் அறிவார்; உன்னைப்போல் தெய்வம் ஒன்றைத் தவிர!!” – ஆஹா! என்ன அற்புதம்!!
அருள்தந்தையின் அங்கீகாரம்
ஆயிரமாயிரம், லட்சோபலட்சம் சீடர்களை பெற்றிருந்தாலும் உள்ளுணர்த்த உண்மை குரு தமது மஹாசமாதிக்கு பின் குறைந்தது 48 நாளில் தனது உண்மையுடன அழைத்துக் கொள்வது குருபரம்பரை வழக்கம்; நமது அருள்தந்தை வேதாத்திரி மகரிஷியும் தமது மஹாசமாதிக்கு பின் 32ம் நாளில் மே – 2ல் தமது அணுக்கத் தொண்டர் நமது KG ஐயாவை தம்மோடு இணைத்துக் கொண்டது நமது குருவின் அங்கீகாரம்தான். வேறென்ன வேண்டும் சீடனின் பெருமை அறிய!
— A disciple 6 May 2017