A remembrance
நான் பிறந்தது ஒரு ஆசிரியர் குடும்பம். எனது தந்தையும், தாயும் ஆசிரியர்கள். அவர்களின் ஐந்து பெண் குழந்தைகளில் நான் இரண்டாவது பெண். என் தங்கைகள் இருவரும் ஆசிரியர்கள். எனது பெற்றோர் என்னை ஆசிரியர் மற்றும் மனவளக்கலை பேராசிரியான கண். கிருஷ்ணசாமி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். என் புகுந்த வீட்டில் அனைவரும் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர்கள். என் புகுந்த வீட்டிற்கு ஒரு முறை திருவாளர் “பரஞ்சோதி மகான்” அவர்கள் வந்திருந்ததாக என் கணவர் கூறி இருக்கிறார். எனக்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபடும், என் தந்தையின் வளர்ப்பு மற்றும் வழி நடத்துதல் காரணமாக பிறர்க்கு உதவி செய்யும் தன்மை, தொண்டு மனப்பான்மை, ஒழுக்க நெறி இவை இயல்பாகவே என்னுள் இருந்து கொண்டு இருக்கிறது.
எங்களுடைய திருமணம் 1986 – ஆம் ஆண்டு மனவளக்கலை மன்ற முறைப்படி, அருட் போற்றலின் கருணையினாலும், நம் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்களின் நல்லாசியுடனும், ஐயா K.G. சாமி அவர்களின் முன்னிலையில் அவர்களின் கையால் மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து தவம் நடத்தி, வாழ்த்து கூறி சிறப்பாக நடந்தது. அந்த நாள் என் நினைவில் என்றும் நீங்கா இடம் பெற்று விட்டது. K.G.S. ஐயாவுடன் நமது வேதாபுரம் மனவளக்கலை மன்றத் தலைவர் திரு அ/நி ஜானகிராமன் ஐயா அவர்கள், பேராசிரியர் திரு அ/நி கணபதி ஐயா அவர்களும் உடன் இருந்து வாழ்த்து கூறி சிறப்பித்தனர். என் கணவரின் தம்பி Dr. தனசேகரன், இளவரசி திருமணம், ஆழியாறில் மகரிஷி அவர்கள் முன்னிலையர்கள் அவர்களின் ஆசீர்வாதத்துடன் K.G.S. ஐயா நடத்தி வைத்தார்கள். எங்கள் குடும்பத்தில் K.G.S. ஐயா அவர்களின் பங்களிப்பை நினைத்தும், அவர்களை என்றும் வாழ்த்தி வணங்குகின்றேன்.
எங்கள் திருமணம் முடிந்த சில தினங்களில் என் கணவர் மனவளக்கலை மன்றத்திற்கு அழைத்து செல்வார். நானும் மன்ற முறைகளை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் சென்றுவருவேன். ஒருமுறை நான் மன்றத்திற்கு சென்றபோது, திரு K.G.S. ஐயா அவர்கள் “சினம் தவித்தல்” என்ற தலைப்பில் சிறந்த உரையாற்றிக் கொண்டிருந்தார். அன்னாரின் பேச்சு என்னை மிகவும் ஈர்த்தது. அன்று முதல் வாரந்தோறும் சிந்தனை உரையை கேட்க, என் கணவருடன் தவறாமல் செல்ல தொடங்கினேன். பிறகு அமாவாசை தினத்தன்று ஐயாவிடம் “தீட்சை” பெற்றேன். அன்றிலிருந்து உடற்பயிற்சி, தவம் செய்ய தவறினாலும், ஐயாவின் உரையை கேட்க தவறியதில்லை.
ஒருமுறை அருட்தந்தை அவர்கள் காயகல்ப பயிற்சி நடத்திக் கொடுக்க பாண்டிச்சேரி வந்திருந்தார். அச்சமயம் ஐயாவின் ஆசி பெற என் கணவர் என்னை அழைத்து சென்றிருந்தார். அச்சமயம் நான் கருவுற்றிருந்தேன். ஐயா அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் போது, உனக்கு “ஆண்குழந்தை” பிறக்கும் என பழம் கொடுத்து வாழ்த்தினார். எனக்கும் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு K.G.S. ஐயா அவர்கள் “அருளமுதன்” என பெயரிட்டு வாழ்த்தினார். இந்த நிகழ்வுகள் என் மனதில் என்றும் பசுமையாய் நிலைத்து விட்டது. நாங்கள் தனியாக வீடு பார்த்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் K.G.S. ஐயா அவர்கள் இருந்த லாஸ்பேட்டையில் குடி பெயர்ந்தோம்.
1993 வரை வேதபுரம் மனவளக்கலை மன்றம் சிறப்பாகவே செயல்பட்டு கொண்டிருந்தது. பிறகு அறக்கட்டளை மாறி தலைவர் திரு அ/நி ஜானகிராமன் ஐயா அவர்களின் மேற்பார்வையில் இன்றளவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. முதல் முறையாக லாஸ்பேட்டையில் திரு K.G.S. ஐயா அவர்கள் அவரது இல்லத்தில் செவ்வாய் தோறும், தவமையம் நடத்தி வந்தார். ஐயா அவர்கள் நட்டு வைத்த விதைதான் இன்று விருட்சமாகி வளர்ந்து, லாஸ்பேட்டை மனவளக்கலை அறக்கட்டளையாக, ஐயாவின் அன்பர்களான அ/நி முருகையன், அ/நி தேவன், அ/நி. செந்தில் அவர்களால் இன்றளவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
1994 – ல் திரு K.G.S. ஐயா அவர்கள் எனது கணவரை பேராசிரியர் என்ற நிலைக்கு உயர்த்தினார். அன்றில் இருந்து, ஐயாவுடன், மற்றும் தனித்தும் வெளியூர் பயிற்ச்சிகள் நடத்த என் கணவர் தொடங்கினார். அச்சமயங்களில் நான், என் மகனுடன் K.G.S. ஐயா, மற்றும் அவரது துணைவியாருடனும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. என் கணவரை அம்மா தனது மூத்த மகன் என்றுதான் கூறுவார்கள். K.G.S. ஐயா அவர்களின் மகன்கள் திரு. கனக.திருமேனி, திரு அருண், திரு இனியன், திரு குரு ஆகிய நால்வரையும் எங்களது உடன் பிறந்த சகோதரர்களாக பாவித்து வருகிறோம். K.G.S. ஐயா அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, பிறகு ஈரோட்டிற்கு மனவளக்கலை தொண்டாற்ற, குடும்பத்துடன் குடி பெயர்ந்தார்கள். அச்சமயம், அவர்களின் பிரிவு எனக்கு பெரிய துயராக இருப்பினும், அடிக்கடி ஐயாவை சந்திக்க ஈரோட்டிற்கு சென்று வருவோம்,. ஒருசமயம் என் தாய் வீடான, திண்டுக்கல்லுக்கு ஐயா வந்திருந்த சமயம், எங்கள் வீட்டில் என் தாய், தந்தை, சகோதரிகள், குழந்தைகள் அனைவரும் ஐயாவுடன் பேசிப்பழகி, ஆன்மிக தகவல்கள் பகிர்தல் என்று இரண்டு நாட்களுக்கு எங்களுக்கு அரிய அனுபவம் கிடைத்தது. இதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
சிறிது நாட்களுக்கு பிறகு K.G.S. அம்மாவின் உடல்நலக் குறைவு காரணமாக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். மருத்துவமனையில் அம்மாவுடன் நான்கு நாட்கள் அருகில் இருந்து சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பு அருட் பேராற்றலே அளித்ததாக எண்ணி பூரிப்படைகின்றேன். சிறிது காலத்தில் அம்மா இறந்த செய்தி ஈரோட்டில் இருந்து வந்தது கேட்டு துடித்துப் போனேன். பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டு, நான் என் கணவர் அன்பர் தேவன் மூவரும் கடைசியாக மயானத்தில் அம்மா முகத்தை காணும் வாய்ப்பைப் பெற்றேன்.
அருட்தந்தை, அவர்களின் துணைவியார், அன்னை லோகாம்பாள் அவர்கள் மறைவிற்கு பிறகும், ஆன்மீக பணியில் தீவிரமாக ஈடுபட்டு தொண்டாற்றி, ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் அருள்நிதிகள், அன்பர்களை உருவாக்கி, இந்த உலகிற்கு ஆன்மீக சேவையை ஆற்றி வந்தாரோ, அதேபோல் என் சேவையும் தொண்டும், ஆன்மீகத் துறையில் தொடரும் என்ற K.G.S. ஐயா என்னிடம் ஒரு முறை கூறி இருந்தார். எல்லாத் துறைகளைப் பற்றியும் ஐயாவுடன் கலந்து பேசும் வாய்ப்பை அருட்பேராற்றல் எனக்கு கொடுத்திருந்தது. ஆன்மீகத்தை பற்றி ஐயா அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்த பிறகுதான் என் வாழ்வில் மிகுந்த ஆக்கத்தையும் ஊக்கத்தையும், மன உறுதியையும் எனக்கு அளித்தது என கூறினால் அது மிகையாகாது. எனது பிறந்த நாள் ஒவ்வொன்ருக்கும் K.G.S. ஐயாவின் வாழ்த்தே முதல் வாழ்த்தாக அமையும்.
K.G.S. ஐயா அவர்கள் ஈரோட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு பயிற்சி நடத்த வரும்போதெல்லாம் எங்கள் இல்லத்திற்கு தவறாமல் வந்து செல்வார். அந்த நாட்கள் எல்லாம் என் மனதில் நீங்காத நினைவுகளாய் உள்ளன. பாண்டிச்சேரியில், மனவளக்கலை என்ற குழந்தையை பெற்றெடுத்து அதனை வளர்க்கின்ற பொறுப்பை தலைவர் அ/நி. திரு. ஜானகிராமன் ஐயா அவர்களிடம் விட்டுச் சென்றுள்ளார். அந்த குழந்தை தற்போது வளர்ந்து அறக்க்கட்டளையாக சிறப்பாக நடந்து வருகின்றது. இந்த பெருமை நமது மன்றத் தலைவர் அவர்களையே சாரும். அவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன். மனவளக்கலை மன்றம் என்ற குழந்தை இன்றைக்கு “வேதாபுரம் அறிவுத் திருக்கோவிலாக” தன் முழுமைப் பேற்றை அடையும் என்று எதிர் பார்த்து நாங்களும் நூற்றுக்கணக்கான பாண்டிச்சேரி மனவளக்கலை அன்பர்களும், வாழ்த்திக் கொண்டும், ஆவலுடனும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
இந்த அரும்பணியை தலைவர் அ/நி. ஜானகிராமன் ஐயா திறம்பட செய்து முடிப்பார் என எதிர்பார்த்து அவரை வாழ்த்தி வணங்குகிறோம். எனது கணவர் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்களிடம் நெருங்கி ஆன்மிக கருத்துக்களை பேசிய அனுபவங்களை சில என்னிடம் கூறியுள்ளார். நான் அது போன்ற வாய்ப்புக்களை தவறவிட்டிருக்கிறேன். அந்த ஆதங்கத்தினால், அருட்பேராற்றலானது K.G.S. ஐயாவை தந்தையாகவும், குருவாகவும், எனக்கு அளித்துள்ளது என்று நம்புகின்றேன். K.G.S. ஐயாவின் ஆன்மீகத் தொண்டு எந்தளவிற்கு பாண்டிச்சேரி அன்பர்களை சென்றடந்ததோ அந்த அளவிற்கு ஐயாவின் மூத்த புதல்வரான திரு. கனகத் திருமேனி அவர்கள் இலவச ஹோமியோ (ஹோமியோபதி முறையில்) பயிற்சி வகுப்புகள், இலவச ஹோமியோ ஆலோசனை அன்பர்களின் வாழ்க்கைக்கு பெருந்தொண்டாற்றி வருகின்றார். அவர்களையும், அவர் குடும்பத்தையும் வாழ்த்தி, தொண்டில் சிறக்க வேண்டுகிறோம். K.G.S. ஐயாவின் மேல் மிகுந்த மரியாதையும் அன்பும் வத்திருந்தவர்கள் கூத்தப்பாக்கம் அ/நி. பங்காரு-சாந்தி தம்பதியினர். இவர்கள் இல்லத்தில் K.G.S. ஐயா அவர்கள் மாதம் ஒரு முறை மெளனப் பயிற்ச்சி நடத்திக் கொடுப்பார். இப்படி, ஆன்மீக நிகழ்ச்சிகள் மூலம் பல ஆன்மீக குடும்பங்களை இணைக்கும் பாலமாக ஐயா அவர்கள் திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதுபோல் இணைந்து குடும்பங்கள் அ/நி பூங்காவனம், அ/நி வாசுகிலட்சுமி தம்பதியினர், அ/நி திருவளவன், விஜி தம்பதியினர், அ/நி தேவன், சாந்தி தம்பதியினர் மற்றும் அறிவொளி குடும்பத்தினர் என பல குடும்பங்கள் இணைய நம் மனவளக்கலை மன்றமும், K.G.S. ஐயாவும் காரணமாக இருந்ததை நினைத்து மனம் பூரிப்படைகிறது.
K.G.S. ஐயாவின் மேல் உள்ள அன்பின் கவணத்தினாலும், மரியாதையினாலும் அவர்மேல் உள்ள ஆன்மீக அன்பின் வெளிப்பாடாக எங்கள் இல்லத்தில் “பேராசிரியர் K.G. சாமி நினைவு மனவளக்கலை தவமையம்” என்ற பெயரில் நடத்தி வருகிறோம். இந்த தவ மையத்தை நடத்த உறுதுணையாக இருப்பவர்கள் அ/நி சிவராமன் ஆசிரியர், அ/நி ஜெயக்கொடி அ/நி சத்தியப்பிரியா, பொய்யா மொழி துணைப்பேராசிரியர் ஆகியோர். சுவாமிஜியின் கருத்துக்களையும், தத்துவங்களையும், சிந்தனைகளையும் எளிமையான முறையில் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் K.G.S. ஐயா அவர்கள் நடத்தும் அகத்தாய்வு பயிற்ச்சிகள் பல அன்பர்களை கவர்ந்துள்ளது. அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்களால் தோற்றிவிக்கப்பட்ட “உலக சமுதாய சேவா சங்கம்” மனவளக்கலை மன்றங்கள் மூலம் உலகெங்கும் தொண்டாற்றி வருகின்றது. அது போல, அந்த பாதையில் என் கணவர் மூலம் என்னையும், என் குடும்பத்தாரையும் ஆன்மீக வழிக்கு காட்டிக் கொடுத்த K.G.S. ஐயாவிற்கு எங்கள் நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.
K.G.S. ஐயாவுடன் தொடர்பு கொண்டிருந்த ஆன்மீக அன்பர்களின் கருத்துக்களையும், அனுபவங்களையும் புத்தக வடிவில் வெளியிட வேண்டும். என்ற உயரிய நோக்கம் கொண்டு செயல்படுத்திவரும் அ/நி. திரு. வளவன் ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன். K.G.S. ஐயா அவர்களின் சேவையும், தொண்டும் புதுவை மண்ணில் இன்றும் என்றும் நிலைத்திருக்கும். K.G.S. ஐயா, அம்மா அவர்களின் ஆசீர்வாதத்தால் என்றும் அவர்களின் நினைவுடன் வாழும் அன்பு மகள்,
அ/நி. K. ஜெயலட்சுமி கிருஷ்ணசாமி –
K. Jayalakshmi
Plot no 87, Ramanan street,
Sudhna nagar,
Pondicherry
வாழ்க வளமுடன்
— அ/நி ஜெயலட்சுமி புதுச்சேரி 6 May 2017