A remembrance
ஐயா அவர்களை நான் சந்தித்தது 1991 ஆம் வருடம் ஒரு காய கல்ப பயிற்சியின் போது எங்கள் வீட்டின் பின்புறத்தில் குடியிருந்த மல்லிகா மணிவாசகம் அக்கா அவர்கள் என்னையும், என்தாயாரையும் சந்திக்க வைத்தார். அந்த பயிற்சி திருவாரூரில் உள்ள PRM திருமண மஹாலில் நடந்தது. நாங்கள் சென்ற போது மண்டபம் நிரம்பி இருந்தது. யாரோ புதுவை பேராசிரியர் K.G. சாமி வந்திருப்பதாகவும், சிறப்பாக சொற்பொழ்வு ஆற்றுவார் என்றும் பேசிக்கொண்டார்கள். அவரை நேரில் சந்திப்பதே பெரிய விஷயம், சந்தித்தால் நம் மனக்குறைகள் தீர்ந்து போகும் என்றும் கூறினார்கள்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்து. இந்த கட்டத்தில் நாம் எங்கு சந்திக்க போகிறோம் என்று எண்ணி இருந்தேன். என்னை விட என் தாயாருக்கு சந்திப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. பச்சை கலர் ஜிப்பா பட்டை வைத்த வேஷ்டி கட்டி பெரிய தாடி வைத்து இருந்தார். பார்ப்பதற்கு ஏதோ மந்திரவாதிபோல் இருந்தார். அருகில் செல்ல பயமாக இருந்தது. அந்த சமயம் பார்க்காமல் வீட்டிற்கு வந்துவிட்டோம். அடுத்த நாள் ஐயாவுக்கு இரவு உணவு மல்லிகா அக்கா வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இன்று எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று என் தாயார் என்னை அழைத்துச் சென்றார். அங்கு இருந்தவர்களுக்கு காப்பு கயிறு கட்டிக்கொண்டு இருந்தார். நான் பயத்தில் மறைவாக நின்று கொண்டு இருந்தேன். அம்மா என்னை அழைத்து கீழே உட்கார வைத்தார்கள். எனக்கு காப்பு கயிறு கட்டினார். அப்போது எனக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று எண்ணி இருந்தேன். நீ நினைப்பதைவிட வேறு ஒன்று கிடைக்கப்பெறுவாய் என்று கூறினார். எனக்கு புரியவில்லை.
பிறகு ஒருநாள் வீட்டிற்கு அம்மா அவர்களுடன் வந்து சர்வ வஸ்ய தனாகர்ஷண பூஜை செய்தார். நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார். உன் ஆழ் மனம் மிகவும் நல்லமனமாக இருக்கிறது என்று கூறிவிட்டு என் புகைப்படத்தை தெரியாமல் எடுத்து வந்த மல்லிகா மணிவாசகம் அவர்களிடம் கலந்து பேசி எங்கள் குடும்ப விஷயங்களை தெரிந்து கொண்டு மற்றும் திருவாரூரில் அப்போது பொறுப்பாசிரியராக இருந்த மு.ரா. சன்ஸ் ஐயா அவர்கள் மூலம் தன் மூத்த மகனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்திருக்கிறார். பிறகு தான் பேராசிரியர் ஐயா அவர்கள் எனக்கு மாமனார் ஆகப்போகிறார் என்று தெரிந்தது. திருமணம் முடிவானதும் மணம் முடிக்க மூன்று மாதங்கள் இருந்தது. அதற்குள் அகத்தாய்வு மூன்று நிலைகள், விளக்குப் பயிற்சி, கண்ணாடி பயிற்சி அனைத்து பயிற்சிகளையும் மிக வேகமாக கற்றுக் கொடுத்தார். அருட்காப்பு போடுவது, பாஸஸ் கொடுப்பது அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். திருவாரூரை சுற்றியுள்ள இடங்களிலேயே பயிற்சி வகுப்புகள் நடத்தியதால் விரைவில் கற்றுக்கொள்ள முடிந்தது. சினம் தவித்தல், குடும்ப அமைதி, மனம், நான் யார்? மனித நேயமும், கடமையும், இன்னும் நிறைய தலைப்புகளில் சிந்தனை உரையில் (மாமாவின்) கேட்டிருக்கிறேன். குருவானவர் மாமனார் ஆகியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதும் மரியாதை கலந்த பயம் இருக்கும். பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிவுறுத்துவார். சில நேரங்களில் சிந்திக்கும் போது மெதுவாக புரியும். மாமாவை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். மகரிஷியை திருமணத்திற்கு முன்பு மூன்று முறை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருக்கின்றேன். மகன் வேறு மாநிலத்தில் பணியில் இருந்தால் நான் திருமணம் முடிந்து வெகுதூரம் சென்று விடுவேன் என்று பக்கத்தில் வைத்து பார்க்க முடியாதே என்று வருத்தப்படுவார். அதிக பாசத்துடன் இருப்பார். அவர் செல்லும் இடத்திற்கெல்லாம் கூடவே பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். எங்கு சென்றாலும் வீட்டிலிருந்து சாப்பாடு கட்டி எடுத்துச் செல்வேன். மன்றத்து அன்பர்களிடம் என்னை அறிமுகப் படுத்தி வைத்தார். நான் மாமாவுடன் நிறைய பிரயாணம் செய்து இருக்கிறேன். மகரிஷியின் குறிப்புக் கதைகளாக சொல்லிக் கொண்டே வருவார். மகிழ்ச்சியாக இருக்கும்.
எங்கள் திருமணம் 1992-ல் செப்டம்பர் 9 ஆம் நாள் 9-9-1992-ல் மன்றத்து முறைப்படி மகரிஷியின் ஆசீர்வாதத்துடன் நடந்தது. திருமணத்திற்கு மாமா செல்லும் அனைத்து ஊர்களில் இருந்தும் மன்றத்து அன்பர்கள் வந்து வாழ்த்தினார்கள் எங்கள் திருமணத்தை காரைக்கால் பேராசிரியர் திரு இராமச்சந்திரன் ஐயா அவர்களின் தலைமையில் நடந்தது. திருமணப் பத்திரிக்கையே மன்றத்து தொகுப்புடன் மிகவும் சிறப்பாக இருந்தது. அன்பொளியில் மாமாவின் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார்கள். அம்மாவுடன் பணி செய்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எங்கள் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது. என் கணவரின் தம்பிகள் இருவர் சிறுவர்களாக 10 வயது, 11 வயது என்று இருந்தார்கள். காலையில் பள்ளிக்கு கிளம்புவதை பார்க்கும் போது தாய் வீட்டு சூழ்நிலை மாறாமல் இருந்ததால் புதிதாக எதுவும் தெரியவில்லை.
குருவானவர் மாமனார் ஆனால், பின்பு மீண்டும் தந்தையாகவே நினைத்து அவருக்கு எந்த செயலை செய்தாலும் மனம் மகிழ்ச்சியோடு செய்தேன். என்னை திருமணத்திற்கு பின்பு ‘அம்மா’ என்றே அழைப்பார்.
மாமா பெண் குழந்தைகள் மீது அன்பாக இருப்பார். பெண்களை மதிக்கத் தெரிந்தவர். 1994 – ல் பிப்ரவரி 12 ஆம் தேதி எனது முதல் மகள் பிறந்தாள். அவளுக்கு கனகலதா என்று பெயரிட்டார். எப்போதும் குழந்தையை கையில் வைத்து கொண்டு வாழ்த்திக் கொண்டே இருப்பார். தாத்தாவும் பேத்தியும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். நான் இங்கு 3 மாதம் முடிந்து ராஜஸ்தான் சென்றுவிட்டேன். குழந்தையை பார்க்க மாமா, அத்தை, இனியன், அருண், குரு அனைவரும் வந்து இருந்தார்கள். அந்த நாட்கள் மிகவும் இனிமையாக சென்றது. மாமா இந்தியில் பேச ஆசைப்பட்டு ஏதாவது ஒரு வார்த்தையை கூறி அர்த்தம் கேட்டு தெரிந்து கொள்வார். எனது இரண்டாவது குழந்தை பெங்களூரில் பிறந்தது. அன்னை லோகாம்பாள் நினைவாக கனகலோகா என்று பெயரிட்டு மகிழ்ந்தார். தனது இரண்டு பேத்திகளையும் இரண்டு பக்கமும் உட்கார வைத்துக்கொண்டு வாழ்த்திக் கொண்டே இருப்பார்.
மாமாவுக்கு ஒருமுறை அதிகமான கால்வலி. நான் எண்ணெய் தடவி விட்டேன். என் கையில் ஜீவகாந்தம் அதிகமாக இருக்கிறது. எனக்கு கால்வலி சரியாகிவிட்டது என்று கூறினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எந்த மருமகப்பெண்ணும் மாமனாருக்கு இப்படி பணிவிடை செய்யமாட்டார்கள். நீ மன்றத்து பெண்ணாக அமைந்ததால் மிக சாதாரணமாக செய்துவிட்டாய் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அத்தையும் அதே போல் எழுந்திருக்கவே இயலாத நிலையில் இருக்கும் போது அவர்களை குளிக்க வைத்து தலைபிண்ணி, பொட்டு வைத்து விடுவேன். அவர்கள் கண் கலங்கும். இயற்கையிலேயே நான் மிகவும் அமைதி, பொறுமை, மற்றவர்களுக்கு உதவி செய்தல் தெய்வபக்தி என்று தான் என்னை என் தாய், தந்தை வளர்த்தார்கள். மன்றத்தில் சேர்ந்ததால் மேலும் பொறுமையாகி விட்டேன்.
மாமா உணவருந்திவிட்டு எழுந்திருக்கும் போது “இவ்வுணவு அளித்தோர் எவ்வகையாலும் ஏற்றமாய் வாழ்க” என்று வாழ்த்திவிட்டு தான் எழுந்திருப்பார்.
’ஹோமியோபதி மருத்துவம்’ என்னும் கடலில் மூழ்கி சிறப்பாக தொண்டாற்றி வரும் என் கணவருடனும், குழந்தைகளுடனும் ஆனந்தமாய் இருக்கிறேன். எனக்கு பிறந்த நாள் என்றால் மாமா ஒரு கவரில் பக்கம் முழுக்க ‘முத்துச்செல்வி வாழ்க வளமுடன்’ என்று எழுதி அனுப்புவார். அதையெல்லாம் மறக்கவே இயலாது. இப்போது மாமா, அத்தை இருவருக்கும் நினைவு நாள் வரும்போது என்னை அறியாமல் கண்ணீர் வரும். வீட்டில் மாமா, அத்தை பயன்படுத்திய பொருட்களை பார்க்கும் போது அவர்கள் இன்னும் வாழ்த்திக் கொண்டே இருப்பது போல் தான் தோன்றுகிறது. என்றும் வாழும் தெய்வமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மாமாவின் நினைவாக தினமும் காலையில் நான் செய்வது அவரது செல்வங்கலான
கனக அருண்மொழியும் அவரது குடும்பமும் வாழ்க வளமுடன்
கனக ஞான குரு அவரது குடும்பமும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.
மகரிஷியின் குறிப்புகளை மக்களுக்கு புரியும் வகையில் ராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி, நாலாயிர திவ்ய பிரபந்தம், அதில் உள்ள பாடல் வரிகளுடன் பொருளுடனும், அன்றாட வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு விளக்கம் கொடுப்பதில் மாமாவை தவிர வேறு யாராலும் இயலாது என்றே நினைக்கின்றேன். திருவள்ளுவர் காலத்தில் தானும் பிறக்கவில்லையே என்று எண்ணி வருந்துவார்.
நம் அன்றாட வாழ்வில் அருட்பேறாற்றல் உதவி செய்வதை என்னால் உணர முடிகிறது. மாமாவின் நினைவு தினம் அன்று புத்தகம் வெளியிட்டமைக்கு அதன் ஆசிரியருக்கு நன்றி. மாமாவை பற்றி எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்தமைக்கும் நன்றி. உலக சமுதாய சேவா சங்கம் வாழ்க வளமுடன்.
ஆழியாறு அறிவுத்திருக்கோவில் வாழ்க வளமுடன்.
வேதாத்திரியம் வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
அன்புடன்
திருமதி. முத்துச்செல்வி கனக திருமேனி
— அ/நி முத்துச்செல்வி திருமேனி புதுச்சேரி 6 May 2017