KG Sami1937 — 2006

நீங்கா நினைவுகள்

A remembrance

நான் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவன். மனவளக்கலைப் பேராசிரியர் K.G. சாமி அய்யா அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் மன்றத்திற்குச் செய்த அர்ப்பணிப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு இதை எழுதுகிறேன்.

மன்றங்களின் வளர்ச்சி:-

     ஈரோடு நகரப் பகுதி மற்றும் ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் பதினைந்து முதல் இருபது மன்றங்கள் இருக்கும். எல்லா மன்றங்களுக்கும் மாதமொரு முறை தவறாமல் அய்யா KGS போய் வருவார். அந்த மன்றங்கள் எல்லாம் அந்தச் சமயத்தில்தான் தொடங்கப்பட்டன. தொடர்ந்து சுமார் ஒரு பத்தாண்டுகள் சென்று தன் சிந்தனையின் மூலமாக அம்மன்றங்களை அய்யா வளர்த்துவிட்டார். இத்தைகைய மன்றங்களில் பாதி அறிவுத்திருக்கோயில்களாகவும் பல கிளைகளைக் கொண்டும் உள்ளன. மன்றத்தை மட்டும் அல்ல; அப்பொழுது இருந்த மன்ற அன்பர்கள்தாம் தற்போதைய மன்றப் பொறுப்பாளர்களாகவும் துணைப்பேராசிரியர்களாகவும் உள்ளனர். அவர்கள் அவரிடம் பாடங் கேட்டவர்கள். ஓரளவிற்குப் பாடங்களை விளக்கியும் சொல்கிறார்கள்.

     எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் சகிப்புத்தன்மையோடு மன்றங்களை நடத்தியும் வருகின்றனர். அய்யா KGS அவர்கள் கொடுத்த ஊக்கமே அதற்குக் காரணம். அய்யா கொடுத்த முறையில் தான் இன்னமும் அகத்தாய்வையும் சிந்தனை விருந்தையும் நாங்கள் மன்றங்களில் கொடுத்து வருகின்றோம். புத்தகத்தப் படித்துக் கொண்டே பாடம் நடத்துவது எமக்குத் தெரியாது.

     இப்போது வந்து அந்த பொறுப்பாளர்களிடம் கேட்டாலும் சொல்வார்கள்.

“நீங்கள் யாரிடம் பயிற்சி எடுத்துக்

கொண்டீர்கள்?” என்று கேட்டால்,

’அய்யா K.G. சாமி’ என்று உடனே பதில்வரும். அதாவது ஒவ்வொரு ஊராகச் சென்று மனவளக்கலை விதையை ஊன்றி, மாதந்தோறும் சென்று ‘உழைப்பு’த் தண்ணீர் ஊற்றி மனவளக்கலைச் செடியை மரமாக வளர்த்துள்ளார். இது நிதர்சனமான உண்மை.

ஈரோடு என்றில்லை. மற்ற ஊர்களிலும் உள்ள அன்பர்களின் கருத்துக்களைத் தொகுத்தால் இரண்டு, மூன்று புத்தகங்கள் போட வேண்டியிருக்கும்.

பயிற்சிகள்:-

     மாலை நேர அருளுரை வழங்கினால் ஒரு தலைப்பில் மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் கொடுப்பார். அருளுரையின் ஆரம்பத்திலேயே அவரோடு மனதளவில் இணைந்து கொள்வோம்.

     செல்போன் பேசவோ சும்மாவோ யாரும் எழுந்துப் போக மாட்டார்கள். தலைப்போடு தொடர்புடைய நடைமுறை வாழ்வின் உதாரணங்களை அழகாகச் சொல்வார்கள். தானே வாதியாகவும் பிரதிவாதியாகவும் இருந்துப் பேசுவார். தன் அனுபவத்தையும் அதனுடன் இணைப்பார். மற்ற நூல்களில் இருந்து மேற்கோள்களைச் சேர்ப்பார். பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் நிலைமைகளைக் கலப்பார். இப்படியாக ஓர் ஆலோசனை நடத்திவிட்டு மகரிஷி அவர்களின் கருத்தை அந்த இடத்தில் இணைத்து முடிவாக விஷயத்தை நிறைவு செய்வார். “ஓ… இதுக்கு இதுதான் பதிலா…” என்றிருக்கும் தேவையான இடத்தில் பழைய சினிமா பாடல்வரிகளை இணைத்துப் பேசுவார். மிகவும் சுவையானதாக அவர் உரை அமையும்.

அகத்தாய்வுகள், தவ விளக்கம், தத்துவ விளக்கம் என்று மிகவும் திரட்சியான வகுப்புகளை நடத்துவார். இரண்டு நாட்கள் முழுமையாக ஆறு அமர்வுகள் இருக்கும். இரண்டாவது நாள் மாலை கடுமையான தலைவலி வந்துவிடும். மூளையைத் திருப்பிப் போட்ட மாதிரியாக இருக்கும். அகத்தாய்வுப் பயிற்சிகளுக்குத் தாமதமாக வந்தால் உள்ளே விட மாட்டார். ‘சான்றிதழ் கொடுக்க மாட்டேன்’, என்பார். வகுப்புகள் விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பார். கண்ணாடிப் பயிற்சி, தீபப் பயிற்சி இவைகளை விடிந்தபின்பு நடத்த மாட்டார். விடிந்தபின் நடத்துவது என்றால் வேரொருவரை வைத்து வகுப்பை நடத்துங்கள் என்பார்.

கொடுத்த தேதியை மாற்றமாட்டார்; திரும்பப் பெறவும் மாட்டார். உடன் பாதிப்பை எல்லாம் தாங்கிக் கொண்டு வகுப்பு நடத்துவார். ‘வேதாத்திரியம்’ பாடத்திலே நன்கு தோய்ந்தவர். பாட ரீதியான சந்தேகங்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்.

மனவளக்கலை தத்துவ விசாரங்களில் ‘KGS’ அய்யா ஒரு ஜாம்பவான் என்றே சொல்லலாம்.

சில அனுபவங்கள்:

     ஒரு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குச் சிந்தனை உரை துவங்கியது. உடனே மின்சாரம் துண்டிக்கப் பட்டு விட்டது. ஒரு மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக்கொண்டு பேசினார். காற்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு மணி நேரம் கனத்த மழை. மழை நின்றவுடன் கீழே வந்தால் மன்றத்தைச் சுற்றிலும் வெள்ளம். எட்டு மணி 10 நிமிடத்தில் பேருந்து ஒன்று வரும். அதை விட்டுவிட்டால் இரவு 10 மணிக்குத்தான் பேருந்து. அதனால் பையையும் அவருடைய மிதியடிகளையும் நான் எடுத்துக் கொண்டேன். வேட்டியை இடுப்புவரை மடித்துக் கட்டிக் கொண்டார். இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டே வந்தோம். மழை வெள்ளத்தில் தண்ணீர் இழுத்தது. சிரமப்பட்டு வந்தோம். அவருடைய உள்ளாடைகள் எல்லாம் நனைந்து விட்டன. அப்படியே ஈரத்துடன் வேட்டியைக் கட்டிக்கொண்டு பேருந்தில் ஏறினார்.

மேலும் எங்கள் மன்றம் இரண்டாவது தளம் மொட்டை மாடியில் உள்ளது. படிகள் செங்குத்தாக இருக்கும். அய்யா படிகளில் ஏற சற்றே சிரமப்படுவார். ஆகவே கீழே முதல்படியில் அவர் நின்று கொள்வார். அதற்குக் கீழ்ப்படியில் நான் நின்று கொள்வேன். என் தோள் மீது கையை வத்து ஊன்றிக் கொண்டே இருவரும் சேர்ந்தாற்போல மேல் மாடி வரை போவோம். மேலே போய் 5 நிமிடம் நின்று இளைப்பாறி விட்டுப் பிறகுதான் உள்ளே வருவார். “அய்யா எதுக்குங்க இவ்வளவு கஷ்டப் படுறீங்க” என்று கேட்டால், “தம்பீ! இந்த உடம்பு எவ்வளவு தூரம் போக முடியுமோ போகட்டும். எப்போ முடியாது போகுதோ அப்போ நின்னுக்கிறேன்”, என்று சொல்வார்.

ஒருமுறை அகத்தாய்வுப் பயிற்சி வகுப்பிற்கு வந்திருந்தார். வந்த நாளன்றே அவருக்கு ‘டைபாய்டு’ காய்ச்சல், அதனால் ஈரோடு போக முடியாமல் ‘சோமு’ என்பவர் வீட்டில் தங்கி விட்டார். 3 நாட்கள் அந்த வீட்டுப் பெண்கள் அவரை நல்ல முறையில் கவனித்துக் கொண்டனர்.

அந்தப் பெண்களுக்குத் திருமணமாகியது. ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார். அந்தப் பெண்ணிற்குப் பிரசவம் முடியும் வரை மாதாமாதம் வரும்போது போய்ப் பார்ப்பார். மருந்துகள் கொடுப்பார். (Passes) பாசஸ் கொடுப்பார். நல்ல முறையில் குழந்தை பிறந்தது. அவரின் நன்றியுணர்வு இதன் மூலம் தெரிகிறது.

ஒருமுறை திருச்சி சுந்தர்ராஜன் அவர்கள் ஈரோடு அகத்தாய்விற்காக வந்திருந்தார். அய்யா வீட்டில்தான் தங்கினார். நான் ஒரு சில ‘சிவகிரி’ நண்பர்கள் உட்பட 11 பேர் அவர் வீட்டில் தங்கினோம் . அய்யாவிடம் கேட்டோம். “மன்றத்துப் பிள்ளைகளா? அதுக்கென்ன நல்லா தங்கிக் கொள்ளுங்க”, என்றார். மேலும் அனைவருக்கும் காபி, சிற்றுண்டி என்று நல்ல முறையில் உபசரித்தார். அடுத்த நாள் காலை அய்யாவுடன் சேர்ந்து 11 பேரும் ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டி சாப்பிடாதும் என்றுமே மறக்க முடியாது நிகழ்வு. சிவகிரி அன்பர்கள் அடிக்கடி அவரோடு இரவு தங்குவார்ர்கள். அய்யாவிற்கு உதவியாக யோகேசுவரி என்ற பெண்ணும், சரவணன் என்ற தம்பியும் இருந்தனர். யோகேசுவரி அய்யாவைத் ‘தாத்தா’ என்றுதான் அழைக்கும். “இறப்பிற்குப்பின் தாத்தாவை எங்கள் தோட்டத்தில் அடக்கம் செய்கிறோம்”, என்று கூட அந்தப்பெண் கேட்டாள்.

இறப்பிற்குப் பின் அவரை நல்ல முறையில் நினைவிடம் அமத்து அடக்கம் செய்யலாம் என்று எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இறுதியில் காவிரிக் கரையில் இட்டுவிட்டனர்.

மனவளக்கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருக்கு (தன்னையே அழித்துக் கொண்டவருக்கு) இந்த நிலையா என்று மனம் இன்றுவரை கனத்துக் கொண்டே இருக்கிறது. அவரின் நினைவுகள் என்றுமே எங்கள் மனதைவிட்டு நீங்கா.

— அ/நி இரவிக்குமார் அந்தியூர் 16 May 2014

More voices

Others who remembered him

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இறைவனை வேண்டினேன் வாழ்க்கை வளமுடன் வேண்டும் என்று அதற்கு இறைவன் கொடுத்தான் எனக்கு வாழ்க்கை வளமுடன் இருக்க அதோ வேதாத்ரி என தொண்டன் உள்ளார் என்றார். என் குருவின்…

— ச. பூங்கோதை சென்னை

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

உள்ளுணர்வுநமது KG ஐயா பயிற்சிக்கு ஒத்துக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் தவறாது கலந்து கொள்வார். கிராம மன்றம், பெரிய அறிவுத்திருக்கோயில் என்ற பாகுபாடின்றி…

— A disciple

உயிருள்ளவரை KGS நினைவிருக்கும்

அன்புடையீர், வணக்கம். K.G. சாமி ஐயாவைப் பற்றிய என்னுடைய அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஐயாவுடன்…

— அ/நி, ர. வசந்தி குமாரபாளையம்

குரு பரம்பரையை உருவாக்கியவர் KGS

முன்னுரை:-ஒரு குழந்தையை கண்டு பெற்றோரின் குணாதிசயம் காண்பது போல, மாணவரைக் கொண்டு ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவது போல ஊழியரைக் கொண்டு முதலாளியை எடைபோடுவது போல,…

— அ/நி V.S. பிரபாகரன் ஊத்துக்குளி

மனவளக்கலையை வளர்த்த பெரியவர் KGS

நான் மனவளக்கலை மன்றத்தில் 1983 ஆம் ஆண்டு பயிற்சிக்குச் சேர்ந்தேன். அய்யாவோடு முதல் சந்திப்பு 1986 இல் ஈரோட்டில் நிகழ்ந்தது. அப்போது ஈரோடு மன்றத்தின் சார்பாக…

— அ/நி சுந்தர்ராஜன் திருச்சி

Kavithai - சமர்ப்பணம்

என்னைத் தொட்டே என்னுள் என்கோசுருண்டு கிடந்த சூக்கும சக்தியைத்தங்களின் தவக்கனல் தட்டி எழுப்பியதுகுருவே!உம் ஆற்றலால் புருவ மத்தியில்விழித்தது ஆற்றல்; விழித்தன…

— அ/நி திருவளவன் புதுச்சேரி