A remembrance
நெடிய உருவம், தாடி, விடைத்த மூக்கு, சற்று கண்டிப்பான முகத் தோற்றம், மூக்குக் கண்ணாடியுள் கூர்மையான ஊடுருவும் பார்வை, ஜிப்பா, கனுக்கால் தொடும் வேட்டி, மஞ்சள் துண்டு, பிராவகமாக எழும் சிந்தனைகள். பார்ப்பவர் மனதின் சற்று பயம் கலந்த மரியாதையை தானே வரவழைத்துக் கொள்ளும் அம்சம் பொருந்தியவர்.
எமக்கு இந்த தோற்றமுள்ள ‘இவர்தான்’ முதல் நிலை அகத்தாய்வு நடத்த வந்தார். பட்ட படிப்பு முடிந்த பின்னாலும் இவர் சொன்ன விளக்கங்கள் ‘எங்கோ’ அழைத்துச் சென்றன. எங்களையே கேள்வி கேட்டு பதிலும் தந்த பாணி பல அன்பர்களை அவரிடம் ஈர்த்தது.
நான் அப்போது சரியான அசைவப் பிரியர். எப்படியும் வாரத்தில் 3 நாட்கள் ‘விழுங்கி’ விடுவேன். இந்தப் பயிற்சி நடந்ததும் சனி, ஞாயிறு தினங்களில் தான். ஆன்மீகத்திற்கான உணவு முறை பற்றியும், மனித வயிறு மென்மையான வயிறு, கடுமையான வயிறு, நடுவான வயிறு என்ற விளக்கத்தையும் கொடுத்தார். காரம்; புளி அதிகமாகப் போனாலே மென்மையான வயிறு கெடும் என்றும், நடுமையான வயிறு மசாலா முதல் அசைவம் வரை கொஞ்சம் திணறி ஜீரணிக்கும் எனவும் கெட்டு போகும் எனவும் விளக்கம் கொடுத்தார்.
உணவில் ‘பாவப்பதிவு’ எப்படி பதிவாகிறது எனச் சொல்லி, ‘கொக்கி பல்’ மிருகங்களுக்கே தவிர மனிதர்களுக்கு ஏன் இல்லை? என்ற கேள்வி கேட்டு மாமிசத்தை கிழித்து, இழுத்து சாப்பிடவே கொக்கி பல், அது விழுங்கும் சாப்பிடாது என்று கூறி, மனித பற்களோ அரைப்பதற்கானவை. இழுக்கவோ, கிழிக்கவோ இல்லை எனக் கூறி மகரிஷிகளின் கருத்தை பதிய வைத்தார். இறந்த பிணங்களை எங்கு புதைப்பார்கள்?” எனக் கேட்டார். நாங்கள் சுடுகாட்டில் என்றோம். புதைக்கும் குழிக்கு பெயர் என்ன? ‘சவக்குழி’ என்றோம். அப்படியா சரி இறந்தவற்றை என்ன சொல்வீர்கள்? என்றார். பிணம் என்றோம். அதை அடக்கமாக்கும் இடத்துக்கு என்ன பெயர்? - என்றார். இடுகாடு, புதைகுழி என்றோம். அப்படியானால் இறந்ததை சாப்பிடும் நீங்கள் யார்? அதை வாங்கி கொள்ளும் இடத்துக்கு என்ன பெயர்? என்றார் நாங்கள் அதிர்ச்சியுடன் வெட்கத்தால் தலை குனிந்தோம். அப்படி உங்களுக்கு சதை ருசி தேவைப்பட்டால், உங்கள் உடம்பில் அதிகமாக உள்ள தசையை அறுத்து எண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட வேண்டியது தானே? எதற்கு பிற உயிரினப் வாழும் சுதந்திரத்தை பறிக்கனும்? என்றார். இதற்கான திருக்குறளையும் மேற்கோள் காட்டினார். எனது மனதுள் இடி இறங்கியது போல் இருந்தது… அவரின் கூர்மையான பார்வை என் மனதை ஊடுருவியது…
எந்த உயிரும் வலுக்கட்டாயமாக இறக்கும்போது தவித்துத்தான் உயிரை விடும் என்றார்… அம்மா என அலறித்தான் உயிர் விடும்… அந்த ‘உயிர் துன்பம்’ சாப்பிடும் நபரின் ஒவ்வொரு ‘செல்லிலும்’ பதியும்- பின் நீயும், உனது தலை முறையும் அதன் பாவத்தை அனுபவித்தே தீர்க்க வேண்டும். இது உடலுக்கு ஒத்து வருமா? ஏற்குமா? யோசியுங்கள் என்றதும்…
என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்தது… அன்று விட்டவன்தான்… அசைவம் ஈர்ப்பு போய் இரக்கம் வந்தது… உணர்த்தி மகரிஷிகளின் கருத்தை ஆணித்தரமாக பதிய வைத்தவர் பேராசிரியர் K.G.S. மேலும், அப்படி பிற உயிர்களை கொல்லாதிருப்பவனை பார்த்து பிற உயிர்கள் கைகூப்பி தொழும் என்றார். இந்த வகுப்பை இத்தனை வருடங்களுக்குப் பின்னால் இன்னமும் மறக்க இயலவில்லை…
மற்றொரு சம்பவம்…
சிறிய மன்றமாயினும், தவமையமானாலும் சிந்தனை விடுத்து தர தவறாது செல்பவர் பேராசிரியர். K.G.S. அவர்கள். ஒரு முறை ஒரு தவமையத்திற்கு சென்றுள்ளார். அங்கு முன்வரிசையில் ஒரு பெண் அமர்ந்துள்ளார். அவரிடம் இவர் திடீரென, ‘உன் அப்பா யார்?’ எனக் கேட்க, அவர் மன்ற பொறுப்பாசிரியர் எனக் கூற ‘உன் அப்பாவை என்னை வீட்டில் வந்து பார்க்க சொல், அவசரம்’ என கூறிச் சென்று விட்டார்.
அப்பெண்ணின் தந்தை வருவது பற்றி கூறி, இவரை சந்திக்க, உங்கள் பெண்ணுக்கு திருமணம் தள்ளி, தள்ளி போகிறதா என கேட்டுள்ளார். ‘ஆமாம்’ என அவர் கூற, அப்படித்தான் ஆகும்… சரி ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வந்து வாழ்த்து தவம் வைத்து சரிசெய்வோம் என்றார். அதன்படியே நடந்தது.. தவம் முடிந்து, இன்னும் மூன்று பார்த்தேன் ஒரு வரன் வரும்.. அது அமைந்து விடும் பாருங்கள் என்று சொல்லி வந்து விட்டார். என்ன சரியான கணிப்பு? அதன்படியே அந்த பெண்ணுக்கு வரன் அமைந்து விட்டது. அவர் அப்பெண்ணின் ஜாதகத்தை ஒருவரிடம் இது குறித்து காண்பித்துள்ளார்.. அவர் பார்த்துவிட்டு, இது திருமண யோகம் வராத ஜாதகமாயிற்றே… மிகுந்த சிரமம் திருமணம் நடப்பது எனக் கூறி, எப்படி fix ஆனது? எனக் கேட்டுள்ளார். நமது தவமைய பொறுப்பாசிரியர், K.G.S. ஐயா பற்றி கூற இதோடு அவர் இரண்டாவது வரனை இப்படி மாற்றி காட்டுகிறார் – இது போன்ற நபர்கள் அரிது எனக் கூறி, அவர் சொல்லியது சரிதான் – இந்த மாப்பிள்ளையை fix செய்யலாம் எனக்கூறியுள்ளார். அதே போன்று திருமணப் பத்திரிக்கைய கொடுத்த போது, நாம் திருமணத்திற்கு வர இயலாது… ஆனால், முகூர்த்தம் முடிந்தவுடன், அடுத்த இரண்டுமணி நேரத்துக்குள் மாப்பிள்ளை, பெண் உனது வீட்டிற்கு வந்து விட வேண்டும். அங்கு நாம் வந்து வாழ்த்துவேன். இதை என்ன ஆனாலும் நீங்க மாற்றக் கூடாது என அன்பும் கட்டளையிட்டுள்ளார். அதன் படியே பொறுப்பாசிரியர் செய்துள்ளார். இன்று மகிழ்ச்சியான குடும்பமாக உள்ளார்கள். அப்பெண் திருமணம் பற்றி சொல்லாமலேயே, உள்ளுணர்வு மூலம் உணர்ந்து தானாக துன்பம் நீக்கியவர் K.G.S. அவர் அடிக்கடி ”நமது மகரிஷிகள் இல்லாது போனால் ஆன்மீகம் தட்டுதடுமாறி நின்றிருக்கும். அதுவும் நானெல்லாம் ‘உருப்பட’ வாய்ப்பே கிடையாது” என்றார்.
நான் அருள்நிதி பயிற்சி முடித்த பின், பிற தவமையங்களில் பயிற்சி, சிந்தனை விருந்து என அனுப்ப, திடீரென ஒருநாள் பொறுப்பாசிரியர், உங்களை K.G.S. ஐயா பார்க்கனும் என்றார். வீட்டிற்கு வரச் சொன்னார் என்றார்கள். “என்னையா? எதற்கு?” என கொஞ்சம் தயங்கினேன். போயிட்டுவாங்க வாங்க… என மீண்டும் கூறினர்.
இரண்டு நாள் கழித்து மாலை சுமார் 7.00 மணிக்கு அவரின் வீட்டிற்கு சென்றேன். கொஞ்சம் பலமாகவே கதவைத் தட்டினேன்… ஒரு இரண்டு நிமிடம் கழித்து, கதவு திறந்தது…
கண்ணாடியில்லாமல் மேல் சட்டையில்லாமல், இருந்தார்… என்ன என்றார்.. அய்யா எனது பெயர் பாரதி, தாங்கள் வரச் சொன்னீர்கள் என மன்றத்தில் சொன்னார்கள் அதுதான் என்றேன்.
ஓ நீதானா அது.. நான் பாரதி பெயரை பார்த்தவுடன் பெண்ணோ என நினைத்து, ஆன்மீகத்தில் பேச்சும் பெண் யாரது என்பதற்காக வரச் சொன்னேன் சரி… உட்காருங்க… என்றவர். என்னைப்பற்றி விசாரித்தார்- நீ கதவை தட்டிய போது ‘திடும்’ என சத்தம் கேட்டது. நான் தவத்தில் இருந்தேன்.. அதிர்ந்தது என்றார்.. பிறகு ஒரு சிரிப்பு சிரித்து.. நிறைய பேச போறீங்க தம்பி.. சுவாமிஜி புத்தகங்கள் நிறைய முறை திரும்ப திரும்ப படிக்கனும்… வீட்டில் லைப்ரரி உள்ளதா எனக் கேட்டார்… பதில் சொன்னேன்… ”இராமாயணம், மகாபாரதம், பைபிள், குர்-ஆன், திருக்குறள், பாரதியார் கவிதைகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், வரலாறு அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு, இராமகிருஷ்ணர், விவேகானந்தர் உரைகள் இம்மாதிரி நிறைய படிக்கனும் புரிகிறதா” என்றார். அதோடு, பிற மதங்களைத் தாழ்த்தி எக்காரணம் கொண்டும் பேசக் கூடாது.. மகரிஷிகளின் உண்மை பொருள் விலகாது பேசனும். எளிமையான உதாரணங்கள் தரனும்; நேர மேலாண்மை அவசியம் என்றார்.
பிறகு மகிரிஷிகளுடன், இவர் சைக்கிளில் சென்று மனவளக்கலை பயிற்சி நடத்தியதையும் குறிப்பிட்டார். சில இடங்களுக்கு நடந்து போனதையும் குறிப்பார். பிறகு, எனது குடும்பத்தை பற்றி பரிவுடன் கேட்டார். 10 நிமிடம் எனப் போனது… 1 மணி நேரத்திற்கும் மேல் ஆனது.. இவர் தீவிர நாத்திகராக வேலை பார்த்த போது இருந்தார் எனவும், வந்தவர்களை கிண்டல் செய்து நோகடித்தவர், இன்று மகிரிஷிகளால் ஆன்மீகவாதியாக உள்ளார் என்பதையும் கூறி,
நீ பேசுவதை பார்த்து புகழ்வார்கள், மயங்காதே, மயங்கிவிட்டால் உனது பாதை திசைமாறிவிடும். ஆன்மீக உயர்வு தடைபடும் என்றும் கூறினார். தம்பி, அலுவலகப் பணி, குடும்ப கடமை இரண்டும் முக்கியம். பார்த்துக் கொள் என்றார். அப்படியே உள்வாங்கி கொண்டேன்… பிறகு, ஒருநாள் மன்றத்தில் பார்த்தவர், “பாரதி, நீ நன்கு எடுத்துச் சொல்வதாகவும், உதாரணங்கள் தருவதாகவும் தெரிந்து கொண்டேன். வியாக்யானம் நன்றாக உல்லதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் ஒன்னு, தவம் மிக முக்கியம். அதில் அழச் சொல்லனும், அப்புறம் நிறைய சங்கதிகள் உனக்குத் தெரியவரும். பார்த்துக்கொள் என்றார்- சரியென சொல்லி வணங்கினேன்.
இதுபோன்று நிறைய அறிவுரைகள்; அறவுரைகள். மகரிஷிகளின் கருத்து மீது ஆழ்ந்த பற்று: அதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் விலகாதிருந்தது. எங்கு பார்த்தாலும், தம்பி எப்படியுள்ளாய்? என்ற விசாரிப்பு… அன்பு அதே சமயம் கண்டிப்பு: வீட்டின் சூழ்நிலைகளை வெளிக்காட்டாது சிரித்துக் கொண்டே இருந்த மனிதர். KGS… அகதாய்வுகளில் மறக்க இயலாத மனிதர். சித்தர்களின் வாழ்க்கையோடு தம்மை இணைக்க பிரயத்தனப்பட்டவர்.. மனவளக்கலை பயிற்சி நடத்துபவர்களில் ஓர் ஆல விருட்சம். பல விழுதுகளை உருவாக்கிய உள்ளம் கொண்ட மனிதர். பல ‘மனிதர்களை’ அவர்களுக்கே அடையாளம் காட்டியவர்.
வாழ்க வளமுடன்!
— அ/நி சு. பாரதி ஈரோடு 6 May 2017