A remembrance
அன்புள்ள ஐயா,
வணக்கம். வாழ்க வளமுடன்! நீங்களும், திரு. வெ. ஜானகிராமன், அ/நி கோ. சௌந்தரராஜன் மற்றும் சில K.G. சாமி ஐயா சீடர்களும் இணைந்து பேரா. K.G. சாமி ஐயா அவர்களின் பேரில் புத்தகங்கள் எழுதி அவர்களது வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் அறியும்படிச் செய்ய முயற்சி எடுத்ததற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். K.G. சாமி ஐயா அவர்களை மானசீக குருவாக ஏற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்களை பலரால் நேராக பார்த்து, பேசி, உரையாடி முடியாது பலரின் ஏக்கங்களை K.G.S. ஐயா நிறைவேற்றினார்கள் என்று சொன்னால் மிகையாகாது K.G.S ஐயாவிடம் இருந்து நான் கண்டெடுத்த முத்துக்களை இங்கு மாலையாக கோர்க்க முயற்சித்திருக்கிறேன். இதன் மூலம் அவர் தன்னிடம் இருப்பவர்களை எவ்வாறு மேன்மைப்படுத்த முயற்சித்திருக்கிறார் என்பதை உணர முடியும்.
எல்லோராலும் K.G.S ஐயா என்று அன்போடு அழைப்பவரை நானும், எனது தங்கையும் K.G.S தாத்தா என்று தான் அழைப்போம். நான் ஈரோட்டில் உள்ள எல்லக்கடை தவமையத்தில் தான் எனது மனவளக்கலை பயிற்சியை தொடங்கினேன். அப்பொழுது நான் கல்லுரியில் படித்துக் கொண்டிருந்தேன் என்னுள் உள்ள இறைத்தேடலே என்னை மன்றத்தில் ஆழ்ந்த ஈடுபாடு பெறச் செய்தது. நான் துரியதீட்சை எடுத்த அன்று K.G.S தாத்தா சிறப்பு பேச்சாளராக எல்லக்கடை மன்றத்திற்கு வந்தார். அவர் மன்றத்திற்கு வரும் முன்பே எல்லக்கடை மன்ற பொறுப்பாசிரியர், அ/நி. திரு E.T. சொக்கப்பன் அவர்கள் இன்னிக்கு K.G. சாமி ஐயா வர்றாங்க எல்லாரும் வரிசையா உக்காந்துக்குங்க. எங்க எல்லாருக்கும் அவரக் கண்டாதான் கொஞ்சம் பயம் என்றார்.
நான் எந்த வகுப்பிற்கு சென்றாலும் ஆர்வத்தின் காரணமாக முதல் வரிசையில் உட்கார விரும்புவேன். அதனால் எனக்கு K.G.S தாத்தாவைப் பற்றி கூறியவுடன் எனக்கு பயமில்லை. அவர் வகுப்பு முடிந்த பின் கிளம்பும் பொழுது என்னை உட்காரச் சொன்னார். நானும் கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரம் என்ன செய்தார் என்று தெரியவில்லை. பிறகு கண்ணை திறக்கச் சொன்னார். பின்நாளில் தான் அவர் எனக்கு அருட்காப்பும், வாழ்த்தும் கூறினார் என்பதை உணர்ந்து கொண்டேன். இதுவே எங்களது முதல் சந்திப்பு.
எங்களது உறவு எப்படி நெருக்கமானது என்பது எனக்கு தெரியவில்லை. பின் நாளில் எங்கள் ஊர் 60, வேலம்பாளையத்தில் ஒரு தவமையத்தை தொடங்கினோம். அங்கும் K.G.S தாத்தா சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறார்கள். எங்கள் மையத்தில் சர்வவஸ்ய தனா ஆகர்சன சங்கல்பமும் எங்கள் வீட்டில் எங்கள் குடும்ப நலத்திற்காக சர்வவஸ்ய தனா ஆகர்சன் சங்கல்பமும் நடத்தி இருக்கிறார்கள். என்னைப் போன்று பல மன்ற அன்பர்களின் வீட்டில் K.G.S. தாத்தா அவர்கள் சர்வவஸ்யதனா ஆகர்சன சங்கல்பமும், சிலரது வீட்டில் ஆத்மசாந்தி தவமும் நடத்தி இருக்கிறார்கள். நான் K.G.S. தாத்தாவுடன் தான் முதன் முதலில் எல்லக்கடை மன்ற பொறுப்பாசிரியர் திரு. E.T. சொங்கப்பன் ஐயா அவர்கள் தாயாரின் ஆத்ம சாந்தி தவத்தில் கலந்து கொண்டேன். நான் ஆத்ம சாந்தி தவத்தின் முறைகளையும், பயனையும் அறியாத காரணத்தால் அதை தொடங்கும் முன் K.G.S தாத்தாவிடம், தாத்தா எனக்கு பயமா இருக்கு என்றேன். ஆனால் ஆத்மசாந்தி தவம் முடித்தப் பின் தாத்தா! இவ்ளோ தானா என்றேன்.
நான் தாத்தாவிடம் கற்ற பாடங்களை இங்கு எழுதுகிறேன். அது எல்லோருக்குமே தேவையான ஒரு பொது நீதியாகவே இருக்கும் என்பது எனது பணிவான கருத்தாகும். மகாத்மா காந்தியிடம் ஒரு அன்பர், நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு காந்திஜி, ‘My life is my message’ (என் வாழ்க்கையே ஒரு பாடம்) என்றாராம். அது போன்றே K.G.S தாத்தாவின் வாழ்க்கை மட்டும் அல்லாமல் வேதாத்திரி மகரிஷி அவர்கள் காட்டிய உலக சமுதாய சேவா சங்கத்திற்காக தமது வாழ்க்கையை முழுமையாக அர்பனித்த ஒவ்வொரு ஆசிரியரின் வாழ்க்கையும் ஒரு பாடமாகும் என்பது திண்ணம்.
மனதிலே உளதெல்லாம் மற்றெங்கே தேடுவீர்
ஒரு முறை நானும் K.G.S தாத்தாவும் ஆழியார் பயிற்சிக்கு செல்வதாக இருந்தோம். அதற்காக நாங்கள் இருவரும் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் ஏறினோம். அந்தப் பேருந்தில் ஒரு மூன்று பேர் அமரக் கூடிய இருக்கையைத் தவிர மற்ற எல்லா இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்திருந்தார்கள். அந்த மூன்று பேர் அமரக்கூடிய அந்த ஒரு இருக்கையிலும் ஜன்னல் ஓரத்தில் ஒரு நடுவயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி அமர்ந்து இருந்தார்கள். நான் நடுவிலும், K.G.S தாத்தா இருக்கை ஓரத்திலும் அமர்வதாக திட்டம். அவ்வாறே நாங்கள் இருவரும் உட்காரச் சென்ற பொழுது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அம்மையார் தன் கால்களை சிறிது விரித்து இடத்தை அதிகமாக (occupy) ஆக்ரமிக்கச் செய்தார்கள். நானும் தாத்தாவும் சிறிது அசௌகர்யத்துடனே உட்கார்ந்தோம். உடனே அந்தப் பெண்மணி, ’வீட்டில் இருந்தாத் தான் நிம்மதி இல்லன்னா பஸ்ல வந்தாக் கூட நிம்மதி இல்லை’ என்று எங்கள் காதில் விழும்படியாக முனுமுனுத்தார். அதைக் கேட்ட K.G.S தாத்தா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, மனிதிலே உளதெல்லாம் மற்றெங்கே தேடுவீர்’ என்று எனக்கு மட்டும் கேட்கும்படியாக பதில் கூறினார். எவ்வளவு ஆழமான உண்மையான, சுருக்கமான, இடத்திற்குப் பொருத்தமான, வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உணரத் தேவையான பதில் என்பதை உணர்ந்து கொண்டேன்.
உண்மையான அக்கரை
K.G.S தாத்தா ஈரோட்டில் இருந்தபொழுது இரு சக்கர வாகனமான T.V.S. XL Supper வண்டி வைத்திருந்தார். அவர் எப்பொழுது ஈரோடு தலைமை மன்றத்திற்கு வந்தாலும் நானும் தவமையத்தில் இருந்தால், அவர் மன்றத்தில் இருந்து திரும்பிச் செல்லும் பொழுது K.G.S தாத்தா வண்டியை Start செய்து கொடுப்பேன். அவ்வாறு செய்யும் பொழுது ஒருநாள் வெயிலில் நின்று Start செய்தேன். உடனே தாத்தா என்னை நிழலுக்கு அழைத்து பிறகு Start செய்யச் சொன்னார். நானும் அவ்வாறே செய்தேன். அதற்கு தாத்தா, ’உண்மையான அக்கரை வேண்டும்’, என்றார். இந்த வார்த்தை பல நாள், பலமுறை என்னை சிந்திக்கச் செய்திருக்கிறது. அதன் விளைவு, இன்று நான் முடிந்தவரை முக்கால அனுபவம், தற்காலச் சூழ்நிலை, எதிர்கால விளைவு என்ற திரிகாலகாணத்தில் சிந்தித்து செயலாற்றுகிறேன். இந்த உங்களது புத்தக முயற்சிக்கு எனது பங்களிப்பிற்குக் காரணம் இந்த வாக்கியமாகக் கூட இருக்கலாம்.
கத்தியால் புத்தியை தீட்டினார்
ஒருமுறை K.G.S தாத்தா தனது வீட்டில் (N.G.G.O காலணியில் குடியிருந்தார்) நானும் இருந்தபொழுது கத்தியக் குடுடி அம்மா என்றார். நானும் எடுத்துக் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்தார். தாத்தா! கத்திதான கேட்டீங்க! இந்தாங்க என்றேன். மீண்டும் வாங்க மறுத்தார். நான் அவரின் மானசீக பேத்தி ஆயிற்றே! காரணம் விளங்கிற்று. கத்தியில் கைப்பிடியை நான் பிடித்து வெட்டக்கூடிய பகுதியை (sharp edge) அவரிடம் காட்டி கத்தியை முதலில் கொடுத்தேன். அதனால் அவர் வாங்க மறுத்தார். பிறகு வெட்டக்கூடிய பகுதியை நான் பிடித்து, கைப்பிடி பகுதியை அவர் பிடிப்பதற்காக நீட்டினேன். தாத்தா வாங்கிக் கொண்டார். அப்பொழுது தாத்தா உரைத்த நீதி (Moral), “நன்மை பிறருக்கு அளித்து, நட்டத்தை தான் ஏற்று இன்பம் அடைவர்கள், ஈசன் நிலையுணர்ந்தோர்’. தாத்தா கத்தியால் எனது புத்தியை தீட்டினார் என்பது மிகையல்லவே!
திருமணத்திற்குப் பின் குடும்ப அமைதி
ஒருமுறை தாத்தா சென்னிமலை தவமையத்தில் அகத்தாய்வுப் பயிற்சி நடத்திக் கொண்டிருந்தார். நான் இரண்டாம் நாள் (ஞாயிற்று கிழமை) பயிற்சிக்குச் சென்றேன். நான் அப்பொழுது ஆழியாரில் விஷன் பயிற்சி படித்து முடித்திருந்தேன். அப்பொழுது K.G.S தாத்தா சென்னிமலை தவப் பொறுப்பாசிரியரிடம், அடுத்த session தலைப்பு என்ன? என்று கேட்டார். ‘குடும்ப அமைதி’ என்று பொறுப்பாசிரியர் பதிலுரைத்தார். ம்… ம் என்று கூறிய தாத்தா! என்னை சுட்டிக்காட்டி, இன்னும் கல்யாணம் ஆகல. அதனால she is not eligible குடும்ப அமைதியைப் பற்றி பேச முடியாது. அதற்கு அடுத்த session தலைப்பைச் சொல்லுங்க, என்றார். அப்பொழுது தான் எனக்குத் தெரிந்தது, தாத்தா என்னை பேசச் சொல்லப் போகிறார், என்று, அதற்கு அடுத்த session தலைப்பில் நான் சிறிது நேரம் பேசியப் பின், தாத்தா அதே தலைப்பில் தனது விரிவான, ஆழமான பேச்சைத் தொடர்ந்தார். நான் அப்பொழுது சிந்தித்ததெல்லாம், ஏன் நான் குடும்ப அமைதியை பற்றி பேசக்கூடாது? நானும் குடும்பத்தில் மகளாக, எனது தங்கைக்கு சகோதரியாக இருக்கிறேனே! என்று, ஆனால் இப்பொழுது எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். இப்பொழுது எனது அனுபவத்தில் கண்ட உண்மை, ”நிச்சயமாக ஒரு பிரம்மச்சாரியால் ஒரு சம்சாரியின் முழு உணர்வுகள் (அல்லது) பிரச்சனைகளை உணர்ந்து கொள்ள முடியாது” என்பதாகும். வேதாத்திரி மகரிஷி அவர்கள் அடிக்கடி கூர்வார்களாம், என்று K.G.S தாத்தா சொல்வார்கள், “பேசுபவர்கள், பேசிக் கொண்டே தவறுகளைச் செய்தால்; கேட்பவர்கள், கேட்டுக்கொண்டே தவறுகளைச் செய்வார்கள்”. ஒரு சம்சாரியின் பிரச்சனைகளை கண்டிப்பாக திருமணமான ஒரு சம்சாரியால் தான் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கு நமது அருள்தந்தை அவர்களே ஒரு உதாரணமாகும். ’குடும்ப அமைதியைப் பொறுத்தவரை “ஓதி உணர்தல் என்பது திருமணத்திற்குமுன், உணர்ந்து ஓதுதல் என்பது திருமணத்திற்க்குப் பின்” என்பது நான் தாத்தாவிடம் இருந்து கற்றபாடமாகும்.
பார்த்தால் பலாப்பழம் பழகியவர்களுக்கு பலாச்சுலை
நான் ஆழியாரில் vision course படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பயிற்சிக்காக தாத்தா ஆழியார் வந்திருந்தார். நான் தாத்தாவிடம் நன்றாக ஜாலியாக பேசுவதையும், பழகுவதையும் பார்த்த சில அன்பர்கள் என்னிடம் கேட்டனர். “எங்களுக்கு எல்லாம் ஐயாகிட்ட பேசறதுக்கே பயமா இருக்கு. நீங்க எப்படி சகஜமா பேசறீங்க, பழகுறீங்க? இந்த கேள்வி தாத்தாவிடம் கூறிய பொழுது, தாத்தா சிரித்துக் கொண்டே, அம்மா! நான் பார்த்தா பலாப்பழம் மாதிரி. (பலாப்பழம் வெளியில் பார்த்தால் எப்படி இருக்கும். Natural outlook). ஆனால் பழகியவர்களுக்கு பலாப்பழத்துக்கு உள்ள இருக்கிற மாதிரி (சுவையான பழச்சுலையைப் போன்று) என்று பதிலுரைத்தார். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள், “Appearance is Deceptive (உருவத்தால் யாரையும் எடை போடக்கூடாது). இது K.G.S தாத்தாவுக்கும் பொருந்தும்.
நமது செயல் எவ்வாறு இருக்க வேண்டும்?
ஒருமுறை நானும், தாத்தாவும் SKM சித்த மருத்துவமனக்குச் சென்று டாக்டர் குமரானந்தம் அவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது தாத்தா, டாக்டர் cabin ல் அவர் Table மேல் வைத்திருந்த ஒரு வாசகத்தைக் காட்டி என்னைப் படிக்கச் சொன்னார். அதில் உள்ளது என்னவென்றால், It is Important that all your actions should Impress others. அதாவது, ‘நமது செயல்கள் அனைத்தும் எல்லோரது நன்மதிப்பை ஈர்க்கும் படியாக இருக்க வேண்டும்’ என்பதாகும். நமது செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிய அந்த வாசகம் உதவிற்று. தாத்தா அடிக்கடி சொல்லுவார், கண்டதை படித்தால், பண்டிதன் ஆகலாம்; கண்டதை தின்றால் குண்டோதரன் ஆகலாம்”. K.G.S தாத்தாவும் ஒரு பண்டிதன் தான் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். எது யோகம்? ஊருக்கு உழைத்திடல் யோகம் என்பர் அவ்வகையிலே K.G.S வளர்த்த மரங்களான சீடர்கள் இன்று அவருக்கே நிழல் தருகிறார்கள் (புத்தகம் வெளியிடுவதன் மூலமாக) என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘குருவை மிஞ்சிய சீடர்கள் என்ற வழக்கம் உண்டு. எனக்கு மேல என் சிஷ்யர்கள் வளர்ந்தால் நான் சந்தோஷப்படுவேன்’ என்று K.G.S தாத்தா கூறக் கேட்டிருக்கிறேன். உங்கள் முயற்சியில் நிச்சயம் K.G.S தாத்தாவின் சூக்கிமம் மகிழும். அவரே உங்களது முயற்சிக்கு வழிகாட்டுவார்கள். அதற்கு இறை அருளும், குரு அருளும் துணை நிற்கட்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன்.
நன்றி
வாழ்க வளமுடன்
அ/நி. S. யோகேஸ்வரி
— அ/நி. S. யோகேஸ்வரி ஈரோடு 6 May 2017