A remembrance
குருவிற்காக
(21.1.2000 முதல் – 2.5.2006 வரை)
மனவளக்கலை பேராசிரியர் ஐயா KG சாமி அவர்களுடன் நெருங்கிப் பழகிய பல பெரியவர்கள் இருக்க, அவருடனான எனது அனுபவங்களை பகிர்தல் என்பது எனக்கான வாழ்த்தும் வாய்ப்பும் ஆகும்.
”தன்னோடு தானிருந்து
தளைத் தெழுந்த
கேள்விகள் பலநூறு! (KG சாமி)
விண்ணோடு தானிருந்து
விலகி நின்று
விடையளித்த தாரு? (வேதாத்திரி மகரிஷி)
முன்னவரின் கருவோடு
பின்னவரின் கருசேர
முன்னவரும் விண்ணவரே!
இறைவா! இனி என்றும்
அவர்க்கு வினையில்லை
உன் வீடு உண்டு!
தடையின்றி வீற்றிருக்க
தயை செய்வாய்!
தயை செய்வாய்
மேற்கூறிய கவிதை, ஐயாவின் பிறந்த நாளிற்காக நான் எழுதி, அதனை அவரிடம் கூற முற்பட்டேன். ஆனால், அது அவர் சமஸ்தி ஆனதிற்கு பொருந்திவரும் என்று நான் நினைக்கவில்லை.
KG சாமி ஐயாவைப் பற்றிய எனது அனுபவங்களை நான் கீழ்கண்டவாறு எழுத விரும்புகின்றேன். உயர்ந்த கருத்துக்களாக இருப்பின் அவரது சாதனைகளாக எடுத்துக் கொள்ள வேண்டுகின்றேன். மாற்றுக் கருத்து இருப்பின் என்னை மன்னித்தருள வேண்டுகின்றேன். வாழ்க வளமுடன்.
“நேர்பட பேசு” என்பதற்கான உதாரணம் அவர். தன்னை மனவளக்கலைஞனாக மாற்றுவதில் அதிகபட்ச உயரம் தொட்டவர். வயது வித்தியாசமின்றி யார் கேள்விக்கும் கருத்துக்கும் செவி சாய்ப்பவர். மகரிஷி மீது அளவு கடந்த அன்பு கொண்டவர்.
நிறைய மகான்கள், சித்தர்கள் தொடர்பு கொண்டவர். சித்துக்கள் நன்கு தெரியும். மந்திரம், தந்திரம், யந்திரம் பழகியவர். பிறர் நன்மைக்காகவும், மனவளக்கலைக்காக மட்டுமே அதனை பிரயோகம் செய்தவர். நிறைய சித்தர்கள் இவரைத் தவம் செய்ய அழைத்திருக்கிறார்கள்.
ஜீவசமாதிக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்தார். France நாட்டில் ஜீவசமாதி ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம். அவருக்கு இயற்கையாகவே ‘’வர்மா’ தெரியும். வாழ்த்துக்கள் மூலமாகவே பட்ட நிலத்தை விளை நிலமாக்கியிருக்கிறார்.
யாருக்கும் பயப்படமாட்டார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் அன்பர்களின் குடும்ப அமைதிக்கும், வாழ்க்கை வளத்திற்க்கும் உதவியிருப்பவர். இதனை யாராலும் மறுக்கவோ மறக்கவோ இயலாது.
அவரைப் பற்றிய மாற்றுக் கருத்துக்கும், விமர்சனங்களுக்கும் செவி சாய்த்ததில்லை. சூழ்நிலைக்காக மட்டுமே விட்டு கொடுத்திருப்பார்.
“என்னவென்று சொல்வது
என் மன நிலைகள்
உள்ளமெங்கும் பரவுது
உன் நினைவலைகள்
திண்ணமென்று சொல்வேன்
உன் நினைப்பை
நீ சென்ற பின்பும் கொண்டேன்
உன் இருப்பை
வேற்றுக் கருத்து
யார் சொல்லினும்
நான் சொல்லேன்!
சாமி! நீ வாழ்க!
என்றும் நிஜம் வாழ்க!
உன் நிழல் வாழ்ந்த
நபர் வாழ்க!”
இறைவனின் அருட்கொண்ட அவரது இறுதி வினாடிகளில் நானும் அவர் அருகிலிருந்தேன். கடசிவரை குருவைப் பற்றி மட்டுமே அதிகமாக பேசினார். ஏனெனில், அவர் கடைசி மகன் பெயர் கனக ‘குரு’. வாழ்க வளமுடன்.
— அ/நி பாலகுமார் திருநெல்வேலி 6 May 2017