A remembrance
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!
உலகமக்கள் அனைவரும் அன்பும் கருணையுமாய் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழட்டும்.
நான் 8ம் வகுப்பு படிக்கும்போது விவேகானந்தரின் புத்தகத்தை படித்தேன். அதுமுதல் ராஜயோகம், குண்டிலினி யோகம் பற்றி தேடிக்கொண்டிருந்தேன்.
1984 ல் பான்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, அங்கு ஒரு நண்பரால் திருமுடி நகரில் இயங்கி வந்த மனவளக்கலை மன்றத்தைப் பற்றி அறிந்தேன், அப்போதைய தலைவர் குப்புசாமி ஐயா அவர்களிடம் 27.5.1987 ல் தீட்சை பெற்றேன். முதன் முதலாக புதன் மாலை K.G.S. ஐயா அவர்கள் பேசிய ‘நான் யார்?’ என்ற தத்துவ விளக்கத்தை கேட்டு, அவரால் கவரப்பட்ட நான், அவருடன் மிக நெருங்கிப்பழகும் வாய்ப்பு பெற்றேன்.
அவர்கள் தவம், தத்துவத்தில் குருவை மிஞ்சிய சிஷ்யர் என்பதே எனது தாழ்மையான கருத்து. கடவுள், யார், மனம் பற்றி மிகமிக தெளிவாக, ஆழமாகவும், எவருக்கும், எளிதில் புரியும் படி பேசுவதில் கை தேர்ந்தவர், வல்லவர்.
அவர்கள் தவ தத்துவ பலத்தாலும், பேச்சு சாதுர்யத்தாலும் பல குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைத்து அமைதியை ஏற்படுத்தியவர்கள்.
அவர்கள் ஒரு மிக சிறந்த ஞான திருஷ்டியார், முக்காலத்தையும் தெளிவாக அறிந்து நடைமுறைப் படுத்தியவர்கள். அவர் மனோ சக்தியாலும் நடைமுறை நிகழ்ச்சிகளை கூட கண்டு பிடித்து கூறும் ஞான திருஷ்டியாளர். அதற்கு பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் இங்கு இரு உதாரணம் மட்டும் எழுதுகிறேன்.
நெய்வேலி சிறப்பு பயிற்சியில் கலந்து கொள்ள நானும் உடன்பணி புரியும் ஈரோடு நண்பர் கருனாகரன் இருவரும், விடுமுறை அதிக நாள் தர முடியாது என்று கூறியதால் காலைவருவதாக கூறினோம். அவரும் “சரி தம்பிகளா நான் புறப்படுகிறேன் காலை வந்து சேருங்கள்” என்று மாலை புறப்பட்டார்.
காலை 6.30 ஆகியும் பயிற்சி ஆரம்பிக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தார்கள். அந்த மன்ற தலைவர் மாணிக்கம் அவர்களுக்கு ஏதோ காரணமில்லாமல் தாமதப்படுத்த மாட்டார்கள் என்று அமைதியாக இருந்தார்.
மணி 6.40 ஆனது. பாண்டிச்சேரியிலிருந்து இரு அன்பர்களுக்காக தாமதித்தேன். அவர்கள் வந்து விட்டார்கள். நாம் தவம் ஆரம்பிப்போம். அவர்கள் லெக்சர்ல கலந்து கொள்ளட்டும். 20 நிமிடத்தில் வந்து விடுவார்கள் என்று கூறி ஆரம்பித்தார்கள்.
தவம் முடிந்து கூட்டத்தை ஒரு முறை சுற்றியது சிரித்தவாறே பார்த்துவிட்டு, “என்ன பாண்டிச்சேரி தம்பிகளா என்னை பொய் சொல்ல வச்சிட்டீங்களே! என்றார். சிரித்துக் கொண்டே. நாங்க விழித்தோம், தவம் முடிந்தபின் வருவீர்கள் என்று சொன்னேன். முன்னாடியே வந்துவிட்டீர்களே என்று விளையாட்டாக கேட்டார்கள். நாங்கள் வந்து இரண்டு நிமிடம் தான் ஆகிறது என்றோம். நாங்க வரும் நேரத்டைக் கூட கணக்கிட்டு 20 நிமிடத்தில் வருவார்கள் என்று கூறியிருக்கிறார். நாங்கள் 18 நிமிடத்தில் சென்றுவிட்டோம்.
உடனே தலைவர் மாணிக்கம் அவர்கள் எழுந்து, பார்த்தீர்களா? பேராசிரியர் ஐயா அவர்களுக்கு நெய்வேலி எல்லை வந்ததும் பஸ்ஸிலிருந்து இறங்கி 20 நிமிடத்தில் வந்துவிடுவார்கள் என்று சரியாக கூறினார்கள். இதற்கெல்லாம் ஐயாவோட தவ சக்திதான். அதனால் பெருகும் மனோசக்திதான். அந்த நிலைக்கு நாமும் உயர வேண்டும். அதற்கு நாமும் தினம் இருவேளை தவம் செய்ய வேண்டும். தினம் தற்சோதனை செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஒரு சிற்றுரை பேசினார்கள்.
தலைவர் மாணிக்கம் பேசியதை தொடர்ந்து K.G.S. ஐயா அவர்கள் நல்லா பயிற்சிகள் செய்தால் மனதை திறனாக வைத்துக் கொள்ளலாம். இதைதான் மனிதன் திரத்தை “மந்திரம்” என்பார்கள். மனதை செம்மை படுத்த வேண்டும். அந்த மனதை வைத்து நாம் எதையும், நமக்கு தேவயானதை தேவையான நேரத்தில், தேவையான அளவு பெற்று இனிமையாக வாழ முடியும் என்று, கூறி நாம் இப்பொழுது நம் பயிற்ச்சிச் செல்வோம் என்று கூறி பயிற்ச்சியின் லெக்சர் பேச ஆரம்பித்தார்கள்.
K.G.S. ஐயா அவர்கள் அருட் பேராற்றாலோடு ஒன்றி கலந்து உயிர்க்கலப்பு பெற்றவர். அனைவரிடமும் அருட் பேராற்றாலை நம்புங்கள். எல்லாம் அது பார்த்துக்கும் என்பார்கள்.
ஒருமுறை வெளியூர் பயிற்ச்சிக்கு போக வேண்டியிருந்தது. மாலை பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏற்றிவிட செல்வ பெருமாள் அன்பர் வருவதாக சொல்லியிருந்தார் போல் உள்ளது. மணி பகல் 2.30 ஆகிவிட்டது. அவரால் ஏதோ காரணமாக வர முடியாமல் போய்விட்டது.
அம்மா அவர்கள் செல்வ பெருமாளையும் காணோம். இந்த அருண் பையனையும் காணோம். மணியாகிவிட்டது என்று புலம்பியிருக்கிறார்.
அதற்க்கு ஐயா அவர்கள் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் சாப்பிட்டு முடித்துவிட்டு “எதற்கு இப்ப புலம்பற நீ நாம் ஒங்க வீட்டு வேலை எங்க வீட்டு வேலை செய்யலை. அருட்பேராற்றலோட வேலையை செய்யப்போறோம். அதன் வேலைக்கு அது என்ன செய்யனுமோ அது பார்த்துக்கும். நீ ஏன் வீனா கோபப்பட்டு புலம்புற. என்று கூறி 3 மணிக்கெல்லாம் ஜெயக்கொடி வருவான். அவன் பஸ்டாண்டில் விட்டு விடுவான் என்று கூறியிருக்கிறார்கள்.
எனக்கு 2 வது ஷிப்டு முறை. பகல் 2.45 க்கு முடியும். நாங்கள் நான்கு நண்பர்கள் சேர்ந்து சரியாக 2.45 க்கு வெளியில் போய் பால ஆனந்தாவில் சினிமா பார்ப்பதாக முடிவு செய்து கொண்டு தயாராகிவிட்டோம். மிகச் சரியாக 2.45 க்கு வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் எனக்கு லாஸ்பேட்டைக்கு ஐயா வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே நான் சினிமாவிற்கு வரவில்லை என்ற நண்பர்களிடம் கூறி விட்டு நேராக 3 மணிக்கெல்லாம் ஐயா வீட்டிற்கு சென்றேன்.
அம்மா பெஞ்சில் அமர்ந்தவாறே வாசலையே பார்த்து கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் “வாடாயப்பா நீ வருவாய் என்று சொன்னார் ஜெயக்கொடி வந்துட்டான் சீக்கிரம் கிளம்புங்க என்றார்கள். அவசரப்படுத்தினார்கள்.
அறையில் இருந்து வந்த ஐயா அவர்கள் ‘புலம்பனீயே அருட்பேராற்றல் என்ன செய்தது” அதான் அது எல்லாவற்றையும் சரியாக செய்யும், என்று கூறி என்னிடம் நடந்ததை கூறினார்கள்.
அம்மாவும் ஐயாவுக்கு மிகமிக பக்க பலமாக ஆன்மிக தொண்டுசெய்ய உதவிகரமாக இருந்தவர். அனைவரையும் அன்புடன் உபசரிப்பதில் நிபுணர் இருவரும் இணைந்தே ஆன்மிக தொண்டில் அர்பணித்துக் கொண்டு உழைத்தவர்கள்.
நாமும் மகரிஷி அவர்களின் வழிவந்த K.G.S. ஐயா அவர்களைப்போல் உயர தவம் தற்சோதனையில் கடும் உழைப்பு வேண்டும். மனதை எப்பொழுதும் உணர்ச்சிவசப்படாத நிலையில் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இதற்கு தற்சோதனையும் தவமும் மிக அவசியம்.
அறுகுணசீரமைப்பில் பேராசையும் அதனால் விளையும், கோபம், கவலையும், தான் மிக கொடியது.
மனிதன் குணக்கேடு அடைய இவைகளே முதல் எதிரி. ஆகவே இந்த துர்குணங்கள் எழாமல் ஒழிந்து அவரவர் சக்திக்கேற்றவாறும், சூநிலைக்கேற்றவாறும் வாழப் பழகிக் கொண்டாலே இந்த பேராசை இது நிறைவேறாத பட்சத்தில் எழும் கவலை கோபம் நம்மை அண்டாது. இதனால் நம் மனமும் உயிரும், உடலும் நல்ல வளமும் பலமும் பெறும், என்று கூறி இத்துடன் நிறைவு செய்கிறேன்.
வாழ்க வளமுடன்
— அ/நி செயக்கொடி புதுச்சேரி 6 May 2017