A remembrance
1991 நவம்பர்
அருள்நிதி மணிவாசகன், அருள்நிதி மல்லிகா என்ற தம்பதியர் எங்கள் வீட்டில் குடியிருந்தனர். அப்போது எனக்கு பைல்ஸ் தொந்தரவு இருந்தது அவர்கள் இருவரும் மனவளக்கலை மன்றத்தில் காயகல்ப பயிற்சி நடக்கப் போகிறது அந்த பயிற்சியை எடுத்துக் கொண்டால் பைல்ஸ் தொந்தரவு சரியாகி விடும் என்று அழைத்தார்கள். பிள்ளைகள் படிப்பு, வீட்டு வேலை, ஆசிரியர் பணி என்று இருந்ததால் அரைகுறை மனத்தோடு தான் என் மகள் முத்துச்செல்வியும் நானும் பயிற்சிக்குச் சென்றோம். அன்று பயிற்சியை நடத்த இருந்தவர்கள் அ/நி K.G. சாமி பேராசிரியர் அவர்கள். நானும் என் மகளும் காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்டோம். அங்குள்ள சூழ்நிலை, பயிற்சியின் நோக்கம், அதனால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றைப் பார்த்ததும் காயகல்ப பயிற்சிக்கு மட்டுமே சென்ற நான் மனவளகலை மன்றத்தில் ஆயுள் சந்தாதாரராக சேர்ந்து விட்டோம். அன்றே பேராசிரியர்கள் மூலம் தியானப் பயிற்சியும் எடுத்துக் கொண்டோம். வாரம் இருமுறை வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் தவறாமல் சென்று வந்தோம். அகத்தாய்வு பயிற்சியில் எல்லாமே பேராசிரியர் அவர்களிடமே எடுத்துக் கொண்டோம். 3 நாட்கள் லீவு போட்டுவிட்டு நாகையில் நடந்த சிறப்பு பயிற்சியிலும் கலந்து கொண்டோம். பேராசிரியர் அவர்களுடைய சிந்தனை உரை எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் நிறைய உதாரணங்கள், சிறு கதைகள், நடந்த சம்பவங்கள் ஆகியவற்றை இடையிடையே சொல்லியதால் எனக்கு மிகவும் ஆர்வம் ஏற்பட்டது. பல தடங்கல்களுக்கு இடையிலும் பேராசிரியர் அவர்கள் சிந்தனை உரையை கேட்பதற்காகவே பயிற்சியில் கலந்து கொள்வேன்.
அ/நி மல்லிகா, மணிவாசகன் அவர்கள் ஏற்பாடு செய்து எங்கள்வீட்டில் தனாகர்ஷ்ஷனம் செய்வதற்காக பேராசிரியர் அவர்களும் அவர்கள் துணைவியாரும், நிறைய மன்ற அன்பர்களுடன் வந்திருந்தார்கள். சங்கல்பமும் நிறைவாக நடந்தது. அப்போது பேராசிரியராக வந்தவர்கள் எனக்கு சகோதரராகவும், சம்மந்தியாகவும் ஆகப்போவது தெரியாது. அண்ணன் அவர்களின் சிந்தனை உரைகளைக் கேட்டபிறகு அதிக சகிப்புத்தன்மை, பதிவுகள், அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. உடல் நலக்குறைவு, பிறரால் ஏற்படும் மனக்கஷ்டம், பொருளாதாரத்தில் ஏற்படும் நலிவு அனைத்தும் நம்மிடம் உள்ள பதிவுகளைக் குறைப்பதற்காகவே வருகின்றன. அதனால் துன்பத்தைக்கண்டு கவலைபடாமல் இருந்து இவற்றைப் போக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இதனால் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதைவிட பாவப் பதிவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற உறுதி எனக்குள் ஏற்பட்டது. நாகை, பாண்டி, ஈரோடு, திருத்துறைபூண்டி முதலிய மன்றங்களுக்கு அண்ணன் அவர்களுடன் சென்று சிந்தனை உரைகளைக் கேட்டு பலனடைந்திருக்கிறேன். ஒரு முறை நான் ஈரோட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு வீட்டில் ரிக், யஜூன், சாம, அதர்வண வேத நூல்கள் இருந்தன. அவை வடமொழியில் இருந்தாலும் கருத்துரை தமிழில் இருந்தது. அதை நான் படிப்பதைப் பார்த்து இங்கு யாரும் இந்த நூல்களுக்கு பக்கத்தில் கூட யாரும் போவதில்லை. நீங்களாவது படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்கள். திருமூலரின் திருமந்திரம், தாயுமானவர் பாடல்கள், திருக்குறல், மற்றும் பல்வேறு இலக்கியநூல்களில் உள்ள கருத்துக்களை சிந்தனை உரைகளில் எளிமையாக புரியும்படி கூறுவார்கள். எல்லா பழங்களின் சாற்றையும் கலந்து நம்மிடம் பருகக் கொடுத்தது போல் மேற்கண்ட நூல்களின் கருத்துக்களை சிந்தனை உரைகளில் கேட்டு பலனடைந்திருக்கிறேன். இவ்வளவு விரைவில் முடிவு ஏற்படும் என்று தெரியாமல் போய்விட்டது. மனவளக்கலை மன்றங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு பேரிழைப்பு ஆகும். ஈரோட்டில் அன்பொளி பத்திரிக்கைகு தொகுப்பாளராக, பணிபுரிந்தபோது தமிழ் நாட்டிலுள்ள எல்லா மன்றங்களிலிருந்தும் தினமும் நிறைய கடிதங்கள் வந்து கொண்டே இருக்கும். அத்தனைக்கும் அலுப்பில்லாமல் பதில் தயாரித்து அனுப்புவது எளிதான செயல்கள் அல்ல தேனீயைப் போல் சுறுசுறுப்பாக பணியாற்றி அன்பொளி பத்திரிக்கை மாதந்தோறும் சிறப்பாக வெளிவர பெரிதும் காரணமாக இருந்தார்கள். எந்த வித குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் எப்படி தொடர்ந்து சிந்தனை உரை ஆற்ற முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். சில பேராசிரியர்கள் நிறைய ஆங்கிலம் கலந்து பேசுவார்கள். நிறைய பேருக்கு சரியாகப் புரியாது. ஆனால் அண்ணன் அவர்கள் பேசினால் பாமரர்களாலும் புரிந்து கொள்ளமுடியும். குழந்தைகளாக பேத்திகள் இருக்கும் போது மடியில் வைத்துக் கொண்டு மணிக்கணக்காக பெயரைச் சொல்ல வாழ்க வளமுடன் என்று சொல்லுவார்கள். குழந்தைகளிடத்தில் மிகுந்த அன்பு கொண்டவர்கள்
முடிவுரை:- தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்ற மேதை, சிந்தனை சிறப்பு, சிறந்த சீர்திருத்தவாதி, தனது கடைசி மூச்சு வரை மற்றவர்களுக்காக பாடுபட்ட ஒளிவிளக்கு திருநெல்வேலியில் அணைந்தது. நம்மை விட்டு பேராசிரியர் அவர்கள் மறைந்தாலும் அவர்களுடைய கணீர் என்ற குரல் ஒளி நாடாவில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும் உரித்தாகுக. வாழ்க வேதாத்திரியம்! வளர்க பேராசிரியர் அவர்கள் புகழ். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
— அ/நி. ராஜலெட்சுமி ராமசந்திரன் திருவாரூர் 2 May 2015