அதனால் தான் நமக்கு ஜீவ காந்தப் பெருக்கம் ஏற்படுகிறது. இது ஒரு தந்திரமான டெக்னிக். கண்ணாடிப் பயிற்சியில் அதிகமாக ஜீவகாந்தம் ‘மளமள’ வென ஏறுகிறது. உடலினுடைய கொள்ளளவை விட பல மடங்கு ஜீவகாந்தத்தைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு Saturation Point இருக்கிறது. காலத்தில் அந்த Point அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
அதனால் ஜீவகாந்தம் நிறைய, நிறைய பெருகிக் கொண்டே இருக்கும். ‘முகவசியம்’ என்றால் வாங்க, வாங்க உட்காருங்க சோடா சாப்பிடுங்கள் என்பார்கள். நேரில் இல்லை என்றால் அவன் கிடக்கிறான் என்பார்கள்.
ஜெகவசியம் என்றால் நாம் இல்லாவிட்டால் கூட ஒரு ஆள் அனுப்பினால் இன்னார் அனுப்பினார்களா என்று விசாரித்து வாங்க தம்பி உட்காருங்க என்ன வேண்டும் என்று கேட்டு நமக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அனுப்புவார்கள். ஆள் அனுப்பினால், லெட்டர் போட்டால், போன் பண்ணினால் நமக்குத் தேவையானதைக் கேட்டால் அவர்களிடம் கொடுத்தனுப்புவார்கள்.
உங்களுக்குத் தேவையான ஒன்று நீங்கள் கேட்காமலேயே கொடுத்தனுப்புவார்கள். உங்களுக்குத் தேவை என்பதை தெரிவிக்க வேண்டியது இல்லை. இறைவனுக்குத் தெரியும். அவன் கொண்டு வந்து கொடுப்பான் என்றால் அவனுக்குத் தான் கால், கை கிடையாதே. ஆழ்மனம் தான் கொண்டு வந்து கொடுக்கும். இந்த மாதிரி நமது தேவைகள் பூர்த்தியாவதைத்தான் ‘ஜெக வசியம்’ என்பார்கள். நமது முயற்சியாலேயே, நமது முயற்சி இல்லாமலேயோ, நமது முயற்சிக்கு தக்க அளவிலோ நமது தேவைகள் இலகுவாக நிறைவேறுகிறது. இது தான் ‘ஜெகவசியம்’.
தமிழில் ஒரு குழப்பம் இருக்கிறது. ‘வசியம்’ என்றால் ஆளை மயக்குவது என்று, மருந்து ஒன்று கொடுத்து, anesthesia கொடுத்து ஆளை மயக்குவது, புத்தியை மாற்றுவது என்று ஒரு கருத்து இருக்கிறது. அது தவறு அதை விட்டு விடுங்கள்.
நாம் இயற்கையான அர்த்தத்தில் அதை பயன்படுத்த வேண்டும். Harmony, இணக்கமானது, ஏற்புடையது, முரண்படுவது இல்லை, சரி, சரி இருக்கட்டும் என்று சொல்வது தான் வசியம். அப்போ முகவசியமும், ஜெகவசியமும் நமக்கு எவ்வளவு அவசியம் என்று பாருங்கள்.
இந்த ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி காலையில் தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த வான் காந்தத்தில் கலந்து, கரைந்து இருக்கக் கூடிய முன்னால் ஜீவகாந்தங்கள் உள்ளே வந்து விடும். முன்னால் ஜீவகாந்தம் என்று கௌரவமாக சொல்கிறேன். நீங்கள் சாதாரணமாக ‘பேய்’ என்று சொல்வீர்கள்.
சித்திரக்காரன் போடுவது மாதிரியும் இல்லை சினிமாவில் காட்டுவது மாதிரியும் இல்லை. ஏதோ ஒரு சினிமாவில் ‘கவுண்டமணி’ பக்கத்தில் பேய் வந்து நிற்கும். அவர் கீழே குனிந்து தற்செயலாக பார்ப்பார். கால் இருக்காது. பேய்க்கு கால் இருக்காது வாஸ்தவம் தான். பேய்க்கு கால் என்ன கையும் தான் இருக்காது. உடல் இல்லையே. நன்றாக குழப்பி வைத்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் ‘இறப்புக்கு பின் உயிரின் நிலை’ அதில் வருகிறது இது.
அதில் நீங்கள் மயங்கி விடக் கூடாது. ஆகவே பேய் என்றால் செத்துப் போனவர்களுடைய ஆன்மா எங்கே போகும் பாவம் சொல்லுங்கள். டெல்லிக்கா போகும். காற்று மண்டலத்தில் வான் காந்தம் கரைந்து இருப்பது போல காற்று மண்டலத்தோடு கரைந்து இருக்கும். நீங்கள் உட்கார்ந்து பயிற்சி பண்ணும்போது வான்காந்தத்தோடு இதுவும் கலந்து வரும்.
அதிகாலை நேரத்தில் காலை 4½ லிருந்து 7½ வரை பல காரணங்களால் காற்று மண்டலத்தில் இருந்து பிரிந்து காந்த மண்டலத்துக்குப் போய்விடும். அப்போ காற்று மண்டலம் தூய்மையாக இருக்கும். அந்த நேரத்தில் பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சியை நாம் அலுப்பில்லாமல் செய்ய வேண்டும். ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி தேவை இல்லை. ஏற்கெனவே full. நினைச்சா வான்காந்தம் உள்ளே வரும். குறைந்தால் தானாக வான்காந்தம் உள்ளே வரும், என்ற நிலை ஒன்று வரும். அது வரைக்கும் அன்றாடம் ஜீவகாந்தப் பெருக்கப் பயிற்சி செய்ய வேண்டும்.
ஆனால் விளக்குப் பயிற்சியும், கண்ணாடிப் பயிற்சியும் சேர்ந்து ஒரே நாளில் செய்யக் கூடாது. இது செய்தால் அது செய்யக் கூடாது. அது செய்தால் இது செய்யக் கூடாது. இப்படிச் சில நுணுக்கங்கள் இருக்கின்றன.
இந்த ஜீவகாந்தம் பெருகுவதால் சாதாரணமாக எல்லோருக்கும் இருப்பதைவிட நமக்கு ஜீவகாந்தம் அதிகமாக இருப்பதால் நமக்கே சில நன்மைகள் விளையும். எனக்குத் தெரிந்தவரை அதைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு பத்து வரும்.
- உழைக்கும் ஆற்றல்
உழைக்கும் திறன் குறைந்து கொஞ்ச நேரத்தில் களைத்துப் போனால் ஜீவகாந்தம் குறைந்து விட்டது. ஜீவ காந்தம் குறைந்து போய் விட்டது என்றால் முதலில் வரக் கூடியது கொட்டாவி. இரண்டாவது வரக் கூடியது களைப்பு. மூன்றாவது வரக் கூடியது ஜுரம். அதற்கு மேல் ஜீவகாந்தத்தைக் குறைத்து விடக் கூடாது.
இந்த காலத்துப் பசங்க எல்லாம் இரவு தூக்கத்தை படிச்சு, படிச்சு ஜீவகாந்தம் இழந்து காலையில் எழுந்தா ஜுரம். ஜுரத்துடன் எழுந்து பரீட்சை எழுதப் போனால் படித்தது எல்லாம் மறந்து எழுதாமல் விட்டு விட்டு வந்து விடுவான்.