KG Sami1937 — 2006

பிச்சை

Signed Arulnithi Muthappan

உலகில் பலர் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். எங்கோ ஒருவர் தான் சரித்திரத்தில் நிற்கிறார்கள். கோட்சே போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்களும் நிற்கிறார்கள். காந்தி போன்றவர்கள் மக்கள் நலனையே பிரதானமாகக் கொண்டார்கள். இப்படிப்பட்டவர்கள் வரலாற்றுப் புத்தகத்தில் மட்டுமல்லாமல் மக்கள் மனதிலும் காலா காலத்துக்கும் நிற்பார்கள்.

இவர்களிலும் கருவிலே திருவுடையராகத் தோன்றியவர்கள் மனித குலத்தினுடைய வாழ்க்கை போக்கையே மாற்றி விடுவார்கள். அப்படிப் பட்டவர்களில் நமது தலைமுறையிலேயே வாழ்பவர்தான் அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

மனித குலத்தைப் பற்றியும், அதில் இன்று பெருகியுள்ள சீர்கேடுகள் பற்றியும், அவை தோன்றியுள்ள காரணங்கள் பற்றியும், அவைகள் களையப்படகூடிய வழிகள் பற்றியும், முழுமையாகச் சீர்திருந்திய எதிர்கால உலகத்தைப் பற்றியுமே அவர்கள் சிந்தனையெல்லாம் இருக்கும். இதை ஒவ்வொரு சிறிய சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு சாதாரண நிகழ்ச்சியிலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

நமது மகரிஷிகளைப் பொறுத்தவரையிலும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் பல அவர் வாழ்க்கையில் வெளிப்பட்டன. அருட்பேராற்றலின் கருணையினால் அவற்றில் சிலவற்றை நேரிடையாகத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. ஒன்றை இங்கு விவரிக்கிறேன்…

1970களின் ஆரம்ப ஆண்டுகளில் ஒருநாள், மகரிஷிகளும் நானும் மாம்பலம் மன்றத்திலிருந்து கூடுவாஞ்சேரி போக வேண்டும். தாம்பரத்திற்கு ரயிலேறினோம். ரயில் போய்க் கொண்டிருக்கிறது. சுமாரான கூட்டம். ஒரு பையன் – சுமார் ஐந்து வயதிருக்கும் – கட்டையாக, குட்டையாக-முள்ளம்பன்றி போன்ற தலைமுடியுடன், கோவணாண்டியாக, பிச்சை எடுத்துக் கொண்டு வருகிறான். பலர் காசுப் பிச்சை போடுகிறார்கள்.

நானும் மகரிஷிகளுடன் எதிரெதிரே அமர்ந்திருக்கிறோம். எங்கள் அருகில் வந்தவுடன் அவன் நகர மறுக்கிறான்… ‘தாடியோடு ஒரு பெரியவர். எதிரில் ஒரு பையன் பவ்யமாக அமர்ந்திருக்கிறான் (நான் தான்). இருவரும் தலைக்கு 25 காசாவது போடுவார்கள்’ என்று அவன் சிந்தனையில் ஓடியிருக்கும்…. நான் மகரிஷியைப் பார்க்கிறேன். அவர் என்னை பார்க்கிறார்.  இருவர் மனதிலும் ஒருவர் மனநிலையை மற்றவர் யூகித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்…. பிச்சை போடுவது பற்றி இருவர் மனதிலும் வேறு வேறு விதமான கருத்து இருந்ததே அதற்க்குக் காரணம்…. பொது இடங்களில் காசுப் பிச்சை போடுவதை ஒரு காலத்தில் நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்…

என் வயதுக்கார ஆள் ஒருவன் எங்கள் ஊர் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டு நின்றிருப்பான். அவன் கால்கள் இரண்டும் சூம்பிய நிலையில் லொட லொடவென்று ஆடிக் கொண்டு இருக்கும். இரண்டு கைகளாலும் ஒரு தடிமனான கோலைக் கெட்டியாகப் பிடித்தபடி நகர்ந்து கொண்டிருப்பான். தினமும் அவனுக்கு 10 காசு போடுவது எனது பழக்கம். (அந்தக் காலத்தில் 10 காசு யாரும் போடுவதில்லை. 3, 5 காசு போடுவார்கள்). இந்தப் பழக்கம் எப்படி ஆகிவிட்டது என்றால், அவன் என்னை அணுகும் போது பிச்சை கேட்க வருவது போல் இருக்காது. ஏதோ கொடுத்து வைத்திருப்பதை வசூல் பண்ணிக் கொண்டு போக வருவதைப் போல் தோன்றும்….

அப்படித்தான் ஒரு நாள் தானம் செய்வதை எனது அலுவலக நண்பர் ஒருவர் பார்த்து விட்டார். ‘என்ன இவனுக்குப் போய்ப் பிச்சை போடுகிறீர்கள்?’ என்றார் அவர். ‘பாருங்கள் அவனது பரிதாப நிலையை’ என்றேன் நான். அதற்குள் ஆள் நழுவி விட்டான். ‘இவன் என் பக்கத்து வீட்டுக்காரன்’ என்ற நண்பர் தொடர்ந்து கூறினார், ‘எனக்குத் தட்டினால் முட்டினால் இவனிடந்தான் கடன் கேட்பேன். சீக்கிரமாகத் திருப்பி கொடுத்து விட வேண்டும். ஒரு நாளைக்கு, ஒரு பைசாவிற்கு, ஒரு பைசா வட்டி’… இந்நிகழ்ச்சி என்னை மாற்றி விட்டது. அன்று முதற்கொண்டு எந்த நிலையில் இருப்பவர்க்கும் காசுப் பிச்சை போடுவதை விட்டு விட்டேன். இது நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டிருந்தன…

மகரிஷிகள் என் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். நான் அவர்  முகத்தைப் பார்த்து கொண்டு இருக்கிறேன். மகரிஷிகள் தான் முதலில் வாயை திறக்கிறார்கள்: ‘இந்த வயதிலே இவன் இப்படி இருந்தால், இன்னும் 20 ஆண்டுகளில் எப்படி இருப்பான்?’ ரயில் ஓடிக்கொண்டு இருந்தது என் எண்ணம் நின்று போய் விட்டிருந்தது. மகரிஷிகளே தொடர்கிறார்:

‘நல்ல வாட்ட சாட்டமான ஆளாக இருப்பான் அல்லவா? அவனுடைய உடலுக்கும் மனதுக்கும் என்னென்ன தேவைபடும்? அவற்றை எல்லாம் பெற்றுக் கொள்ளக் கூடிய உடல் வலுவு தானாக வளர்ந்து கொண்டிருக்கிறது. யாருக்கும் கெடுதல் செய்யாமல் அத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய நல்லறிவினை இவன் பெற வேண்டாமா? இவனால் அது முடியுமா? இவனுக்கு இப்போதே அத்தகைய நல்லறிவினைத் தராதது யார் குற்றம்? இவனையோ இவனுக்குப் பெற்றோர்கள் இருந்தால் அவர்களையோ குற்றம் சொல்ல முடியுமா?

இத்தகு சூழ்நிலையை உருவாக்கி நிலைக்க விட்டிருக்கக் கூடிய சமுதாயத்திற்கு இதில் பொறுப்பில்லையா? சமுதாயமென்றால், அதில் யாரைச் சொல்வது?  சாதாரண மனிதனுக்கு இதெல்லாம் தெரியாது. அது சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டும். இல்லையென்றால், இவனும் இவனைப் போன்றோரும் அந்த அறிஞர்களும் வாழ்கின்ற இந்தச் சமுதாயத்தையே பிளக்கக் கூடிய டார்பிடோக்களாக மாறி விட மாட்டார்களா?...

ரயில் ஓடிக்கொண்டேயிருந்தது, மகரிஷிகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தேன். என் சிந்தனையும் ஓடிக் கொண்டிருந்தது. டார்பிடோ என்பது பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாது. இரண்டாம் உலகப் போர் முடிந்து சுமார் 20 ஆண்டுகளே ஆகியிருந்த அந்தக் காலத்தினர் அதை மறந்து விடவில்லை. அது ஜப்பானியர்கள் தயாரித்த ஒரு குண்டு. கடலில் நீருக்குக் கீழே மறைந்து சென்று கொண்டிருக்கக் கூடிய நீர்மூழ்கிக்கப்பல்களையும், இக்குண்டுகள் நீருக்குக் கீழாக மறைந்து சென்றே தாக்கி வெடிக்கச் செய்து விடும். நேசநாகுகளின் கப்பல்கள் பல அவ்வாறு மர்மமான முறையில் உடைந்திருக்கின்றன.

     அவ்வாறே, சமுதாயத்தில் இருப்பது தெரியாமலே எத்தனை தீங்குகள் இருக்கின்றன! அவை எவ்வாறு சமுதாயத்தை ஓசையின்றி நாசமாக்குகின்றன! இந்த உண்மையைத் தெளிந்த அறிவினராகிய அறிஞர்கள் தான் தெரிந்து கொள்ள முடியும். சமுதாயத்தின் நலன் காக்க அவர்கள் முனைய வேண்டாமோ? இது தான் மகரிஷிகளுடைய ஆதங்கம்.

     வெறும் ஆதங்கத்தோடு இல்லாமல், தனி ஒருவராகவே அந்த மாபெரும் பொறுப்பினை அவர்கள் ஏற்றுக் கொண்டுதான் மனவளக் கலையை உருவாக்கிப் பரப்பி வருகிறார்கள். நாமெல்லாம் இருக்கும் போது, இந்த மாபெரும் பொறுப்பில் தனி ஒருவராக அவர்களை விட்டு விடலாமா என்பதைச் சிந்திப்போம், செயல்படுவோம், அருள் தந்தை அவர்களுடைய பணியில் தோள்கொடுப்போம்.

பன்னும் மறைகள் பயிலும் பரமனை,

உன்னும் அளவில் உணரும் ஒருவனை,

என்னுள் இருக்கும் இளையா விளக்கினை

அன்ன மயமென் றறிந்துகொண் டேனே.

திருமூலரின் நகைச்சுவை உணர்வைப் பாருங்கள். எப்படிப்பட்ட ஈசன்? பன்னும் மறைகள் பயிலும் பரமன். (பலப்பல வேதங்கள் இவரிடம் ஈசன் வந்து பாடம் படிக்கின்றனவாம்.) உன்னும் அளவில் உணரும் ஒருவனை. (புலன்களின் ஆதிக்கத்தை ஒழித்து வெற்றி கொண்ட மனதில் மட்டும் தெரிந்து கொள்ளப்படக் கூடியவன்.) என்னுள் இருக்கும் இளையா விளக்கு. (தன்னுடைய அறிவுப் பிரகாசம் குன்றாமல் அவன் தன்னிடத்திலேயே நிலை கொண்டிருக்கக் கூடியவன்).

     அப்படிப்பட்டவன் யதார்த்த வாழ்வில் எப்படிப்பட்டவன் தெரியுமா? அன்னமயம். (அவன் ஒரு சாப்பாட்டு ராமன்!) சாப்பாடு இல்லையென்றால் அவனுக்கு எல்லாம் போச்சு. இதை மனதில் வைத்தே கோயில்களில் சிவலிங்கத்தைச் சோற்றால் மூடி ‘அன்னாபிஷேகம்’ என்கிறார்கள் -----------------

இது நிற்க, விளக்கினை என்ற சொல்லுக்குப் பிறகு, அன்னமயம் என்ற சொற்களைத் திருமூலர் போட்டிருப்பதால், ’இறைவனை --------- வடிவினன்’ என்று எடுத்துக் கொள்ளவும் தமிழ்மொழி இடம் கொடுக்கும் விளக்கினை அன்ன என்று சேர்த்து வாசித்து, விளக்கினைப் போன்றவனின்றும் கொள்ளலாம். விளக்கு என்றால் அறிவு என நீங்கள் அறிந்திருக்--------------

Keep reading

More from the archive

Granthaalayam

அருளும் பொருளும்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)பொருள் என்ற வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு.ஒன்று: உலகத்தில் வாழ் வதற்குத்…

Kannimuthu

பிறவித் தொடர் தத்துவதில் செய்த புரட்சி

வேதாத்த்ரி மகரிஷிகள் வாய்ச்சொல்லைச் செவிகொள்வீர்!போதிபார் வேதத்தைப் புகட்டிடுவார் யோகத்தை!தவமுறையை எளிதாக்கிக் தக்கபடிச் சீர்திருத்தி,நவயுகத்திற்…

Granthaalayam

செய்க தவம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் - திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!தவம் செய்ய வேண்டியது என்பது…

Granthaalayam

நட்பு நலம்

(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து) இன்னைய தேதில ஒருத்தருக்கு உலகம் பூரா நண்பர்கள் இருக்காங்க. ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்…

Arulnithi Muthappan

தியாகச் செம்மல் வேதாத்திரி

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதோ, எழுபத்தொன்றோ, சரியாக நினைவிலில்லை. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி. கூடுவாஞ்சேரியில் மகரிஷிகளுடைய இல்லத்தின் எதிர்புறத்தில்…

Granthaalayam

மும்மலம்

ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரைக்குஎழுத்து வடிவம் கொடுத்தவர் திருமதி. S. செல்வி அவர்கள்.அன்பர்களே!பொதுவாக மனிதர்களிடத்தில் மூன்று…