சென்ற இதழில் வெளியான சைவமும், அசைவமும் என்ற விளக்கங்களைத் தொடர்ந்து
- முட்டை சைவமா? அசைவமா?
- பால் சைவமா? அசைவமா?
என்ற கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கான விளக்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.
ஒரு முட்டையிலிருந்து ஒரு கோழிதான் வரும். ஒரு கொட்டையிலிருந்து எத்தனை செடி வரும்? பல செடிகளைக் கொடுக்கின்ற கொட்டையைத் தின்பது பாவமில்லையென்றால், ஒரே ஒரு கோழியைத் தருகின்ற முட்டையைத் தின்பது எப்படிப் பாவம்? தாவரத்திற்கு நாம் சொன்ன ‘நரம்பு மண்டலம் – மூளை – துன்ப அலை – துன்ப அனுபோகம் – தத்துவம்’ முட்டைக்கும் பொருந்தும். இப்பொழுது, முட்டை நிணம் என்பார்கள். இருக்கட்டும், அல்லது இல்லாமலும் இருக்கட்டும், ’சைவமா? அசைவமா?’ என்பது தான் கேள்வி. ‘நிணமா? நிணமில்லையா?’ என்பது கேள்வியில்லை. தாய்ப்பால் நிணந்தானே? அதிலே தானே நமது உணவையே ஆரம்பித்தோம்.
மாட்டுப்பால் சாப்பிடலாமா? அது நிணமில்லையா? அது புலாலில்லையா? பால் சைவமாகுமா? என்ற கேள்விகள் எழும். எப்படி முட்டை சைவமோ, அதே காரணத்தினால் பாலும் சைவம் தான். அது நிண வகையைச் சேர்ந்தது தான் என்றாலும் பாலை நாம் பெறுகின்ற வழியில் மாட்டுக்குத் துன்பம் விளைப்பதில்லை. உண்மையில் பாலைக் கறந்தால் மாட்டுக்குச் சுகமாகவே இருக்கும் என்கிறார்கள்.
’கன்றுக்குட்டிக்கு வைத்திருப்பதை நாம் கவர்ந்து கொள்கிறோம்” என்றொரு வாதம் சொல்லப்படும். இயற்கையின் ஒரு அதிசயம்! அது என்னவோ, கன்றுக்குட்டிக்குத் தேவைப்படும் பாலை விட அதிகமான பாலை மாடு சுரக்கிறது. கன்றுக்குட்டிக்கு வைத்து விட்டு மிகுதிப்பாலை நாம் கறந்து கொள்வதில் துன்பம் கன்றுக்கோ, மாட்டுக்கோ ஏற்படுவதில்லை.
உண்மையில் ஒரு மாட்டிடம் உள்ள எல்லாப் பாலையும் அதன் கன்று குடித்து விட்டால் வயிறு உப்பிச் செத்துப் போய்விடும் என்கிறார்கள்.