(ஸ்ரீ குரு கனக கோவிந்தசாமி அய்யா அவர்களின் உரையிலிருந்து)
நம்ம நாட்டிலே இப்ப எல்லாம் சித்து, சித்து என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறாங்க. எந்த மாதிரினா, ச்சூ மந்திரகாளின்னு சொல்லு வாங்க, எதை எதையோ வரவழைச்சு கொடுப்பாங்க. ஆமா.. நாமும் இதையெல்லாம் சித்து, சித்து என்கிறோம்.
விலை மதிப்பு மிக்க பலவிதமான பொருட்களை வரவழைத்து கொடுப்பவர் களாலே, ஏன் மக்களோட பசியை போக்கிட ஒரு அரிசி மூட்டைய வரவழைச்சு கொடுக்க முடியலை? ஏன்னா, கைக்கு அடக்கமான பொருளைத் தான் இடம் மாற்றி நகர்த்த முடியுமே தவிர, அந்த மந்திர மாயா ஜாலத்தால பெரிய பொருளை யெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. இந்த மாதிரி சின்ன சின்ன பொருட்களையெல்லாம் வரவழைக்கிறதுக்கு ஜாலவித்தை யின்னு பேரு.. இது ஒன்னும் சித்தாகாது.
நீங்க பல சமயம் பார்த்து இருப்பீங்க. ஒரு பொண்ண பெட்டியில படுக்க வைச்சு மூடி அறுப்பாங்க. இரத்தமும் வராது, ஒன்னும் வராது. அப்புறம் பெட்டிய இணைச்சு திறப்பாங்க. பொண்ணு எழுந்து வந்திருவா. இது என்ன கதைன்னு கேட்டா, ரொம்ப சாமர்த்தியமாக, ஒரு பொண்ணு ஒரு பக்கம் தலைய வைச்சுட்டு உடம்பை உள்ளே சுருட்டிக்கும், இன்னொரு பொண்ணு ஒரு பக்கம் காலை நீட்டி உடம்பை உள்ளே சுருட்டி வச்சிருக்கும். நடுவில கத்தி வைத்து அறுக்கிற இடத்தில பொண்ணு இருக்காது. நாம ரெண்டு பொண்ணையும் சேர்த்து ஒரே பொண்ணா நினைக்கக் கூடிய அளவுக்கு செய்திருப் பார்கள், இதெல்லாம் கூட ஜாலவித்தைதான்.
அன்பர்களே! இதெல்லாம் சித்தா? நினைச்சுப் பாருங்க. இந்த மாதிரியான அற்ப காரியங்களையெல்லாம் பெரிய வங்க செய்ய மாட்டாங்க. வள்ளலார் பொன் செய்தார் தெரியுமா? சில குறிப்பிட்ட மூலிகைகளைக் கொண்டு பித்தளையை தேய்த்தால் அது பொன் ஆயிடும். அதாவது பொன்னு என்ன தகதகப்பு இருக்குமோ, அவ்வளவும் இருக்கும். யாரும் பார்த்திட்டு இதை பொன்னு இல்லைனு சொல்ல முடியாது. இந்த மாதிரி ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு பொன்னைச் செய்து, அதை கொண்டு போய் கிணத்துல போடுவாரம். ஏன்னா, யார் கையிலையும் கிடைச்சு போச்சுன்னா, இல்ல, இந்த ரகசியத்தை யாராவது தெரிஞ்சிட்டு எடுத்து பார்த்து செஞ்சு பார்த்தாங்கன்னா பல ஆபத்து இருக்குதில்ல. அதனால வள்ளலார் ஆரம்பத்துல இதனைச் செய்து பார்த்து கிணத்துல போட்டுட்டே இருந்தாராம். இது அவரது குறிப்பிலேயே இருக்குது.
ஆன்மீகத்தில் ஒரு மேன்மை அடைந்த பெரியவர்கள் கெட்டவர் களையும் நல்லவர்களாக ஆக்கச் செய்யும் சித்தைதான் செய் வார்கள். இதுதானே உண்மை யான சித்து. மற்றவையெல்லாம் வெறும் ஜாலவித்தை என்று சொல்லலாம்தானே!
இம்மாதிரியான வித்தை களைச் செய்திட பல்வேறு மூலங்கள் (Sources) தேவை. அதில் குறிப்பிடும்படியானவை,
1. மந்திரத்தைப் பயன்படுத்துவது
2. மனோ சக்தியைப் பெருக்கிக்கொள்வது
3. உடல் பிரிந்த ஆன்மாக்களைப் பயன்படுத்துவது.
மூன்றாவது வகையான உடல் பிரிந்த ஆன்மாக்களைக் கொண்டு மந்திரம் பயன்படுத்தி ஜாலவித்தை செய்பவனை கடைசிலே அந்த ஆன்மாவே கொன்றுவிடும். அதத்தான் வழக்கத்தில் நாம் பேய் அடிச்சு செத்துப் போயிட்டான்னு சொல்லுவோம். அதுமட்டும் இல்ல அவன் வாழ்ந்த இடமும் பாழடைஞ்சு இடிஞ்சு குட்டி சுவரா போயிடும். காரணம் என்னன்னா இந்த மாதிரியான ஆளுங்க, பலபேரை கெடுத்திருப்பான். பல கெடுதலான காரியங்களைச் செய்திருப்பான், பலரது துன்ப வேதனைக்குக் காரணமா யிருந்திருப்பான், இதனாலே பலபேருடைய சாபத்தையும் வாங்கியிருப்பான். இவை யெல்லாம் இப்படி இருக்கும் போது அவனாலே எப்படி நலமாக இருக்க முடியும்? மந்திரமாக இருந்தாலும் சரி.. மனோ சக்தியாக இருந்தாலும் சரி.. அதனால பிறருக்கு துன்பம் விளையக் கூடாது. பிறர் துன்பம் சாபமாகும் என்பதால் செய்பவன் துன்பப்பட வேண்டுமே!
மனோ சக்தியைப் பெருக்கும் போது அமானுஷ்ய காரியங்களும் செய்ய வரும். ஆனால் இதனை உலகியல் காரணங்களுக்காக பெரியவர்கள், உயர்ந்தவர்கள் செய்ய மாட்டார்கள். ஏன்னா, பிறகு இதுவே அவர்களுக்கு வேலையாகப் போய்விடும். ஒவ்வொருவரும் வரிசையாக வந்து நின்னு, எனக்கு அந்த கஷ்டம், இந்த கஷ்டம்னு சொன்னாங்கன்னா இவனால எப்படி இறைநிலை அறிவோடு சென்றடைய முடியும்? மக்களை இறைநிலை அறிவோடு சேர்த்திட வேண்டும். இதுவே மகிமையான காரியமாக எடுத்துக் கொண்டனர். இத்தகையவர்களே சித்தர்கள். இந்த மகிமையான காரியங்களை செய்வதற்கு சித்தர்கள் மனோ சக்தியை பெருக்கிக்கொண்டனர். தவ வழியிலேயோ அல்லது மந்திர ஜெப வழியிலேயோ அல்லது வேறு வைத்திய முறையிலேயோ அசாதரணமாக மனோ ஆற்றலை பெருக்கிக் கொள்வார்கள். இத்தகு நற்காரியம் செய்தவரைச் சித்தர்கள் என்றார்கள். இச்சித்தர்கள் செய்து வந்ததுனாலேயே இத்தகு விசயத்தை சித்து என்று சொன்னார்களா? இல்லை அற்ப விசயம் என்று வள்ளலார் சொன்னது மாதிரி சின்ன சமாச்சாரம் என்பதால் சித்து என்று வந்ததா? இதைப் பற்றியெல்லாம் யோசனை செய்து நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க.
சித்து பழகிக்கொள்ள கெட்டிக்காரத்தனம், தைரியம் வேணும், சுறுசுறுப்பாக செய்யணும். சில சித்துக்களும் இருக்குது அது மற்றவர்களை மகிழ்ச்சி அடைய செய்வதற்காக ஜாலவித்தைக்காரர்கள் செய்கிறார்கள். இது அவர்களது பொழப்புக்கு அவர்கள் தேடிக் கொண்ட வழி. இது பற்றிய சிந்தனைகூட நமக்குத் தேவை யில்லை. தவ வாழ்கையில இருக்கிற நாம இந்த மாதிரியான செயலில் ஈடுபடாமல். நமது மன ஆற்றலைக் கொண்டு மற்றவர் களது நோயைத் தீர்க்க வேண்டும். வேறு வேறு பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். எந்த விதத்திலும் அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படக் கூடாது. உழைச்சு சம்பாதிக்கணும். தவம் செய்ய வேண்டும், அறிவு முழுமை பெற வேண்டும், ஆன்மீகத் தூய்மை பெற வேண்டும். மற்றவரை வாழ்த்த வேண்டும். (தமது தவ ஆற்றலைக் கொண்டு மனோசக்தியை பெருக்கி, அதன் மூலமாக ஒரு இடத்தைத் தூய்மை செய்தும், பிறரின் துன்பத்தைப் போக்கியும், மீண்டும் துன்பங்கள் வராமல் பாதுகாத்தும் உதவக்கூடிய வழி.) அப்படி நீங்க தயாராகி வந்தீங்கன்னா, ஆயிரம் பேருக்கு உதவி செய்யலாம் என்ற அளவில ஆற்றல் பெருகி வரும். ஏனென்றால் இறைவனே மனமாக இருக்கிறான். இறைவனால் ஆகாத காரியம் எது?
மனதால் ஆகக்கூடிய காரியம் எது? என மனதின் ஆற்றலைப் பற்றி தெரியாமல் மனமே இங்கு குறுகி நிற்கிறது. உதாரணத்திற்கு ஆஞ்சனேயரை எடுத்துக் கொள்வோம்.
ஆஞ்சனேயர் பெரிய ஆற்றல்காரர். அவரது ஆற்றல் அவருக்கு தெரியாமல் போகட்டும்ன்னு ஒரு சாபம் அவரது பால்யத்திலே ஏற்பட்டுப் போச்சு அதனால இந்தியாவின் தெற்கு பக்கக் கடைசிலே நின்னுட்டு, நான் எப்படி இலங்கைக்குப் போவேன்? என்னால எப்படி கடலை தாண்ட முடியும்? என்ற ஐயப்பாடுடன் தாண்ட முடியாதுன்னு இருந்தப்ப, ஜாம்பவான் வந்து உன்னால கடலைத் தாண்ட முடியும், தாண்டுன்னு சொன்னதுக்கு அப்புறமாத்தான் தாண்டினாரு. அது மாதிரி இலங்கையைத் தாண்டக்கூடிய ஆற்றல் இருந்தும், அது தெரியாததுனால பயன்படுத்த முடியாமல் இருந்தது. அது மாதிரி ஒரு மகத்துவமான சக்தி தன்னிடம் மனமாகவும், தெய்வமாகவும் இருந்தும், அது தெரியாததுனாலே அதை உலகியல் காரியங்களுக்கும், சின்ன விசயங்களுக்கும், கெடுதல் செய்வதற்கும் பயன் படுத்துவதனாலே, மனோசக்தி, தெய்வசக்தி பலரிடம் குன்றிப் போய்விட்டது.
பரந்த மனப்பான்மை யோடும், எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத் தோடும், எந்நேரமும் இறை உணர்வுடனும், தவ உணர்வுடனும், அருட்தொண்டு எண்ணத்தோடும், அருள்நெறி பிறழாத வாழ்க்கையோடும் வாழ்ந்து வந்தால் பிறரது தேவைக்காக நம்மாலும் அசாதாரணமான காரியங்களைச் செய்ய முடியும். யாருக்காவது உதவ வேண்டும் என்று நினைக்கும் போதே நமது உள்ளுணர்வு இன்னதைச் செய், இன்னதைச் சொல் என்று நம்மை வழி நடத்துவதையும் நம்மால் அனுபவித்திட முடியும். இப்படியாக நாமும் நமது ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம்.
நாமும் கூட சித்தர் களுக்கு நிகரான காரியங்களைச் செய்யலாம். எல்லோருமே செய்யலாம், எல்லோராலுமே செய்ய முடியும். என்ன நல்லது செய்ய முடியும்? ஏது நல்லது செய்ய முடியும்? என்று நினைத்தால் ஒன்னுமே வராது.
தேவையான நல்ல அவசி யத்திற்கு, பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கமும், சிறிதும் சுயநலம் இல்லாமல், சுயகெளரவம் பார்க்காமல், தற்பெருமை பாராட்டாமல் நித்தநித்த வாழ்வு அமைய வேண்டும் என்ற ஆழ்மன நினைவும் உங்களுக்குள் இருக்குமேயானால் நீங்களும் சித்தராகலாம்.
- நினைவில் உங்களோடு., Kgs.